Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2016
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,817 முறை படிக்கப்பட்டுள்ளது!

100% வேலை வாய்ப்பு – புவித்தகவல் தொழில்நுட்பவியல்

புவித்தகவல் தொழில்நுட்பவியல் (Geo informatics)

இந்த படிப்புக்கு 100% வேலை வாய்ப்பு..!’ – நம்பிக்கை கொடுக்கிறது மத்திய பல்கலைக்கழகம்!

geo-informaticsஎன்னதான் வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரித்தபோதிலும் மாணவர்களிடயே இன்னும் இன்ஜினியரிங் மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு முட்டிமோதும் சூழலில், இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பட்டதாரி இளைஞர்கள் பலர்,  படித்துவிட்டு வேலை இல்லாததால், தினசரி வாழ்க்கைக்கு அல்லல்படும் அவலம் இந்தியாவில் நடந்துவருகிறது.

ஒரு காலத்தில் இன்ஜினியரிங் படிப்பு கொடிகட்டிப் பறந்திருந்தாலும், இன்று  அதை படித்த அனைவருக்குமே வேலைவாய்ப்பு கிடைப்பது சிரமமாக உள்ளது. காரணம், வேலைவாய்ப்பின்மை. பெற்றோர் கஷ்டப்பட்டு  கடன்வாங்கிப் படிக்கவைத்தாலும், பலர் வேலை வாய்ப்பில்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர்.  ஆனால்,  பல சிக்கல்களுக்கு மத்தியில் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு, கடந்த 13 வருடங்களாக நூறு சதவிகிதம் வேலைவாய்ப்பைப்  பெற்றுத்தந்துகொண்டு இருக்கிறது, திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள புவித்தகவல் தொழில்நுட்பவியல் (Geo informatics) மையம். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த  மையத்தை, பேராசிரியர் மற்றும் இயக்குநர் என்.டி.மணி வழி நடத்திவருகிறார்.

அவரைச் சந்தித்தபோது, ” இன்றைய சூழ்நிலையில்… பல மாணவர்கள் வேலைவாய்ப்பின்றித்  தவிப்பதற்குக்  காரணம்,  அதிக  மாணவர்கள்  ஒரே படிப்பைப் படித்ததால்தான். இங்கு  2002-ம் ஆண்டிலேயே இரண்டாண்டு முதுகலைப் பட்டப்படிப்பை (Msc Geoinformatics) ஆரம்பித்துவிட்டோம். அப்போதிலிருந்து, வருடத்துக்கு 25 முதல் 40 மாணவர்கள் வரை 13 ஆண்டுகளாக,  படிப்பை முடிக்கும் முன்னரே வேலையில் சேர்ந்து விடுகின்றனர்.

இரண்டு வருடப் படிப்பின் முடிவில், நேர்முகத் தேர்வின் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. இதுபோக,’ஸ்பேசியல் டெக்னாலஜி’   (Spatial Technology) என்ற ஒரு வருட  டிப்ளமோ படிப்பையும் 2007-ல் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த டிப்ளமோ துறையைத் தேர்வுசெய்யும் மாணவர்களும் நல்ல வேலையில் இருக்கின்றனர்.

இந்த இரண்டு ஆண்டு பட்டப் படிப்பு கல்வித்திட்டம், தொலை உணர்வு தொழில்நுட்பம், புவித்தகவல் அமைப்பு மற்றும் கணினி அறிவியல் படிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு டிப்ளமோ படிப்பில் கணினி அறிவியல் தவிர, மற்ற பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் பாட அமைப்புகள் மிகவும் நேர்த்தியாகவும், எளிதான முறையிலும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில்  பாடங்கள் நடத்தப்படுவதுதான்  இந்த மையத்தின் தனிச் சிறப்பு. அனுபவம் வாய்ந்த  பேராசிரியர்கள், நவீன ஆய்வுக்கூடம் மற்றும் பாடங்கள் சார்ந்த நூலகம் போன்றவை மாணவர்களின் கற்றலுக்கு ஏற்ற சூழ்நிலையை அமைத்துக்கொடுகிறது.

இன்னும் பல்வேறு வசதிகள்  ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி, பொது நூலகம், கணினி வசதி, பல்கலைக்கழகம் முழுவதும் இலவச இணைய வசதிகள்  கொடுக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு அரங்கம் மற்றும் திடல், மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அமைத்துக்கொடுக்கின்றது. அரசின் மாணவர் உதவித்தொகையும், கல்விக்கடன் பெறுவதற்கான  அங்கீகாரமும் இந்த இரண்டு முதுநிலை படிப்புகளுக்கும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளங்கலைப் பட்டப் படிப்பை எந்தத்  துறையில் (Any major) படித்திருந்தாலும், இந்த இரண்டு பட்டப் படிப்பிலும் சேர்ந்து படிக்கலாம். இதில் புவித்தகவல் தொழில்நுட்பவியல் (Geo informatics) துறைக்கு இரண்டு வருடத்திற்கு 63,000 ரூபாயும், ஸ்பேசியல் டெக்னாலஜி  ( Spatial Technology) துறைக்கு ஒரு ஆண்டுக்கு 12,000 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இந்தத்  துறையில் கென்யா மற்றும் ருவாண்டோ போன்ற வெளிநாடுகளில் இருந்தும்  வந்து படிக்கிறார்கள். இன்ஜினியரிங் மாணவர்களும்  மேற்படிப்பிற்காக  இந்தத் துறையில் சேருகிறார்கள். இந்தப் படிப்பு, வேலைவாய்ப்பிற்காகவே உருவாக்கப்பட்ட படிப்பு. இதில் படித்தவர்கள், இன்று மிகப்பெரிய அரசுத் துறைகளிலும்  பன்னாட்டுக்  கம்பெனிகளிலும் வேலை செய்கிறார்கள். 100% வேலைவாய்ப்பு என்பது நிச்சயம். அந்த நம்பிக்கையில்தான் 14-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறோம்” என்றார் பேராசிரியர் என்.டி.மணி.

தொடர்புக்கு: பேராசிரியர் என்.டி.மணி,  செல்போன் -94430-15375, காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம், காந்திகிராமம். மின்னஞ்சல்:ndmani at gmail.com  — Thanks VIKATAN