Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2021
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 901 முறை படிக்கப்பட்டுள்ளது!

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

அப்துல் காதிர் ஜீலானி சிறந்த அறிஞர் ஆவார்கள். அவர்கள் பிறந்தது ரமளானில், இறந்தது ரபியுல் ஆகிர். அவர்கள் இறந்த தினத்தை விழாவாக கொண்டாடுவது அவர்களை மதிப்பதா? அல்லது….

குருட்டுத் தனமாக நாம் யாரையும் பின்பற்றினால் அந்த வழிகேடர்கள் இப்படித் தான் மாற்றுமதக் கலாச்சாரமான இறந்த தின விழாவை நம்மில் புகுத்திவிடுவார்கள். அவர்களது உண்மையான சரித்திரம் தான் என்ன?

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

 ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளைவிட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய்யான கதைகள் உலவுகின்றன. இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப்  பிரச்சாரமும் செய்யப்படுகின்றது.

   “என்னை ஆயிரம் முறை அழைத்தால் நான் ஓடோடி வருவேன்”என்றும்,

   “எனது அனுமதியுடன் தான் சூரியன் சந்திரன் உதிக்கின்றன” என்றும்,

   “உலகில் எது நடந்தாலும் எனக்குத் தெரியாமல் நடப்பதில்லை” என்றும்

அவர்கள் கூறியதாக நம்பப்பட்டும் வருகின்றது.

   இவையும், இன்னும் பல இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானவைகளும் அவர்கள் பெயரால் ஓதப்பட்டு வருகின்ற மவ்லிதுகளிலும், யாகுத்பாவிலும் காணப்படுபவை.

   அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனது எந்த நூலிலும் இவ்வாறு கூறியிருக்கவில்லை. அவர்கள் காலத்தில் எழுதப்பட்டுள்ள எந்த நூற்களிலும் அவர்கள் இப்படிச் சொன்னதாக ஒரு சிறு குறிப்பும் காணப்படவில்லை. மாறாக ஹிஜ்ரீ-ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெரியார் இந்த ஷிர்க்கான சொற்களைச் சொன்னதாக 1100-ல் எழுதப்பட்ட மவ்லிது கிதாபுகளில் தான் காணப்படுகின்றது. அவர்களின் காலத்திற்கு சுமார் 600 ஆண்டுகளுக்குப்பின் வந்தவர்கள்தான் இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசியிருக்கின்றனர்.

   அவர்கள் மரணமடைந்து 600 ஆண்டுகளாக, “அவர்கள் இப்படிச் சொன்னதாக” எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. இதுவே திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டுக் கூறிய பொய்கள் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரமாகும்.

   மாறாக இதுபோன்ற தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கின்ற விதத்தில் தான் அவர்களே எழுதிய “குன்யதுத்தாலிபீன்” என்ற நூலில் காணப்படுகின்றது. ஆதாரபூர்வமாக தொகுக்கப்பட்ட அவர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய “ஃபு தூஹுல் கைப்” “அல்ஃபத்ஹுர்ரப்பானி” ஆகிய நூல்களும், இந்தப் பொய்யான தகவல்களை மறுக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

   அவர்கள் தனது கைப்பட எழுதிய உண்மைகளை ஏற்பதா? அல்லது அவர்கள் பெயரால் மிகவும் பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்களை ஏற்பதா? என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுகிறோம்.

   அவர்களது நூலிலிருந்தும் ,அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் ,அவர்களின் கருத்தைத் தக்க ஆதாரங்களுடன் தொகுத்துத் தந்துள்ளோம்.

   இதன் பிறகாவது உண்மையை உணராதோர், தனது தவறான முடிவை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புவோம். அல்லாஹ் ,தான் நாடியவர்களுக்கே நேர்வழி காட்டுவான்.

இரண்டு போதுமே!

