Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2009
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,500 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 1

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 3

வணிகக்குழு

கதிரவன் மறைந்து இரண்டரை நாழிகையிருக்கும். சுக்கிலபட்சத்து சந்திரனின் மங்கிய நிலவொளி, தெற்கத்திக் காற்றின் சுகமான வருடல் மனதைப் புளகாங்கிதமடையச் செய்தது.

திட்டுப்பிரதேசத்திற்குத் தென்புறம் தூரத்தில் பறவைகள் சிறகடித்து இடம் பெயரும் சப்தம், நரிகளின் ஊளை அபஸ்வரமாக ஒலித்தது. எங்கோ ஓர் ஊமைக்கோட்டானின் குரல் மரணஓலம் போல் பயங்கரமாக ஒலித்தது.

சற்று நேரங்கழித்து காய்ந்த இலை சருகுகளின், “சர சர”வென்ற ஓசை!

புரிந்து கொள்ள முடியாத சன்னமான பேச்சுக்குரல்.

யாரோ வருகிறார்கள்!

மனிதனா, அல்லது மிருகமா?

இப்பொழுது பேச்சுக்குரல் சற்று தெளிவாகக் கேட்கிறது. நெருங்கி விட்டார்கள்.

மறைந்திருந்து பார்ப்போம்!

நமது ஊகம் வீண்போகவில்லை. மனிதனும் மிருகமும் தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மங்கிய நிலவொளியில் பார்க்க முடிந்தது.

வந்து கொண்டிருந்தது ஏழெட்டு ஆட்கள் பொண்ட ஒரு குழு; சிலர் தலையில் சுமையுடன்; அவர்களுக்கு முன்னால் மூன்று மாடுகள் அவற்றின் முதுகில் பொதி மூட்டைகள்.

அவர்கள் நெடுந்தூரம் நடந்து வந்ததன் காரணமாக முகத்தில் களைப்பும், நடையில் சோர்வும் தெரிந்தது.

மரங்களும் புதர்களும் நிறைந்த பகுதியில் இருந்து திட்டுப் பகுதியின் மையப்பகுதிக்கு வந்து அலுப்புத்தீர கைகால்களை சொடுக்கெடுத்துக் கொண்டார்கள்.

மொத்தம் எட்டுப் பேர். அவாகளில் நடுத்தர வயதுடைய ஒருவர் நான்கு புறமும் கூர்மையாகக் கவனித்தார். பிறகு திருப்தியடைந்தவர் போல் தலையை அசைத்துக் கொண்டார்.

ஆஜானுபாகுவான தோற்றம்; நரையும் கருமையும் கலந்த அடர்த்தியான மீசை; கண்களில் தீட்சண்யம்; முகத்தில் கனிவும் அதே சமயத்தில் உறுதியும் கண்டிப்பும் தெரிந்தது. இவர்தான் அக்குழுவுக்குத் தலைவராக இருக்கக்கூடும் என்பது அடுத்த நிமிடத்திலேயே தெரிந்தது.

தொண்டையைச் செருமிக் கொண்டார். பக்கத்தில் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவரை நோக்கி, “இப்படியே நேராக தேவிபட்டினம் போவதென்றால் அகால நேரமாகிவிடும். நாம் புறப்படும் போதே நேரம் சுணங்கிவிட்டது. பகல் உணவும் சரிவர சாப்பிட முடியவில்லை. நடையின் களைப்பால் உடம்பு ‘விண் விண்’ என்று தெறிக்கிறது. பேசாமல் இந்த இடத்திலேயே தங்கி இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, அதிகாலையில் பயணத்தைத் துவக்கினால் நல்லது என்று நினைக்கிறேன். முதலியார் அபிப்பிராயம் எப்படி?” என்று கேட்டார்.

