Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2016
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,819 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 – மார்னிங் டிஃபன் 2/2

  p102a  காரப்புட்டு

தேவையானவை: துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் – தலா கால் கப், பச்சைமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

தாளிக்க: முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு வகைகளை நீரில் ஒன்றாக ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, வேகவைத்து எடுத்து, ஆறியதும் நீர்விட்டு உதிர்க்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்துத் தாளித்து மிளகாய், உதிர்த்த இட்லியைப் போட்டுக் கிளறவும். இறக்கும் முன் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கிப் பறிமாறலாம்.

பலன்கள்: வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நுண்ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு இது. அனைவருமே சாப்பிடலாம். சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டால், பருப்பில் உள்ள புரதச்சத்து கிடைக்கும்.

பருப்பு ஊத்தப்பம்

p104aதேவையானவை: சாமை அரிசி – 2 கப், துவரம் பருப்பு – ஒரு கப், கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், கெட்டித் தயிர் – ஊறவைக்கத் தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 5, கடுகு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:  அரிசி, பருப்பைக் கழுவி, தனித்தனியாக நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு, மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். கெட்டித் தயிரில் இதனை, 10 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாயைத் தாளித்து, மாவில் சேர்த்து உப்பு போட்டுக் கிளற வேண்டும். வெங்காயத்தை எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு ஊத்தப்பமாக ஊற்றி, வதக்கிய வெங்காயம் ஒரு கைப்பிடி போட்டு, மூடிவிட வேண்டும். திருப்பிப் போடக் கூடாது.

பலன்கள்:
அரிசி ஊத்தப்பம் சாப்பிடும்போது வெறும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கும். ஆனால், பருப்பு ஊத்தப்பமாகச் செய்து சாப்பிடும்போது, புரதச்சத்து, அமினோஅமிலங்கள், தாதுஉப்புகள் போன்றவையும் உடலுக்குக் கிடைக்கின்றன. இதனுடன், வெங்காயம், சாமை அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

மினி பொடி இட்லி

p106aதேவையானவை: புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து – தலா ஒரு கப், பச்சரிசி – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், ஆமணக்கு விதை – 3, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் – 6, எள் – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,  மிளகாய்ப் பொடி உப்பு, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை மூன்று மணி நேரமும், ஆமணக்கு, வெந்தயத்தைத் தனித்தனியாக ஐந்து மணி நேரமும் ஊறவைத்து அரைக்க வேண்டும். இவற்றைக் கலந்து உப்பு போட்டுக் கரைத்து, மஞ்சள் தூள் சேர்த்து, தட்டில் எண்ணெய் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்க வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய்ப் பொடி மற்றும் தேவையானவற்றைப் போட்டு வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். சிறிது இட்லிப் பொடியில் நல்லெண்ணெய் விட்டுக் கலக்கி, வெந்த மினி இட்லியின் மேல் தடவிப் பரிமாறவும்.

பலன்கள்: வெந்தயம் குளிர்ச்சியைத் தரக்கூடியது. மக்னீசியம், கால்சியம் போன்றவை உள்ளன. வெந்தயம்  உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. இதில், நீரில் கரையும் வகை நார்ச்சத்து இருக்கிறது. நல்ல மருத்துவ உணவு.

வரகரிசி சொஜ்ஜி

p108aதேவையானவை: வரகரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கஸ்தூரி மேத்தி உலர்ந்த கீரை (டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்), துருவிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் வரகரிசியையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக வறுக்க வேண்டும்.குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, மிளகாய், துவரம் பருப்பு போட்டு வதக்கி, தேங்காய்த் துருவல், கேரட், உப்பு, கஸ்தூரி மேத்திக் கீரையைப் போட்டுக் கிளறி, தேவையான அளவு நீர் ஊற்றி, ஒரு கொதிவந்ததும் பாசிப்பருப்பு, அரிசியைப் போட்டுக் கிளறி, மூடி வெயிட் போட வேண்டும். மூன்று விசில்கள் வந்ததும் இறக்க வேண்டும்.

