Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2017
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,320 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி!

  மருந்து, துணை மருந்து, ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி!

’கஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவு. இப்படித்தான் பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. உண்மையில், கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நம் மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.

பட்டினப்பாலையில்…

‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுப் போலப் பரந்தொழுகி…’ என்கிற பட்டினப்பாலை வரிகள், சோறு வடித்த கஞ்சியானது ஆறுபோல ஓடியதாக கவிதை பேசுகிறது. நமது உணவுக் கலாசாரத்தில் பிண்ணிப் பிணைந்திருந்த கஞ்சி வகைகள் எத்தனையோ இன்று காணாமல் போய்விட்டன. கொதிகஞ்சி, உறைகஞ்சி, முடிச்சுக்கஞ்சி, பால்கஞ்சி, வடிகஞ்சி, ஊட்டக்கஞ்சி, சுடுகஞ்சி… எனப் பல்வேறு கஞ்சி வகைகளைத் தயாரித்து பயன்பெறலாம். இப்போது இருக்கும் ‘சூப்’ வகைகளுக்கு முன்னோடியாக ‘கஞ்சி’ வகைகளைக் குறிப்பிடலாம். ’கஞ்சி’ என்றதுமே ‘உவ்வே’ என்று ஒதுக்கித் தள்ளாமல், ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாக அதைப் போற்றுவது அறிவுடைமை.

காய்ச்சலுக்கு…

காய்ச்சலால் அவதிப்படும் நேரத்தில் செரிமானப் பகுதிக்கு வேலைப் பளுவைத் தரக்கூடிய சீரணமாகாத உணவுகளைத் தவிர்த்துவிட்டு, மெல்லிய உணவு வகையான கஞ்சியை எடுத்துக்கொள்வதே நல்லது. ஜுரம் காரணமாக முடங்கிக்கிடக்கும் செரிமானத்தை விரைவில் மீட்டெடுத்து, தேவைப்படும் சத்துகளை உட்கிரகிக்க (Absorption of nutrients) இது உதவி புரியும். உடல் இழந்த நீர்ச்சத்தையும் இதைக்கொண்டு ஈடுகட்ட முடியும். ’குடற்தன்னில் சீதமலாது சுரம் வராது’ என்கிறது சித்த மருத்துவம். எந்த வகையான ஜுரமாக இருந்தாலும், செரிமானம் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருப்போம். ஆமத்தை (சீதத்தை) விலக்கி, செரிமானத் திறனை மீண்டும் எழுச்சியுறச் செய்ய இது பெருமளவில் துணையாக இருக்கும். சோற்றை வடித்து எடுக்கும் செழுமையான கஞ்சிக்கு ’அன்னப்பால்’ என்றும் பெயருண்டு.

நெற்பொரிக் கஞ்சி:

ஜுர நோயாளர்களுக்கு நெற்பொரிக் கஞ்சி மிகவும் சிறந்தது. நெல்லைப் பொரித்து, உமியை நீக்கிய பின் கஞ்சியாகச் செய்துகொள்ளலாம். வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்படும்போது தாராளமாக நெற்பொரிக் கஞ்சியைக் குடிக்கலாம். கிராமப் பகுதிகளில் நெற்பொரிக் கஞ்சி பிரபலமானது. காரணம் என்ன தெரியுமா? கிராமங்களில் உள்ள மக்களுக்கு, செரியாமையால் உண்டாகும் வயிற்றுவலிக்கு உடனடியாக மருந்தகங்களுக்குச் சென்று மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டு, வயிற்றைப் புண்ணாக்கிக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

பஞ்சமுட்டிக் கஞ்சி:


தென் தமிழகத்திலும், இலங்கை தமிழர்களிடமும் வழக்கத்தில் உள்ள பஞ்சமுட்டிக் கஞ்சி, உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடியது. மெலிந்த தேகம் உடையவர்களுக்கும் நோயுற்று மெலிந்தவர்களுக்கும் அற்புதமான உணவு. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறு பயறு (அ) தட்டைப் பயறு, கடலை, பச்சரிசி ஆகியவற்றை வகைக்குப் பத்து கிராம் எடுத்து ஒரு துணியில் வைத்து முடிந்துகொண்டு, மண்பானையில் போட்டு, ஒரு லிட்டர் நீர் சேர்த்து, நான்கில் ஒரு பாகமாக (அதாவது 250 மி.லி அளவு) வரும் வரை காய்ச்சவும். பின்னர் துணி முடிப்பை எடுத்துவிட்டு, கஞ்சியைப் பருகலாம். பருப்பு வகைகளும், பயறு வகைகளும் சேர்ந்திருப்பதால் இதில் புரதக் கூறுகளுக்குப் பஞ்சமில்லை. சிலர் முளைகட்டிய பயறு வகைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள். இதைத் தயாரித்த பிறகு சிறிது மிளகுத் தூள் தூவி பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்கினால், எளிதில் சீரணமடைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். நோயாளியைச் சந்திக்கச் செல்லும்போது, விளம்பர உத்திகளின் மூலம் பிரபலமடைந்த ஊட்டச்சத்துக் கலவைகளை வாங்கிச் செல்வதற்குப் பதிலாக, பஞ்சமுட்டிக் கலவையைத் தயார்செய்து எடுத்துச் செல்லுங்கள். நோயாளியின் உடல்நிலை விரைவில் சமநிலை அடையும்.

