Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2012
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,753 முறை படிக்கப்பட்டுள்ளது!

பதவி ஓர் அமானிதம்

பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.

அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான். இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

”அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.” (அல்குர்ஆன் – அல்அஹ்ஜாப் :21)

நமக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்றால் அது நம்முடைய திறமையால் கிடைத்தது இல்லை மாறாக அது அல்லாஹ்வின் நாட்டம், சோதனை, உதவி என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். மேலும் மார்க்கத்தை எத்திவைக்கும் தாவா பணியாகட்டும் ஏனைய சமுதாயப் பணியாகட்டும் நாம் அதற்காக செயல்படும் ஒரு கருவியேயாகும் என்பதையும் அல்லாஹ்வின் ஏவல்களை செய்யும் ஒரு அடிமையாகவே எண்ணி செயல்பட வேண்டும்.

நம்மிடம் அல்லாஹ் அளித்ததை தவிர வேறு எந்த சொந்த ஞானமும் நமக்கில்லை என்பதையும் மறந்துவிட கூடாது.நமக்கு கிடைக்கும் பதவியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே மறுமையில் அதன் கூலி நிர்ணயிக்கப் படுகிறது. பதவியில் உள்ள ஒரு முஸ்லிம் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த பதவியை தவறாக பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

பதவி ஏன் அமானிதம்?

பெரும்பாலான மக்களால், பதவி என்பது அதிகாரம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் பதவி என்பது ஓர் அங்கீகாரமும் பொறுப்பும் ஆகும்.அதிகாரம், புகழ், செல்வம் ஆகிய காரணத்திற்காகவே அதிகமான மக்கள் பதவிக்காக ஆசைப் படுகிறார்கள். இம்மூன்று அம்சங்களையும் சரியான முறையில் பயன்படுத்தப் படுமேயானால் பதவியை எவரும் விரும்பமாட்டார்கள்.இந்த மூன்று அம்சங்களை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால்தான் மக்கள் பதவிக்காக போட்டி போடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. மறுமையை நம்பாத மக்கள் தான் தமக்கு கிடைக்கும் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பதவியை தவறாக பயன்படுத்தினால் இதற்க்காக மறுமையில் கேள்விக் கேட்கப்படும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கக் கூடிய முஸ்லிம்கள்களும் பதவியை வைத்து தங்கள் வயிற்றை வளர்த்துக் கொள்வதுதான் மிகவும் வேதனைக்குரியது.

இஸ்லாம் பதவியை, மறுமையில் அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய ஒரு கருவியாகத் தான் பார்க்கிறது. அதிகாரம் ,புகழ் ,செல்வம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்த வழி இருந்தும் அல்லாஹ்வுக்காக அதை உரிய முறையில் பயன்படுத்துவதால் உலகிலும் நற்பெயர் கிடைப்பதோடு மறுமையிலும் அதிக அந்தஸ்தை பெறலாம்.ஆயினும் பெரும்பாலானோர் இதை உணர்வதில்லை.கூட்டம் சேரும் வரை தவ்ஹீதில் இருந்துவிட்டு ,கூட்டம் சேர்ந்த பின் புகழுக்காகவும் பணத்தாசைக்காகவும் தவ்ஹீத் வளர்ச்சி எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று கூறி பதவியை தேடி ஓடியவர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள். பதவியை சரியாக பயன்படுத்துவோருக்குத் தான் அமானிதம் புறக்கணித்து தவறான வழியில் செல்வோருக்கு பதவி ஒரு சாபக்கேடு.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ “நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 7148)

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.” (நூல்: அஹ்மத் 22030)

அதிகாரமும் தலைகனமும்

நம்முடைய பதவியின் அந்தஸ்தை பொருத்து அதிகாரம் மாறுபடும்.பெரிய பதவியாக இருந்தால் அதிக அதிகாரமும் சிறிய பதவியாக இருந்தால் குறைந்த அதிகாரமும் இருக்கும். அதிகாரம் எப்போது அதிகரிக்கிறதோ, அதோடு ஷைத்தான், தலைகனத்தையும் பெருமையும் சேர்ந்தே அதிகரிக்கச் செய்கிறான்.இதனால்தான் பதவியில் உள்ளவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை கீழ்த்தரமாக நடத்துவது திட்டுவது அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். நமக்கு இந்த அதிகாரத்தை கொடுத்த அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்று ஒருவன் நம்பினால்தான் இந்த தலைகனத்திலிருந்து விடுபட முடியும். அனைத்து அதிகாரத்திற்கும் நான் தான் உரியவன் என்று பல இடங்களில் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

