Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2011
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,473 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூரிய ஒளி மின் உற்பத்தி

பதவியேற்ற 10 நாட்களுக்குள் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் வரவேற்க தக்க ஒன்று. சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்து பரிசீலித்து வரும் தமிழக அரசு இதற்காக தனிக் கொள்கையை வகுக்கும் நேரம் வந்து விட்டது.

சூரிய ஒளி மின் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் என்பதால், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பஞ்சாயத்து அளவிலும் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்த முடியும். அனல், அணு, நீர், காற்றாலை என்று எந்த மின் திட்டமானாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் மின் உற்பத்தி செய்ய முடியும். மின் தேவையோ பரவலாக இருக்கிறது. மின் வினியோகத்தின் போது, தற்போது ஏற்படும் 19 சதவீத மின் இழப்பை தவிர்க்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள துணை மின் நிலையங்களை மேம்படுத்தாமல், பயன்படுத்தி கொள்ளவும் சூரிய ஒளி மின் திட்டங்கள் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்தும் 3-5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தனியார் முதலீட்டுடன் 25 ஏக்கர் நிலம் போதும். ஒரு மெகா வாட்டிற்கு சுமார் 13 முதல் 14 கோடி வரை முதலீடு தேவைப்படும். இது வேறு எந்த திட்டத்திலும் இயலாத காரியம் சூரிய ஒளிமின் திட்டம். ஒரு ஆண்டுக்குள் நிறுவ முடியும். மழைநீர் சேமிப்புத் திட்டத்தை கண்டிப்புடன் அமல் செய்து மக்களிடம் நற்பெயர் வாங்கிய முதல்வர் ஜெயலலிதாவால் தான் இதுபோன்ற சூரிய ஒளி மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். மின் உற்பத்தியை மின் தொகுப்புக்கு (கிரிட்) அனுப்பும் இத்திட்டம் தவிர, மின் தொகுப்புக்கு அனுப்பாமல் நான் கிரிட் முறையும் உள்ளது. (ரூப் டாப் மாடல்) ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் படி தமிழகத்தில் உள்ள சுமார் 5000 வீடுகளில் 2 முதல் 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 100 சதுர அடி இடம் இருந்தால் போதும். ஒரு கி.வா. மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ. 2 லட்சம் செலவாகும். 3 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்ய மொத்தம் ரூ. 6 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு மரபுசாரா மின் உற்பத்தி கழகம் (TEDA) 30 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. ஆகவே முதலீட்டாளருக்கு ரூ.4.20 லட்சம் செலவாகும். மீதமுள்ள தொகையில் 5 சதவீதம் வட்டியுடன் தமிழ்நாடு பவர் பினான்சியல் கார்ப்பரேஷன் கடன் வழங்கினால் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரிக்கும்.

