Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2005
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,589 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொடுவானம்

கோலாலம்பூர் சுபாங் விமானதளத்திலிருந்து ‘மாஸ்’ விமானம் புறப்பட்டு, மேலே எவ்வி, சமநிலைக்கு வந்தது! பயணிகளும் சக நிலைக்கு வந்தார்கள்! சிலர் புத்தகங்களை விரிக்க – சிலர் உரையாட, சிலர் எழுதிக்கொண்டிருக்க – விமானம் விரைந்து கொண்டிருந்தது. சென்னையை நோக்கி!

பொதுவாக, அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் பொரும்பாலோர் மலேசியாவில் சில ஆண்டுகள் தங்கிவிட்டு, தங்கள் உற்றார் உறவினரைப்பார்க்கும் துடிப்பில் திரும்பிக் கொண்டிருப்பவர்கள் தான்! அவர்களது முகங்களில் மகிழ்ச்சி அப்பிக் கிடந்தது!

நான் கண்களை அங்குமிங்கும் ஓட்டினேன்!

என்னருகில் ஜன்னலோரம் ஒரு இளைஞன்!

அரைக்கை சிலாக் – பேண்ட்! ஒரு கன்னத்தில் கைவைத்தபடி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில்!

அவன் தோற்றம் பொதுவான சூழ்நிலைக்கு மாறாக இருந்ததால் அவனையே ஊடுருவினேன்!

ஒரு வேளை குடும்பத்தில் ஏதாவது சோக நிகழ்வுகள் இருக்கலாம்! நேரம் ஓடிக்கொண்டிருந்தது – அவனது கவனம் விமானத்துக்குள்ளேயே இல்லை! ஒரு மரியாதைக்குக் கூட என்பக்கம் திரும்பவில்லை!

ஜன்னலுக்கு வெளியே அதே வெறித்த பார்வை! அவ்வப்போது கண்களிலிருந்து பொல பொலவெனக் கண்ணீர்த்துளிகள்! அவனை விட்டு விலக என் கவனம் மறுத்தது! ஒரு சகமனிதனின் துயரத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற மனிதாபிமான உந்துதல்!

“தம்பி அஸ்ஸலாமு அலைக்கும்” என்றேன், மெதுவாக! அவனது நினைவலைகள் தடைப்பட …. ” வ… அலைக்கும்வஸ்ஸலாம்” என்றான், வலிய வரவழைத்துக் கொண்ட ஒரு புண்ணகையோடு!

“தம்பி மலேஷியாவில் எங்கே இருக்கீங்க?”
‘பிஜே – பெட்டாலிங் ஜெயாவுல இருந்தேன்!”
“என்ன பிஸினஸ்ள?”
“ஒரு ஹோட்டல்ல ரொட்டிபோடுற வேலை”
ஊர்ல இருந்து வந்து எவ்வளவு நாளாச்சு?”
“பதினோரு மாசம்..” அவன் பெருமூச்செறிந்தான்!”
“குடும்பம் இந்தியாவிலா, மலேசியாவிலா? சொந்த ஊரு எது?”
சொந்த ஊரு ராம்நாடு பக்கம் – குடும்பமும் அங்க தான் கிராமத்துல”
“எத்தனை வருஷமா போக்குவரத்து? சின்ன வயசுல இருந்தா?”
“இல்லீங்க! இப்பத்தான் ஒரு அஞ்சாறு வருஷமா”
ஓரளவுக்கு அவனுடைய நிலையை இப்போது என்னால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.
டூரிஸ்ட் விசாவில் மலேசியா சென்று “ஓவர்ஸ்டே” செய்து, ஒரு நாள் பிடிபட்டு, தண்டணை,அனுபவித்து விட்டு அனுப்பி வைக்கப்படும் பையன! அவனை அனுதாபத்தோடு பார்த்தேன்!”தற்செயலா பிடிபட்டீங்களா? இல்லே, ஏதாச்சும் பெட்டிஷனா?”
“பெட்டிஷன்தான் – நம்மாளுகளுக்குத்தான் அடுத்தவன் பொழைக்கிறதப் பார்க்கச் சகிக்காதே! முழு விபரமும் கொடுத்து எவனோ ஓருத்தன் மொட்டப் பெட்டிஷன் போட்டுட்டான்! நான் யாருக்குமே எந்த துரோகமும் செய்யாதவங்க! ஊர்ல அம்மா, அத்தா, மனைவி, தங்கச்சி, மூனு குழந்தைங்க! எதோ, மாசம் நானூறு வெள்ளி சம்பாதிச்சேன்! ரெண்டாாயிரம் மூவாயிரம் அனுப்புவேன் -பசியில்லாம புள்ள குட்டிங்க
சாப்பிட்டுச்சுங்க ..! இனிமே?..” அவன் உடைந்தான்!
கொஞ்சநேரம் நானும் பேச்சுக் கொடுக்கவில்லை!

மறுபடியம் அவனே தொடர்ந்தான்!
“என்னைப் பிடிச்ச மலாய்க்காரப் போலிஸ்காரர் கூட இரக்கப்பட்டார் சார்!” நீ இங்க வந்து பொழைக்கிறதுல எங்களுக்கொன்றும் நஷ்டமில்லே தம்பி! நீயும் முஸ்லிம், நானும் முஸ்லிம்! யாரோ உனக்கு வேண்டியவன் இவ்வளவு தெளிவா மொட்டப் பெட்டிசன் போட்டிருக்கானே? இதே ராஸ்கல் எங்க மேலதிகாரிகளுக்கும் போட்டிருக்கமாட்டான்னு உத்தரவாதமில்லியே? அப்புறம் எங்கபாடு ஆபத்தால போயிடும்னு” வருத்தப்பட்டார்!

