ரஹ்மத் பாத்திமா மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள். அவளுக்கு அது புது அனுபவம், நாற்பது வயதைக் கடந்த பிறகு! நான்கு பிள்ளைகளையும் ஒரு வகையாகக் கரை சேர்த்தபிறகு!
வெளிக்கதவைத் திறந்து பார்த்தாள்! அவளது கணவன் பஷீர் அஹ்மது இன்னும் வரவில்லை. வெளித் தாழ்வாரத்துக்கு வந்து நின்று, தெருக்கோடிவரை ஊடுருவினாள், அவனைக் காணோம்.
அவளுக்கு, அவளுடைய உணர்வு வெளிப்பாடு குழந்தைத்தனமாகக் கூடப் பட்டது. பரீட்சைக்குச் செல்லும் பள்ளிக்கூடக் குழந்தை போன்ற பரபரப்பு! பக்குவப்படாதவர்களின் துறுதுறுப்பு! ஆனால், அவள் அதிலும் ஒரு இன்பம் கண்டாள் … திருப்திப்பட்டாள்!
பஷீர் அஹ்மது, கோடிவீட்டு ஹுசைனிடம் சென்றிருந்தான். அந்த ஊரில், ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பணக்காரர். இப்போதும் யானை படுத்தால், குதிரை உயரம் என்ற நிலைதான். அவரது மளிகைக் கடையில், வெல்ல மண்டியில் வேலை பார்க்காத ஊர்க்காரர்கள் குறைவு! பஷீர் அஹ்மதும் அவரிடம் தான் வேலைப்பார்த்தான், பத்து வயதிலிருந்து. இருபத்தெட்டு வயதில் திருமணம் முடித்து, ஒரு பிள்ளை பெறும் வரையிலும் அவரது மளிகைக்கடையில் தான் வேலை.
வாழ்க்கைச் செலவுகள் அதிகமான பிறகு, அதிக வருமானம் கருதி, இடையில் சில வியாபார முயற்சிகள், இரண்டாண்டுகளுக்கு! தோல்வி! மறுபடியும் அவரிடமே சரண்! அப்புறம் ஒரு பதினான்கு ஆண்டுகள்! கிட்டத்தட்ட ஆயுட்காலம் முழுதும் அவரிடமே வேலை பார்த்த உணர்வு!
பிள்ளைக் குட்டிகள் பெரியவர்களாகி அவர்களுக்கு ‘நல்லது’ செய்யவேண்டிய அழுத்தம்! ஆயிரக்கணக்கில் சீர்வரிசை! ரொக்கமாக கைக்கூலி! எங்கே போவான்? வேறு வழியில்லாமல், எல்லாரும் போகிறார்களே என்று அவனும் வெளியூருக்குப் போனான். அல்லாஹ் ரஹ்மத்துச் செய்தான். பரக்கத்தைக் கொடுத்தான். நான்காண்டுகளில் இப்போது அவனும் ஒரு புள்ளி. அந்த ஊரில் அவனுடைய வீடும் குறிப்பானது!
ரஹ்மத் பாத்திமா தன் கழுத்தைத் தடவிப்பார்த்தாள். வடம் வடமாக தங்கச் செயின்கள்! கைகளில் நிரம்பிவழியும் தங்க வளையல்கள்! நாற்பது வயதுக்குப் பிறகு – பேரன் பேத்தி எடுத்த பிறகு – தங்கம் போடுவது ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது! பார்ப்பவர்கள் ஒரு மாதிரி நொடிக்கத் தான் செய்கிறார்கள்!
அதற்காக? அப்போது போடுவதற்கு இல்லை. போடவில்லை! இப்போது இருக்கிறது. போடுகிறேன்! யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?’ என்ற மனநிலை வந்துவிட்டது இப்போது.
பஷீர் அஹ்மதும் அவளது செழிப்பைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான். பூரித்துப் போகிறான்!
ரஹ்மத் பாத்திமா மீண்டும் வெளியே வந்து தெருவைப் பார்த்தாள். பஷீர் அஹ்மது இன்னும் வரவில்லை.
ஹுசைன் முதலாளி அவனைக் கூப்பிட்டு விட்டிருந்தார்!
ஏதோ பண நெருக்கடியாம். வியாபாரத்தில் சிக்கலாம். ஒரு லட்சம் கைமாற்றுக் கேட்கிறார்! கையில் பணமிருந்தது. ஒரு தென்னந்தோப்பு வாங்குவதற்கான பணம்! பஷீர் அஹ்மது வந்து மனைவியிடம் ஆலோசைனை கேட்டான். “உடனே கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்க மச்சான்” என்றாள், அவள்!
பிறகு?
இவ்வளவு பெரிய பணக்காரர்! குடும்பத்துக்கே ஆதரவாய் நின்றவர், கைமாற்றுக் கேட்கிறார். உதவி செய்ய வேண்டாமோ? அவருக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு தங்கள் நிலை உயர்ந்துள்ளது, ரஹம்த பாத்திமாவுக்குள் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தியிருந்தது. நிலை கொள்ளாமல் தவிக்கச் செய்திருந்தது.
