Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2018
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,774 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்… நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?

   பயணம் செய்ய முக்கியமான தேவை பணமா, நேரமா, மனமா என்பதை நாம் எல்லோருமே நண்பர்களுடன் விவாதித்திருப்போம். அப்படியொரு வாட்ஸ்அப் விவாதத்தில் நண்பரொருவர் சொன்னது “வெரைட்டியான இடங்கள்”. மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு செல்வது போர் என்றார் அவர்.

உண்மைதான். இப்போது, வார இறுதி வந்தாலே எதாவது ஒரு மலைக்கு சென்று விடும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் அவர்கள் லிஸ்ட்டிலே இருக்காது. அதிக காலடிகள் படாத, இயற்கைக்கு நெருக்கமாகவே இருக்கும் மலைகள் தான் அவர்களது தேர்வு. அப்படிப்பட்ட மலைவாசஸ்தலங்கள் இங்கே குறைவுதான். “இன்னும் நாம எங்கெல்லாம் போகல” என பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் சொன்ன பெயர்தான் ‘நெல்லியம்பதி’. அதற்கு முன்புவரை நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதேயில்லை.

நெல்லியம்பதி என்ற பெயரைக் கேட்டதும் தமிழகத்திலிருக்கும் ஊர்தான் எனத் தோன்றியது. ஆனால், நெல்லியம்பதி இருப்பது கேரளாவில். கோவையிலிருந்து 100 கிமீ. பாலக்காட்டைத் தாண்டி போக வேண்டும். சின்ன மலைதான். ஆனால், நிச்சயம் ஏற வேண்டிய மலை.

ஒரு வார இறுதியில் நெல்லியம்பதி போக திட்டம் தீட்டப்பட்டது. சென்னையிலிருந்தோ அல்லது தமிழகத்தில் எந்தப் பகுதியிலிருந்தோ நெல்லியம்பதி போய்வர 2 நாள்கள் போதும். வெள்ளிக்கிழமை இரவு கோவைக்குப் பயணம். அடுத்த நாள் காலை அங்கிருந்து 2-3 மணி நேரத்தில் நெல்லியம்பதி. சனிக்கிழமை மதியம் 12 முதல் ஞாயிறு 12 வரை ஹோட்டல் புக் செய்துகொள்ளலாம். மீண்டும் ஞாயிறு மாலை மலையைவிட்டு இறங்கினால், இரவு பயணம் செய்து திங்கள் அலுவலகம் சென்றுவிடலாம். அலுவலக பிரச்னை இல்லாதவர்கள் இன்னொரு நாள் அங்கிருந்துவிட்டும் வரலாம்.


நெல்லியம்பதி எனத் தேடினாலே கூகுளில் பல ரிசார்ட்கள் வரும். முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. நாங்கள் தங்கியிருந்தது ‘ITL Holidays & Resort’. அங்கேயே உணவும் கிடைக்கும். “குறைந்த விலை; நிறைந்த சுவை. நம்ம சேட்டா கடை” என சொல்ல வைக்கும் தரம். இரவில் கேம்ப் ஃபையர் கேட்டு வாங்கவும். அடிக்கும் குளிருக்கு சரியான ஜோடி.

  மலபார் அணில்

நெல்லியம்பதி மலையேறும்போதே காட்டுயிர் புகைப்படக்காரர்கள் அலெர்ட் ஆகிவிட வேண்டும். வழியில் பல இடங்கள் இருவாச்சிப் பறவைகளை பார்க்கலாம். நாம் சென்ற போது எங்களுக்கு முன் பறவைகள் அலெர்ட் ஆகிவிட்டன. அதனால், கண்ணில் ஏதும் படவில்லை. ஆனால், பறவையைத் தேடியதில் மலபார் அணில் கண்ணில்பட்டது. அணில் என்றால் நம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் குட்டி அணில் என நினைக்க வேண்டாம். நம்மை மிரட்டும் அளவிலிருக்கின்றன மலபார் அணில்கள். நேரத்தை மிச்சப்படுத்த நேராக ரிசார்ட் செல்வதை விட, ஆங்காங்கே நிறுத்தி மலையையும் மலையில் வசிப்பவற்றையும் ரசிப்பதில்தான் அலாதி சுகம். வாகனத்தை மட்டும் மற்றவர்களுக்கு தொல்லைத்தராமல் நிறுத்த வேண்டும். ஏனெனில், நெல்லியம்பதி மலைச்சாலைகள் குறுகலானவை.

