புகழ்பெற்ற சரித்திர நாயகர்களையும் வள்ளல் பெருமக்ளளையும் சாதனைச் சிற்பிகளையும் ஒருங்கே கொண்டு புகழ் பெற்ற மாவட்டம் நம் இராமநாதபுரம் மாவட்டம். இம்மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு சிற்றூர் தான் சித்தார்கோட்டை. இது சிற்றூராகக் காட்சி தந்தாலும் சாதனைகளில் ஒரு பேரூருக்கு நிகரானது. இஸ்லாமிய மார்க்க வல்லுனர்களையும் வள்ளல் பெருமக்களையும், அறிவார்ந்த எழுத்தாளர்களையும் சான்றோர் பலரையும் கொண்டிலங்கும் அழகிய ஊர் சித்தார்கோட்டை.
இயல்பாகவே சித்தார்கோட்டை வாழ் மக்கள் அறிவாற்றில் சிறந்தவர்கள். ஏதேனும் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற ஆற்றல் இவ்வூர்ப் பெருமக்களின் உள்ளத்தில் ஆழ்ந்து இருப்பததை உணர முடிகிறது. இதற்கேற்ப இவ்வூரின் வரலாற்றுக் காலம் தொட்டு ஒவ்வொரு கால கட்டத்திலும் சான்றோர் ஒருவரால் ஏதேனும் சாதனை நிகழ்ந்த வண்ணம் இருப்பதை இவ்வூரின் வரலாறு நமக்கு நன்கு உணர்த்துகிறது. இதற்கேற்ப 1905 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் நாள் சித்தார்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது. இதனை இவ்வூர் வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறும் பொழுது ‘சித்தார்கோட்டையின் கல்விக் கண் திறந்த நாள்’ என்று கூறுகிறார்.
இந்த நாளில் தான் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியலில் (statistics) இளங்கலை பட்டம் பெற்ற ஜனாப் முகம்மது இபுறாகிம் என்பவர் தானே ஆசிரியராக இருந்து ஓராசிரியர் பள்ளியை முதன் முதலில் உருவாக்கினார். அப்பள்ளிக்கு Aided Muslim School என்று பெயர் வைக்கப்பட்டது. இப்பள்ளி செம்மையாக நடைபெற அன்றைய பெரியோர்கள் பலரும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கினர். இந்நிலையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்வே 1912ல் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் இவ்வூரின் வளர்ச்சியில் பெரும் பங்கு இன்று வரை ஆற்றி வரும் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா அன்றைய ஊர்ப் பெரியோர்களால் தோற்றுவிக்கப்பட்டு முகம்மதியா ஆரம்ப்பபள்ளி உருவாக்கப்பட்டது. ஆரம்ப்பள்ளி கல்விப் பணி ஆற்றி வரும் நாளில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவின் பெரு முயற்சியால் 1959 ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது.
பன்னெடுங்காலமாக இயங்கி வந்த முகம்மதியா நடுநிலைப்பள்ளி 1971 ஆம் ஆண்டு முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவால் தமிழக அரசின் முழு அனுமதியோடு முகமதியா உயர்நிலைப்பள்ளியாக உயர்வு பெற்றது. அன்றயை நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 250 மடடுமே. உயர்நிலைப்பள்ளியின் முதல் தாளாளர் என்ற விழுமிய பெருமைக்குரியவர் மர்ஹூம் ஆலி ஜனாப் அப்துல் ஹை ஆலிம் அவர்கள் ஆவார்.
உயர்நிலைப்பள்ளியாக உயர்வு பெற்ற நிலையில் பள்ளிக்கு வேண்டிய கட்டிட வசதியின்மையை உணர்ந்த இப்பள்ளி நிர்வாகமும் வள்ளல் பெருமக்களும் இக்குறை போக்க விரைந்து செயலாற்றினர்.
‘எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின்’
– என்ற வாய்மொழிக்கேற்ப வள்ளல் பெருமக்களின் உதவியால் இன்று இப்பள்ளி கண்டவர் வியக்கும் வண்ணம் வானுற வளர்ந்த கல்விககூ4டங்கள் பலவற்றைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இவ்வூர் வள்ளல் பெருமக்களின் பிறர்க்காக வாழும் பெற்றிமையும், என் கடன் பணி செய்து கிடப்பதுவே என்ற உயரந்த மனப்பாங்குமே ஆகும்.
கடந்த 30 ஆண்டுகிளல் இப்பள்ளியின் மாணவ மாணவியர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. சாதி மத இன பேதமின்றி இப்பகுதி மக்கள் அனைவரும் கல்வி பெறும் மிகப் பெரிய கல்விக் கூடமாகவும், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு மிகச் சிறந்த முன்மாதரிப் பள்ளியாகபும் இப்பள்ளி வளர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு பொதுத்தேர்விலும் இப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி விகிதத்திற்கு குறைந்ததே இல்லை. இது இப்பள்ளியின் மகத்தான சாதனையாகும். இச்சாதனைக்கு வித்திட்ட பள்ளி நிர்வாகத்தையும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களையும் தமழ்நாடு அரசின் கல்வித்துறை பலமுறை பாராட்டிப் பெருமைப்படுத்தியுள்ளது.
பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பெருமை சேர்ப்பது போல இப்பளியில் பயின்ற மாணவர்கள் பலரும் இன்று சிறந்த மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் அரசின் பல்துறை பளியாளர்களாகவும் பல இடங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். தங்களின் வளமான வாழ்விற்கு வழிவகுத்த இப்பள்ளி நிர்வாகமாம் முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவிற்கு இப்பகுதி மக்கள் எல்லோரும் இன பேதமின்றி மன நிறைவோடு நன்றி பாராட்டி வருகின்றனர்.
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற தொடருக்கேற்ப எதையும் உயர்வாக எண்ணியே பழக்கப்பட்ட இவ்வூர் மக்கள் தங்களின் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என்று ஆண்டுகள் பலவாக திட்டமிட்டனர். அவர்களின் நல்லெண்ணப்படியே கடந்த 2001 ஆம் ஆண்டு முகம்மதியா உயர்நிலைப்பள்ளி முகம்மதியா மேல்நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்கிளன் நலன் கருதி அனைத்து வசதிகளும் ஒருங்கே இணைந்த புதிய அறிவியல் ஆய்வகமும் உருவாக்கப்பட்டது. இதனால் இப்பகுதி வாழ் மக்களைனைவரும் தங்களின் நீண்ட நாள் கனவு நனவாகி விட்டது என்று ஆனந்தம் கொண்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணியாக விளங்கும சித்தார்கோட்டை முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவிற்கு அனைத்து இன மக்களும் இதயப்பூர்வமான நன்றியினைக் கூறி வருகின்றனர்.