முதலீட்டை ஈடு கட்ட: சூரிய ஒளியில் முதலீடு செய்யும் தனி நிறுவனத்துக்கோ, வீட்டுக்கோ, அமைப்புக்கோ அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு சரிபங்காக, அவர்கள் அரசுக்கு செலுத்தும் பலவித வரிகளில் உதாரணமாக சொத்து வரி, கார்ப்பரேஷன் வரி, தொழில் வரி, விற்பனை வரி, வாட் வரி ஆகியவற்றில் 6 ஆண்டில் தாங்கள் செய்த முதலீட்டை ஈடுகட்ட செய்யும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தால் இதில் முதலீடு செய்ய பலர் முன்வருவார்கள். 6 ஆண்டுகளுக்கு பின் மீதமுள்ள 19 ஆண்டுகளில் (சூரிய ஒளி மின் சாதனங்கள் 25 ஆண்டுகள் உற்பத்தி தரும்). 3 கி.வா. மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்ற நிலை உருவானால் இதில் முதலீடு செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள். அரசுக்கு இந்த முதலீட்டை சலுகை என்று நினைக்காமல் அரசுக்கு பதில் முதலீட்டை தனியார் செய்தார்கள் என்று எண்ணி, 6 ஆண்டுகளில் பணத்தை திருப்பி செலுத்துகிறோம் என்று கருத வேண்டும். பல வெளிநாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. மாநிலத்தின் பத்து வெவ்வேறு இடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காக்களை (சோலார் பார்க்) அமைக்க மாநில அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் 300 மெ.வா. மின் உற்பத்திக்கும் உத்தேசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு முதலீட்டாளருக்கு 1 மெ.வா., முதல் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கும் திட்டமாக இருந்தால், இத்திட்டம் வெற்றிகரமாக அமையும். ஒரே இடத்தில் பல முதலீட்டாளர்கள் இந்த பூங்காக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். அதே நேரத்தில் ஒரே இடத்தில் 300 மெ.வா., சோலார் பூங்கா அமைக்க நேரிட்டால் அரசுக்கும், துணை மின் நிலையங்கள், உயர் மின் அழுத்த வினியோகம் செய்ய குறைந்தது 1500 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இவ்வாறு சோலார் பார்க்கை முதல் கட்டமாக வைத்து கொள்ளாமல் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஒன்று முதல் மூன்று மெ.வா., சிறு திட்டங்களை தமிழகத்தில் உள்ள குறைந்தது 250 பஞ்சாயத்துக்களில் நடைமுறை படுத்த ஆவன செய்ய வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது . அரசு ஏற்படுத்தும் சோலார் கொள்கையும், அந்த கொள்கையில் ஏற்படுத்தும் நம்பிக்கையும் தான், முதலீட்டாளர்களை தமிழகத்தில் சோலார் மின் நிலையங்களை துவக்க ஈர்க்கும்.

குஜராத் கொள்கை: ஜவகர்லால் நேரு தேசிய சோலார் மிஷன் திட்டத்தை அடுத்து, குஜராத் தனக்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்கையை அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அங்குள்ள அரசு ஒரு யூனிட்டுக்கு ரூ.15 வீதம் 12 ஆண்டுகளுக்கு பெற்று கொள்ளவும், மீதமுள்ள 13 ஆண்டுகளுக்கு ரூ.12 வீதமும் பெற்றுக்கொள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. திட்டத்துக்கான நிலத்துக்கு பதிவுக் கட்டணம், வரி ஆகியவற்றில் குஜராத் அரசு சலுகையும் அளிக்கிறது. நிலம் கையகப்படுத்துவது முதல் மின் மீட்டர்களை பொருத்துவதற்கான அனைத்து துறைகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்து ஏற்படும் பிரச்னைகளை களைய அதிகாரி நியமிக்க படுகிறார். உயர் அதிகாரி தலைமையில் ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் அளிக்கும் முறையையும் அந்த அரசு கடைப்பிடிக்கிறது.