நாம் என்ன சொல்றது, சார்? ஏனா நம்மடவங்களுக்கு இப்படியொரு பொறாமைக் குணம் ? மத்தப்பேரைப் பாருங்க எவ்வளவு ஒற்றுமையா, ஒருத்தருக்கொருவர் உதவி ஒத்தாசை செஞ்சிட்டு…” அவன் திரும்பவும் மெளனமானான்!

“ஏன் தம்பி, இப்ப வந்து பதினொரு மாசந்தான்னு சொன்னீங்களே?” எப்படி அஞ்சாறு வருஷப் போக்கு வரத்து?”.
ஆமாங்க, சார்! இது எனக்கு மூனாவது தடவை! முதல்ல மூனு வருஷம், அப்புறம் ரெண்டு வருஷம் இப்ப பதினோரு மாசம்! இந்தத் தடவை ரொம்ப நல்ல சம்பளத்துல இருந்தேன், சார்! இன்னும் ரெண்டு வருஷம் பிடிபடாம இருந்திருந்தா தங்கச்சியக் கட்டிக் கொடுத்திருப்பேன்! எந்தப் பாவிப்பயலோ எம் பொழப்புல தீய வச்சிட்டான்” அவன் மறுபடியும் கலங்கினான். குலுங்கிக் குலுங்கி அழுதான்!

நான் அவன் தோளைத் தொட்டு ஆறுதல் சொன்னேன்! “தைரியமா இருங்க தம்பி! அல்லா ஒரு வழியக் காட்டாமலா போறான்?” ஏன் தம்பி, நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க – நீங்க ஏன் இப்படி சட்ட விரோதமாப் போகனும், பிடிபடனும் – மறுபடியும் போகனும் – பிடிபடனும்?
ஏராளமான காசு விரயம் வேறே! ஏதோ ஒரு தொழில் ஊருலயே பாக்கலாந் தானே?”.

“சார் எங்க ஊர்ப் பக்கம் உள்ள நெலம சரியாத் தெரியலைன்னு நெனைக்கிறேன்! சம்பளத்துக்கிருந்தா சாப்பாடு போட்டு, முந்நூறோ நானுறோ
தருவாங்க! சொந்தத் தொழில் பன்றதுக்கு பெரிய மூலதனம் வேணும்! அப்படியே மூலதனம் போட்டாலும் கொஞ்ச நாளைக்குப் பொறுமையாயிருந்து தொழிலை ‘டெவலப் பண்ணனும். அதுவரைக்கும் குடும்பத்துல பொறுமையிருக்காது! ஒரு சின்ன குடும்ப நிகழ்ச்சியைக் கூட பெரிய தடபுடலா, ஆர்ப்பாட்டமா நடத்தி ஊதாரித்தனமா செலவு செய்யற போலித்தனமான நெலைமையில் பொண்டாட்டிமாருங்க எங்கே சார் ஊர்ல உக்காந்து தொழில் பாக்க உடுறாங்க? ஓடுடா வெளிநாட்டுகுன்னு அடிச்சுத் துரத்திடுவாங்க சார்! அவன் குரலில் அளவுக்கதிகமான அலுப்பு – வெறுப்பு!
அவன் மறுபடியும் மெளனமானான்!

அடிக்கடி மூக்கை நீவி விடடுக் கொள்வதைப் பார்த்தேன் அது சேலசாக கண்டிப் போயிருந்தது!
விசாரிததேன்!
“போலீஸ் புடிச்சா சும்மா இருக்குமா, சார்? அவங்க முறையில் விசாரிக்க மாட்டாங்களா? ஆனா, இந்த வலியெல்லாம் பெரிசாத் தெரியல சார்?
வீடடுக்குப் போய் நின்னவுடனே வீடல எல்லோரும் ஓன்னா அழுவாங்க! மெளத்தான வீடு மாதிரி சோகம் நிறைஞ்சு போகும்! எல்லோரும் துக்கம் விசாரிக்க வர்ர மாதிர வந்து கேள்வியால துளைப்பாங்க! வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுவாங்க! அதை நெனைச்சாத்தான் சார் ரொம்ப நெஞ்சுவலிக்குது!” அவனது பதில் என்னைக் கலங்க வைத்தது!

“சரி, தம்பி! இனிமே நீங்க என்ன செய்யிறதா உத்தேசம்?”.
அவன் விரக்தியாகச் சிரித்தான்! பார்வையால் என்னை ஊடுருவினான்!.
ரெண்டு மாசம் ஊர்ல இருப்பேன்! மறுபடியும் வருவேன் – கொஞ்சம் சம்பாதிப்பேன் – எவனாவது பெட்டிசன் போடுவான் – பிடிபடுவேன் – போவேன் – மறுபடியும் வருவேன். அல்லா நெனையாப் புறத்துல இருந்து ஒரு நெரந்தர வழியைக்காட்ற வரைக்கும் இந்த ஜிஹாத் தொடரும் சார்! தெடுவானத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிற பரிதாப ஜீவன் சார் நான்!”

நான் எனக்குள் உடைந்து போனேன் அந்த பதிலில்! அவனை மேலும் வார்த்தைகளால் சலனப்படுத்தாமல் அமைதியாக இருந்தேன்.
அவன் மறுபடியும் ஜன்னல் பக்கம் திரும்பி வான வெளியை வெறித்தான்! இவனைப் போலத்தான் எத்தனை முஸ்லிம் இளைஞர்கள்?
தொடுவானம் துரத்திகள்?.

 

 

நன்றி: முஸ்லிம் முரசு.