நேற்று பொறியாளர் இன்று விவசாயி…விவசாயிகளின் விதியை மாற்றி எழுதிய மதுசந்தன்
ஓரே நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறும்…. ஒரே இரவிலும் இந்த வாய்ப்பு வரலாம். திருப்புமுனை என்பது எப்போது வரும், எங்கிருந்து வரும் என சொல்ல முடியாது. எங்கிருந்தாவது வந்து, நம் வாழ்க்கையை கலர்ஃபுல்லாக மாற்றிக்காட்டிவிடும். அதற்கு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்த நாம் எந்நேரமும் செலுத்த தயாராக இருக்கவேண்டியது அவசியம். அப்படி வாழ்க்கையில் திருப்புமுனையை சந்தித்த ஒருவரின் முயற்சி இன்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மக்களின் ஆரோக்கியத்தையும் காத்துநிற்கிறது.
இந்த சாதனைக்கு சொந்தக்காரர் பெங்களூரில் இருந்து 100கி.மீ தொலைவில் இருக்கும் மண்டியாவைச் சேர்ந்த மதுசந்தன் சிக்கதேவயா.
மண்டியாவை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிடமுடியாது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய நகரம் அது. இன்னும் பலர் வெளியிடங்களுககு வேலை தேடிச் சென்று விட்டனர். மண்டியா விவசாயத்திற்கும் விவசாயிகளின் வாழ்விற்கும் உத்தரவாதமில்லாத இடமாக மாறிப்போனது. கலிஃபோர்னியாவில் ஐ.டி துறையில் வேலை செய்து வந்த என்ஜினியரான மதுசந்தன் சிக்கதேவயா , தம் ஊர் விவசாயிகள் கடனால் கஷடப்படுகின்றனரே என கவலை கொண்டார். இதற்கு ஒருவழிகாணும் உறுதியோடு தன் வேலையை விட்டு நாடு திரும்பினார்.
வழக்கமான விவசாய முறையிலிருந்து மாறினால் வெற்றிபெறமுடியும் என நம்பிய மதுசந்தன் சிக்கதேவயா அதற்கு தேர்ந்தெடுத்தது இயற்கை விவசாயம். சுற்றுச்சூழலுக்கும் அது நல்லது என மண்டியா விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினார். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் அவர்களை ஒருங்கிணைத்து, ‘ ஆர்கானிக் மண்டியா’ என்ற பெயரில் கூட்டுறவுச் சங்கம் ஒன்றையும் அந்த நகரத்தில் நிறுவினார்.
தமக்கு தெரிந்த நண்பர்களிடம் இருந்து கடன் பெற்றார். வெளிநாடு வேலையை விட்டு விவசாயத்திற்கு வந்த அவரையும் அவரது முயற்சியையும் பல நண்பர்கள் கேலி செய்தனர். சிலர் மட்டுமே கடன் கொடுத்து உதவ முன்வந்தனர். முழுக்க முழுக்க இயற்கை முறையில் காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு முதலியவற்றை தம் நிலத்தில் விளைவித்தார். அவற்றை விற்பதற்காக ‘ஆர்கானிக் மண்டியா’ என்ற கடையை மைசூர்-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஏற்படுத்தினார். அந்த கடையில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை விற்கத்துவங்கினார்.
இயற்கை முறை, நியாயமான விலை இது மக்களிடையே ஆர்கானிக் மண்டியா கடைக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. மக்கள் இக்கடையை நோக்கி அலைமோதினர். கடையை தொடங்கி ஆறே மாதங்கள் ஆன நிலையில், இன்று கடையின் வருமானம் கோடிக்கணக்கில் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
கரநாடக மாநிலத்தில் ஆர்கானிக் மண்டியா ஒரு தன்னம்பிக்கையின் அடையாளமாக எழுந்துநிற்கிறது. ஆம்… இச்சங்கத்தில் இணைந்த500 விவசாயிகள், ஏறத்தாழ 200 ஏக்கர்களில் இயற்கை விவசாயம் செய்கின்றனர். ஆதலால் உணவு பொருட்கள் எந்தவித கலப்படங்கள் இன்றி சுத்தமாகவும், சுவையாகவும் இருப்பதால் இந்த கடையில் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
மதுசந்தன் இன்னும் 10,000 குடும்பங்களை இத்திட்டத்தில் இணைத்து, இதன் வருவாயை இன்னும் பல கோடிகளில் உயர்த்தவேண்டும் என்ற அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியுள்ளார் தற்போது. மண்டியாவில் நடந்த இந்த புரட்சியினால் நிலங்களை விற்றும் குடும்பத்துடன் அந்நகரைவிட்டு வெளியேறிய விவசாயிகள் திரும்பவும் ஒரு நம்பிக்கை முகத்துடன் ஊர் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.