குஜராத்தில் இந்த வெற்றி பார்முலாவை தொடர்ந்து, ராஜஸ்தான், அரியானா, மேற்கு வங்கம், டில்லி, மகாராஷ்ட்ரா, ஒடிசா, ஆகிய மாநிலங்கள் தனிக் கொள்கையை வகுத்துள்ளன. இருந்தும் குஜராத் போல், இந்த மாநிலங்களில் அதிக அளவு சோலார் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. இதற்கு காரணம் குஜராத் போல் அதே விலைக்கு சோலார் மின்சாரத்தை வாங்கிய போதிலும், குஜராத் போல் அதிகாரிகள் மட்டத்தில், ஒத்துழைப்பு இருக்காது. என்ற நம்பிக்கையும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பிரச்னையாலும் சில மாநிலங்களில் கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் பிரச்னையாலும், தங்கள் முதலீட்டை குஜராத்தில் அதிகப்படுத்துகிறார்களே தவிர, இந்த மாநிலங்களில் போக வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு வேலை தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தியை கூடுதல் விலையில் வாங்குவார்கள் என்று திட்டம் வகுத்து கொடுத்தால் மட்டுமே தமிழகத்தின் பக்கம், இவர்களை ஈர்க்க முடியும்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு: தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு பிரசித்தி பெற்றது. இவர்களால் ஒரு போதும் குஜராத் அதிகாரிகள் போல் தொழில் செய்ய வருபவர்களுக்கு ஓத்துழைப்பு கொடுக்க முன் வரமாட்டார்கள். இதை ஈடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு குஜராத்தை விட அதிக சலுகை வழங்கினால் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறும். மின் துறையில் உள்ள பல அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி என்றாலே ஒரு நம்பிக்கை இல்லாத, முடியாத ஒரு திட்டமாக கருதுகிறார்கள். சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் கிடைக்கும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.15 செலவாகும் என்பது தான் இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம். மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பிற மாநிலங்களில் இருந்து யூனிட்டுக்கு ரூ.13 வரை கொடுத்து மின்சாரத்தை விலைக்கு வாங்குகிறது. சில சமயங்களில் டீசல் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்பவர்களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.12 வரை விலை கொடுத்து வாங்குகிறது. இப்படியிருந்தும் சூரிய ஒளி ரூ.15 கொடுக்க வேண்டுமே என்று அதிகாரிகள் நினைக்கிறார்களே தவிர ஒரு மெகா வாட்டுக்கு 14 கோடி முதலீடு செய்ய தனியார் முன் வருகிறார்களே என்று நினைப்பதில்லை. அரசு செய்ய வேண்டிய முதலீட்டுக்கு பதில் தனியார் செய்ய முற்படும்போது அதை ஊக்குவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைப்பதில்லை. முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி, அரசு அதிகாரிகளின் தலையீடே இல்லாமல் ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தாலே அரசு நினைக்கும் பல அடிப்படை திட்டங்கள் வெற்றிகரமாக முடியும்.

அதிகாரிகளின் நிலை: ஆற்காடுவீராசாமி அமைச்சகத்தின் கீழ் இருந்த சில அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் விழிப்புணர்வு இல்லாததும், நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லாததும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் தான் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை இவ்வளவு மோசமாக இருந்தது. இதுவே கடந்த ஆட்சிக்கு ஏற்பட்ட மிக பெரிய கெட்ட பெயராகும். சூரிய மின் திட்டத்தின் மூலம் ஒரு மெகா வாட்டிற்கு 14 கோடி தேவைப்படுவதால் இதை தயாரிக்க ஒரு யூனிட்டிற்கு ரூ.12 ஆகும். தனியாரிடமிருந்து இதை பெறும்போது, அவர்கள் ரூ.15 க்கு குறையாமல் விற்பார்கள். அதனால் அரசு மானியம் இல்லாமல் சூரிய மின் ஒளி திட்டம் நிறைவேற்ற முடியாது. அனல் மின் நிலையத்திற்கு ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 5 கோடி தான் ஆகும் என்று கூறும் அதிகாரிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அனல் மின் நிலையம் குறைந்தது 1000 முதல் 3000 மெகா வாட் நிலையமாக தான் இருக்க முடியும். இது போக திட்டத்தில் வராத செலவாக அனல்மின் நிலையத்திலிருந்து பிற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கு (Sub Station) மற்றும் மின் விநியோகம்) ஒரு மெகாவாட் 5 கோடி செலவு ஏற்படும். இதை திட்ட செலவில் சோர்க்காமல், அரசு பட்ஜெட்டில் சேர்க்கப்படுகிறது. இதனாலே அனல்மின் நிலையம் அமைக்க வெறும் 5 கோடி ரூபாய் தான் ஆகும் இவர்கள், மேலும் அரசு செய்யும் செலவை சேர்க்காமல் அனல்மின் நிலையம் மூலம் பெறப்படும் ஒரு யூனிட்டிற்கு ரூ.3 க்கு குறைவாக கிடைக்கும் என்று அரசை நம்ப வைக்கிறார்கள்.

