Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2006
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,881 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊரில் சில மரணங்கள் சில நினைவுகள்

நான் ஊரிலிருந்து வந்து சரியாக ஓராண்டு ஓடிவிட்டது!
22 – 10 – 2004 -ல் அண்ணன் ஜே.ஏ.கான் அவர்கள் தொடங்கி பல மரணங்கள் நிக்ழ்ந்துள்ளன. அவர்கள் அனைவரது பாவங்களும் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அளவில் உயர்ந்த இடத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்திப்பதே வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் செய்ய முடிந்த உதவி.

மறைந்த அவர்களோடு நாம் வாழ்ந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் – பாசப் பிணைப்புக்கள் நினைவலைகளாகப் பிரதிபலிப்பதைத் தவிர்க்க முடிவதில்லை.


முன்னாள் ஆசிரியர் திரு ஜோசஃப் ஃபியோ (ஜோஸப் சார்) அவர்கள்

முஹம்மதியா ஆரம்பப் பள்ளியில் நாங்கள் படித்த போது எங்களுக்கு ஆசிரியராக இருந்த திரு ஜோசஃப் சார் அவர்கள் இராமனாதபுரத்தில் 29 – 08 – 2005 -இல் இறந்துவிட்டதாக , துபாய் புறப்படுவதற்கு முன் மகன் முகம்மது அலி சித்தார்கோட்டையிலிருந்து எஸ். எம். எஸ் அனுப்பியிருந்தார்.

நம்மூரில் பணியாற்றுவதற்கு வந்த பல ஆசிரியர்கள் , பணி ஓய்வுக்குப் பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்குப் போகாமல், நம்முடனேயே வாழ்வது என்பது பல காலமாக நடைபெற்றுவரும் நிகழ்ச்சியாகும்.அண்ணா சாரிலிருந்து எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும்.

திரு ஜோசஃப் சார் அவர்களும் அவர்களது துணைவியார் திருமதி ஜோதி பாய் அவர்களும் நம்மூரில் பல ஆன்டுகள் பணியாற்றிவிட்டு , ஓய்வுக்குப் பின் கொஞ்ச காலம் மேட்டூரில் வாழ்ந்து பார்த்துவிட்டு நம் பகுதிக்கே திரும்பி விட்டவர்கள்.இந்த மண்ணுக்கே வாழ்ந்து இந்த மண்ணிலேயே மறைந்திருக்கிறார்கள்.

என் பள்ளிக்காலத்தில் திருமதி ஜோதி பாய் அவர்களிடம் முதலாம் வகுப்பும், திரு ஜோசஃப் சாரிடம் மூன்றாம் வகுப்பும் படித்தேன்.

சார் ஒரு பல்கலை ஆர்வலர்.

ஓவியம், தோட்டக் கலை அவர் உயிர் உணர்வுடன் கலந்தது.ஆயுள் முழுக்க அவர் அதில் அக்கறை காட்டி வந்தார்.

மலாயாவில் பிறந்த அவர் ஒரு கிறித்தவ சாமியாரால் வளர்க்கப் பட்டவர். பிறகு அவருடனேயே இந்தியா வந்தவர் என்பது அவரே சொன்ன வரலாறு.

பணிவும் பண்பாடும் மிக்கவர்.அமைதியாய்ப் பேசுவார்.

அன்றைய கல்வித்தரத்துடன் ஒப்பிடும் போது நல்ல ஆங்கில அறிவு மிக்கவர்.நல்ல ஆங்கிலத்தில் பேசவும் கூடியவர். நம்மூரைச் சேர்ந்த பலர் அவரிடம் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வதுண்டு.

பணி ஓய்வுக்குப் பிறகும் அவர் டியூஷன் , மொழிப்பயிற்சி என்று ஏதாவது செய்துகொண்டுதானிருந்தார்.

என் வீட்டு மாடியிலும், என் பனைக்குளம் கிளினிக்கிலும் தோட்டம் போட ஆலோசனை சொல்லி, அவரே சில கன்றுகளையும் கொண்டுவந்து தந்தார்!