பலன்கள்:
மூட்டு வலி இருப்பவர்களுக்கு, வரகு சிறந்த உணவு. கல்லீரலுக்கும் நல்லது. வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும், செரிமானப் பிரச்னைகளைச் சரிசெய்யும். நார்ச்சத்து நிறைந்தது என்பதால், எல்லோரும் சாப்பிடலாம். பாசிப்பருப்பில் இருந்து புரதச்சத்துக்கள் கிடைக்கும். உடல் குளிர்ச்சி அடையும்.

சத்துமாவு கேக்

p110aதேவையானவை: கோதுமை மாவு, அரிசி மாவு, தினை மாவு – சேர்ந்தது ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2, வறுத்த வேர்க்கடலை, இஞ்சி பொடியாக நறுக்கியது – தலா ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மோர் (நீருக்குப் பதில்), எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மாவுடன் உப்பு சேர்த்து, மோர் விட்டுக் கலந்து, இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை, இஞ்சியைத் தாளித்து, சீரகம் போட்டு, மாவுக் கலவையை ஊற்றி, கைவிடாமல் கிளற வேண்டும். வெந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி, ஆறியவுடன் கேக் போல வெட்டிப் பரிமாறலாம்.

பலன்கள்: கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புக்களும், வைட்டமின்களும், நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்த உணவு இது. கலோரி அதிகமானது. எனினும், ஊட்டச்சத்துகள் அதிகம் பொதிந்துள்ளதால் எல்லோருமே சாப்பிடலாம். வளரும் பருவத்தினருக்கு ஏற்ற உணவு இது.

நவதானிய கட்லெட்

p112a தேவையானவை: கேரட் – 2 (வேகவைத்து, மசித்துக்கொள்ளவும்), நவதானியக் கலவை – ஒரு கப், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்ந்தது – ஒரு டேபிள்ஸ்பூன், சாட் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன், தனியா தூள் – அரை டீ ஸ்பூன்.

செய்முறை: தானியங்களை ஐந்து மணி நேரம் ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன், மிளகாய் விழுது, உப்பு உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்துப் பிசைந்து, கட்லெட் போல தட்டி தவாவில் எண்ணெய் ஊற்றி இதைப் போட்டு, இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானவுடன் இறக்கவும். தக்காளிச் சட்னியுடன் பரிமாறலாம்.

பலன்கள்: நவதானியங்களில் ஒன்பது விதமான அமினோஅமிலங்கள் உள்ளன. நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோய், உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.

ராகி சேமியா கிச்சடி

p114aதேவையானவை: ராகி சேமியா – ஒரு கப், விருப்பமான காய்கறிக் கலவை – அரை கப், முந்திரி, பச்சைமிளகாய் – தலா 2, கடுகு, உப்பு, எண்ணெய் – சிறிதளவு, எள்ளுப் பொடி – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, முந்திரிப் பருப்பைத் தாளித்து, பச்சைமிளகாயை வதக்கி, பின்னர் காய்கறிக் கலவையைப் போட்டு வதக்கி, நீர் தேவையான அளவு விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிவந்ததும் ராகி சேமியாவை போட்டுக் கிளறி, வெந்ததும் எள்ளுப் பொடி தூவி இறக்கவும்.

பலன்கள்:
கேழ்வரகு, எள் இரண்டிலும் கால்சியம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதைச் சாப்பிட்டுவந்தால், மூட்டு வலி  குறையும்; எலும்புகள் பலமாகும். காலை வேளையில் சாப்பிடும்போது, ஒரு நாள் முழுவதும் இயங்கத் தேவையான ஆற்றலைத் தரும்.

