Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2012
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,359 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாரம் – சிறுகதை

குழந்தை ஹஸீனா பீரிட்டு அலறியது. மூத்தவன் அஸ்லம் தொட்டிலில் படுத்துக் கொண்டு தொடர்ந்து ஆட்டுமாறு அடம் பிடித்துக் கொண்டிருந்தான். ஆட்டும் வேகத் தில் கொஞ்சம் தளர்ச்சி தெரிந்தாலும் பெரி தாகக்

குரலெடுத்துக் கத்தினான். கால், கையை உதைத்து தொட்டிலிலிருந்து கீழே இறங்க முயற்சித்தான்.

“அடேய்! சும்மா படுக்கிறியா இல்லையா?”

கீழே தொங்கிய அவனது இரண்டு கால்களையும் தொட்டிலுக்குள்ளே தள்ளி ஸல்மா மீண்டும் படுக்க வைத்து ஸ்பிரிங் தொட்டிலை, “ஹூ! ஹூ! அல்லாஹு” என்று தாலாட் டுடன் ஆட்ட ஆரம்பித்தாள்.

குழந்தை மீண்டும் நச்சரிக்கத் தொடங்கியது. கொஞ்சம் ஈரம் தட்டிவிட்டாலே அழத் தொடங்கி விடுகிறது. பெம்பஸ் மாற்றி படுக்க வைத்த பிறகே அமைதியடைகிறது. மூத்தவனின் அடம்பிடிப்பால் நேரம் தள்ளிச் செல்வதை அந்த மழலைக்கு விளக்க முடியாது. குழந்தையின் அழுகுரல் உச்சமானது. வீரிட்டுக் கத்தி, சக்தியை இழந்து தேம்ப ஆரம்பித்து விட்டது.

“எங்க செல்ல ராஜா இல்ல, தங்கச்சி பேபிக்கு பெம்பஸ் மாத்திட்டு வந்து உம்மா தொட்டில ஆட்டுறன். குட்டி அஸ்லம்!” ஸல்மா மகனிடம் மன்றாடிப் பார்த்தாள்.

“ம் ஹும்… மாத்தேன் போ…” என்று அடம் பிடித்தான் அந்த இரண்டு வயதுக் குழந்தை.

“என்ன அடம்பிடிக்கிற? தங்கச்சி கத்துது இல்ல?” அதட்டிய ஸல்மா காலில் சப் என்று ஒன்று வைத்தாள். அஸ்லம், பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினான். இரண்டு குழந்தைகளின் அழுகுரலும் அந்த எபார்ட்மென்ட் வீட்டை அதிரச் செய்தது.

ஸல்மாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பச்சை உடம்பு. பிரசவமாகி முழுசாக இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை. ஊரிலிருந்து வந்திருந்த உம்மா, வாப்பா இருந்த வரைக்கும் கொஞ்சம் மூச்சுவிட  முடிந்தது.

பிறந்த குழந்தைக்கு பால்கொடுத்த கையோடு அஸ்லமைத் தூக்கிக் கொண்டு வெளி ஹோலுக்கு வந்து விடுவாள். துரு துருவென்ற அவனது குறும்புகளை ஓடியாடி கட்டுக்குள் வைப்பாள். அங்குமிங்கும் எடுத்து வீசிய சாமான்களை ஓடிப் பறிக்க முடிந்தது. அடுப்புப் பணிகளையும் அவ்வப்போது பார்த்துக் கொள்ள நேரம் கிடைத்தது. வாப்பா மார்க்கட்டுக்குப் போய் வந்திடுவார். இடுப்பிலேற்றி வைக்கத் தோதாக அத்தனை வேலைகளையும் முடித்துக் கொடுத்து விடுவார். அஸ்லம் தூங்கிய பிறகு முணகினால் தொட்டிலை ஆட்டியும் உதவுவார்.