எப்படி செயல்படுத்துவது: சூரிய ஒளி மின் திட்டத்தை அமல் செய்ய, தலைமைச் செயலர் அந்தஸ்தில் ஓர் அதிகாரியை தமிழ் அரசு நியமிக்க வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை பெற வேண்டியிருப்பதாலும் அத்துறையினரின் ஈடுபாடும் உதவியும் தேவைப்படுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு அஞ்சியே முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். ஆகவே, தலைமைச் செயலர் அளவிலான அந்தஸ்தில் இருந்தால் தான் மற்ற துறை செயலர்கள் இத்திட்டத்தில் முனைப்புடன் செயல்பட முடியும். இது வளரும் தொழில்நுட்பம் கொண்ட துறை என்பதால் இத்துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிலரை உறுப்பினராகவும் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கிராம ராஜ்யமே ராம ராஜ்யம்: கிராமங்களில் அடிப்படை பிரச்னைகளைத் தீர்த்தால், கிராம மக்கள் நகரங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள். நகர வளர்ச்சி மற்றும் நெருக்கடி தீர்க்க அரசு செய்யும் செலவு கோடிக்கணக்கில் குறையும். கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லை. இருந்தாலும் தாழ்வழுத்த மின்சாரமே வழங்கப்படுகிறது. அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளை காக்கும் இன்குபேட்டர், அறுவை சிகிச்சை அறைகளுக்கு போதுமான மின்சாரம் இல்லை. உயிர்காக்கும் கருவிகளை இயக்கவும் மின்சாரம் இல்லை. விதைகளை பாதுகாக்க, உற்பத்தி செய்த காய்கறி பழங்களை காப்பாற்றவும், கால்நடை இனவிருத்திக் கூடங்களை இயக்கவும் மின்சாரம் இல்லை. இந்நிலை மாற ஒவ்வொரு பஞ்சாயத்தும் 2 மெ.வா., மின்சாரத்தை நிறுவி அவர்களே மின்வினியோகம் செய்யும் முறைக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. 2003ம் ஆண்டு மின்சார உற்பத்திச் சட்டத்திலும் இதற்கான வழிமுறை இடம்பெற்றுள்ளது.

பஞ்சாயத்து மட்டத்திலும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதற்காக சோலார் தொழிலில் ஈடுபட்டு வரும் Wipro, Tata BP, Moserbaer உள்ளிட்ட நிறுவனங்களை பயன்படுத்தினால், அவர்களே இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி சோலார் மின்சார திட்டத்தை நிறுவி அதனை விநியோகித்தும் செயல்படுத்தியும் கொடுப்பார்கள். அரசு இதற்கு உத்தரவும், தனிக்கொள்கையும் ஏற்படுத்தி கொடுத்தால் போதும். 3 ஆண்டுகளில் குறைந்தது 200 பஞ்சாயத்துகளில் 2 மெ.வா., திட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு திடமான எண்ணமும், சரியான திட்டமும் நடைமுறைப்படுத்தும் வைராக்கியமும் நேர்மையான அதிகாரிகளும் இருந்தால் போதுமானது.

தேசிய சோலார் மிஷன் தமிழகத்தின் பொறுப்பு என்ன?: கடந்த 2009 நவம்பரில், தேசிய சோலார் மிஷன் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக 2010-13 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. 2010ல் துவங்கும் முதல் கட்டத்தை இரண்டாக பிரித்து, 30 நிறுவனங்களுக்கு 150 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்யலாம். தமிழகத்தில் தூத்துக்குடியில் 5 மெ.வா., மின் உற்பத்திக்கு ஒரு தனியார் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இக்கொள்கையின் படி, தேசிய அனல்மின் உற்பத்திக்கழக வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.டி.பி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிட்.,) எனும் அமைப்பு தான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல்படுகிறது.