நம் சின்னப் பள்ளிவாசல் அருகில் , புது ஊத்தின் வடகரையில் அழகான தோட்டம் போட்டு, மாணவர்களை வைத்தே அதைப் பராமரித்தார். அவர் ஓய்வு பெற்றவுடன் வேறு எந்த ஆசிரியரும் அதைக் கண்காணிக்காமல் பொட்டலாகிப் போனது!

ஒரு பழைய மாணவன் என்ற முறையில் மிக்க நன்றியுடன் சாரை நான் நினைவுகூர்கிறேன்.
என்னைப் போலவே அவரது பழைய மாணவர் பலரும் அவரை பனித்த கண்களுடன் நினைவு கூர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

எனக்கு பல்கலை ஆர்வம் ஏற்பட உதவியவர்களுள் அவரும் ஒருவர் என்பதால், இப்போது கேரளாவில் 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடநூலாக உள்ள “கோடுகள் கோலங்கள்” என்ற என் நாவலை அவர் உட்பட என் ஆசிரியர்களுக்கே அர்ப்பணம் செய்தேன். அதை இப்போது நினைவு கூர்வதில் எனக்கு ஒரு நிறைவு!

சாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த அனுதாபங்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


 

அண்ணன் ஜே.ஏ. கான் அவர்கள்

அண்ணன் ஜே.ஏ. கான் அவர்கள் ஒரு சகாப்தம். என் இளமைக் காலத்திலேயே என்னுள் இருந்த திறமைகளை அடயாளம் கண்டு, அதை ஊக்குவித்து வளர்த்து அரவணைத்தவர். கடைசிவரை என் மீது அன்பைப் பொழிந்தவர். வெளிப்படையாகப் பேசுபவர் என்பதால் பல பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்வதுண்டு. ஆனால் ‘மறப்போம் ; மன்னிப்போம்’ என்ற சொல்லாடலுக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்.

ஜமாத் தலைவராக அவர்கள் இருந்த காலத்தில் நம் பள்ளிக்கட்டடங்கள் கட்டப் பட்டுள்ள இடங்களில் சிலர் சில பிரச்சினைகளை எழுப்பிய போது அதை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர். அது ஒரு வரலாற்று நிகழ்வு. அதற்காக அவர் நம்மூர் சரித்திரத்தில் என்றும் நிற்பார்.

தம்பி… இப்போது நீங்கள் அடிக்கடி வெளிநாடு சென்று விடுகிறீர்கள்..; அனேகமாக நான் மௌத்தாகும்போது நீங்கள் ஊரில் இருக்க மாட்டீர்கள் என்றுதான் நினக்கிறேன்….” என்று அவர் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் என் ஆயுள் முழுக்க என்னுள் அலையெழுப்பிக்கொண்டே இருக்கும்.


ஜனாப் அஹ்மதுக்கான் அண்ணன் அவர்கள்:

வாலிப முஸ்லிம் தமிழ்க்கழகம் அறுபதுகளில் ஒரு அருமையான திட்டத்தை அறிமுகம் செய்தது. அப்போதெல்லாம் விமானப் பயணம் செய்பவர்கள் அனேகமாக நம்மூரில் இல்லை. எஸ். எஸ். ரஜூலா அல்லது ஸ்டேட் ஆஃப் மட்ராஸ் கப்பலில்தான் மலேசியாவுக்குப் பயணித்தாக வேண்டும். கப்பல் டிக்கட் மற்றைய செலவினங்களுக்கு சுமார்  250   ரூபாய் வரை செலவாகும். சம்பளத்துக்கு வேலை செய்யும் நபர்கள் தாங்கள் பணியாற்றும் முதலாளிகளுக்கு எழுதிப் பெறுவார்கள். அதனால் அவர்களுள் சிலர் நிரந்தரக் – கொத்தடிமைகள் போல ஆகிப்போவதும் உண்டு. அதை முறியடிக்கும் திட்டமாக நம் சங்கம் அப்புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.
அதன்மூலம் சங்கம் 250 ரூபாய் கடன் கொடுக்கும்; அதைப் பெறுபவர்கள் 25 ரூபாய் அன்பளிப்பாகச் சேர்த்து 6 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தி விடவேண்டும். இது சில காலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின்னணியில் நின்றவர்களுள் அண்ணன் அஹ்மதுக்கான் அவர்கள் முக்கியமானவர்கள். அவர் பங்கு கொள்ளும் ஊர்க்கூட்டங்களில் நெருப்புப் பறக்கும். தாட்சண்யம் பார்க்காமல் தன் கருத்தைச் சொல்வதில் முன்னின்றவர். பயமுறுத்தும் தோற்றம் ; ஆனால் குழந்தை போன்ற பழகுமுறை.