ஸல்மாவுக்கு வாப்பாவைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். ஊரில் ஒரு நிமிட ஓய்வில்லாமல் அலுவலகத்தில் தஞ்சம் கிடப்பவர். குளித்துவிட்டு சாரத்தைப் பிழியத் தெரியாது. பரபரப்பாய் எல்லாமே செய்து பழகிப்போனவர். ஒவ்வொரு அசைவுக்கும் அவருக்கு உம்மாவின் உதவி வேண்டும். இருந்தும் இப்போது அவர் தன் வேலைகளை தானே செய்து கொண்டார். வீட்டுப் பணிகளிலும் உதவிக் கரம் நீட்டினார். தான் ஒரு தொழிலதிபர் என்பதை தற்காலிகமாக மறந்தார்.

பத்துப் பதினைந்துப் பணியாளர்களுக்கு உத்தரவிட்டே பழகிப் போன தன் எஜமானத் தனத்தை அடியோடு மறந்துவிட்டு ஒரு தகப்பனாய் தன் பிள்ளைகளின் சுமைகளை சுமந்துகொள்ள ஓடி வந்து கடமையுணர் வோடு  நடந்துகொண்டார். அது ஸல்மாவை நெகிழ வைத்தது.
உம்மாவின், வாப்பாவின் செல்லத்தில் வளர்ந்தவள் ஸல்மா. தனித்தியங்கியே பழக்கமில்லை. கல்லூரியில் சேர்ந்த பிறகும் உம்மாதான் தலை சீவிவிட வேண்டும்.

அவளுக்கு விருப்பமானதையெல்லாம் செய்து வைத்துக் கொண்டு உம்மா காத்திருப்பார். கல்லூரியிலிருந்து வரும்போதே “என்ன சாப்பாடு செஞ்சி வெச்சிருக்கிங்க?” என்று கேட்டுக் கொண்டே வருவாள். அடுப்படிக்குச் சென்று பாத்திரங்களைத் திறந்து பார்ப்பாள்.

“ச்சே! இதை யார் தின்றது? வெவஸ்தயே இல்லையா?” என்று கத்துவாள். “சரி விடு! இப்ப என்ன செஞ்சி வேணும்? சொல்லு?” என்று அமைதியாகக் கேட்பாள்.

புதிதாக ஒரு லிஸ்டை வாசிப்பாள் ஸல்மா. உம்மா அதை எஜமான உத்தரவாக எடுத்துக் கொண்டு பம்பரமாய் சுழல்வாள். அரை மணி நேரத்தில் சூடு பறக்க அவள் கேட்ட வற்றை சமைத்துக் கொண்டுவந்து டைனிங் டேபளில் வைப்பாள்.

“உம்மான்டா உம்மாதான்.” என்று உம்மாவைக் கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஆவி பறக்கும் அந்த உணவை ருசித்துச் சாப்பிடுவாள். உம்மா அருகில் நின்று அவள் சாப்பிடும் அழகை ரசிப்பாள். தலையைக் கோதிவிட்டு அழகு பார்ப்பாள். கடின உழைப்பின் அசதியை மறப்பாள். உம்மா அடிக்கடி சொல்வார்.

“பொம்புளப் புள்ள இப்படியே இருக்கப் படாதும்மா! மாமியார் ஊட்டுக்குப் போற புள்ள வீட்டு வேல தெரிஞ்சுக்கனும். உம்மா வூட்டுச் செல்லம் அங்க எடுபடாது. என்ன புள்ள வளத்து வெச்சிருக்கான்டு ரொம்ப லேசா சொல்லிடுவாங்கம்மா!” என்று.

“அப்ப பார்த்துக்குவம். இப்ப என்ன அதுக்கு?” என்று உம்மாவைப் பார்த்துத் திருப்பிக் கேட்பாள்.

