தந்தையின் மரணம்; தாயாரால் வேலை செய்ய முடியாத நிலை. தாங்க முடியாத தலைவலி. இத்தனையையும் தாங்கி, வாழ்வில் முன்னேற துடிக்கும் இவரது கல்விக்கு தடையாக வந்து நிற்கிறது ஏழ்மை. இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார், பத்தாம் வகுப்பில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாரிச்செல்வம்.
ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டிணம் அருகே உள்ள களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் மாரிச்செல்வம். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் பயின்ற, இவர் 10ம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண் பெற்று ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்.
மாரிச்செல்வம், அக்கா முருகவள்ளி வீட்டில் தங்கி இருந்து முத்துப்பேட்டையில் படித்து வந்தார். கடந்த நவம்பரில் முனியசாமி மூளைகட்டி நோயால் இறந்தார். கடந்த ஏப்.,4 ல் முருகவள்ளியும் இறந்தார். அடுத்தநாள் கணக்கு பரீட்சை. இதயம் முழுக்க சோகத்துடன், ஆனால் மனஉறுதியுடன், வேறுவழி இல்லாமல் தேர்வு எழுதிவிட்டு, அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அந்த கணித தேர்வில் மாரிச்செல்வம் பெற்ற மதிப்பெண் 100 க்கு 100.
தற்போது அதே பள்ளியில் பிளஸ் 1 பயிலும் இவர் கூறியதாவது: எனக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்தபோது, இருதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்த குழாய் சுருங்கியுள்ளது. தற்போது ஆப்பரேஷன் செய்ய முடியாது. 22 வயதுக்கு பிறகு செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டார். அம்மாவோ அடிக்கடி கால்வலியால் அவதிப்படுகிறார். குறித்த நேரத்தில் பஸ் இல்லாததால், வேலாயுதபுரத்திலிருந்து பள்ளிக்கு ஆம்னி வேனில் செல்ல மாதம் 400 ரூபாய் செலவாகிறது. அதை கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகிறேன். தற்போது சீருடைக்கு 3,000 ரூபாய் செலவாகியுள்ளது. என்னுடைய அக்கா யாரும் படிக்கவில்லை. எனவே, நான் நன்றாக படித்து அவர்களுக்கு உதவுவேன். படிப்பு செலவிற்கு பணமின்றி தவிக்கிறேன், என்றார்.
உதவி செய்ய விரும்புவோர் 91592 43229ல் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்