Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,914 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடன் அட்டை – Credit Card

கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையில் இருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை. கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்கு கனடாவில் இவ்வளவு மரியாதை இருப்பது எனக்கு அன்றுவரை தெரியாது.

எந்த அங்காடியிலோ, சந்தையிலோ, கடையிலோ என்ன பொருள் வாங்கினாலும் கடன் அட்டை இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் காசை எடுத்து எண்ணிக் கொடுப்பதை விநோதமாக பார்த்தார்கள். நூறு டொலர் தாளை நீட்டினால் அதை மேலும் கீழும் சோதித்து, என்னை திரும்பி திரும்பி பார்த்தபடி உள்ளே சென்று அதை உற்று நோக்கி உறுதிசெய்தார்கள். ஒரு அங்காடியில் கத்தைக் காசை எண்ணி வைக்கும்போது, கடன் அட்டையில் கணக்கு தீர்த்தால் 10% தள்ளுபடி என்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. இந்த நாட்டில் கடனாளிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கண்டு கொண்டேன். அன்றே தீர்மானித்தேன், ஒரு கடன் அட்டை எப்படியும் எடுத்துவிட வேண்டும் என்று.

Visa, American Express, Master Card என்று தொடங்கி குட்டி தேவதை நிறுவனங்கள் வரை சகல கடன் விண்ணப்ப பாரங்களையும் நிரப்பி, நிரப்பி அனுப்பினேன். அவர்களிடமிருந்து ஒரே மாதிரியான பதில்கள்தான் வந்தன.

உங்களுக்கு இந்த நாட்டில் கடன் மதிப்பு இல்லை. மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்டது.

எப்படியும் மிகவும் மதிப்புக்குரிய ஒரு கடன்காரனாகி விடவேண்டும் என்ற என்னுடைய வைராக்கியம் இப்படியாக நிலை குலைந்து போனது. மாணவர்களும், பச்சிளம் பாலகர்களும் வழுவழுப்பான வண்ண அட்டைகளை விசுக்கி காட்டினார்கள்.

சுப்பர் மார்க்கட்டில் தள்ளு வண்டியில் சாமான்களை நிரப்பிவிட்டு காசுத்தாள் சுருள்களை பிரித்து பிரித்து கொடுக்கும்போதும், மீதிச் சில்லறையை எண்ணி எடுக்கும்போதும், பத்து சதத்துக்கு பதிலாக ஒரு சதத்தை கொடுத்து தடுமாறும்போதும், இளம் பெண்கள் பளபளக்கும் அட்டைகளை மின்னலாக அடித்தபடி என்னை கடந்து சென்றார்கள். எனக்கு அவமானமாக இருந்தது.

என்ன செய்யலாம் என்று நாடியில் கைவைத்து மூளைத் தண்ணீர் வற்ற யோசித்தேன். கடைசி முயற்சியாக விசா நிறுவனத்து மெத்த பொ஢யவருக்கு ‘மிக அந்தரங்கம்’ என்று தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதுவதென்று முடிவு செய்தேன்.

பெருமதிப்பிற்குரிய தலைமையாளர் அவர்களுக்கு,

இந்த நாட்டுக்கு வந்த நாளில் இருந்து எப்படியும் பெரும் கடனாளியாகிவிட வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் படு தோல்வியடைந்து கொண்டே வருகின்றன. என்னுடைய சகல கடன் அட்டை விண்ணப்பங்களும் ஈவிரக்கமில்லாமல்

நிராகரிக்கப் பட்டுவிட்டன. அதற்கு காரணம் எனக்கு இந்த நாட்டில் கடன் சரித்திரம் இல்லாததுதான் என்கிறார்கள். அப்படி வந்த மறுப்பு கடிதங்களில் ஒரு கட்டை இத்துடன் இணைத்திருக்கிறேன். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அவற்றை தாங்கள் படித்து முடித்துவிடுவீர்கள்.