சொன்படியே பார்த்துக் கொண்டாள். புகுந்த வீட்டில், அதுவும் முற்றிலும் புதிதான சூழ்நிலையில், வெளியூரில் திருமணம் முடித்து வந்தபோது உம்மாவின் கைவாகு அவளுக்கு அப்படியே வந்துவிட்டது. அவ ளது சமையலில் தேர்ச்சி இருந்தது. ஸல்மாவின் கணவர் மிகவும் நல்லவர். பொறுமை சாலி. பெரிய பதவி வகிப்பவர். இரவு முழுக்க பைல்களைப் புரட்ட வேண்டும். இருந்தும் உதவும் மனப்பான்மை.

அந்த அன்பும் அரவணைப்பும் மனதுக்கு ஒத்தடம். உம்மா வாப்பாவைப் பிரிந்த இழப்புக்கு சுமைதாங்கி. மாமா, மாமி இருவரும் நல்லவர்கள். இருந்தாலும் ஓய்வே இல்லாத வேலை அவர்களுக்கு. மாமனார் காலை ஆறு மணிக்கு வெளியே போனால் வீட்டுக்கு வருவதற்கு இரவு 11 மணிக்கு மேலாகிவிடும். மாமியார் ஐந்து மணிக்கே எழுந்து கணவரை அனுப்பிவிட்டு அலுவலகம் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளோடு இருவருக்குமான உணவையும் தயாரித்து எடுத்துக் கொண்டு ஒன்பது மணிக்குச் சென்றுவிடுவார்.

இரவு வீடு திரும்பும்போது இருவரையும் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். வயதின் முதிர்ச்சி, அழுத்தம், கடமைகள். நகரில் எல்லோருமே இப்படிப் பரபரப்போடு தான் வாழ வேண்டியிருக்கிறது. அதுவும் பொரு ளாதார நெருக்கடிக்குப் பிறகு இடுக்குப் பிடி தான். ஆரம்பத்தில் ஸல்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஊரிலே அவளுடைய குடும்ப வாழ்க்கை வேறு. நகரத்திலே அவள் காண்கின்ற வாழ்க்கை வேறு. என்றாலும் அதற்கு அவள் விரைவில் பழகிக் கொண்டாள்.

எனினும் அந்த பழைய நினைவுகள் வந்துவந்து மோதுவதை நிறுத்த முடிகிறதா என்ன? உம்மாவின் மடி மீது தலைவைத்துப் படுத்துக் கொண்ட பாச நெருக்கத்தை, தம்பி தங்கைகளுடன் சண்டைபிடித்துக் கொண்ட கலகலப்பை, கத கதப்பை மறந்து விட முடிகிறதா என்ன?

மூத்தவன் பிறந்தபோதும் உம்மா, வாப்பா வந்தார்கள். ஒரு மாதம் தங்கி உதவினார்கள். இதோ இப்போதும்; இந்தப் பிரசவத்திற்கும் வந்து உதவி விட்டுப் புறப்பட்டுவிட்டார் கள். உம்மா தேம்பித் தேம்பி அழுதார்.

வாப்பா மௌனமாகவே கண்ணீர் வடித்தார். அவர்களுக்கு ஊரில் கடமைகள் இருக்கின்றன. தம்பி தங்கைகளை வளர்த்துக் கரைசேர்க்கும் கடமைகள் இருக்கின்றன. கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழிலை வாப்பா பாதுகாத்தாக வேண்டும்.

தம்பிகள் பெரியவர்களாகி அவருக்குக் கைகொடுக்கத் தயாராகும்வரை அவர் உழைத்தாக வேண்டும். உம்மா அவருக்கு துணையிருந்தாக வேண்டும். தான் ஒரு “பறக்கக் கற்றுக் கொடுக்கப்பட்ட பறவை” என்பதும்  தாய்ப்பறவையை இன்னும் எதிர்பார்ப்பது தவறு என்பதும் அவளுக்குப் புரிகிறது.