பின்னும் நீர் கூறும்: “நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 6:57)

பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன் 6:62)

“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன் 12:40)

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர் களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36)

மறுமை நிலை

மறுமையில் கேள்வி கணக்கிர்க்காக மஹ்ஷர் மைதானத்தில் நிருத்தப்படுவோம் என்பது அனைவரும் அறிந்ததே.அங்குள்ள ஒரு நாள் என்பது உலகில் 50,000 வருடங்களுக்கு சமமானதாகும். சுட்டெரிக்கும் வெப்பத்தினால் மக்கள் கடுமையான வேதனை அடையும் அந்த நிலையில் ஏழு சாராருக்கு மட்டும் அந்த வெப்பத்திலிருந்து பாதுகாத்து அல்லாஹ் தனது அர்ஷின் அடியில் நிழல் வழங்குவான்.அங்கு அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியை அழகிய முறையில் பயன்படுதியவரும் ஒருவர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

அல்லாஹ்தன்னுடைய(அரியணையின்)நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழுபேருக் குநிழல் அளிப்பான்:

  • 1. நீதிமிக்க ஆட்சியாளர்.
  • 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
  • 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்).
  • 4. பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.
  • 5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்
  • 6.அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்’ என்று கூறியவர்.
  • 7. தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி 6806)

அதேபோல் தம்முடைய பதவியை தவறான வழியில் பயன்படுத்துபவர்களையும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கிறான்.

அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் – ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 30:7)

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் ‘எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)

பதவியில் உள்ளவர்களின் பண்புகள்

.திருக்குர்ஆனில் பல நபிமார்கள் செய்த ஆட்சி முறையையும் அவர்களுடைய பண்புகளையும் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுவதில் நமக்கு படிப்பினை இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஜனாதிபதியாக இருந்ததால் பதவி வகிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது. ஒருவர் ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சிதலைவராகவும் மிளிர முடியும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மிகப் பெரிய முன்மாதிரியும் எடுத்துக்காட்டும் ஆவார்கள். ஏனெனில் (ஆட்சியிலோ பதவியிலோ) அரசியலில் இருப்பவர்கள் மார்க்கத்தை எள்ளளவும் பேணுவதில்லை, மார்க்கத்தை உயிராக கொண்டவர்களோ அரசியலில் பங்களிப்பு செய்வதில்லை.

அரசியலில் மார்க்கத்தை திணிக்கக் கூடாது என்ற தவறான வாதத்தினால் எதையும் சாதிக்காமல் நமது சமுதாயம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, கண்டிப்பாக அல்லது தயவு செய்து மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் மார்க்கத் தலைவர்கள் அரசியலில் தங்களது பங்களிப்பை ஒவ்வொரு நாட்டிலும் செய்யவேண்டும். மார்க்கத்தில் கொள்கை உறுதி கொண்டவர்கள் மட்டுமே ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள்.

பதவிக்கு வரும் முன் பணிவாகவும் இனிமையானவராகவும் இருப்பவர்கள் பதவி கிடைத்தவுடன் நேரெதிர் குணம் கொண்டவராக அதாவது புகழ் தரும் போதை அவரை ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது அவர் தன்நிலை மறந்தவராக ஆகி விடுகிறார். ஒருவனுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட இயலுமா? இவர்களுக்கு நிலையான மறுமையில் எந்த பதவியும் கிடைக்காது.

மேலும் பதவியில் உள்ளவர்கள் அதிகாரத்திற்கும் புகழுக்கும் செல்வத்திற்கும் அடிமையாகி விட்டதால் நிரந்தர தலைவர் என்று அறிவித்து கொள்கிறார்கள், அப்படியென்றால் இவர்களுக்குப் பின் இருக்கும் லட்சக் கணக்கான மக்களில் ஒருத்தருக்கும் தகுதியோ திறமையோ இல்லை என்றாகிறது இவ்வாறு நினைக்கும் தலைவர்களின் பின் அணிவகுக்க வேண்டிய அவசியம் ஏன்?

