Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2016
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,228 முறை படிக்கப்பட்டுள்ளது!

நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?

draw_2445598gஜூன் மாதம் வந்துவிட்டாலும் வெயிலின் தாக்கம் மட்டும் இன்னும் தணியவில்லை. கோடையில் ஏற்படும் ஆரோக்கியத் தொல்லைகளுள் சிறுநீர்க் கடுப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

என்ன காரணம்?

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது; கடுக்கிறது.

கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும்.

சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

சிறுநீர்ப் பாதையில் கல்

சிறுநீரகத்தில் தொடங்கிச் சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.

கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும், வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறு கிற புறவழித் துவாரம்வரை பரவும்.

சிறுநீர்ப் பை பிரச்சினைகள்

சிறுநீர்ப் பையில் தொற்று ஏற்பட்டு வீக்கம் உண்டாகும்போது, நீர்க்கடுப்பு ஏற்படும். இங்கு கல், காசநோய், புற்றுநோய் என எது தாக்கினாலும் நீர்க்கடுப்புடன், சிறுநீரில் ரத்தம், சீழ் வெளியேறுதல், குளிர் காய்ச்சல், வாந்தி, வலி போன்ற துணைப் பிரச்சினைகளும் சேர்ந்துகொள்ளும்.

புராஸ்டேட் வீக்கம்

புராஸ்டேட் வீக்கமும் புற்றுநோயும், ஆண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்பட முக்கியக் காரணங்களாக அமைகின்றன. வழக்கத்தில் வழக்கமாக, நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கே இந்த மாதிரியான பிரச்சினைகளால் நீர்க்கடுப்பு வருகிறது. இவர்களுக்கு சிறுநீர் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகப் போகும்.

மிதமான வேகத்தில் போகும். ஒருமுறை சிறுநீர் கழிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். எத்தனை முறை போனாலும் சிறுநீர் முழுவதுமாகப் போய்விட்ட திருப்தி இருக்காது. இன்னமும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

சுய சுகாதாரம் முக்கியம்

சிறுநீர் வெளியேறுகிற பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தவறினால், சிறுநீர்க் கடுப்பு ஏற்படும். குறிப்பாக, குழந்தைகளுக்கும் புதுமணத் தம்பதிகளுக்கும் இந்தக் காரணத்தால்தான் அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. மேகவெட்டை (கொனோரியா) போன்ற பால்வினை நோய்கள் தாக்கினாலும், சிறுநீர்ப் புறவழி அழற்சி அடைந்து நீர்க்கடுப்பை உண்டாக்கும்.

சிறுநீர்த் தாரையில் கல் அடைத்துக்கொண்டாலும், அந்தப் பாதை சுருங்கிவிட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. இவர்களுக்குச் சிறுநீர் சொட்டுச் சொட்டாகப் போகும். சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாகவோ, கருப்பாகவோ மாறும்.

பெண்களுக்குரிய பிரச்சினைகள்

கர்ப்பப்பைக் கட்டிகள், சினைப்பைக் கட்டிகள், அடி இறங்கிய கருப்பை போன்றவை சிறுநீர்ப் பையை அழுத்தும்போது பெண்களுக்கு அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுவதுண்டு. மேகவெட்டை நோய் வந்த பெண்களுக்குச் சிறுநீர்க் கடுப்பு நிறைய தொல்லை தரும்.

மாத்திரை மருந்துகள் கவனம்!

வலி நிவாரணி மாத்திரைகள், சல்பா மருந்துகள், ஆக்சாலிக் அமிலம் கலந்த மருந்துகள், வீரியம் மிகுந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை நீர்க்கடுப்பை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட வழி அமைக்கும். அதன் விளைவாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு நீர்க்கடுப்பும் அடிக்கடி தொல்லை தரும்.

பரிசோதனைகள் என்ன?

சிறுநீர்க் கடுப்புக்குச் சிறுநீரைப் பரிசோதித்தாலே காரணம் புரிந்துவிடும். இத்துடன் வயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் முழுமையான காரணங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இதைக்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம். அடிப்படைக் காரணத்தைக் களையும் சிகிச்சைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.