Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2016
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,861 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாம் அறியாத ஃபிராய்ட்

sc2_2843867gஉளவியல் என்றவுடன் பலருடைய மனதிலும் தோன்றும் முதல் பிம்பம் சிக்மண்ட் ஃபிராய்டாகத் தான் இருக்க முடியும். ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினைகளே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.

சரியா? தவறா? 

அவரது கோட்பாடுகளைப் பற்றிய பரிச்சயம் பலருக்குப் பெயரளவிலாவது உண்டு. ஆனால், அவற்றின் நெளிவுசுளிவுகளும் உளவியலுக்கு அவர் வழங்கிய பங்களிப்பையும் பெரும்பாலானோர் ஓரளவே அறிந்திருப்பார்கள்.

சரி, ஃபிராய்ட் பற்றிய உங்கள் அறிவைச் சோதித்துப் பார்க்கக் கீழ்வரும் ஐந்து வாசகங்களுக்குச் சரி அல்லது தவறு என்று விடையளித்துப் பாருங்கள்:

1. சிக்மண்ட் ஃபிராய்ட் உளவியலின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

2. ஆழ்மனம் என்ற நனவிலி மனதை முதன்முதலாகக் கண்டறிந்தவர் ஃபிராய்ட்தான்.

3. கனவுகள் பற்றிய அவரது புகழ்வாய்ந்த கண்டுபிடிப்புகளை இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

4. ஃபிராய்ட் கண்டுபிடித்த உளப்பகுப்பாய்வு என்ற சிகிச்சை முறை பல மனக்கோளாறுகளையும் சில மனநோய்களையும் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

5. ஃபிராய்ட் கையாண்ட ஆராய்ச்சி முறைமை அறிவியல்பூர்வமானது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அத்தனை வாசகங்களும் முற்றிலும் தவறானவை! இது பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால், அதுதான் உண்மை. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உளவியலின் தந்தை யார்? 

உளவியலின் தந்தை என்று கருதப்படுபவர் ஜெர்மானியரான வில்ஹைம் வுண்ட் (Wilhelm Wundt, 1832 -1920). இவர் ஜெர்மனியிலுள்ள லீப்சிக் பல்கலைக் கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுக்கூடத்தை 1879-ல் நிறுவினார். இதுவே உளவியல் கல்வியின் தொடக்கம் என அறியப்படுகிறது. அவருக்கு அடுத்ததாக வில்லியம் ஜேம்ஸ் (William James, 1842 1910) என்ற அமெரிக்க உளவியலாளர் 1890-ல் ‘உளவியல் கோட்பாடுகள்’ (The principles of psychology) என்ற புகழ்பெற்ற நூலை எழுதி, உளவியல் துறையில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார். இவர் அமெரிக்க உளவியலின் தந்தையாகப் போற்றப்படுகிறார். அதாவது உளவியல் தளத்தில் ஃபிராய்ட் காலூன்றுவதற்குக் கால் நூற்றாண்டுக்கு முன்னரே உளவியல் ஒரு அறிவியல் துறையாக உருவெடுக்கத் தொடங்கியது என்பதே வரலாறு நமக்குக் கூறும் செய்தி.

நனவிலி மனம் 

நாம் அறியாத ஆழ்மனம் அல்லது நனவிலி மனம் என்ற ஒன்று உண்டு என்ற கருத்து ஃபிராய்டின் காலத்துக்கு முன்னரே அறியப்பட்டிருந்து. இதைப் பல தத்துவஞானிகளும் எழுத்தாளர்களும் தனக்கு முன்னரே அறிந்திருந்தார்கள் என்பதை ஃபிராய்டே சுட்டிக்காட்டியுள்ளார். மெய்யியலிலும் உலகின் உள்ள பல மதங்களிலும் ஆழ்மனம் பற்றிய கருத்துகள் வெவ்வேறு பெயர்களில் பேசப்பட்டு வந்துள்ளன.

ஆனால், நனவிலி மனம் என்ற கருத்தாக்கத்தைப் பிரபலப்படுத்தியவர் ஃபிராய்டே. இந்தப் பெருமை அவரையே சாரும். நமது செயல்களுக்கான காரணங்கள் பெரும்பாலும் நமக்குப் புலப்படுவதில்லை, அல்லது அதற்கு நாம் கூறிக்கொள்ளும் காரணங்கள் பல நேரம் தவறானவை என்பதே ஃபிராய்டியத் கோட்பாட்டின் மையப் பொருள்.

