Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,811 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெடித்தது மக்கள் புரட்சி! பற்றி எரிகிறது எகிப்து

பெருகிய பஞ்சம், பற்றிப்பிடித்த பட்டினி, வாட்டி வதைத்த வேலையில்லா திண்டாட்டம்…& தாங்க முடியாத அந்த அப்பாவி வாலிபன் பவ்சி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டான். அவன் தன் உடல் மீது பற்ற வைத்த நெருப்பு இன்று துனிசியாவை மட்டுமல்ல, மேற்கு ஆசியாவின் சர்வாதிகார சக்திகளின் பேராசைகளையும் காவு கேட்கிறது. “ஓடு! ஓடு! நீ உயிர் பிழைக்க வேண்டும் என்றால் நாட்டை விட்டே ஓடு!” என சொந்த நாட்டு மக்களாலே விரட்டப்படும் அவல நிலை தொடரத் தொடங்கியுள்ளது.


சர்வாதிகாரி

துனிசியாவின் சர்வாதிகாரி பின் அலி ஜெய்னுல் ஆபிதீன் இன்று சவூதி அரேபியாவில் உயிருக்கு தஞ்சம் கேட்கும் நிலையில் வாழ்ந்து வருகிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தின் அதிபராக பதவி வகித்த ஹோஸ்னி முபாரக் இன்றும் அந்நாட்டின் சர்வாதிகாரியாக அந்நாட்டை ஆட்டிப் படைத்து வருகிறார். அரசியலில் தூய்மை வேண்டும் என நாளும் போராடி வரும் இஹ்வான்கள் வெஞ்சிறையில் வாடி வருகிறார்கள். மக்களின் சுதந்திர தாகம் ஆள்வோரின் அதிகாரப் பசிக்கு முன் சிதைக்கப்பட்டு வருகிறது. எகிப்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் 99.9 சதவீத வாக்குகளை (முறைகேடான வழியில்) பெற்று அதிபராக தொடர்ந்த ஹோஸ்னி முபாரக்கின் கட்சிக்கு இன்றுவரை அதே அளவு(?) வெற்றியே கிடைத்து வருகிறது. ஆனால், மக்களின் புரட்சி நைல் நதியின் வேகத்தை விட அதிகமானதாகவும் மத்திய தரைக்கடலை விட சீற்றமாகவும் உருவெடுத்து விட்டது.

இன்றைய மக்கள் போராட்டத்தின் கருப்பொருளே, எரிபொருளே இஸ்லாமிய சகோதரத்துவ எழுச்சிதான் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

கட்டுப்படுத்த முடியாத வீதிகள்

ஊழல், வேலையின்மை, விலைவாசி உயர்வு இவற்றை எதிர்த்தே போராட்டத்தில் குதித்திருக்கிறோம் என கோபாவேசத்துடன் கூறுகிறார் 26 வயதான ரதவா கயவானி என்ற இளைஞர்.

முஸ்லிம் நாடுகளில் பதட்டம்!

பேஸ் புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களின் மூலமும் மக்கள் புரட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டனர்.

துனிசியாவில் வேலையற்ற இளைஞனின் உயிர் பறிப்பு மக்களை புரட்சியின் பக்கம் இழுத்துச் சென்றதைப்போல் எகிப்தில் காவல்துறையின் வன்முறைக்கு பலியான ஹாலித் சையத்தின் மரணம் எகிப்தில் வெடித்த மக்கள் புரட்சிக்கு உடனடிக் காரணமாகியது.

ஹாலித் சையத் என்ற அந்த இளைஞர் காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களை வீடியோ பதிவுகளாக இணையத்தில் உலவவிட்டதால் ஆத்திரமுற்ற காவல் துறையினர் ஹாலிதை படுகொலை செய்தனர்.

போதை மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொண்டதால் ஹாலித் இறந்ததாக காவல்துறை கட்டவிழ்த்த கதையை மக்கள் நம்பவில்லை. மனித உரிமை ஆர்வலர்களும் களத்தில் குதித்ததால் படுகொலை செய்த காவல்துறை அதிகாரியை அரசு கைது செய்தது.