மேலும் தமிழ்நாட்டில் ஊர் தலைவர்கள் எனும் முத்தவல்லிகள் அந்த ஊரில் உள்ள இமாம்களை அளவுக்கு மீறி தன்னிஷ்டப்படி ஆட்டி வைப்பதும் ஓரிறை கொள்கை கொண்டவர்களை ஊர் விளக்கி வைப்பதும் நடந்து வருவதை அறிவீர்கள் .ஊர் விளக்கும் அதிகாரம் அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டவுடன்

அவர்களுக்கு திருமணம் ,அல்லது ஜனாஸா அடக்கம் என்றால் அபராதம் விதித்து கொள்ளையடிப்பதும் ஊர்வோலை (திருமணத்திற்கு தடை இல்லா சான்றிதழ்) தர மறுப்பதும், ஜனாஸா அடக்கம் செய்ய மறுப்பதும் நாம் அறியாததல்ல.ஊர்மக்கள் மது அருந்துவது, வரதட்சனை திருமணத்தை ஆதரிப்பது போன்ற செயல்களை என்றாவது தடுதிருப்பார்களா? பள்ளிவாசலில் தொழுபவர்கள் தொப்பி அணியாதது, ஆமின் சொல்வது, விரலசைப்பது என்பதெல்லாம் அல்லாஹ்வுக்கும் தொழுபவர்க்கும் இடைப்பட்ட உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றித்தான் தொழுபவர்கலாக இருந்தும் அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுக்கப் படுகிறார்கள். இவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பதர்க்குதான் இவர்களுக்கு பதவியா? மறுமை நாளில் இவர்கள் இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டாமா ?

இறையச்சம்

‘நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறை வனை நோக்கி வழி காட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்!’ எனக் கூறுவீராக” (என்று இறைவன் கூறினான்.) (அல் குர்ஆன் 79:18,19)

ஒருவன் பதவி வகிப்பதற்கான முதல் தகுதி இறையச்சமாகும். ஒருவனிடம் எவ்வளவுதான் திறமை ,வீரம் இருந்தும் இறையச்சம் இல்லையென்றால் அவன் நஷ்டவாளியாவதோடு அவனை சார்ந்தோரையும் அது பாதிக்கும்.இறையச்சம் இல்லாத காரணத்தினாலே திருட்டு, லஞ்சம், பொய் வாக்குறுதி, அடக்குமுறை போன்ற செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான். மேலும் அவர்களை சார்ந்திருக்கும் மக்களையும் தவறு செய்ய தூண்டும். ஆகவே இஸ்லாம் இறையச்சத்தை முதன்மையான தகுதியாக முன்வைக்கிறது. ஆனால் இன்றைய நம்முடைய நிலையோ தலைகீழாக மாறி இருக்கிறது. தமக்கு மாற்று மதத்தினர் ஒட்டு போட வேண்டும் என்பதற்காக வணக்கம் சொல்வதும், அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று அவர்களுடைய தெய்வங்களை வழிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஃபிர்அவ்னுக்கு அனைத்து ஆற்றலையும் அல்லாஹ் கொடுத்திருந்தா ஆனால் அவனோ இறையச்சம் இல்லாமல் தன்னையே கடவுள் என்று அகந்தை கொண்டிருந்தான்.அவனை நோக்கி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

”அவனை(ஃபிர்அவ்னை) இம்மையிலும் மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.” (அல்குர்ஆன் 79:25)

கலந்து ஆலோசித்து முடிவெடுத்தல்

ஆட்சியில் இருப்பவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது சிறந்த தலைவருக்கு எடுத்துக் காட்டாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்களுடன் ஆலோசித்து முடிவெடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையே பிறப்பிக்கிறான்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)

தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 42:37:38)

அதே போல் ஒரு முடிவு எடுக்கும்போது தொலைநோக்கு பார்வையுடனும் அதனால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டும் விபரமாக செயல்பட வேண்டும்.

திடவுறுதி, பொறுமை, வீரம்

பதவி வகிப்பவர்கள் தாம் எடுத்த முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.அதுமட்டுமில்லாமல் நாம் பொறுமையையும் மேற்கொள்ள வேண்டும். நபிகள் நாயகத்தை அல்லாஹ் பாராட்டி கூறும்போது “நீங்கள் மக்களிடம் நளினமாக நடந்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களை விட்டு அவர்கள் ஓட்டம பிடித்திருப்பார்கள்” என்பதாக குறிப்பிடுகிறான்.