தேங்காய்ப் பால் ஆப்பம்

p116aதேவையானவை: இட்லிப் புழுங்கல் அரிசி – 3 கப், வெந்தயம் – ஒரு கைப்பிடி, தேங்காய்ப் பால் – ஒரு தேங்காயிலிருந்து எடுத்தது, ஏலக்காய்ப் பொடி – ஒரு டீஸ்பூன், அச்சு வெல்லம் – துருவியது, நாட்டுச்சர்க்கரை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெந்தயத்தை ஆறு மணி நேரமும், அரிசியைத் மூன்று மணி நேரமும் ஊறவைக்க வேண்டும். இவற்றை அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துப் பொங்கவிடவும். மறுநாள், ஆப்பச் சட்டியில் எண்ணெய் தடவிச் சுடவும். தேங்காய்ப் பாலில் ஏலக்காய்ப் பொடி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து, ஒரு கொதிவிடவும். அதை, வெந்த ஆப்பத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.

பலன்கள்: 
குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது. எளிதில் செரிமானமாகும். உடனடி ஆற்றல் தரும். கலோரி நிறைந்தது. வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம் அதிகமாக உள்ளன. தேங்காய்ப் பாலில் இருந்து நல்ல கொழுப்பு கிடைக்கும்.

சாமைப் பால் பொங்கல்

p118aதேவையானவை: சாமை அரிசி – ஒரு கப், பால் – 3 கப், நெய், பாசிப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், முந்திரி – 6, உப்பு – தேவையான அளவு, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: குக்கரில் நெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சித் துருவல், முந்திரி, கறிவேப்பிலை போட்டு, பால் சேர்க்கவும். கொதிவரும்போது அரிசி, பருப்பு போட்டு உப்பு சேர்த்துக் கிளறி மூடிவிடவும். நான்கைந்து விசில் விட்டு, குழைய எடுத்துப் பரிமாறலாம். தண்ணீருக்குப் பதில் பால் சேர்ப்பதால், சுவை கூடும்.

பலன்கள்:
சாமையில் இரும்புச்சத்து, செலீனியம், துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வயிற்றுப்புண்களை ஆற்றும். உடல் எடை கூட்ட விரும்புபவர்கள் இதைச் சாப்பிடலாம். உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

7 ஸ்டார் தோசை

p120aதேவையானவை: பச்சரிசி – ஒரு கப், கம்பு, ரவை, கேழ்வரகு, ஜவ்வரிசி, உளுந்து, கோதுமை வறுத்து மாவாக்கியது – ஒரு கப், சின்ன வெங்காயம் – அரை கப், பச்சைமிளகாய், தக்காளி – தலா 4 (அரிந்தது), பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மாவுடன் தானிய மாவைக் கலந்து, உப்பு சேர்த்து நீர் விட்டுக் கரைக்கவும். இதில், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்துப் பெருங்காயத் தூள் போட்டுக் கலக்க வேண்டும். தோசைக் கல்லைச் சூடாக்கி எண்ணெய் விட்டு தோசை ஊற்றித் திருப்பிப் போட்டு, வெந்ததும் பரிமாறலாம்.

பலன்கள்:
மிகவும் ஹெல்த்தியான தோசை இது. சரிவிகிதமாக அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். கலோரி நிறைந்தது. வைட்டமின்கள், தாதுஉப்புகள் அதிகம் கிடைப்பதால், உடல் வலுப்பெறும்.

கீரை வெஜ் ஆம்லெட்

p122a    தேவையானவை: தோசை மாவு – ஒரு கப், ஏதாவது ஒரு கீரை – அரை கப், இஞ்சி, மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

குறிப்பு: புதினா, கறிவேப்பிலை, மல்லி, முளைக்கீரை, வெந்தயக் கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக அரிந்து, மாவில் கலந்துவிடவும்.

செய்முறை:
மாவில் விழுதுடன் கீரையைக் கலந்துகொள்ளவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஆம்லெட் போல ஊற்றி எடுத்து, வெங்காயச் சட்னியுடன் பரிமாறலாம்.