துனீசியாவில் நடந்த மக்கள் புரட்சி அளித்தகூடுதல் உற்சாகத்தால்  30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கெதிராக மக்கள்நாடெங்கும் தொடர்ந்து கிளர்ந்தெழுந்து வருகின்றனர்.

தீ பரவுகிறது

மக்கள் புரட்சியினைத் தொடர்ந்து   எகிப்து நாட்டின் முரட்டு சர்வாதிகாரி ஹோஸ்னி  முபாரக் எகிப்து அமைச்சரவையை கலைத்து உத்தரவிட்டார்.  உடனடியாக புதிய அமைச்சரவை  பதவியேற்குமென்று அறிவித் தார். பிரச்சனையின் மூலத்தை கண்டறியாமல்    ஹோஸ்னி முபாரக் செய்த அறிவிப்பு குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

எகிப்தில் புரட்சியை அடக்கி ஒடுக்குவதில் தோல்வி அடைந்த அரசு படைகளை அவர் விரக்தியுடன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது அதிபர் முபாரக்,  விரக்தியின் விளிம்பில் சென்று விட்டதை காட்டுவதாக  அரசியல் பார்வையாளர்கள் தெரிவித் துள்ளனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து எகிப்தின் அனைத்து நகரங்க ளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் உத்வேகமடைந்த எகிப்திய மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளன.

30 வருடங்களாக எகிப்தை ஆட்சி செய்யும் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் ராஜினாமா செய்யக்கோரி ஆயிரக்கணக்கான எகிப்திய மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரமாக போராடத் துவங்கியுள்ளனர்.

ஆட்சியை ஒப்படை

இஹ்வான்கள்   கண்டிப்பு போராட்டத்தை அடக்கி ஒடுக்கிவரும் எகிப்திய அரசுப் படையின் தாக்குதலில் நூற்றுக்குமேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. ஏராளமான அரசு அலுவலகங்களையும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தீக்கிரையாக்கினர். கொல்லப் பட்டவர்களின் உடல்களுடன் அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை நடத்தினர்.

தற்போதைய சூழல்களைக் குறித்து விவாதிக்க அரசு தலைமையகத்தில் அதிபர் ஹோஸ்னி  முபாரக் கூட்டத்தை கூட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்குமாறு எகிப்தின் முன்னணி எதிர்க் கட்சியும் சிந்தனையாளர்களின் கேந்திரமாகவும் திகழும் இஹ்வானுல் முஸ்லிமீன்   இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே  புதிய துணை அதிபராக அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும்  உமர் சுலைமான் நியமிக்கப்பட்டுள்ளார்.  எகிப்தில் ஒருவர் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்தின்  சக்திவாய்ந்ததாக கருதப்படும் உளவுத்துறையின் தலைவரான இவர், முபாரக்கின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.

கடுமையான ஊரடங்கு உத்தரவையும் மீறி கெய்ரோவிலுள்ள காவல்துறை தலைமை யகத்தை  போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர்.

இதனிடையே எகிப்திற்கு செல்லவேண்டாம் என இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்திருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் முக்கிய நகரங்களான கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா, சூயஸ் ஆகிய நகரங்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின்   போராட்டங் களால் நகரங்கள் குலுங்கின.

கெய்ரோவின் பிரபல  தஹ்ரீர் சதுக்கத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்அணிதிரண்டு எழுச்சிப்போரை தொடர்கின்றனர்.

மேற்கு நாடுகளின் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்க ளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இஸ்ரேலின் தூதர் எகிப்தை விட்டு வெளியேறிவிட்டதாக கடைசிக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒபாமா வேண்டுகோள்

எகிப்து அரசுக்கெதிராக போராட்டம் நடத்திவரும் மக்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அந்நாட்டு சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

எகிப்து நாட்டு மக்களின் உரிமைகளுக்காக தாங்கள்  பாடுபடுவோம் எனவும் தேசத்தின் சிறந்ததொரு எதிர்காலத்திற்காக அந்நாட்டு  அரசுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோர் மீதான நடவடிக்கையை கைவிடு மாறு ஒபாமா முபாரக்குடன் நடத்திய முக்கிய தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.