நெல்லியம்பதியில் இயற்கையும் குளிரும் தான் ஹைலைட் என நினைத்திருந்தோம். இன்னொன்றும் இருக்கிறது. அது, ஜீப் டிரெக்கிங். ஒரு வண்டிக்கு 1800 ரூபாய் (அரசின் அனுமதிக் கட்டணம் 250ரூ தனி). 7 பேர் வரை செல்லலாம். 5 பேர் சென்றால் எளிதாக இருக்கும். ஏனெனில், இது தார்ச்சாலையில் வழுக்கிக்கொண்டு போகும் விஷயமல்ல. கொஞ்ச தூரம்வரை “இதுக்கா 1800?” என்றே நினைத்தோம். அதன்பிறகு ஆரம்பமானது Off road பயணம். மிஸ் பண்ணக்கூடாத சாகசம் அது. அர்ஜுனர் வில்லு பாடல் தெரிந்தால் பாடிக்கொண்டே பயணிக்கலாம். அப்படியொரு த்ரில். மழைக்காலத்தில் இன்னும் சிறப்பாக இருக்குமாம். பாறைகள் வழுக்குவதும் வண்டி சேறில் சிக்குவதுமென த்ரிலுக்கு பஞ்சமில்லாத பயணம். “எனக்கு கிக் வேண்டும்” என ஏங்கும் ஜெயம் ரவிக்கள் மழைக்காலத்தில் டிக்கெட் போட்டுக்கொள்ளுங்கள். மதியம் 3 மணிக்கு மேல் ஜீப்புக்கு அனுமதி கிடையாது. எனவே காலையிலே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.


ஜீப் நம்மைக் கொண்டு போகும் இடம் மலையுச்சி. ரொம்பவும் சறுக்காத ஒரு பாறையாக பார்த்து கண்கள் மூடி படுத்துக்கொள்ளலாம். அரை மணி நேரத்தில் ஜீப் ஓட்டுநர் வந்து எழுப்புவார். அதுவரை எந்தக் கவலையுமின்றி இயற்கையோடு ஒன்றோடு ஒன்றாக கலந்துவிடலாம். ஒரு ஜென் நிலை அது.


நெல்லியம்பதியின் ஹைலைட்டில் இன்னொன்று டீ எஸ்டேட். AVT தேநீரின் எஸ்டேட் அது. ஒருவேளை நீங்கள் நெல்லியம்பதிக்கு சென்றால், எஸ்டேட் ஊழியர்களுக்கென இருக்கும் மருத்துவமனைக்கு வழிக்கேட்டு செல்லுங்கள். அந்த வளைவுகளும் காட்சிகளும் வழக்கமான பாதையை விட போதையானது. எஸ்டேட் வாசலில் நல்ல தரமான தேநீர் பாக்கெட்டுகளும் கிடைக்கின்றன.
நெல்லியம்பதியின் இன்னொரு முக்கியமான இடம் ஆர்கானிக் ஃபார்ம். நல்ல விசாலமான ஃபார்ம். உள்ளே பொதுமக்கள் சென்று பார்க்கலாம்.

மிகப்பெரிய ஊர் கிடையாது. கமர்ஷியலான பார்வையிடங்கள் கிடையாது. ஆனால், ஒரு வார இறுதியை மகிழ்ச்சியாய செலவிட, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒரு சந்திப்பைப் போட நினைத்தால் நெல்லியம்பதி நல்ல சாய்ஸ். மலையிலெங்கும் மதுக்கடைகள் கிடையாது. மதுவுக்கு அனுமதியும் கிடையாது. பயணத்தைத் திட்டமிடுபவர்கள் காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கு கையோடு மருந்துகளையும் கொண்டு செல்லவும். அங்கே அவ்வளவு வசதி கிடையாது.

நன்றி: விகடன்