அவள் மறுபடியும் கதவைத் திறந்து வெளியே வருவதற்கும் பஷீர் அஹ்மத் கேட்டைத் திறந்து வீடடுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
“என்னங்க .. பணத்தைக் கொடுக்கலியா?” என்று வியப்போடு கேட்டாள் ரஹ்மத் பாத்திமா, புருஷனிடம் கையில் பணம் கொண்டுபோன மஞ்சள் பையைப் பார்த்தவாறே!
அவனது முகம சோர்ந்து கிடந்தது.
“இல்லை” என்று சைகை செய்தான்.
“ஏன் மச்சான்? என்னாச்சு? முதலாளி ஊட்ல இல்லியா?”
“இருந்தாரு! ஆனா …” அவள் புருஷனையே பார்த்தாள். அவளால் எதையும் யூகிக்க முடியவில்லை. எல்லாம் புதிராகவே இருந்தது.
“சும்மா இருந்தா எப்படிங்க.. என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்! அவசரப்படுத்தினாள் ரஹ்மத் பாத்திமா.
“உண்மையில் அவருக்கு பணத்தேவையிருக்கிறதாத் தெரியல பாத்திமா”
மவுனமாக அவனையே பார்த்தாள். அவன் தொடர்ந்தான்.
“வீட்டுக்குப் பக்கத்துல போனப்போ பேச்சுச் சத்தம் கேட்டுச்சு! அடிக்கடி நம்மபேர் அடிபட்டதுனால வெளியிலேயே நின்னேன்….” அவன் கதைபோலச் சொன்னான்.
‘ பேப்பயகிட்ட காசு குமுஞ்சுபோய்க் கெடக்கு மச்சான். என்ன செய்யிறதுன்னு தெரியாம, மடப்பய கெழட்டுப் பொண்டாட்டிக்கு வடம் வடமா நகை செஞ்சு மாட்டுறான்! அதான் ஒரு திட்டம் போட்டு, அவன் காசு கைப்பத்த வழி பண்றேன்னாரு, அவரு மச்சினன்கிட்டே!”
ரஹ்மத் பாத்திமாவின் முகம் இருண்டது.
“நெசமாவா?”
“ஆமா புள்ள.. எங்காதால் கேட்டேன்! அப்படியே உள்ளே நுழைஞ்சு, முகத்துல காரித்துப்பலான்னு ஒரு வெறி! ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு வந்துட்டேன்.
அவன் முகத்தில் அபரிதமான சோர்வு – சோகம். இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றுமே பேசவில்லை. உணர்வுகள் மரத்துப்போன மாதிரி ஒரு சோர்வு நிலை. உலகம் எவ்வளவு வக்ரமானதாய் இருக்கிறது? இதை வைத்துத்தான் ‘மனிதன் வாழவும் விடமாட்டான் – சாகவும் விடமாட்டான்” என்றார்கள் போலிருக்கிறது!
கொஞ்ச நேரம் கழிந்து, “இந்தா.. இதக் கொண்டு போயி பெட்டிக்குள்ளே வையி” என்று பையை நீட்டினான் பஷீர் அஹ்மது.
அவள் அதை வாங்கவில்லை. “வேண்டாம் மச்சான் நாம் இந்த பணத்தைக் கொடுக்க நினைச்சது உதவியாத் தான்! கஷ்டப்படுற ஒருத்தருக்கு கைமாத்தாக் கொடுக்கத் தான்.. நம்மலோட நிய்யத்து சுத்தமானது.. அதுக்கான பலன், நமக்கு நிச்சயமா அல்லாகிட்டேயிருந்து வந்து சேரும்! மத்தவங்க நிய்யத்து, நெனப்பு வேற மாதிரி இருந்தா, அதுக்கு அல்லா தண்டனை கொடுத்துக்கிடுவான். அதப்பத்தி நாம் ஏன் கவலைப்படணும்? போங்க… போய்க்கொடுத்துட்டு வந்திடுங்க!” என்றாள் உறுதிபட.
“நம்மலப்பத்தி இவ்வளவு கேவலமா அந்த ஆளு நெனச்சிருக்கையில .. ?” அவன் தயங்கினான்.
பரவாயில்லே மச்சான்! அவரு நெனப்பு என்னங்கிறதத்தான் அல்லா நமக்குத் தெரியப்படுத்திட்டான்ல. இனிமே ஜாக்கிரதையா இருந்துக்குங்கன்னு அல்லா நம்மை எச்சரிக்கை செஞ்சிட்டான்! அதுதான் அவனோட கருணை! போங்க.. தயங்காம போயி இதக் கொடுத்துட்டு வந்துடுங்க! மத்தத பெறகு பார்த்துக்குவோம்”.
பஷீர் அஹ்மது மனைவியை அழுத்தமாகப் பார்த்தான்! அவள் சொல்வது சரியாகவேபட்டது. மறுபடியும் அவன் அந்தப் பையுடன், ஹுசைன் முதலாளி வீட்டை நோக்கிச் சென்றான்.
ரஹ்மத் பாத்திமா இப்போது பரபரக்கவில்லை. துறுதுறுக்கவில்லை. ஆனால், அவள் மனம் பக்குவப்பட்டிருந்தது. உலகை – அதன் யதார்த்தப் போக்கை அளவிட்டு விட்டது போன்ற தெளிவேற்பட்டிருந்தது! மனித வக்ரங்களைப் புரிந்து கொண்டிருந்தது!
நன்றி: வாசுகி
அல்லாஹ் அக்பர் = அல்லாஹ் பெரியவன்