Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2012
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,957 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்சாரம் – ஒரு கண்ணோட்டம்!

 தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின் தட்டுப்பாடு. பெரும்பாலானோர் கூறும் கருத்துக்கள்:

“போன ஜெயலலிதா ஆட்சியில மின் தட்டுப்பாடு கம்மியா இருந்துச்சு.. ஏன், உபரி மின்சாரம் கூட இருந்ததாம்.. ஆனால்,அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில, இயங்கிக் கொண்டிருந்த எந்த மின் தயாரிப்பு நிலையங்களும் சரி வர பராமரிப்பு செய்யாததால்தான் தற்போது இந்த நிலைமை”.

“கூடங்குளம் பிரச்னையை திசை திருப்பி, மக்களுக்கு மின்தட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கவே அரசு இப்படி செய்கிறது..”

“ஜெயாவின் நிர்வாகத் திறமை சரியில்லை”

நான் சூரிய ஒளி மின்சாரத் துறையில் பணிபுரிகிறேன். இந்தத் துறையில் பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து இருக்கிறேன்..

நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.. என்னைப் பொருத்தவரை கடந்த இருபது ஆண்டுகள் ஆட்சியில் மாறி மாறி இருந்த இரண்டு அரசுகளும் இதற்குப் பொறுப்பாகும். இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் மக்கள் தொகை பெருகும் விகிதம் தெரியும், நாட்டின் முன்னேற்ற விகிதம் எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து இருப்பார்கள். வருடத்திற்கு எவ்வளவு மின் தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருக்கும். பராமரிக்காவிட்டால் எவ்வளவு இழப்பு என்றும் தெரிந்திருக்கும்.. இவ்வளவு தெரிந்திருந்தும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டாதது ஏன்..?? தொலைநோக்குத் திட்டத்தில் பணத்தை முடக்கினாலும், இந்த சனங்களுக்கு அது புரியாது. குறுகிய கால இடைவெளியில் கிடைக்கும் நன்மைகளையே நாம் விரும்புகிறோம், அதையும் இந்த அரசியல் வாதிகள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். தேர்தல் அன்பளிப்புகள், இலவசங்கள், தேர்தலுக்கு முன்னால் போடப்படும் சாலைகள், இவை எல்லாம் நான் சொன்ன கருத்தையே ஆணித்தரமாய் பிரதிபலிக்கின்றன.

மற்றுமொரு முக்கிய விஷயம். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்குப் போதுமானதே. ஆனால் எப்படி இந்தப் பற்றாக்குறை..??

1. ஓரிடத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், வெகு தூரத்தில் இருக்கும் மற்றொரு இடத்திற்குக் கம்பிகள் மூலம் கடத்தப் படுகின்றன. இதனால் ஏற்படும் மின் இழப்பு மட்டும் முப்பது சதவிகிதத்திற்கும் மேல் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஓட்டைப் பானையில் மோர் சுமந்து செல்வதைப் போலத்தான். இது போக மின்னழுத்த மாற்றிகளில் (Step down and step up transformer stations)ஏற்படும் மின்னிழப்புகள், மற்றும் சரி வர பராமரிக்கப் படாத மின்னாலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் இதர கசமுசா இழப்புகளையும் கருத்தில் கொண்டால், நாம் (உண்மையாக)தயாரிக்கும் மின்சாரத்தில் பாதி கூட பயனாளர்களைச் சென்றடைவதில்லை.

2. இந்தியாவில் மின் திருட்டு என்பது பல இடங்களில் அரசாங்கத்தின் துணையோடும், மற்றும் பல இடங்களில் கண்டு கொள்ளப் படாமலும் அரசியல்வாதிகளின் தலையீட்டோடும் அமோகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட, பல அரசியல் வாதிகள் மற்றும் பெரும்புள்ளிகளின் ஆலைகள் திருட்டு மின்சாரத்திலேயே ஓடுகின்றனவாம்.

3. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு மூவாயிரம் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைதொடர்பு நிறுவனங்களால் நிறுவப் படுகின்றன. நாட்டில் டெலிகம்யூனிகேஷன் எனப்படும் தொலைதொடர்புப் பயனாளர்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அவர்கள் அனைவருக்கும் சேவை அளிக்க வேண்டியது கட்டாயமாகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், இதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் இதற்குக் காரணம். ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் மூன்றிலிருந்து நான்கு கிலோவாட் மின் இணைப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வெறும் மின் கோபுரத்திற்கு மட்டும் இவ்வளவு மின் தேவை என்றால், தமிழகத்தில் நாள் தோறும் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனி வீடுகள் கட்டப் படுகின்றன.. அனைத்திற்கும் மின் இணைப்புத் தர வேண்டுமே கொஞ்சம் யோசியுங்கள்.. தலை சுற்றுகிறதா…???

4. நம்மிடம் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுக்கு இல்லை.

5. மின்சாரம் என்றால் அது வெகு தொலைவில் இருந்து தயாரிக்கப்பட்டு எங்கிருந்தோ நமக்கு வந்து விடுகிறது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உள்ளது.

சரி.. மேற்கூறிய புகார்களுக்கு இனி நாம் என்னென்ன செய்யலாம்..