உலகில் இதர நாட்டு மக்களைப்போல் அமைதியாக ஒன்றுகூடவும், சுதந்திரமாக கருத்துக்களைக் கூறவும் தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கவும் எகிப்து நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. எங்கேயும் இத்தகைய உரிமைகளுக்காக அமெரிக்கா பாடுபடும் என ஒபாமா முபாரக்கிடம் கூறியுள்ளார்.

போராட்டத்தைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட இணையதளம், தொலைபேசி தொடர்புகளை மீண்டும் செயல்பட வைக்குமாறு ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

மேற்காசிய விவகாரங்களில் என்றைக்குமே அமெரிக்காவுடன் ஒத்து ழைத்த முபாரக்கை நெருக்கடியான காலக்கட்டங்களில் அமெரிக்கா கைகழுவுகிறது என்பதைத்தான் ஒபாமா வின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் கெய்ரோ

எகிப்தில் ஏகாதிபத்திய அரசுக் கெதிரான மக்கள் திரள் போராட்டம் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

ஆட்சிமாற்றத்தைக் கோரி தடை  உத்தரவை மீறியும், பாதுகாப்புப் படையினருக்கு சவால் விட்டும் ஆறாவது நாளாக களமிறங்கிய எகிப்து நாட்டு மக்கள் கெய்ரோவின் கட்டுப் பாட்டை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.
போராட்டத்தில் ராணுவ வீரர்கள்

ராணுவ உடையை களைந்துவிட்டு ராணுவ வீரர்களும் மக்களோடு போராட்டத்தில் கலந்துகொண்டனர். புரட்சியாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் மரணித்தவர்களின் எண் ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய வேளையிலும் மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

சர்வாதிகாரி ஹோஸ்னி   முபாரக்கின் 30 ஆண்டுகால கொடுங் கோல் ஆட்சியை தொலைத்துக்  கட்டாமல் திரும்பமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சூளுரைத்துள்ளனர்.

எகிப்து வன்முறைக்காடாக மாறியுள் ளது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்ததன்    காரணத்தினால் வங்கிகளும், நகைக்கடைகளும், பெரும் வியாபார நிறுவனங்களும் சூறையாடப்பட்டன.

புரட்சி வலுவடைந்த போதிலும்   பதவியை விட்டு அசைய  விரும்பாத ஹோஸ்னி முபாரக் ராணுவத்தின் வல்லமையைக்  காண்பிப்பதற்கான முடிவில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

நாட்டின் பல்வேறு சிறைகளை போராட்டக்காரர்கள் தகர்த்தனர். வாதினா ட்ரவுன் சிறையில் சிறை அதிகாரிகள் வேலையை விட்டுச் சென்றதைத் தொடர்ந்து இஹ்வானுல்  முஸ்லிமீன் இயக்கத்தைச் சார்ந்த 34 தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கெய்ரோவில் மூத்த காவல்துறை  அதிகாரியைக் கொலை செய்துவிட்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிறையிலிருந்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான நீதிபதிகள் போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளனர்.

முபாரக் உடனடியாக பதவியை விட்டு  விலகவேண்டுமென நோபல் பரிசு பெற்ற முஹம்மது அல்பராதி வலியுறுத்தியுள்ளார்.

எகிப்து மக்களை நசுக்க அமெரிக்க ஆயுதங்கள்

எகிப்தில் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கெதிராக நடத்தப் பட்ட தாக்குதலின் போது ராணுவ ஆயுதங்களில் அமெரிக்க சின்னங்கள் காணப்பட்டதால், எகிப்து மக்களின் ஆத்திரம் மேற்குலக  நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரத்தை முடிவு க்கு கொண்டுவரும் பொருட்டு, எகிப்து மக்கள் ஏழாவது   நாளாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

குண்டடிப்பட்டு இறந்த போராளி களின்  மரண எண்ணிக்கையை ஊடகங்களில்  தெரிவிக்கக் கூடாது என்று முபாரக்கின் அரசு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை அறிவுறுத்தியுள்ளது.