எனக்கு கடன் வரலாறு கிடையாது. ஏனென்றால் நான் இந்த நாட்டுக்கு வந்து சொற்ப நாட்களே ஆகின்றன. இது என்னுடைய பிழை அன்று. தாங்கள் கடன் அட்டை தரும் பட்சத்தில் நான் எப்படியும் முயன்று ஒப்பற்ற சரித்திரத்தை படைத்து,  மதிப்புமிக்க கடனாளியாகி விடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

குருவி சேர்ப்பதுபோல என் வாழ்நாள் எல்லாம் சிறுகச் சிறுக சேர்த்து முழுக்காசும் கொடுத்து நான் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். அதை தாங்கள் பார்க்கலாம். கடன் வைக்காமல், கைக்காசு கொடுத்து லிட்டருக்கு 20 கி.மீட்டர் ஓடும் சிக்கனமான ஒரு கார் வாங்கியிருக்கிறேன். அதையும் தாங்கள் பார்க்கலாம். எனக்கு கிடைக்கும் மாத வருமானத்தில் 1% குறைவான பாலில், கோதுமை சக்கையை கலந்து காலை உணவாகவும், ஏனைய உணவாகவும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன்.

அதைக்கூட தாங்கள் பார்க்கலாம்; உணவிலும் பங்கு கொள்ளலாம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்னும் ஒரு கடனும் எனக்கு ஏற்படவில்லை. எவ்வளவு கடன் தொல்லை இருந்தால் தாங்கள் எனக்கு ஒரு கடன் அட்டை கொடுப்பீர்கள் என்று முன்கூட்டியே சொன்னால் நான் எப்படியும் முயன்று அந்த இலக்கை அடைந்துவிடுவேன். ஆனால் அதற்கு ஒரு கடன் அட்டை மிகவும் முக்கியம் என்று எனக்கு படுகிறது.

தாங்கள் எனக்கு இந்த உதவியை செய்வீர்களாயின் நான் எப்படியும் முயன்று என் கடன் ஏத்தும் திறமையை தங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன்

இப்படிக்கு

என்றும் தங்கள் உண்மையான, கீழ்ப்படிந்த, தாழ்மையான, நிலத்திலே புரளும்

இந்தக் கடிதத்தை நான் அனுப்பி சரியாக மூன்றாவது நாள் கூரியர் மூலம், ஒரு இணைப்பு கடிதம்கூட இல்லாமல், ஒரு கடன் அட்டை என்னிடம் வந்து சேர்ந்தது. அதன் மழமழப்பும், மினுமினுப்பும் என் கண்ணில் நீரை வரவழைத்தது. அந்தக் கணமே முழுமூச்சாக கடன் படுவதற்கு என்னை தயார் செய்து கொண்டேன்.

மிக நீளமான பட்டியல்கள் போட்டுக்கொண்டு சுப்பர் மார்க்கட்டுக்கும், பல்கடை அங்காடிக்கும் அடிக்கடி சென்றேன். வட்டமான பெட்டிகளிலும், தட்டையான அட்டைகளிலும் அடைத்து விற்கும் சாமான்களை வாங்கினேன். வாங்கிவிட்டு அவற்றை எப்படி, என்ன உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம் என்பதை கற்றுக்கொண்டேன். சிலவற்றை திருப்பினேன்; மீண்டும் வாங்கினேன். என் கடன்களை கருணை இல்லாமலும், கண்துஞ்சாமலும் கூட்டினேன். கடன் அட்டை உரசி உரசி  தேய்ந்தபோது, கடனும் ஏறியது. மறுபடி கணக்கு தீர்த்தேன்; மறுபடியும் ஏறியது.

இப்படி நான் பாடுபட்டு தேடி வைத்த கடன் புகழ் வீணாகவில்லை. ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது. அதில் சொல்லியிருந்த விஷயத்தை நீங்கள் நம்ப மாட்டீர்கள். அப்பட்டமான பொய் என்று என்னை அலட்சியப்படுத்தாதீர்கள். முற்றிலும் உண்மை;

இந்தக் கடிதம் விசா தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது. என்னுடைய கடன் தீர்க்கும் திறமையை இது மெச்சியது. என்னுடைய தகுதிக்கும், சாமர்த்தியத்திற்கும் ஏற்ற ஒரு கடன் சுமையை மேலும் தருவதற்கு அந்த நிறுவனம் தயாராக இருந்தது. இலையான் பறந்ததுபோல கையொப்பமிட்ட அந்தக் கடிதத்தில் இருந்த வாசகம் இதுதான்.