”(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.” .(அல்குர்ஆன் 3:159)

மன உறுதியும் வீரமும் உள்ளவர்களாக இருப்பதும் பதவி வகிப்பதற்க்குள்ள முக்கிய பண்புகளாகும்.எடுத்த முடிவில் பின்வாங்காமலும் வளைந்து கொடுக்காமலும் இருப்பது மிக முக்கியம்.நேர்மையாக பதவி வகித்தால் எதிர்ப்பு வருவது இயற்கைதான் அதை எதிர்கொள்ள மனவலிமையும் வீரமும் அவசியமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுடன் போர்கலங்களில் பங்கெடுத்தும் மக்களுக்கு பாதுகாவலராக இருந்து தமது வீரத்தை நிறுபித்திருக்கிறார்கள். பதவி வகிப்பவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே மிகப் பெரிய முன் உதாரணமாக இருக்கிறார்கள்.

தகுதியும் திறமையும்

ஒரு பதவியை வகிப்பதாக இருந்தால் அவருக்கு நிச்சயம் தகுதியும் திறமையும் இருக்க வேண்டும்.தகுதியற்ற ஆட்சியாலர்கலாலேயே கலிஃபத் எனக் கூறப்படுகிற இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அழிந்த வரலாற்றை பார்க்கிறோம். தகுதி என்பது இறையச்சம், திறமை, வீரம் மற்றும் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் குறிக்கும்.

அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் – அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்;இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்”என்று கூறினார். (அல்குர்ஆன் 2:247)

‘ஓர் அவையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். ‘மறுமை நாள் எப்போது எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை’ என்றனர். வேறு சிலர், ‘அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை’ என்றனர்.

முடிவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, ‘மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?’ என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)’ இறைத்தூதர் அவர்களே! இதோ நானே’ என்றார். அப்போது கூறினார்கள்.’ அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.” அதற்கவர், ‘அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?’ எனக் கேட்டதற்கு, ‘எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 59)

பாரபட்சம் இருக்கக் கூடாது

பதவியில் இருப்பவர்கள் அதிகமாக தவறு செய்வது பாராட்சம் காட்டுவதில் தான்.தன்னுடைய சொந்ததுக்கும் நண்பர்களுக்கும் ஒரு நியாயமும் மற்றவர்களுக்கு நியாயமும் நீடிப்பதால்தான் மக்களுக்கு பதவியில் உள்ளவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது. தன் சமூகத்தாருக்காகவும் தன் சொந்த பந்தங்களுக்காகவும், தன்னுடய நண்பர்களுக்காகவும் வளைந்து கொடுக்கக் கூடாது என்பதை திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது.இதை படிக்கவும் சிந்திக்கவும் இனிதாக இருந்தாலும் இதை நடைமுறை படுத்த நமக்கு கடினமாக இருக்கிறது.என் சொந்தக்காரன் பதவியில் இருந்தும் எனக்கு உதவாமல் போய்விட்டான் என்று கோபம் வருகிறதே தவிர அதில் உள்ள பாரபட்சத்தையும் அதனால் மற்ற மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை சிந்திக்க மணம் மறுக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6787)

உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கு காதுக்குக் காது பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.(5:45)

பதவி என்பது பொறுப்பு

பதவியினால் ஏற்படும் விளைவுகளை ஒரு மனிதன் நன்கு அறிந்தால் அதை அவன் விரும்பவே மாட்டான்.ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு அளிக்கக் கூடிய அநீதியை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.அநீதி இழைக்கப்பட்ட மனிதன் அந்த தவறை மன்னிக்காத வரை அந்த தவறை அல்லாஹ் மன்னிப்பதில்லை.நாம் வகிக்கும் பதவியால் நம்மை சார்ந்தவர்களும் பாதிப்படைவதால் நாம் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.நம்மால் நம்மை சார்ந்தவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மன்னிக்காதவரை நாம் அந்த தவிரிளிருந்து மீள முடியாது என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.நாம் செய்தவற்றுக்காக மறுமை நாளில் நாம் விசாரிக்கப் படுவோம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

”செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை.” (அல்குர்ஆன் 17:36)

பதவி என்றால் ஆட்சியாளர் என்பது கிடையாது.நமக்கு ஒரு பொறுப்பு வழங்கப் பட்டு நம்மை நம்பி மக்கள் இருந்தாலே நாமும் பதவி வகிப்பவர்கள் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்கள் முதல் வீட்டில் உள்ள குடும்பத் தலைவர் வரை அனைவரும் பதவி வகிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிர்வாகத்தில் உள்ள அனைத்தையும் பற்றி கேள்வி கேட்கப் படுவார்கள் என்பதையும் இஸ்லாம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (நூல்: புகாரி 7138)

