Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2014
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,711 முறை படிக்கப்பட்டுள்ளது!

என் பள்ளி! தன்னம்பிக்கை!!

என் பள்ளி காரமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. அங்கு தான் ஏழைத் தொழிலாளியன் மகனாக 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு படிப்பில் பெரிய அளவில நாட்டம் இருந்தது இல்லை. ஒரு கட்டத்தில் பள்ளியில் இருந்து இடைநின்றுவிடலாம் என்றுகூட நினைத்தேன்.

அந்த நேரத்தில் எங்கள் பள்ளிக்கு புதிதாக திருமதி சுசீலா என்ற ஆசிரியை வந்து சேர்ந்தார். அவருடைய வருகை என் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆசிரியப்பணி மகத்தானது மட்டுமல்ல பொறுப்பானதும் கூட என்பதை அவர் நிரூபித்தார்.

மாணவர்களுக்கு கருத்துக்கள் தெளிவாக சென்றடைய வேண்டும் என்று நினைத்த அவர் சின்ன சின்ன தன்னம்பிக்கை கதைகளை கூல் பாடம் எடுப்பார். அப்படி தன்னம்பிக்கை கதைகளுடன் பாடங்களை எடுத்ததால் மாணவர்கள் மத்தியில் படிக்கும் ஆர்வம் அதிகரித்தது. பள்ளிக்கு முழுக்கு போட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்த நான் சுசீலா டீச்சரின் கதைகளுடன் கூடிய பாடங்களை கேக்கவே பள்ளிக்குச் செல்லத் தொடங்கினேன். சிந்தனைகளைச் சீர்படுத்தும் தன்னம்பிக்கை கதைகளைக் கேட்டதனால் என் உள்ளத்தில் உற்சாகம் ஏற்பட்டு படிப்பில் கவனம் திரும்பியது.

எங்களின் திறமைகளை வளர்க்க பல்வேறு பயிற்சிகளை செய்யச் சொல்லுவார். நிறைய புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவார். படிக்காத மாணவர்களையும் சரிசமமாக நடத்துவார். இப்படி அனைத்து மாணவர்களையும் நேசித்ததுடன் அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தார். அவரின் இந்த ஆளுமை என்னை மாற்றியது. அதன்பிறகு சராசரிக்கும் குறைவான மாணவனாக இருந்த நான் முதல் மாணவனாக மாறினேன். சுசிலா ஆசிரியையின் கற்பிக்கும் முறையில் ஈர்ப்பு ஏற்பட்டு நன்றாக படித்து முதல் மாணவனாக விளங்கினேன்.

தொடர்ந்து காரமடையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்புகளைப் படித்தேன்.அந்தப் பள்ளியின் ஆசிரியை திருமதி. பங்கஜவல்லி வழிகாட்டல்கள் ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தின. அந்தப் பள்ளியில் படித்த காலகட்டத்தில் எங்கள் குடும்பமும் பொருளாதார நிலையில் மேலும் மோசமடைந்திருந்தது. வறுமைநிலை என் படிப்பில் எந்த குறைபாட்டையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்று கவனமாக படித்தேன். எனக்கு கடினமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம் தட்டிக்கொடுத்து ஊக்கத்தைக் கொடுத்தவர் திருமதி. பங்கஜவல்லி ஆசிரியை தான்.

10ம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்ற நான் மேல்நிலைக் கல்வியை தொடர முடியாத நிலை. பொருளாதார நெருக்கடியில் விரைவாக ஏதாவது பணியில் சேர்ந்து பணம் ஈட்ட வேண்டும் என்ற சூழ்நிலை.

10ம் வகுப்போடு கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லலாமா என்று யோசித்தேன். அந்த வயதிலும், அந்த படிப்பைக் கொண்டும் பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது என்று உணர்ந்தேன். அப்போதுதான் தொழில்கல்வி பற்றி அறிந்தேன். கோவையில் அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில் இரடாண்டுகள் படித்ததில் நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பும், சம்பளமும் கிடைக்கும் என்பதையும், அந்தப் படிப்பை படிப்பதற்கு செலவும் குறைவு என்பதையும் தெரிந்து கொண்ட நான் மின்பணியாளர் துறையை எடுத்துப்படிக்க விண்ணப்பித்தேன். இடமும் கிடைத்தது. அங்கு தான் என் வாழ்க்கைக் கல்வியைக் கற்றேன்.

அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில் எங்கள் துறைக்குத் தலைவராக இருந்த திரு. எஸ்.வி. இராமசாமி அவர்கள் செய்முறைப் பயிற்சியாக நிறைய விசயங்களைக் கற்றுத்தந்தார்.

பாடத்திட்டத்தில் இருப்பதைத் தாண்டி பல நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தார். ஒரு தொழில்கல்வி மாணவன் புத்தக அறிவுடன் மட்டுமே பெற்று கல்லூரியை விட்டு வெளியே செல்லக்கூடாது. நல்ல பயிற்சி அனுபவத்துடன் சென்றால் தான் நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்று கூறியதுடன் அதற்கான பயிற்சியையும் எங்களுக்குக் கொடுத்தார்.