புரட்சி செய்திகள் வெளி  வருவதைத் தடுக்கும் பொருட்டு, அல்ஜசீரா காட்சி ஊடகத்திற்கு  தற்போது எகிப்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முபாரக் பதவி விலகுவதன் அறிகுறியாக உமர் சுலைமானின் நியமனம் கருதப்படுகிறது. எனினும் மக்களின் விருப்பங்களை விட அரசு மற்றும் ராணுவத்தின் விருப்பத் தின் அடிப்படையில்தான் உமர் சுலைமான் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் சட்டத்தின் படி செல்லத்தக்க வகையில் ராணுவத்தின் தலைமையிலான ஆட்சியை தொடர்வதன் திட்டம்தான் இது என மின்னஸோட்டா பல்கலைக் கழக பேராசிரியர் ராக்வி ஆஸாத் கூறுகிறார். ராணுவத்துடனான கள்ளக் கூட்டின் ஒரு பகுதிதான்  இது என அவர் தெரிவிக்கிறார்.

உமர் சுலைமானை துணை அதிபராக நியமித்த செயல்  மக்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. முபாரக்குடன் சுலைமானையும் எதிர்த்து முழக்கமிடுகின்றனர் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள எகிப்து நாட்டு மக்கள்.

ஈரானுடனான பகை, அமெரிக்க உறவு, இஸ்ரேலுடனான நல்லிணக்கம், இஃவானுல் முஸ்லிமீனுக்கு கடுமை யான எதிர்ப்பு ஆகியவற்றில் முபாரக்கிற்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமான சிந்தனையைக் கொண்டவர் 74 வயதான உமர்சுலைமான்.

ராணுவத்தின் உதவியுடன் பாதுகாப் பாக ஆட்சியை விட்டு வெளியேறி உமர்சுலைமானை அதிபராக நியமிப்பதுதான் ஹோஸ்னி முபாரக்கின் திட்டம் எனக் கருதப்படுகிறது. இதற்கு அமெரிக்காவின் ஆசிர்வாதமும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுலைமானை துணை அதிபராக நியமித்த அதேநாளில்தான் முன்னாள் விமானப்படை தலைவரான அஹ்மத் ஷஃபீக்கை பிரதமராக ஹோஸ்னி முபாரக் நியமித்தார். இது ராணுவத்திற்கு கட்டுப்பாட்டை வழங்குவதன் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

இஹ்வான்கள் சூளுரை

கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளைப் பறித்த சர்வாதிகாரி ஹோஸ்னி  முபாரக்கை எகிப்து நாட்டு மக்கள் நீதியின் முன்னால் நிறுத்துவார்கள் என இஹ்வானுல் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது கானேம் தெரிவித்துள்ளார். லண்டனில் பிரஸ் தொலைக்காட்சிக்கு  அளித்த நேர்காணலில்  இதனை அவர் தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டின் முடிவை தீர்மானிக்கும் மக்களின் உரிமைகளை முபாரக் நீண்டகாலமாக பறித்து விட்டார். ரவுடிகளின் துணையுடன்  துப்பாக்கி முனையில் அவர் எகிப்தை ஆட்சிபுரிந்தார். இதற்கெதிராகத்தான் எகிப்து நாட்டு மக்கள் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்த சர்வாதிகாரியை ஆட்சியை விட்டு அகற்றாமல் மக்கள் அடங்கப்போவதில்லை  என முஹம்மது கானேம் தெரிவித்தார்.

சிலரை மாற்றி தந்திரங்களை மேற்கொண்டு வருகிறார் முபாரக் என தெரிவித்த கானேம், போராட்டத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கோடிக்கணக்கான  மதிப்புடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒரு தனி மனிதருக்காகவும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் நிகழ்ந்துள்ளது. எகிப்து நாட்டு மக்கள் இதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அவர்கள் அடங்கியிருக்கமாட்டார்கள். முபாரக் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுவதை காண்பதற்காகத்தான் எகிப்திய மக்கள் காத்திருக்கின்றனர்.

தற்பொழுது எகிப்தின் வீதிகளில் நடைபெறும் மக்கள் எழுச்சி ஏதோ எதேச்சையாக உருவானது அல்ல. நாட்டிற்கு நல்லதை நாடியவர்கள் முபாரக்கை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்க முபாரக் தயாராக இல்லை. இறுதியாக மக்கள் அவருக்கான தீர்ப்பை எழுதத்தயாராகி விட்டனர்.