“நானே இதைச் சொல்ல நினைத்தேன். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள். தேவரே! நாம் தேவிபட்டினத்திற்குள் நுழையும் போது களைப்பு நீங்கிக் கலகலவென்று இருக்க வேண்டும். அப்பொழுது தான் சரக்குகளை விற்று விட்டு பண்டக சாலைப் பக்கம் போய் மறு கொள்முதல் செய்து நேரே திருப்பாலக்குடி மார்க்கமாக பயணத்தைத் தொடர வசதியாகயிருக்கும்…” என்று மேலும் கூறுவதற்குள் வெறொருவர் இடைமறித்தார்.

“தேவர் போட்ட திட்டம் சரியானது தான். ஆனால்..” என்று கூறவதற்குள்,

“என்ன செட்டியாரே! தேவருடைய திட்டத்தில் என்ன குறை கண்டு விட்டீர்? ஊம் ?” என்று அதட்டலாகக் கேட்டார் சதாசிவமுதலியார்.

“முதலியாரே! தேவருடைய திட்டத்தில் நான் குறை எதுவும் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொன்னதில் தான்”. என்று செட்டியார் அறைகுறையாக நிறுத்தினார்.

“நான் சொன்னதில் என்ன தவறு கண்டு விட்டீர்?’

“தவறு ஒன்றுமில்லை! திருப்பாலக்குடியில் நமக்குத் தங்குவதற்கு வசதியில்லையே! சென்ற முறை ஊருக்குள் நாம் தங்கிவிட்டுப் பட்டபாடு…..!”

“இதற்குத்தானா இத்தனை பீடிகை! ‘முக்குறுணி அவல் தின்ற பொட்டலில்’ தங்கிக் கொள்ளலாம். வேறு ஆட்சேபணை எதுவுமில்லையே?” என்று கேட்டார் அனைவரையும் பார்த்தவாறே.

“அண்ணா பேச்சுக்கு யார் மறுப்புச் சொல்ல முடியும்?”

இடது உள்ளங்கையில் வலது கை முஷ்டியால் குத்திக் கொண்டே சொன்னான் கடம்பன் சேர்வை.

குழுவில் இவன்தான் வயதில் குறைந்தவன். இருபத்தி ஐந்து வயது தான் இருக்கம். குழுவின் தலைவராகிய சசிவர்ணத்தேவரிடம் மிக்க மரியாதையுடனும், பயபக்தியுடனும் நடந்து கொள்வான்.

தேவரும் இவனிடம் சகோதரபாசத்துடன் இருப்பார். தமது அந்தரங்கத் தோழனாக அவனைக் கருதினார்.

கடம்பன் சேர்வை பேசி முடித்தபின் வேறுயாரும் பேசத் துணியவில்லை. ஏனெனில் கடம்பன் சாந்தமும் இரக்க சுபாவமும் கொண்டவன். அதே சமயத்தில் முரடனுங்கூட.

சசிவர்ணத் தேவரின் முடிவை யாராவது மறுத்துப் பேசினாலோ குறை கூறினாலோ அவனுக்கு மகாகோபம் வரும். இது தான் மற்றவர்கள் அடங்கிப் போனதற்குக் காரணம்.

அடுத்து தலைச்சுமைகள் கீழே இறக்கி வைக்கப்பட்டன. மாடுகளின் முதுகில் கட்டப்பட்டிருந்த பொதிகள் இறக்கப்பட்டன. மாடுகளை சற்று எட்டத்தில் இருந்த மரங்களில் கட்டி சிறிது வைக்கோல் அள்ளிப் போட்டார்கள்.

பிறகு அனைவரும் நெருக்கமாக அமர்ந்து அவரவர் மூட்டைகளில் இருந்து சிறிய பைகளையெடுத்துப் பிரித்தார்கள்.

அதற்குள் இருந்தவை அவல், கருப்பட்டி, தண்ணீர்க் குடுவை.

கருப்பட்டியை கட்டையால் உடைத்துப் பொடியாக்கித் தண்ணீர் விட்டுக் கரைத்தார்கள். சிறிது அவல் எடுத்து அதில் தெளித்துப் பிசறினார்கள். அவல் ஊறிப் பதமாவதற்காகச் சற்று நேரம் காத்திருந்தார்கள்.