இந்த அமைப்புதான் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 17.91 விலை கொடுத்து, இருபத்தைந்து ஆண்டு கால ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும். தற்போது மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், தேசிய சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பொறுப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை.

தேசிய சேலார் மிஷன் திட்டப்படி, சூரிய ஒளி மின்உற்பத்தி செய்யும் தனியாரிடம் ஒரு யூனிட் ரூ. 17.91 வீதம் மின்சாரத்தைப் பெற்று, என்.டி.பி.சி., தன்னிடம் உள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாத மத்திய தொகுப்பிலிருந்து 3 மடங்கு மின்சாரத்தைச் சேர்த்து மாநிலங்களுக்கு திருப்பி வழங்கும். உதாரணமாக ஒரு சூரிய ஒளி மின்திட்டத்தில் 1000 யூனிட் மின் உற்பத்தியானால், 3000 யூனிட் சேர்த்து, 4 ஆயிரம் யூனிட்டாக மாநிலத்திற்கு திருப்பி வழங்கும். இதனால் மாநிலங்கள் பெறும் மின் உற்பத்திக்கு ரூ. 5.50 வீதம் என்.வி.வி.என்.,க்கு செலுத்தினாலே போதும். இதன் மூலம் தேசிய அனல் மின்கழக நிறுவனத்துக்கு (என்.டி.பி.சி.,) ஏற்படும் நஷ்டம் மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சமாளித்து கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட சதவீதம்: ஒவ்வொரு மாநிலமும் அம்மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபுசாரா மின்சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்குமுறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் அப்ளிகேஷன்) என்று பெயர். காற்றாலை மின் உற்பத்தியால் இந்த இலக்கை தமிழகம் எளிதில் பூர்த்தி செய்து வந்தது. ஆனால் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி குறிப்பிட்ட சதவீதம் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தனி ஆர்.பி.ஓ., தேசிய சோலார் மிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.பி.ஓ.,வை கடைபிடிக்காத மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் மின்வினியோகம் மற்றும் பிற உதவிகளை மத்திய அரசு குறைத்து விடும் அபாயம் உள்ளது.

அதன்படி, 2010 முதல் ஒரு மாநிலம் பயன்படுத்தும் மொத்த மின்சாரத்தில் 0.25 சதவீதம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து 2022ல் இதன் மொத்த உற்பத்தி 3 சதவீதமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மில்லியன் யூனிட்டுகள் செலவானது. இதில் 0.25 சதவீதத்தை கணக்கிட்டால் 100 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சிவகங்கையில் மோசர் பெயர் நிறுவனம் மத்திய அரசின் பழைய திட்டத்தின் படி, 5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தியை மட்டுமே துவக்கி உள்ளது.

தேசிய சோலார் மிஷன் திட்டப்படி, 2010-11 ஆண்டில் இரண்டாவது கட்டத்தில் 500 மெ.வா., திட்டங்களுக்கு இந்த ஜூன் மாதம் மத்திய அரசு டெண்டர் விட உத்தேசித்துள்ளது. இது போக சிறு முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில், ஆர்.பி.எஸ்., எஸ்.ஜி.பி., எனும் மற்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் 7 நிறுவனங்கள் தேர்வாகின. அடுத்த மார்ச் மாதத்துக்குள் உற்பத்தி துவக்க வேண்டும்.

இன்ஜினியரிங் கல்லூரிகளில் சூரிய ஒளி மின்உற்பத்தி: கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பெரிய நிறுவனங்கள் அவர்கள் உபயோகிக்கும் மின்சாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். 2 ஆண்டுகளில் இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்த வேண்டும். பள்ளிகள், திருமண மண்டபங்கள், கம்யூனிட்டி ஹால்கள், கிளப்புகள் என்று இத்திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டே போகலாம்.