அமெரிக்காவிற்கோ அல்லது வேறு எவருக்கும் எகிப்திய மக்களை திருப்தி படுத்த இயலாது. அமெரிக்காவிடமிருந்து எங்களுக்கு எவ்வித உதவியும் தேவையில்லை. அது ஒருபோதும் எங்களுக்கு உதவாது. புரட்சி தற்பொழுது துனீசியாவிலிருந்து எகிப்தை வந்தடைந்துள்ளது. இறைவனின் கருணையினால் இப்புரட்சி அரபுலகம் முழுவதும் பரவும் என தான் நம்புவதாக முஹம்மது கானேம் தெரிவித்தார்.

அரபகத்தில் எழுச்சி!

ஏமனில் அதிபர் என்ற பெயரோடு வாழ்ந்துவரும் அமெரிக்க கைக்கூலி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ், மக்கள் எழுச்சியின் முன் மீளும் வழிதெரியாது திணறிக்கொண்டு இருக்கிறார். ஏமன் மக்கள் சக்தி, குமுறும் எரிமலையாய் திமிறிக் கொண்டு இருக்கிறது.

அல்ஜீரியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக வெறுப்பு நெருப்பு அனல் பரப்பி வருகிறது.

பொருளாதாரத்தை சீரழித்த அதிபர்களுக்கு அப்பாவி மக்களின் வாழ்க்கையை வீணடித்த அந்த அதிகார ஏகாதிபத்திய சிங்கங்களின் ஆதரவுடன் அந்நாடுகளில் வாழும் அப்பாவி மக்களின் ஜனநாயக உரிமைகளை அலட்சியப்படுத்தினாலும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கே வழியில்லாமல் செய்தாலும் தங்களது சொகுசான ஆட்சிக் கட்டிலுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என மமதையுடன் திரிந்த சர்வாதிகாரிகளின் ஆட்டம் முடிந்துபோன அத்தியாயங்களாக மாறிவருவதை துனிசியா, எகிப்து, ஏமன், ஜோர்டான், அல்ஜீரியா போன்ற நாடுகளின் மக்கள் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

குவைத்தில் அச்சம்

குவைத் நாட்டில் கண்டனப் போராட்டங்களில் கலந்துக் கொள்ளும் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல்வாதான்  செய்தி ஏடு இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.

குவைத்தில் வாழ்ந்துவரும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், அரபு, ஆசியா நாடுகள் உள்பட அனைத்து வெளிநாட்டினரும் குவைத் நாட்டின் சட்டங்களை மதித்து நடக்கவேண்டும். குடும்பத்துடன் நாடு கடத்தப்படுவதை த்தவிர்த்து கொள்ளுமாறும்   கண்டனப் பேரணிகளில் கலந்துக்கொள்ளக் கூடாது என குவைத் அரசு தெரிவித்துள்ளதாக அழ வாதன் குறிப்பிடுகிறது.

போராட்டங்களில் பங்கேற்போர் அவரவர் நாடுகளுக்கு ஓடட்டும் என குவைத் கடுமையாக கண்டித்திருக்கிறது.

எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னி  முபாரக்கிற்கு எதிராக மக்கள் எழுச்சி வீரியமடைந்துள்ள நிலையில்  அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குவைத்தில் வாழும் எகிப்து நாட்டவர்கள் எகிப்து தூதரகத்திற்கு முன்பாக பேரணி நடத்த முயன்றபோது  குவைத் அரசு  அவர்களை கைதுச் செய்தது  இதன் பின்னர் குவைத் அரசின்எச்சரிக்கை  அறிக்கை வெளியாகியுள்ளது.

கண்டன கூட்டம் கூட்டம் நடத்தியதாக குற்றஞ்சாட்டி கடந்த ஆண்டு  அல்பராதியின் ஆதரவாளர்களான பல எகிப்து நாட்டைச் சார்ந்தவர்களையும் குவைத் நாடு கடத்தியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அபுசாலிஹ்