புறா ஜோடி ஒன்று உடை மரத்தில் அமர்ந்தபடி ‘குக்.. குக்.. கூ’ என்று கூவியபடி காதல் கீதம் பாடிக்கொண்டிருந்தது.

மேற்கு வானில் ‘பளீர்’ என மின்னல் வெட்டியது.

‘நல்ல சகுனம்!’ பூபாலசுந்தரம் பிள்ளையின் வாய் முணுமுணுத்தது.

“என்ன பிள்ளைவாள்! தானாக என்ன பேசிக் கொள்கிறீர்?” என்று பங்காரு செட்டி கேட்டார்.

“ஒன்றுமில்லை செட்டியாரே! புறாக்கள் சமாதானத்தின் சின்னம், வெளிச்சம், வழிகாட்டி வரவேற்பதற்குரிய அடையாளம். இரண்டும் சேர்ந்து நம்மை நிலையாக இந்த இடத்திலேயே தங்கிவிடுமாறு சூசகமாகச் சொல்கின்றனவோ என்று எனக்குத் தோன்றுகிறது” என்று பதிலளித்தார் பிள்ளை.

பக்கத்தில் அதை சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த சசிவர்ணத் தேவர் ‘கட கட” வென்று சிரித்து விட்டு, “பிள்ளைவாள் பகற்கனவு காண்கிறார் போலிருக்கிறது!” என்று வேடிக்கையாகக் கூறினார்.

குழுவில் சிரிப்பொலி கிளம்பியது.

“பகற்கனவு இல்லை. இரவுக்கனவு” என்று கடம்பன் சொல்ல, மீண்டும் சிரிப்பொலி.

“சரி. சரி! பேச்சை விடுங்கள். சாப்பாட்டை முடித்துக் கொண்டு தூங்கலாம்.” என்று தேவர் சொன்னதும் எல்லோரும் அவலைக் கையில் எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தார்கள்.

சாப்பிட்டு முடிந்ததும் களைப்புத்தீர பழைய கதைகளைப் பேசிக் கொண்டும் ‘ஜோக்’ அடித்துக் கொண்டும் இருந்தனர். சற்று நேரத்தில் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

ஏற்கனவே தீர்மானம் செய்திருந்தபடி அருணோதயத்திற்கு முன்பாகவே அனைவரும் எழுந்து விட்டனர்.

அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, மாடுகளை அவிழ்த்து வந்து பொதிகளை ஏற்றிப் பிணைத்து விட்டு, தலைச்சுமையைத் தூக்குவதற்குத் தயாராக இருந்தார்கள்.

குழுவில் ஒரு ஆள் குறைகிறதே! யார் அது?

சரக்கு மூட்டைகள் வைத்திருந்த இடத்தைப் பார்த்தார்கள்.

தேவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

முதலியார் பதற்றமடைந்தார். எப்போதும் எல்லோருக்கும் முதல் ஆளாக எழுந்திருப்பவராயிற்றே! என்ன நேர்ந்தது?

கிட்ட நெருங்கிப் போய் இலேசாகக் கனைத்தார். பலனில்லை. கிட்டப் போய் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். நெருப்பாகக் காய்ந்தது.

நல்ல ஜுரம். சலனமில்லாமல் படுத்திருந்தார் தேவர்.

தூக்கிவாரிப் போட்டது முதலியாருக்கு.

இலேசாக உடம்பை அசைத்து, “தேவரே!” என்று மெதுவாகக் கூப்பிட்டார் முதலியார்.

இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்தபின் இலேசாகக் கண்களைத் திறந்து பார்த்தார் தேவர்.

“என்ன! விடிந்து விட்டதா?” என்று கண்களைக் கசக்கியவாறே கேட்டார்.

“விடிந்து ஒரு நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. எல்லோரும் புறப்படச் சித்தமாக இருக்கிறார்கள். ஆமாம்! உங்களுக்கு உடம்புக்கு என்ன ஆச்சு? அனலாகக் கொதிக்கிறதே! ஜுரம் வந்ததும சொல்லியிருக்கக் கூடாதா? சுக்குக் கஷாயம் சாப்பிட்டால் குணமாகியிருக்குமே!…” என்று மேலும் பேசுவதற்குள் அனைவரும் அங்கு வந்து விட்டனர்.