நாம் எப்போதும் கூறுவது போல, மாற்றங்கள் நம்முள் இருந்து தொடங்க வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதும், அலுவலகத்தில் பணிபுரியும்போதும் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சாதனங்களை நிறுத்தும் பழக்கத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும். என் உடன் பணி புரியும் நண்பன், அலுவலக வளாகத்தில் என்னுடன் பேசிக்கொண்டே நடந்து வருவான்.. சட்டென்று உபயோகப்படாத அறைகளை எட்டிப் பார்த்து மின்விளக்குகளை அணைத்து விடுவான். வளாகத்திலும், தேவைக்கு அதிகமாக இயங்கும் மின் விளக்குகளை அணைத்துக் கொண்டே நடப்பான். நிறுவனம் தானே பணம் கட்டுகிறது நமக்கென்ன என்று அவன் போகவில்லை. மின்சாரம் நமது சொத்து. பல்லாயிரக்கான ரூபாய்கள் பணம், பலரது உழைப்பினால் அது உங்கள் கைக்கு வருகிறது என்ற எண்ணம் நமக்குள் வளர வேண்டும், அடுத்த சந்ததிகளுக்கும், இதன் தேவையைச் சொல்லிப் புரிய வைத்து வளர்த்த வேண்டும்.

கேப்டிவ் பவர் பிளாண்ட் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது ஓரிடத்தில் தயாரிக்கப் படும் மின்சாரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் மின் நிலையங்களை வடிவமைத்தல். அதாவது பெரிதாக ஒன்றை ஓரிடத்தில் கட்டி, மின்சாரத்தைக் கம்பிகள் மூலம் கடத்துவதற்குப் பதிலாக, சிறு சிறு மின் உற்பத்தி நிலையங்களை ஆங்காங்கே தேவைக்கேற்ப அமைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல். இதன் மூலம் ட்ரான்ஸ்மிஷன் லோசெஸ் என்றழைக்கப்படும் நீண்டதூர கம்பிக்கடத்திகளினால் ஏற்படும் இழப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.

மின் திருட்டை ஒழிக்க அரசு தான் ஏதேனும் செய்ய வேண்டும்.

தொலைதொடர்பு கோபுரங்கள் அனைத்தும் டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப் பட்டு உள்ளன. மின் இணைப்பு இல்லாத நேரத்திலும் அது இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வடிவமைப்பு உருவாக்கப் பட்டது. மின் இணைப்பே இல்லாத பல ஊர்களிலும், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முழு நேர டீசல் ஜெனரேட்டர்களால் மின் உற்பத்தி செய்து இயக்கப் படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் பலகோடிகளில் புழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த டீசலுக்கு அரசிடம் இருந்து மானியம் பெறுவது தான். இவர்களுக்கு எதற்கு மானியம்..?? (ஏண்டா நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு.. இவங்க என்ன பொழைக்க வழியில்லாம நடுத்தெருவுல நிக்கிறாங்களா…??? ) இன்னும் கொடுமை என்னவென்றால் இவ்வாறு மானியத்துடன் வழங்கப்படும் டீசலை முறைகேடாக (தெரிந்த விஷயம் தானே..) பலர் உபயோகிக்கிறார்கள்.. பகல் கொள்ளை போல.. எப்படி ரேஷனில் ஊற்றப் படும் மானிய மண்ணெண்ணெய் வெளியில் விற்கப் படுகிறதோ, அதே போலத்தான். இது சின்ன விஷயம் இல்ல.. இந்த முறைகேடுகளால் பலகோடிகள்(கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல்) வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறதாம்.. நம்ப முடிகிறதா..?? தொலைத்தொடர்பு கொபுரங்களுக்குத் தேவையான மின்சாரத்தில் பாதியை ஹைப்ரிட் (சோலார் மற்றும் காற்றாலை) முறையில் தானே தயாரித்துக் கொள்ள வேண்டும் , என்பது போன்ற சட்டங்கள் இயற்றப் பட்டும் சரிவர நடைமுறையில் இல்லை.இவை சரிவர நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.

மின்சாரம் என்பது வெறும் நிலக்கரியிலும், நீரிலும், கதிரியக்க முறையிலும் மட்டும் பெறக்கூடிய விஷயமல்ல. நாம் தினந்தோறும் வெளியேற்றும் வீட்டுக் கழிவுகளில் இருந்து கொஓது மின்சாரம் தயாரிக்க முடியும். ஆதிஷா வினோ அவர்கள் சமீபத்தில் கழிவுகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரை எழுதி இருந்தார். இது போன்ற கழிவுகளைச் சரியான முறையில் உபயோகித்தால் அதன் மூலம், நமக்குத் தேவையான அளவு மின்சாரத்தை நாமே தயாரிக்க முடியும். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், கழிவுகள் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் பல கிராமங்களின் மின் தேவையை தன்னிறைவு அடையச் செய்து காட்டி இருக்கிறார்கள். பல்வேறு கிராமங்களில் இவை செயல்படுத்தப் படுகின்றன. கிராமங்களை விட அதிகமான பொருளை உபயோகிப்பவர்கள் நகர மக்கள்.. நம்மால் செய்ய முடியாதா….???

அளவுக்கு அதிகமாக உபயோகித்தல், ஆடம்பரத்திற்காக உபயோகித்தல், வீணாக்குதல் போன்றவற்றைக் குறைக்க விழிப்புணர்வு தேவை.

இப்போதைய தேவைக்கு புதிதாக மின்னாலைகள் தேவை இல்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குப் பாதுகாப்பு தரும் மின்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நல்ல குடிமக்களாகத் திகழ வேண்டும்.

நன்றி.. சாமக்கோடங்கி