ஜே.ஏ.கான் – அஹ்மதுக்கான் – பி.எஸ்.கே. கே. சீனி முஹம்மது மூவரும் ஒரு குரலில் ஒலித்து ஊர்ப் பிரச்சினைகளை ஒழுங்குக்குக் கொண்டு வருவார்கள். ஜே.ஏ.கானும் மக்கான் அண்ணனும் நட்புச் சண்டை போட்டுக் கொள்வதை யாரும் பார்த்தால் பதறிப்போக நேரும்! அவ்வளவு கனல் பரக்கும்! ஆனால் அடுத்தநொடியில் சிரிப்பும் கும்மாளமும் தொடங்கிவிடும்! அதைப் பார்ப்பது ஒரு ஆனந்த அனுபவம்!

அன்னாரின் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்!


யூசுஃப் (அண்ணா வாத்தியார்) அவர்கள்:

நம்மூர் ஆரம்பப் பள்ளி சில காலம் “முஹம்மதியா ஆதாரப் பாடசாலை” என்று பெயர்பெற்றிருந்தது. ராட்டை, தக்கிளி மூலம் நூல் நூற்கும் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. நம் பகுதிக்கு அது அதிகம் பிரயோஜனப் படாது என்பதால், பனைஓலைக் கைத்தொழில் பயிற்சியைக் கொண்டு வந்தது நிர்வாகம். அதற்கு ஆசிரியராக மர்ஹூம் கானா பீனா முகம்மது யூசுஃப் என்ற பெரியவர் நியமிக்கப் பட்டார்கள். அவர் நம்ம ஜவாஹிரலியின் நல்லத்தா ஆவார்.

அவர் வயதில் முதிர்ந்தவர் என்பதால், அவருக்குப் பின் இந்த யூசுஃப் அண்ணன் கைத்தொழில் ஆசிரியராக நியமிக்கப் பட்டார்கள். பணிவின் உச்சம் அவர்கள். யாரிடமும் அதிகம் பேச மாட்டர்கள். அவருண்டு அவர் பணியுண்டு என்று இருப்பவர்.

வாலிப முஸ்லிம் தமிழ்க் கழகத்துக்கு பெரும்பணியாற்றியவர். அவர் பாட்டுக் கேப்டனாக இருந்த போது ஒரு தனி அந்தஸ்தே இருந்தது. நன்றகப் பாடுவார் – பிறரையும் இழுத்து வந்து பாட வைப்பார்! என்னிடம் பாட்டெழுதிக் கேட்பார். சுமார் 30 பாட்டுக்களை கல்லூரி மாணவனாக இருந்தபோதே நான் எழுதிக் கொடுத்திருந்தேன். அவற்றுக்கெல்லாம் என்னிடம் பிரதிகள் இல்லை. பின்னாளில் அவற்றை சங்கத்தில் தேடியபோது எனக்குக் கிடைக்கவில்லை. யூசுஃப் அண்ணனுக்கு எல்லாம் மனப்பாடம்.
இருந்தும் அவர்கள் உடல் நலம் குன்றியிருந்ததால் அதைப் பெற்றுக்கொள்ள முடியாமலே போய்விட்டது.

நம்மூரில் வாழ்ந்தவர்களுள் அடக்கமாகவும் பணிவாகவும் தன் பணியை மேற்கொண்ட மனிதர்களுள் ஒருவராக அவர் அறியப் படுவார்.