தேவருக்கு என்ன ஆச்சு? கவலை தோய்ந்த முகத்துடன் தேவரைப் பார்த்தவாறே நின்றார்கள். முதலியாரைத் திரும்பிப் பார்த்தார்கள்.

அந்த அசாதாரண சூழ்நிலையில் யாருக்கும் எதுவும் கேட்பதற்குரிய துணிச்சல் வரவில்லை.

எல்லோருடைய கவலையையும் புரிந்து கொண்ட தேவர், “உடம்புக்கு ஒன்றுமில்லை. கொஞ்சம் அயர்ந்து தூங்கி விட்டேன். அவ்வளவு தான். சரி கிளம்புங்கள்! இதோ நானும் வந்து விட்டேன்” என்று கூறியபடி மெதுவாக எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. தடுமாறியபடியே மீண்டும் சாய்ந்தார்.

முதலியார் துடித்துப் போனார்.

“தேவரே இப்படி ஜுரத்தோடு பயணம் செய்வது நல்லதல்ல. உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. நான் சொல்வதைக் கேளுங்கள். இன்று இந்த இடத்திலேயே தங்கிவிட்டு, நாளைக் காலை பயணத்தைத் தொடருவோம். இப்போதைக்கு சூடாக சுக்குக் கஷாயம் தயார் செய்து தருகிறேன். குடித்து விட்டு நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஜுரம் தணிந்து விடும். அது தான் நல்லது” என்று இதமாகக் கூறினார்.

முதலியார் பேச்சைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் தேவர்.

சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டு ஏதோ யோசனை செய்வது போல் இருந்தார்.

பின்னர் கண்களைத் திறந்து முதலியாரைப் பார்த்து உறுதியான குரலில், “நான் சொல்வதைத் தெளிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள்! என் ஒருவனுக்காக உங்கள் அனைவரின் வியாபாரச் சரக்குகளையும் முடக்கி வைக்க நான் விரும்பவில்லை. இரண்டொரு நாட்களில் எனக்கு உடம்பு குணமாகிவிடும். நான் சமாளித்துக் கொள்வேன். அதுவரை தேவையில்லாமல் நீஙகள் யாரும் இங்கு தங்க வேண்டாம். நம்மை நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியது நமது முக்கிய கடமை. எனவே சுணங்காமல் இப்பொழுதே புறப்படுங்கள். ஒருவேளை நாலைந்து நாட்களில் இங்கு உலகநாதத் தேவர் குழு வரக்கூடும். அதனோடு சேர்ந்து வந்து விடுவேன். உம்! புறப்படுங்கள்” என்று கட்டளையிடும் தொனியில் கூறினார்.

முதலியார் தயங்கினார். குழுவினர் மன்றாடினர். எனினும் தேவரின் உறுதியும், கண்டிப்பும் நிறைந்த கட்டளையை அவர்களால் மீற முடியவில்லை.

தயங்கித் தயங்கிக் குழு புறப்படும் நேரத்தில், கடம்பன் தலையிலுள்ள சுமையை கீழே இறக்கி வைத்தான்.

அனைவரும் பிரமித்து நிற்க, தேவரின் சமீபத்தில் வந்து மண்டியிட்டு உட்கார்ந்த வண்ணம், “அண்ணா! நான் ஒருகாலும் உங்களைத் தனியாக விட்டுப் போக மாட்டேன். என் உயிர் பிரிந்தாலும் உங்களை விட்டு போக மாட்டேன். தயவு செய்து என்னை விரட்டி விடாதீர்கள்” என்ற கண்ணீர் மல்கக் கெஞ்சினான்.

தேவரின் கண்கள் பனித்தன. அவனைத் தழுவி அணைத்துக் கொண்டார்.

தேவரையும் கடம்பனையும் விட்டு விட்டுக் குழு பயணத்தைத் துவங்கியது.