ஃபிராய்டின் கொடை 

மனிதர்களின் சிந்தனையும் செயலும் அவர்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. சிந்திக்காமல் செயல்படுவது, தர்க்க ரீதியற்ற முறையில் நடந்துகொள்வது, நாம் செய்த ஒரு காரியத்துக்கான காரணத்தை விளக்க முடியாமல் இருப்பது ஆகிய மனித சுபாவங்கள் நனவிலி மனதின் வெளிப்பாடுகள் என்பதை அழுத்தமாகக் கூறியவர் ஃபிராய்டே.

ஃபிராய்ட் எழுத ஆரம்பித்த பின்னர்தான் நாம் அறியாத மனம் ஒன்று உண்டு என்ற சிந்தனை மனிதர்களின் பொதுப்புத்தியில் பதியத் தொடங்கியது. ஆழ்மன இயக்கங்களை உலகைப் புதிய முறையில் நோக்கச் செய்தது ஃபிராய்ட் விட்டுச் சென்ற கொடை என்று தயக்கமின்றிக் கூறலாம்.

கனவுகளின் பொருள் விளக்கம் 

நனவு மனதிலிருந்து அமுக்கப்பட்ட வேட்கைகள், விருப்பங்கள், இச்சைகள் ஆகியவற்றின் வெளிப்பாடே கனவுகள் என்பது அவரது கோட்பாடு. அதாவது, ஆழ்மனதில் விருப்பங்களின் நிறைவேற்றங்களே (wish fulfilment) கனவுகள் என்பது ஃபிராய்டின் நிலைப்பாடு. 1970-களில் தூக்கத்தின்போது சில கண்ணசைவுகள் ஏற்படும் கட்டங்களில்தான் கனவுகள் தோன்றுகின்றன என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. கனவுகள் பற்றிய ஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு மைல்கல்லாக அமைந்தது.

அதன் பின் உறக்க ஆராய்ச்சிக்கூடங்களில் கனவுகளை முறைப்படி ஆராய முடிந்தது. இந்த ஆராய்ச்சிகளிலிருந்து பெற்ற தகவல்கள் ஃபிராய்டின் கனவுக் கோட்பாடு தவறானது என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன. எனவே, சமகாலக் கனவுக் கோட்பாடுகள் மூளையின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. இதிலிருந்து ஃபிராய்டின் கனவுக் கோட்பாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.

உளப்பகுப்பாய்வு 

மனித மனதை விளக்கும் முகமாக உளப்பகுப்பாய்வு (psychoanalysis) என்ற புதிய சிந்தனைப் பள்ளியை ஃபிராய்ட் உருவாக்கினார். எனவே, அவர் உளப்பகுப்பாய்வின் தந்தையாகக் கருதப்படுகிறார் (உளவியலின் தந்தையாக அல்ல). ஒரு மருத்துவராக அவர் பார்த்த நோயாளிகளின் மனக்கோளாறுகளுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, தனது உளப்பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தினார். ஃபிராய்ட் வாழ்ந்த காலத்தில் உளப்பகுப்பாய்வு பெரும் செல்வாக்கு பெற்ற ஓர் இயக்கமாக வளர்ந்தது. கால ஓட்டத்தில் அவரது உளப்பகுப்பாய்வு முறையின் செல்வாக்கு குறைந்து, தற்போது அருகிப் போயுள்ளது.

காரணம், சான்றுகளின் அடிப்படையிலான மருத்துவ முறைப்படி, அதன் பயன் நிறுவப்படவில்லை என்பதே. ஆனால், ஒரு நபர் தனது சுயசரிதையை மாற்றி எழுத முடியாது என்றாலும், தன்வரலாறு பற்றிய கதையாடலை அந்த நபர் மீள்தொகுப்பு செய்வதற்கு அவரது சிகிச்சை முறை வழியாக ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்தார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

கட்டுரையாளர், இங்கிலாந்து வாழ் தமிழரான மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்

தொடர்புக்கு:

ib****@ho*****.com