அலாவுதீன் ஆலிம் பாக்கவி

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கண்ணியத்துக்குரிய மௌலானா மௌலவி அலாவுதீன் பாகவி அவர்கள் இறையழைப்பில் மீண்ட செய்தி இரவு சுமார் எட்டரை மணியளவில் கிடைத்தது. சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை பேஷ் இமாமாகத் தேர்வு செய்த கமிட்டியில் நானும் உறுப்பினராக இருந்தேன்.
அன்று தொட்டு அவர்களுடன் நான் தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த நட்பின் பின்னணியில் நினைவுகளை அசைபோட்டேன்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு அவர்கள் பல வருடங்கள் நம்மூரில் பணியாற்றிய ஆலிம் என்ற வகையில் பொதுவான மரியாதை இருக்கும்.அவர்களுடன் நெருங்கிப் பழகி- அவர்களது மார்க்க அறிவைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அவர்களின் மகத்துவம் புரியும்.
இன்று என்னைப் போன்றவர்கள் இந்த அளவுக்கு மார்க்க மேடைகளில் புகழ் பெறுவதற்கு அவர்களது ஜும்மாப் பேருரைகள் அடித்தளமிட்டுக் கொடுத்தன என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதற்கு நான் கொஞ்சமும் தயங்கமாட்டேன்.அவ்ர்களது உரையில் அனாவசியமான எந்த வார்த்தையும் இருக்காது.தடுமாற்றமும் இருக்காது.ஆதாரங்களை சரளமாக எடுத்துவைத்து ஆணித்தரமாக அவர்கள் ஆற்றிய உரைகளில் பல இன்னும் என் மனதில் பதிவாகியுள்ளன.
முன்கூட்டியே தயார் செய்யாமல் ஒப்புக்கு உரையாற்றும் பழக்கம் அவர்களுக்கு எப்போதும் கிடையாது.

அவர்கள் சில வருடங்களாகவே உடல் நலம் குன்றி அதிகமான சிரமத்துக் குள்ளானார்கள்.குடும்பத்திலும் பல பிரச்சினைகள். அவற்றை அவர்கள் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு தன் கடமையைத் தொடர்ந்தார்கள். நான் வெளிநாட்டுக்கு வந்த பிறகு அவர்கள் உடல்நிலை காரணமாக பணியிலிருந்து ஓய்வு கொடுக்கப் பட்டார்கள் என்று கேள்விப் பட்டேன்.
இம்மையில் இனி எங்களுக்குள் சந்திப்பில்லை என்ற நினைப்பே மனதை நொறுங்க வைக்கிறது.
தயவு தாட்சண்யம் இன்றி மார்க்கத்தை சொல்லும் ஆலிம்கள் தான் இன்று நம் சமுதாயத்துக்குத் தேவை.

நம் அன்பு ஆலிம் அவர்கள் அந்த அளவில் தன்னிகரில்லாத ஒரு மனிதராக- ஆலிமாகத் திகழ்ந்தார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். நான் நிர்வாகப் பொறுப்பில் இருந்த போது என்னையறியாமல் ஏதேனும் கூட்டங்களில் பேசியிருந்தாலோ அல்லது என்னுடைய செயல் பாட்டில் ஏதேனும் திருத்தம் கண்டாலோ, அதை நேரில் வந்து சுட்டிக் காட்ட அவர்கள் தவறியதில்லை. ஊரில் மர்க்கத்துக்குப் புறம்பான எந்த நிகழ்வுகள் நடந்தாலும் அதை ஜும்மா உரையில் நளினமகச் சுட்டிக் காட்டி நம்மை நேர்வழிப் படுத்தவும் அவர்கள் தயங்கியதில்லை.
அதனால் அவர்கள் மீது சிலருக்கு அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டதும் ரகசியமல்ல.
பள்ளிகள்-மதரஸாவின் தாளாளராக நான் பொறுப்பில் இருந்த போது, நம்மூர் மதரஸாவில் கல்வித்தரத்தை முன்னேற்ற மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர்கள் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒத்துழைப்புத் தந்தார்கள்.