நம்பிக்கை

பதவி வகிக்கக் கூடியவர் நம்பகத் தன்மையுடயவராக இருப்பது மிக முக்கியம்.தம்மை நம்பி இருப்பவர்களிடம் போய் உரைக்காமலும் பணம் விஷயத்தில்நேர்மையாளராக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 18836)

தம் கட்டுப்பாட்டில் உள்ள செல்வதினாலேயே பலர் தடுமாறி விடுகின்றனர். நாம் எப்படிப் பட்ட நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதை திருக் குரானில் கூறப்பட்டுள்ள இந்த சாம்பவம் நமக்கு தெளிவு படுத்தும்.

‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!” என்று கூறினார். ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!” என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!” என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!” என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்: புகாரி 2272)

வழிகாட்டி

பதவி வகிப்பவர்கள் தம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக செயல்பட வேண்டும்.நம்முடைய தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்கள்.உலக விஷயதிலும் முக்கியமாக மார்க்க விஷயத்தில் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்தால் நம்மால் பாதிக்கப் பட்டவர்களின் பாவத்தையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.எனவே நமக்கு கிடைக்கும் பதவியில் மிகவும் எச்சரிக்கையாகவும் நாம் ஒரு நல்ல முன் உதாரணமாகவும் விளங்கினால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம்.

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)

ஆட்சிக்கு ஆசைப்படுவது

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)

அபூ மூஸா (ரலி) அறிவித்தார்கள்: “நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்), ‘இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன்!)” என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!” என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 2261)

‘இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:55)

இவ்வசனத்தில் என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரி யாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்’ என்று கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 6622)

மேற்கண்ட வசனத்திற்கு முரண்படும் வகையில் இந்த நபிமொழியைப் புரிந்து கொள்ளக் கூடாது.

யூசுஃப் நபியின் வரலாற்றைப் பற்றிக் கூறும் போது, அதில் கேள்வி கேட் போருக்குத் தக்க சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(விளக்கம்) கேட்போருக்கு யூஸுஃபிடமும் அவரது சகோதரர் களிடமும் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 12:7)

கருவூல அதிகாரியாக நியமியுங்கள் என்று யூசுஃப் நபி கேட்ட இந்தச் சம்பவத்திலும் நமக்கு முன்மாதிரி இருக்கின்றது.பதவி ஆசைக்காகவோ, தகுதியற்ற நிலையிலோ பதவியைக் கேட்கக் கூடாது என்பது தான் மேலே நாம் காட்டியுள்ள நபிமொழியின் கருத்தாக இருக்க முடியும்.

ஒரு பணியை மற்றவர்களை விட நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும்;அதற்கான தகுதி நமக்கு உள்ளது என்று ஒருவர் கருதினாலோ, அல்லது தகுதி யற்றவர்களிடம் ஒரு பணி ஒப்படைக்கப் பட்டு அது பாழ்படுத்தப்படுவதைக் கண்டாலோ அப்பதவியை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை என்பதற்கு இவ்வசனம் சான்றாகும்.மேலும் அந்த ஆட்சி, யூஸுஃப் நபியின் மீது பழி சுமத்திச் சிறையில் தள்ளிய ஆட்சியாக இருந்தும், அத்தகைய ஆட்சியில் தமது உரிமையை யூஸுஃப் நபி கேட்டிருக்கிறார்கள்; பதவியும் கேட்டிருக்கிறார்கள்.இஸ்லாமிய ஆட்சி நடக்காத பகுதிகளில் இது போன்ற பதவிகளையும்,உரிமைகளையும் முஸ்லிமல்லாத ஆட்சி யாளர்களிடம் கேட்டுப் பெறலாம் என்ப தற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

பதவியில் இருப்பவர்களே ! உங்களுக்குப் பின் மக்கள் கூட்டம் கூட்டமாக உங்களிடம் வந்தால் தற்பெருமை கொள்ளாதீர்கள் இறைவனை அதிகதிகம் புகழுங்கள்.

”அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்”. (அல்குர்ஆன் 110:1-3)

நன்றி: முஹம்மது இன்ஸாஃப்இ பிரான்ஸ் – நீடுர்.இன்ஃபோ