“நீங்க கவலைப்படாமல் போய்ட்டு வாங்க!” அவள் விசும்பலினூடே சொன்னாள் தான். ஆனால்… ஆனால்!… அந்த ஏக்கம் சாய்ந்துகொள்ள உதவிய தோள்கள், ஊருக்குச் சென்றுவிட்ட அந்தத் தாபம்! தனியாய் நின்று வீட்டு வேலைகளையும் குழந்தைகளைக் கண்காணித்தலையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு! அந்த உடல்நோவு! அந்த அழுத்தம்! அதனால் ஏற்படும் சோர்வு! ஸல்மா பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

கண்களில் துளிர்த்து நின்ற நீர்த்திவளைகளை விரல்நுனியால் துடைத்துக் கொண்டாள்.

அடம்பிடித்த அஸ்லமை அப்படியே விட்டுவிட்டு அறைக்குள் ஓடிச் சென்று குழந்தையை வாரி எடுத்தாள். பெம்பஸை அகற்றினாள். அந்த ஈரலிப்பு மறைந்ததும், தாயின் அரவணைப்பு தந்த கதகதப்பிலும் குழந்தை அமைதியானது. குழந்தையைக் கரங்களில் எடுத்துக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள். அப்போது “டமால்” என்ற சத்தம். அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அஸ்லம் தொட்டிலிலிருந்து தானாக இறங்கி, தன்னை விட்டு விட்டு தங்கையைத் தூக்கிக் கொள்ள ஓடியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தில் அருகில் கிடந்த ஃபோன் சார்ஜரை எடுத்து வீச, அது மேசை மீதிருந்த டி.வி.யில் பட்டு அதன் கண்ணாடித்திரையும் உடைந்து சிதற ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றாள்.

அந்தச் சின்ன வயதிலும் நடந்துவிட்ட அசம்பாவிதத்தை உணர்ந்துகொண்டது மாதிரி அஸ்லம் பீதியில் உரைந்து நிற்க, அவனை அடிக்க ஓங்கிய ஒற்றைக் கையை அப்படியே கீழே இறக்கிவிட்டு என்ன செய்வதென்று புரியாமல் ஸல்மா நின்றபோது தொலை பேசி அலறியது. அது அவளை உசுப்பியது. வேண்டாவெறுப்போடு அதை எடுத்து “ஹலோ” என்றாள். “ஹலோ… ஸல்மா” அது அவளது தோழி ஹஸீனாவின் குரல்.

“என்னடி?” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

“ஸல்மா, பேபிக்குக் காய்ச்சல் அதிகமா யிருக்கு, வயிற்றோட்டம் வேற. அவரு வெளி யூருக்குப் போயிட்டாரு. கூட தொணக்கிக் கூட யாருமில்ல. கையிலிருந்த பெண டோல் பாணியைக் கொடுத்தேன். ஒரே வாந்தி!

எனக்கு இருப்புக் கொள்ளல்ல! ஒரே பயமா இருக்குடி!” அவள் அழுதாள்.

“ஹஸீனா! அழாதே! சொல்றதக் கேளு. அழாதே! டவலை நனைச்சு குழந்தையை நல்லா மூடு. ஒரு கோப்பையில தண்ணிய எடுத்து ரெண்டு சொட்டு ஒடிகொலோன் ஊத்தி ஒரு கைகுட்டையால ஒத்தி எடுத்து நெத்தியில போடு கொஞ்ச நேரத்தில வாந்தி பறந்திடும். உன் வீட்டுக் காரருக்கு ஃபோன் பண்ணி விசயத்தைச் சொல்லு. அவர் வந்தவுடனே கிளினிக்குக்கு கூட்டிப் போ. அவர் வர லேட்டாகும்னா ஃபோன் பண்ணு. எங்க வீட்டுக் காரர் வந்தவுடன் அங்க வந்து கிளனிக்குக் கூட்டிப் போகச் சொல்றேன்”