கண்ணியத்துக்குரிய அப்துல் ஹையி ஆலிம் பெருந்தகை அவர்கள் திடீர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட கல்வித் தொய்வை நீக்குவதற்கு முஸ்லிம் தர்ம பரிபாலன சபா மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற அவர்கள் முக்கியக் காரனமாக இருந்தார்கள். நம்மூர் ஒரு நல்ல ஆலிமை இழந்துவிட்டது. நான் ஒரு நல்ல நண்பரை- மார்க்க ஆலோசகரை- என் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட தவிப்பில் இருக்கிறேன். மனம் கனக்கிறது.

அல்லாஹ் அவர்களது பிழைகள் அனைத்தையும் பொறுத்து, தன்னளவில் சங்கையுடன் உயர்த்திக் கொள்ளுமாறு பிரார்த்திக்க மட்டுமே இப்போது நம்மால் முடியும்.

அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அல்லாஹ்தான் தைரியத்தையும்- பொறுமையையும் கொடுக்கவேண்டும்.

தொலைபேசியில் அனுதாபம் சொன்னபோது அவர்கள் மகனார் இளவல் கௌது கதறி அழுத பாதிப்பு மாறாத நிலயில் அதிகாலை 1.45 மணிக்கு இந்தக் குறிப்பைப் பதிவுசெய்கிறேன்.
ஹிமானாசையித்,
சிங்கப்பூர் – 08 – 07 – 2005


மெளலவி அப்துல் கப்பார் ஆலிம்

இவர்கள் இராமாநதபுர மாவட்டத்தில் தலைசிறந்த ஆலிம்களில் ஒருவராவார்கள். இவர்கள் இராமாநாதபுரத்தில் உள்ள ஈசா பள்ளியிலும் அதன் பின் சித்தார்கோட்டையிலும் ஓய்வு பெறும் வரை பேஷ் இமாமாக பணிபுரிந்துள்ளார்கள்.
எப்பொழுதும் சமுதாய வளர்ச்சிப் பணிகளில் அவர்களின் பங்கு இருந்தது. இவ்வுலக கல்வியின் முக்கயத்துவத்தை ஆதரித்த ஆலிம்கள் சிலரில், இவர்களும் ஒருவராவார்கள். நான் படிக்கும் காலத்தில் (அறுபதுகளில்) படிக்கும் மாணவர்களுடன் இவர்கள் அதிக தொடர்பு வைத்திருந்தார்கள். அந்த மாணவர்களில் பலர் இன்று மிக உயர்ந்த நிலைகளில் உள்ளனர். அத்தகையோர்களில் சிலரைக் குறிப்பிட வேண்டுமெனில் ஹாஜி அபுல் ஹசன் I.A.S, தாலையூத்து டாக்டர் இஸ்மத்துல்லாஹ், டாக்டர் சிகாபுதீன் (சென்னை). ஏன் அவர்களது பேரனையும் வணிகவியலில் முதுநிலைக்கல்வி பெற ஊக்கம் காட்டினார்கள்.
பெரியபட்டிணத்தில் பள்ளிவாசல் கட்ட மிக அதிக அக்கறை எடுத்து மிக நேர்த்தியான முறையில் கட்டச் செய்தார்கள்.
அவர்களுடன் எனக்கு மிக நெருக்கமான நட்பு உண்டு. இறுதியாக நான் ஐந்து மாதங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் சந்தித்தேன். ஆன்மிக விசயங்கள் பல பேசினோம். அவைகள் இன்னும் என் மனதில் உள்ளன.
ஓய்வுக்குப் பிறகு அவர்கள் சொந்த ஊரான பெரியபட்டிணத்தில் மிக குறைவான ஈடுபாடு கொண்டிருந்தார்கள். எனினும் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் விழாக்களில் அழைக்கப்பட்டால், தனது வயதையும் பார்க்காமல் அதில் கலந்து கொள்வார்கள்.
அல்லாஹ் அவர்களது தவறுகளை மண்ணித்து மிக உயர்ந்த அந்தஸ்தை கொடுப்பானாக! அவர்களது கப்ரை விஸ்தீரணமாகவும் ஒளிமையமாகவும் ஆக்கயருள்வானாக!