அன்புடையீர்,

நீங்கள் எங்களிடம் வாடிக்கையாளராகியதில் நாங்கள் மிகவும் திருப்தியும், பெருமிதமும் கொண்டிருக்கிறோம். உங்கள் கண்ணியத்திலும், நம்பிக்கைத் தன்மையிலும் நாங்கள் வைத்திருக்கும் பெரு மதிப்பில் ஒரு சிறு பகுதியை காட்டும் முகமாக

நாங்கள் இத்துடன் $2000 க்கு ஒரு காசோலையை இணைத்திருக்கிறோம். இது அன்பளிப்பில்லை; கடன்தான். இதை நீங்கள் மாதாமாதம் $10 க்கு குறையாத ஒரு தொகையில் கட்டித் தீர்க்கலாம்.

தங்கள் உண்மையுள்ள,

இணை தலைமையாளர்.

என் கடன் சுமைகள் விரைவில் தீர்ந்துவிடக்கூடும். அதற்கு பிறகு நான் என்ன செய்வேன் என்று அவர்கள் கருணை உள்ளம் கவலைப்பட்டிருக்கக்கூடும். நல்ல காரியத்தை நான் தள்ளிப் போடுவதில்லை. ஆகையால் வெகு சீக்கிரத்திலேயே ஒரு பதில் அனுப்பினேன்.

அன்புள்ள ஐயா,

தங்கள் அன்பும், கரிசனமும் என்னை உருக்குகிறது. தங்களுடைய விசா கடன் அட்டை என் வாழ்வில் இன்றியமையாத ஒரு அம்சமாகிவிட்டது. நான் எங்கே போனாலும் அதை காவியபடியே செல்கிறேன். என் இருதயத்துக்கு பக்கத்தில் அது கொடுக்கும் இனிமையான சத்தத்தை கேட்டுக்கொண்டே, இந்த அட்டை வசிக்கிறது. எனக்கு வேண்டியவற்றையும், என் உற்றாருக்கு வேண்டாதவற்றையும் அதைக் கொடுத்தே வாங்குகிறேன். அதன் ஸ்பரிசம் எனக்கு சந்தோசத்தை தருகிறது. அதன் பாரம் காசுத் தாள்களிலும் பார்க்க லேசானதாக இருக்கிறது.

ஆனாலும் எனக்கு ஒரு அல்லல் உண்டு. என்னுடைய அட்டையின் கடன் எல்லை $10,000 என்று நிர்ணயிக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு தெரியும். இந்த அட்டையை கொடுத்து கடைக்காரன் அதை உரசும்போது அதன் எல்லையை எட்டிவிட்டேனோவென்று வயிறு எரிகிறது; நெஞ்சு அடைக்கிறது. அதை திருப்பி வாங்கி பையில் வைக்கும்வரை இருப்பு கொள்ளாமல் அலைகிறேன். கடைக்காரனின் முகக்குறிப்பில் இருந்து அவன் என்னை நிராகரித்துவிட்டானோ என்பதை ஆராய்கிறேன். அந்த வினாடி செத்து செத்து உயிர் எடுக்கிறேன். என்னுடைய துரிதமான கடன் அடைக்கும் திறமையிலும், ஆயுளின் கெட்டியிலும் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் தாங்கள் அந்த நம்பிக்கையை இன்னும் கொஞ்சம்
விரிவாக்கி என் கடன் உச்சத்தை $100,000 என்று ஆக்குவீர்களாயின் நான் தங்களுக்கு என்றென்றும் மிகவும் கடன் பட்டவனாக இருப்பேன். அப்போதுதான் என் கடன் பளுவை நான் கடல்போல பெருக்கி அதில் ஆனந்தமாக நீந்தமுடியும். ஆகவே இந்த $2000 காசோலையை இத்துடன் திருப்பி அனுப்புகிறேன்.

தங்கள் மேலான கடாட்சத்தை கோரும்,

மேற்படி கடிதத்துடன் பிணைத்தபடி காசோலை திரும்பிப்போனது. அதற்கு இன்றுவரை பதில் இல்லை.

நன்றி: அ.முத்துலிங்கம்  –  http://ezilnila.com