Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,649 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமையல்:30 வகை சப்பாத்தி – 1

”இன்னிக்கு, ஸ்கூலுக்கு சப்பாத்திதான் வெச்சிவிட்டிருக்கேன். மிச்சம் வைக்காம சாப்பிடணும். புரிஞ்சுதா?”

”போம்மா, எப்பப் பார்த்தாலும் அதே சப்பாத்திதானா. நான் சாப்பிட மாட்டேன்..?”

வீட்டுக்கு வீடு ஒலிக்கும் இந்த ‘டிஷ்யூம்… டிஷ்யூம்’… இத்தோடு விடைபெறப் போகிறது

பின்னே..! புதினா, வெந்தயக்கீரை, கம்பு, சோளம், காய்கறி, ட்ரைஃப்ரூட் என்று 30 வகையான சப்பாத்திகளை ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் பரிமாறும்போது, இனி என்ன கவலை!

”பச்சைக் குழந்தையில ஆரம்பிச்சு, பாட்டிங்க வரைக்கும் சப்பாத்தி சாப்பிடலாம். அதுவும் ஒபிஸிட்டி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ஹார்ட் பிராப்ளம்னு பாதிக்கப்பட்டவங்களுக்கு வரப்பிரசாதம் சப்பாத்திதான்” என்று சொல்லும் சாந்தி விஜயகிருஷ்ணன்,

”கோதுமையை தவிட்டோட அரைச்சு, சப்பாத்தி செய்தா, சத்து வீணாகாம உடம்புல சேர்ந்துடும். மாவை தண்ணி விட்டுப் பிசைஞ்சதும், மெல்லிசான துணியால நாலு மணி நேரத்துக்கு மூடி வெச்சுட்டா, சப்பாத்தி மிருதுவா இருக்கும். அவசரமா செய்யணும்னா… மிதமான சுடுநீர் இல்லனா, வெதுவெதுப்பான பாலை விட்டு தளர்வா பிசைஞ்சுகிட்டா போதும்” என்று டிப்ஸும் கொடுக்கிறார். பிறகென்ன… ஜமாயுங்க!

ஸ்வீட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சர்க்கரை, நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கோதுமை மாவில் உப்பு, பால், தண்ணீர் சேர்த்து, மாவை கெட்டியாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவு கலவையில் சிறிது எடுத்து சிறிய வட்டமாக தேய்க்கவும். அதன் மேல்புறம் நெய் தடவி, பொடித்த சர்க்கரையைத் தூவி நான்காக மடித்து, மாவு தொட்டு மீண்டும் தேய்த்து, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்

மிக்ஸட் வெஜ் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – இரண்டு கப், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப், துருவிய குடமிளகாய், துருவிய வெங்காயம் – தலா இரண்டு டீஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.

வாழைக்காய் கார சப்பாத்தி

தேவையானவை: வாழைக்காய் – 1, கோதுமை மாவு – ஒரு கப், எலுமிச்சைச் சாறு – இரண்டு டீஸ்பூன், தனியா – இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் வேக வைத்து, பிறகு தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் உப்பு, மசித்த வாழைக்காய், பொடித்த தனியா – மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

மிளகு சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மிளகு – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய், விரலி மஞ்சள் – தலா 1, காய்ந்த மிளகாய் – 2, துருவிய வெங்காயம் – முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கடாயில் முக்கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவற்றுடன் விரலி மஞ்சளை சேர்த்துப் பொடித்து, கோதுமை மாவுடன் கலக்கவும். உப்பு, துருவிய வெங்காயம் சேர்க்கவும். இதை தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்,

ட்ரை ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், முந்திரி, பாதாம் பிஸ்தா சேர்ந்த கலவை – முக்கால் கப், பேரீச்சை துண்டுகள் – 5, உலர்ந்த திராட்சை – 10, நெய் – தேவையான அளவு.

செய்முறை: பாதாம், முந்திரி, பிஸ்தா கலவையை நைஸாக பொடித்துக் கொள்ளவும், பேரீச்சை, திராட்சையை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவில், பொடித்த பொடி, அரைத்த விழுது சேர்த்து, சிறிது நெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது பால் சேர்த்துக் கலக்கலாம். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் தடவி சுட்டெடுக்கவும்.

புதினா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா – கால் கப், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, இஞ்சி, புதினா, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

கடலை மாவு சப்பாத்தி

தேவையானவை: கடலை மாவு – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், ஓமம், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், நெய், ஆம்சூர் பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவுடன் கோதுமை மாவு, ஓமம், கரம் மசாலாத்தூள், நெய், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தேவையானவை: கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில் கோதுமை மாவைப் போட்டு, தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

வெந்தயக்கீரை சப்பாத்தி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, கோதுமை மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விடவும். இதில் கோதுமை மாவைப் போட்டு தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

முள்ளங்கி சப்பாத்தி

தேவையானவை: துருவிய முள்ளங்கி – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், சோள மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துருவிய முள்ளங்கியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், உப்பு சேர்த்து, கோதுமை மாவு, சோள மாவைப் போட்டு (தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்), கெட்டியாகப் பிசையவும்.

மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

பயறு சப்பாத்தி

தேவையானவை: ஊற வைத்த பயறு – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஊற வைத்த பயறுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, சீரகத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

முந்திரி கார சப்பாத்தி

தேவையானவை: முந்திரி – 15, கசகசா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கோதுமை மாவு – ஒரு கப், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்திரியுடன் கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன், பொடித்த முந்திரி கலவை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

எள் சப்பாத்தி

தேவையானவை: வெள்ளை எள், மைதா மாவு – தலா கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், தனியா – 2 டீஸ்பூன், மிளகு, சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும். தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன் மைதா மாவு, வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தேங்காய் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, தடிமனான சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

அடுத்த 15 வகைகள்.. தொடரும்

தொகுப்பு: ரேவதி, படங்கள்: து.மாரியப்பன்  source:vikatan