மாதவிடாயை முறைப்படுத்த…

உளுத்தங் கஞ்சி, வெந்தயக் கஞ்சி போன்றவை காலங்காலமாக பெண்களின் உடலியிங்கியலைச் சீராக பயணிக்கச் செய்ய உதவியவை. பெண்கள் பூப்பெய்தும்போதும் அதன் பிறகும் வழங்கப்படும் உளுந்து, வெந்தயம் சேர்ந்த கஞ்சிகள், மாதவிடாய் நிகழ்வை ஒழுங்குப்படுத்தியதோடு, உடலுக்குத் தேவைப்படும் வலிமையையும் கொடுத்தன. ஆனால் இன்று, முற்றிலும் மருவிப் போன பாரம்பர்ய உணவுப் பழக்கம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாக மாதவிடாய் சார்ந்த நோய்கள் பெண்களை அதிகளவில் வாட்டுகின்றன. சுண்ணச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும், வைட்டமின்களும் உளுந்தில் அதிகளவில் உள்ளன. புரதங்களும் நார்ச்சத்தும் உளுந்தில் தேவையான அளவு இருக்கின்றன. மாதவிடாய் சார்ந்த தொந்தரவுகளை நிவர்த்தி செய்யும் கூறுகள் வெந்தயத்தில் உண்டு.

சுக்கு முடிச்சுக் கஞ்சி:


சுக்கின் மேல் தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக்கி, ஒரு துணியில் முடிந்து, பச்சரிசியைக் கொண்டு செய்யப்பட்ட கஞ்சியில் போட்டு நன்றாக காய்ச்சி, உண்டாகும் தெளிநீரை உபயோகிக்கலாம். இதனால் உணவில் ஈர்ப்பு உண்டாகும். வயிற்றில் உண்டாகும் மந்தம், மலக்கட்டு முதலியவை நீங்கும். காய்ச்சலுக்கும் கொடுக்கலாம். பச்சரிசி கஞ்சி செய்யும்போதே, சுக்கை துணியில் முடிந்து (முடிச்சுக் கஞ்சியாகவும்) காய்ச்சியும் பயன்படுத்தலாம். பசியைத் தூண்டும், வாயுவை அகற்றும் சக்தி சுக்குக்கு உண்டு.

கொள்ளுக் கஞ்சி:


சரியாகப் பசியெடுக்காமல் இருப்பவர்களுக்குக் கொள்ளுக் கஞ்சி நல்ல பரிந்துரை. அரிசியோடு கொள்ளு சேர்த்து செய்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வர மிகுந்த வலிமை உண்டாகும். வலிமையின் அளவை உணர்த்த, ’எள்ளைக் கையினால் கசக்கிப் பிழியும் அளவுக்கு உடலில் பலம் உண்டாகும்’ என்று உவமை கூறுகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. கொள்ளுக் கஞ்சியை ‘காணக் கஞ்சி’ என்றும் குறிப்பிடலாம். கொள்ளைத் தொலி புடைத்து, சிறிது மிளகும் மல்லியும் சேர்த்துச் செய்யப்படும் கஞ்சி வகையும் இருக்கிறது. இது, கப நோயாளிகளுக்கு முக்கியமான மருந்தாகப் பயன்படுகிறது. பருவ நிலைக்கு ஏற்ப உணவு தயாரிப்புகளை முன்னெடுத்த முன்னோர்கள், கார்காலத்திலும், குளிர்காலத்திலும் அதிகமாகப் பரிந்துரைத்தது காணக் கஞ்சியே!…

புனற்பாகம்!

இருமுறை வடித்த கஞ்சி, `புனற்பாகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, அவித்த சோற்றில் மீண்டும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து பயன்படுத்துவது. வெப்ப மாற்றங்களையும் நீரியல் நுணுக்கங்களையும் பற்றி அறிந்திருந்த முன்னோர்களின் அறிவியலுக்குச் சான்றாக இந்தக் கஞ்சி வகையை குறிப்பிடலாம். தண்ணீரில் நிகழும் மாற்றங்களை முன்வைத்து, வெப்ப நோய்கள் நீங்குவதோடு உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் ஊட்டக் கஞ்சியாகவும் புனற்பாகம் பயன்படுகிறது.

வேனிற் காலங்களில்…

பாலாடையைப்போல கட்டிய உறைக்கஞ்சி, சாதம் வேகும்போது கிடைக்கும் கொதிகஞ்சி, வடிகஞ்சி… என அனைத்துக்கும் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. வேனிற் காலத்தில் மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களோடு கஞ்சி வகைகளையும் அவ்வப்போது குடிப்பது உடலுக்கு நல்லது.

சிறுதானிய கஞ்சி

பச்சரிசி, புழுங்கல் அரிசி தவிர சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் கஞ்சி வகைகளும் அதிகளவில் வழக்கத்தில் இருந்தன. அவற்றை மீண்டும் மனமுவந்து ஏற்றுக்கொண்டால், சிறுதானியங்களால் கிடைக்கும் எண்ணற்றப் பயன்களைப் பெற முடியும்.

துணை மருந்தாகும் கஞ்சி!

பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்யும்போது, குறிப்பிட்ட மருந்துகளோடு பத்தியமாக அரிசிக் கஞ்சியை மட்டுமே பயன்படுத்துவதாக மலைவாழ் மக்கள் குறிப்பிடுகிறார்கள். பல மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் கஞ்சி வகைகள் பயன்படுகின்றன.

மருந்தாக, துணை மருந்தாக, சிறுபொழுதுக்கான உணவாக, இடை உணவாக, ஊட்ட உணவாக, பத்திய உணவாக… எனப் பல்வேறு வகைகளில் நெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருந்தன கஞ்சி வகைகள். தேநீர், காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றின் வருகைக்குப் பின்னர் மெள்ள மெள்ள வழக்கொழிந்துப் போய்விட்டன. ’கஞ்சிக் காய்ச்சி குடிப்போம்’ என்பது அவமானம் அல்ல பெருமை! பாரம்பர்யப் பெருமை!

நன்றி: விகடன்