குழு புறப்பட்டபின் பார்வைக்கு மறையும் வரை அந்த திசையை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பின், இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

கடம்பன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவன் தேவரின் பார்வை தன்பக்கம் திரும்பியதும் மகிழ்ச்சியுடன், “அண்ணா! சற்று இருங்கள்! சுக்குக் கஷாயம் போட்டுக் கெண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

கஷாயம் போட்டுக் கொடுத்தான்.

சற்று நேரங்கழித்து அவல் ஊறவைத்துக் கொடுத்தான்.

ஒரு வழியாக பகற்பொழுது கழிந்தது. ஜுரமும் குறைந்தது, பகலின் வெம்மை குறைந்தது போல்.

வானம் மேகமூட்டமில்லாமல் நிர்மலமாகயிருந்தது. கதிரவன் மேற்கில் மறைந்ததும் சுகலபட்சத்து சந்திரன் மங்கிய நிலவை அள்ளித் தெளித்தபடி வானவீதியில் வலம் வந்தது. தெற்கத்திக் காற்றின் இதமானவருடல் ஜுரம் விட்டுப் போனதால் ஏற்பட்ட சோர்வு, உண்ட களைப்பு, நடைப்பயணத்தால் உண்டான அலுப்பு.

துண்டை விரித்துக் கொண்டு படுத்தது தான் தாமதம். ஆழ்ந்த நித்திரையின் வயப்பட்டார் தேவர்.

கடம்பன் தூங்கவில்லை. வீச்சரிவாளைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு மல்லாந்து படுத்தவாறே வானத்தைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தான்.

எங்கோ தூரத்தில் நரிகளின் ஊளைச் சப்தம். பறவைகளின் கீச்சுக் குரல்.

கடம்பன் கடைசிவரை தூங்கவில்லை. தேவருக்கோ நல்ல தூக்கம். தூக்கத்தில் ஏதேதோ கனவுகள். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல்…

‘சில்’ லென்ற காற்று உடலைத் தொட்டுத் தழுவிச் செல்கிறது. ஊற வைத்த அவலைச் சாப்பிட்டு விட்டு அவரும் கடம்பனும் சுவாரஸ்யமாகப் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விடிந்து இரண்டரை நாழிகை இருக்கும். மப்பும் மந்தாரமுமாகயிருந்ததால் வெயிலைப் பார்க்க முடியவில்லை.

மரத்தில் புறா ஜோடி ஒன்று காதல் கீதம் இசைத்துக் கொண்டிருந்தது.

பேச்சின் ஊடே கடம்பன் ஏதோ ‘ஜோக்’ அடிக்க அதைக் கேட்டுத் தேவர் வயிறு குலுங்கச் சிரித்தார். கடம்பனும் சேர்ந்து சிரித்தான்.

‘டுமீல்’!

காது செவிடுபடும்படியாக; என்ன ஓசை அது?

வானத்தில் இருந்து பெரிய பாறாங்கல் எதுவும் விழுந்து விட்டதா?

நிச்சயமாக இடியோசை இல்லை. வேறு எதுவாயிருக்கும்?

இருவரும் ஏக காலத்தில் சப்தம் வந்த திசையைப் பார்த்தார்கள். கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன.

அங்கு நின்றது சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன்!

அவன் அணிந்திருந்த உடை புதுமையானதாக இருந்தது. அந்தக் காலத்தில் ஆண்கள் உடுத்தக் கூடிய உடைக்குப் பொருத்தமில்லாதது.

நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நவீனநாகரிக உடை. கையில் இரும்பாலும் மரத்தாலும் ஆன கழியைப் போன்ற ஓர் ஆயுதம்.

அவன் யார்? எங்கிருந்து வந்தான்? கையில் வைத்திருப்பது என்ன வகை ஆயுதம்? இதை வைத்து என்ன செய்யப் போகிறான்?

கேள்விகள் அத்தனையும் தெண்டைக் குழிக்குள்ளேயே நிற்க, வியப்பால் விரிந்த கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வாலிபன் இவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை!.

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்