   நாம் பின்பற்றிச் செல்ல, நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு நபி நமக்கு இல்லை. நாம் செயல்பட குர்ஆனைத் தவிர வேறு வேதம் எதுவுமில்லை. எனவே அவ்விரண்டை விட்டும் அப்பாற்பட்டு விடாதே! அவ்விரண்டையும் நீ விட்டுவிட்டால் நீ நாசமடைந்து விடுவாய்! ஷைத்தானும், உன் மனோ இச்சையும் உன்னை வழி கெடுத்து விடும்.  ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு

      திருக்குர்ஆனையும், நபி வழியையும் உனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அவ்விரண்டிலும் ஆழமாகச் சிந்தனை செய்து, அவ்விரண்டின்படி நீ செயல்படு! அவர் அப்படி சொல்லி இருக்கிறார். இதில் இப்படி சொல்லப்பட்டுள்ளது போன்ற உளரல்களைக் கண்டு ஏமாந்து விடாதே! ஏனெனில் “ரசூல் எதைக்கொண்டு வந்தாரோ, அதை எடுத்துக்கொள்ளுங்கள்! அவர் எதைத் தடுக்கிறாரோ அதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். குர்ஆனிலும், நபி வழியிலும் தான் (ஈமானுக்குப்) பாதுகாப்பு உண்டு. அந்த இரண்டைத் தவிர மற்றவைகளில் நாசம் தான் உண்டு. குர்ஆன், நபி வழி இவ்விரண்டின் மூலமாக மட்டும்தான் ஒரு அடியான் இறை நேசனாக முடியும்.  ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு

 குர் ஆனையும், நபி வழியையும் பின்பற்றாத வரை உனக்கு (மறுமையில்) வெற்றி கிட்டாது.  ஃபத்ஹுர்ரப்பானி, 39வது மஜ்லிஸ்                                   

பித்அத் செய்யாதீர்கள்!

   நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றுங்கள்! ‘பித்அத்’களை உருவாக்கி விடாதீர்கள்! இறை உத்தரவுக்குக் கட்டுப்படுங்கள்! மனமுரண்டு பிடிக்காதீர்கள்! இறைவனை ஏகத்துவப்படுத்துங்கள்! அவனுக்கு இணை வைக்காதீர்கள்!  ஃபுதூஹுல்கைப், பக்கம் 180

   பித்அத்களை உருவாக்குபவனை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளனர். “எவன் பித்அத்தை உரு வாக்குகிறானோ, அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், நல்லடியார்கள் அனைவரின்  சாபமும் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.  குன்யதுத் தாலிபீன், பக்கம் 81  

ஏகத்துவ முழக்கம்

   எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத்தவிர எவருமில்லை; நல்லதும் கெட்டதும், துன்பமும் இன்பமும், கொடுப்பதும் கொடுக்க மறுப்பதும், திறப்பதும் திறந்ததை மூடுவதும், வாழ்வும் மரணமும், இழிவும் மதிப்பும், வறுமையும் செல்வமும் அல்லாஹ்வின் கையில் மட்டுமே உண்டு.  ஃபுதூஹுல்கைப், 2வது சொற்பொழிவு

   படைப்பினங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதை விட்டுவிடு! அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்து! அத்தனை பொருள்களையும் படைத்ததும் அவனே! அவன் அதிகாரத்திலேயே அத்தனையும் உண்டு. அல்லாஹ் அல்லாதவர்களிடம் தேடுபவனே! நீ அறிவுடையவன் அல்ல. அவன் கஜானாவில் இல்லாதது ஏதும் உண்டோ? ஃபத்ஹுர்ரப்பானி, முதலாவது மஜ்லிஸ்

    மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காது மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா? படைப்பினங்களிடம் கேட்கத்தேவை எதுவும் ஏற்பட்டு விடாதபோது, படைப்பினங்களிடம் கேட்கின்றாயே!  ஃபத்ஹுர்ரப்பானி, 38வது மஜ்லிஸ்

     அனைத்தையும் படைத்தவனிடமே அனைத்தையும் கேள்! நான் அல்லாஹ்வின் பாதையில் தான் உங்களை அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. முனாஃபிக் தான் தன்பக்கம் மக்களை அழைப்பான்.  ஃபத்ஹுர்ரப்பானி, 8வது மஜ்லிஸ்

     “உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவனைத் தவிர எவரும் அகற்ற முடியாது” என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே உன் துன்பத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் முறையிடாதே!

   யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுவிட்டானோ அவன் தான் பலமான கயிற்றைப் பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்களின் மீது நம்பிக்கை வைக்கின்றானோ, அவன் தண்ணீரை இறுகப் பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். ஃபத்ஹுர்ரப்பானி, 15வது மஜ்லிஸ்

   அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்த போதனைகளின்படி செயல்பட்டு நடக்க அல்லாஹ் அருள்புரிவானாக!