பலன்கள்:
மாவுச்சத்துடன் நார்ச்சத்தும் கிடைக்கிறது. இஞ்சி உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும். வெறும் கீரையைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும், கீரை பிடிக்காதவர்களும் இப்படி, ஆம்லேட் போல போட்டுத் தந்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பெசரட்

p124aதேவையானவை: பச்சரிசி – 2 கப், பச்சைப் பயறு – ஒரு கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெந்தயம், அரிசி, பயறு ஆகியவற்றை  ஆறு மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு, தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும் பயறு தோசை வார்த்து, மேலே வெங்காயம், சீரகம், இஞ்சி – பச்சைமிளகாய் தூவி, வெந்ததும் பரிமாறவும்.

பலன்கள்: காலையில் சாப்பிட மிகச்சிறந்த உணவு. இரும்புச்சத்து வைட்டமின் ஏ, புரதச்சத்து, அமினோஅமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அனைவருமே சாப்பிடலாம்.

ஜவ்வரிசி – புளி உப்புமா கொழுக்கட்டை

p126aதேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப் ( மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்), புளிக்கரைசல் – தேவையான அளவு, உப்பு, எண்ணெய் – சிறிது, மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோல் உரித்து, மசித்தது), கடுகு, கறிவேப்பிலை – ஒரு டீஸ்பூன், மல்லித் தழை – அலங்கரிக்க.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஊறிய ஜவ்வரிசி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றைப் போட்டு பிரட்டி எடுத்துக்கொள்ளவும். இதனுடன், மசித்த உருளைக்கிழங்கைப் போட்டுப் பிரட்டி, புளிக்கரைசல் விடவும். ஒரு கொதிவந்து சுண்ட ஆரம்பித்தவுடன், அடுப்பை அணைத்துக் கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்க வேண்டும். மல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்:
கலோரி அதிகமான உணவு இது. எளிதில் செரிமானமாகும். காலை, மதியம், இரவு என எல்லா வேளையிலும் சாப்பிடலாம். குழந்தைகள், முதியவர்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் போன்றவை சேர்ப்பதால், உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்குகின்றன.

கேழ்வரகு கார அடை

p128a1தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், உப்பு, எண்ணெய் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து, வெங்காயத்தை வதக்கி, உப்பு சேர்த்து நீர்விடவும். நன்கு கொதிவந்ததும் கேழ்வரகு மாவைப் போட்டு கைவிடாமல் கிளறி, நன்றாக வேகவைக்க வேண்டும். தவாவில் எண்ணெய் விட்டு, இதை அடையாகத் தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்க வேண்டும்.

பலன்கள்:
கேழ்வரகில் கால்சியம் நிறைவாக உள்ளது. இரவில் சாப்பிட்டால், மந்தமாக இருக்கும். எனவே, காலையில் இந்த அடையைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. குழந்தைகள், எடை அதிகரிக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்ற உணவு.

முளைப்பயிறு சப்பாத்தி

p130aதேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், முளைவிட்ட பச்சைப்பயறு – தலா கால் கப், மிளகுத் தூள், சீரகத் தூள் – தலா அரை டீஸ்பூன், தக்காளி – ஒன்று, பூண்டு – 4 பற்கள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல்- ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை: முளைவிட்ட பயறை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டை சிறிது உப்பு சேர்த்துத் தண்ணீர் விடாமல் அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த மசாலாவை வதக்கி, தேங்காய்த் துருவல், பயறு, மற்ற தூள் வகைகள், உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் வதக்கவும். பயறு மசாலா ரெடி.

கோதுமையை சப்பாத்திக்குப் பிசைவது போல், நீர் விட்டுப் பிசைய வேண்டும். மாவை உருட்டி, குழி செய்து சிறிது மசாலாவை வைத்து மூடி, மசாலா வெளிவராதபடி சப்பாத்தி செய்யவும். கோதுமை மாவில் புரட்டி, கனமான சப்பாத்தியாகச் சுட்டுப் பரிமாறவும். இதற்குக் கெட்டித் தயிரில் சிறிது சாட் மசாலா பவுடர் தூவி, தொட்டுக்கொள்ளலாம்

பலன்கள்:
புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற உணவு. அமினோஅமிலங்கள் மற்றும் தாதுஉப்புகள் நிறைந்தது.