Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2011
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,347 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பில்

ங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் :

முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந்தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை சிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடன் பாராட்டி கருத்துக்களைக் கூறுங்கள். “அது சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மலர்த்தும்.

குழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல; அவை புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.

குழந்தைகள் பேசும்போது மிகுந்த உன்னிப்பாக கவனிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு அடையாளமாக உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச உற்சாகமளியுங்கள். உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆமோதித்து அவற்றை வார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.

விமர்சியுங்கள் – குழந்தைகளை அல்ல; குழந்தையின் பழக்க வழக்கங்களை! இதைச் செய்யும்போது மிக கவனமாக கத்தி மீது நடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கு அதிகமான விமர்சனம் குழந்தையைக் காயப்படுத்தும். ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையின் பழக்க வழக்கம் அல்லது செயல் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, குழந்தையைப் பற்றி அல்ல.

குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி ஆறுதல் படுத்துங்கள்.

குழந்தை சுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.

எப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.

குழந்தைக்கு எதில் அதிக ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்த கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவோ. எதுவாயினும் சரி! உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட!

உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு…

நீங்கள் பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?

“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு.. இப்போ என்ன ஆச்சுன்னு” என்பது போல இருக்கிறதா?

அப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட மோசமாக பாதிக்கப்படும்.

மாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்!

“நீ நன்றாக முயற்சி செய்தாய்.. முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.”

வண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை!

எனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூடாது. குழந்தையின் தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.

குழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக ‘சாப்பிட அடம் பிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்று அடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்து விடும். இவ்வெண்ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் போல. அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர். நீங்கள் ஏதாவது ஒரு செய்திக்கு அல்லது பிரச்சனைக்குக் கொஞ்சம் அதிகப்படியாக அலட்டிக் கொண்டால்… அவ்வளவுதான்! குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று எண்ணி கவலைப்படும். இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.

குழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்து சரியான சொற்களையே தேர்ந்தெடுங்கள்! குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாள் மாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்று குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாம் அது மாதிரிதானோ’ என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.

இவையெல்லாம் எளிதாக பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின்பற்ற ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா?

உங்களது மேலான கருத்துக்களையும், குழந்தைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே…

நன்றி: -சித்ரா பாலுநிலச்சாரல்.காம்