தமிழகத்தில் 600 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவை குறைந்தபட்சம் 500 கி.வா., முதல் 1000 கி.வா., வரை மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. குறைந்தது 100 கி.வா., சோலார் மின் உற்பத்தியை செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும். இதற்கு அவர்கள் ஒன்றரைக்கோடி வரை முதலீடு செய் வேண்டும். இதனால் 60 மெ.வா., மின்உற்பத்தியை இன்ஜினியரிங் கல்லூரிகள் வழியாக உற்பத்தி செய்ய முடியும். இன்ஜினியரிங் கல்லூரிகள் கிராமப்பகுதியில் அதிகம் இருப்பதால் இடப்பற்றாக்குறை என்ற பிரச்னை இல்லை.

பயோ கேஸ்: 500 பேருக்கும் மேல் சாப்பிடும் கேன்டீன்கள் ஹோட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்களில் சமையலுக்கென அதிக மின்சாரம் செலவாகிறது. இதற்கு இந்த சமையல் கூடங்களில் சூரிய ஒளி மூலம் தான் வெந்நீர் உற்பத்தி செய்ய வேண்டும். அதேபோல், உணவுக்கழிவுகளிலிருந்து பயோகேஸ் உற்பத்திக்கான திட்டத்தை நிறைவேற்றவும் தமிழக அரசு உத்தரவிடவேண்டும். சில மாநிலங்கள் இம்முறையை பின்பற்றி வருகிறது. பாபா அணு ஆராய்ச்சி கழகம் இதற்கென தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. தினமும் 500 கிலோ உணவு மற்றும் காய்கறி கழிவிலிருந்து 29 கிலோ எல்.பி.ஜி.,க்கு இணையான பயோகேஸ் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு குறைந்தது ரூ. 5 லட்சம் முதலீடு தேவைப்படும். இதையே 2 ஆண்டுகளில் அனைத்து கேன்டீன், ஹோட்டல்கள் திருமண மண்டபங்களில் நிறுவ அரசு உத்தரவிடவேண்டும். மின் நிதிக்கழகத்திலிருந்து இதற்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இதில் முதலீட்டாளர்களுக்கு 2 ஆண்டுகளில் முதலீடு செய்த பணத்தை மீட்டுவிடும் வாய்ப்புள்ளது.

வாட்டர் ஹீட்டர்கள்: பெங்களூரு மற்றும் டில்லி போல, சூரியஒளி வாட்டர் ஹீட்டர்களை ஊக்குவிக்க, அதை நிறுவும் வீடுகள் மற்றும் பிளாட்டுகளுக்கு மட்டும் வீடுகட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தொழிற்சாலைகள், கேன்டீன், ஹோட்டல்கள், மடங்கள், சர்ச் உள்ளிட்டவற்றில், குறிப்பதற்கான வெந்நீர் தேவை அதிகம் உள்ளது. ஏற்கனவே மானியமும் குறைந்த வட்டி வங்கிக்கடனும் நடைமுறையில் உள்ளது. அரசு கண்டிப்பாக சட்டம் இயற்றினால் ஒழிய இதை நிறுவ யாரும் முன்வரமாட்டார்கள்.

நியான் விளக்குகள்: நகரங்களில் உள்ள பல நிறுவனங்கள் நியான் விளக்குகளை பயன்படுத்துகின்றன. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அதிக விலை கொடுத்து அந்நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குகின்றன. நியான் விளக்குகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். அதிக விலை கொடுத்தாலும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். டில்லியில் உள்ள விளம்பர பலகைகள் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்த மின்சாரத்தைப் பயன்படுத்தியே விளக்குளை எரிக்கின்றன. அதுபோல், நியான் விளக்குகளுக்கும் இம்முறையை தமிழக அரசு உடனே கொண்டு வரவேண்டும்.

நன்றி – ல. ஆதிமூலம் – தினமலர்