அந்த காலகட்டத்தில் அவர் ஜெர்மனி அரசுடன் இணைந்து தொடங்கப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக அவர் ஜெர்மனி சென்று வந்தார். அந்த அனுபவங்களை எங்களுக்குக் கொடுத்தார். தொழில்துறையில் ஜெர்மனி எப்படி சாதிக்கிறது. அங்குள்ள மாணவர்கள் எத்தகைய பயிற்சியைப் பெறுகிறார்கள் என்பதைப் பார்த்த அவர் அதை எங்களுக்குக் கற்பித்தார். அவருடைய அனுபவம் மற்றும் பயிற்சியின் துல்லியம் ஆகியவற்றால் நான் நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன்.

இரண்டாண்டு முடிவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், நல்ல பயிற்சியும் பெற்ற நான் நல்ல வேலையைத் தேடியபோதுதான் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஓராண்டுகள் நன்றாக பயிற்சி பெற்றேன். பிறகு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். மிகச்சில வருடங்களிலேயே என்னுடைய பணியின் திறமையைப் பார்த்த எங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எனக்குப் பதவி உயர்வு வழங்கினார்.
புதிதாகப் பெற்ற என்னுடைய பணிக்கான தகுதி அப்போது எனக்கு இல்லை என்றாலும் நிர்வாக இயக்குநர் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்றால் என்னிடம் மேலும் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னுடைய தகுதியை வளர்த்துக்கொள்ள முடிவு செய்து கோவையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக்கில் பகுதி நேரமாக சேர்ந்து பொறியியல் படிக்க முடிவெடுத்து விண்ணப்பித்தேன். இடமும் கிடைத்தது.

காலையில் தொழில்சாலையில் வேலை. மாலையில் கல்லூரியில் வகுப்பு. காரமடையில் இருந்து பீளமேடு வரை இரண்டு சக்கர வண்டியில் வந்தேன். பயணத்தொய்வு, அதிகப்படியான உழைப்பு காரணமாக மிகவும் சோர்வு ஏற்பட்டது. இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன செய்யப்போகிறோம்? என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஒருநாள் எங்கள் துறைத்தலைவர் முனைவர் ராஜரத்தினம் அவர்கள் எங்களிடம் உரை நிகழ்த்தினார். அதில், “நீங்கள் எல்லோரும் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்து வருகிறீர்கள் என்று புரிகிறது. வேலைப் பளுவுக்கு மத்தியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வியந்து பாராட்டுகிறேன். தொடர்ந்து படிக்க வாருங்கள். இடையில் ஏற்படும் மனத்தடைகளை விட்டொழியுங்கள். இந்த படிப்புக்கு உங்களுக்கு இடம் கிடைத்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பாகப் புரிந்துகொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் பாதியில் இடைநின்று விடாதீர்கள்” என்று கூறியதைக் கேட்ட நாங்கள் சிரித்துவிட்டு படிக்கத்தானே வருகிறோம். எவனாவது பாதியில் படிப்பை நிறுத்துவானா? என்று கேலி செய்து கொண்டோம்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த வாய்ப்பு மற்றொருவரிடம் இருந்து நாம் பெற்றிருக்கிறோம். கிடைத்த இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாமல் விடும்போது மற்றவரின் வாழ்க்கையைக் கெடுத்ததுடன் உங்கள் வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்கிறீர்கள். மற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்து இருந்தால் அவரது வாழ்க்கைத் திறன் மேம்பட்டிருக்கும். அதைத் தடுப்பதுடன் உங்கள் வாழ்க்கைத் திறனையும் மேம்படுத்தாமல் இருப்பது பெரிய குற்றம் என்று சொன்னபோது என்னை பலமாக அறைந்தது போல உணர்ந்தேன்.

மற்றவர்களுக்குக் கிடைக்காத இந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் இதைப் பயன்படுத்தி மேம்பட வேண்டும் என்று முடிவெடுத்து தொடர்ந்து எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் படிக்கச் செல்வேன். உள்தேர்வு, அசைன்மென்ட் என்று இரவு பகல் பாராது படித்தேன். பொறியியல் பட்டம் பெற்று முடித்தபோது தான் என்னுடைய வலி எவ்வளவு இன்பமாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

முனைவர் ராஜரத்தினைத்தைப் போன்றே துணைமுதல்வர் முனைவர் ஆர். பழனிச்சாமி, பேராசிரியர் பாண்டியன், பேராசிரியர் விஸ்வநாதன், பேராசிரியர் அருணாச்சலம் போன்றோரின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வகுப்புகள் என வாழ்வை புதிய பரிமாணத்தில் கட்டமைத்தது என்பேன். இன்று மின் பொறியாளராகப் பணியாற்றுகிறேன் என்றால் அதற்கு இந்த வேர்கள் தான் காரணம்.

எனது ஆசிரியர்களைப் போலவே எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தவர் நிறுவனத்தின் தலைவர் திரு. அவர்கள். நான்கு முறை ஜெர்மனி சென்று பயிற்சி பெறவும், பயிற்சி கொடுக்கவும் செய்தவர். அவரின் உதவியால் இன்று பல நல்ல தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருக்கிறோம்.

பொருளாதார நெருக்கடியிலும் எனது அம்மா என்னை படிக்க வைத்ததும், பணிகளுக்கு இடையில் படிக்க சென்றபோது எனக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்து என் மனைவி மஞ்சுளா அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

நன்றி: ரவிக்குமார்    – தன்னம்பிக்கை