ஹஸீனாவுக்கு ஆலோசனை சொன்ன ஸல்மா ஃபோனை வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

ஹஸீனாவை மனதில் கொண்டிருந்தாள் ஸல்மா. அவளது கல்லூரித் தோழி அவள். அவளைப் போவே இவளும் இந்த ஊருக்கு மருமகளாகி வந்தவள். தலைப்பிரசவமாகி ஒரு மாதம்கூட இல்லை. பிரசவத்துக்கு உதவுவதற்குக் கூட பெற்றோரால் வர முடிய வில்லை. உறவினர்களின் உதவியோடுதான் எல்லாம். மசக்கையின் போது அழுது அழுது போன் செய்வாள். கர்ப்பகாலம் முழுக்க தனிமைதான்.

வெளியூரில் அவளது கணவனுக்கு அரச உத்தியோகம் என்பதால் இங்கு தனிக் குடித்தனம். ஒரு பதினைந்தாவது மாடி பிளட்டில் குடியிருப்பு. அவள் கணவன் அடிக்கடி வெளி யூர் போக வேண்டிய பணிச் சூழல். பல இரவு களை தனிமையில்தான் கழித்தாக வேண்டும். நடுச் சாமத்தில் திடீரென்று ஃபோன் செய்து அழுவாள். ஸல்மா தேற்றுவாள். ஸல்மாவுக்கு ஹஸீனா மீது ரொம்ப இரக்கம் ஏற்பட்டது.

“பாவம் ஹஸீனா” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். அவளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தன்னிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணினாள். கவலையுடன் ஃபோனில் பேசிக் கொண் டிருந்த உம்மாவை; டி.வி.யை உடைத்து விட்ட பயத்தில் உறைந்து நின்ற அஸ்லம் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்று விட்டு அந்த பயத்திலேயே அங்கேயே தரையில் படுத்துத் தூங்கிவிட்டான். அமைதியாகி விட்ட குழந்தையை கட்டிலில் விரித்திருந்த பேபி மெத்தையில் போட்டு, அணைவாக தலையணைகளை எடுத்து வைத்துவிட்டு நிமிர்ந்தபோது ஃபோன் மீண்டும்…

“ஹலோ! ஸல்மா கண்ணு! ரொம்ப சிரமப் பட்டுட்டியா?” அவள் கணவன் சலீம் அன்போடு கேட்டான்.

இல்லைங்க! பேபி தூங்குது. அஸ்லமும் தூங்கிட்டான். நான் கிச்சன் வேலைக்கு ரெடியாகிட்டன். நீங்க டென்ஷன் இல்லாம அமைதியா வாங்க. ஸ்லோவா ட்ரைவ் பண்ணுங்க. முடிஞ்சா பொறப்படுறதுக்கு முந்தி ஃபோன் பண்ணுங்க.”

“ஏன்?”

“ஹஸீனா ஃபோன் பண்ணினாள். அவ ஹஸ்பன்ட் வெளியூர் போய்ட்டாராம். அவட பேபிக்கு காய்ச்சலாம். ஹெல்ப் கேட்டா.”

“ஓ, சரி சரி, பாய் ஸீ யூ” ஃபோன் ரிஸீவரை வைத்துவிட்டு நிமிர்ந்த ஸல்மாவுக்கு இப் போது மனப்பாரம் குறைந்திருந்தது.

“அடுத்தவர் சுமையை நாம் மாற்றிக் கொள்ளும்போது நம் சுமை அதிகரிக்கவல்லவா வேண்டும்? அதென்ன மாயம்! தம் சுமையும் இறங்கி எங்கே ஓடி ஒழிந்து கொள்கி றதோ?” என்ற புதுக் கவிதை வரிகள் மனதில் வந்து நிற்க, ஸல்மா கிச்சனுக்குள் நுழைந்தாள்.

நன்றி: நம்பிக்கை