Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,824 முறை படிக்கப்பட்டுள்ளது!

செல் போன் நோய்கள் தருமா?

நவீன விஞ்ஞான அற்புதங்களில் ஒன்று செல் போன் என்றழைக்கப்படும் அலை பேசி. ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருக்கும் மனிதரைத் தொடர்பு கொண்டு பேச முடிவது என்பது விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றமே. இங்கு இடைவெளிகள் பெரிய பிரச்னையே அல்ல. உலகத்தில் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் பேச முடியும், பயணம் செய்து கொண்டே பேச முடியும் என்பதெல்லாம் அவசரத் தேவைக்கு உடனடியாக பேச நினைப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் விஷயங்கள்.

ஏழை, செல்வந்தன் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று எல்லோரும் செல் போன் வைத்திருக்கிறார்கள் சிலர் சதா நேரமும் செல் போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்கள் கைகள் காதுகளில் ஒட்டிக் கொண்டு விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இருக்கும். அந்த அளவு செல் போன் நம் தினசரி வாழ்க்கையில் நம்முடன் இணைந்த அம்சமாகி விட்டது.

இந்த நிலையில் செல் போன் சம்பந்தமாக உலகமெங்கும் நடந்து வரும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நரம்பியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஓல்லெ ஜோஜன்சன் (Dr. Olle Johansson) செல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அதிகமாக செல் போனை உபயோகிப்பவர்கள் மூளை சம்பந்தமான நோய்கள், மரபணுக்களுக்கு சேதாரம், உறக்க சம்பந்தமான பிரச்னைகள், மனத்தை ஒருமைப் படுத்துதல் முடியாமை போன்றவற்றால் பாதிக்கப் படுகிறார்கள் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்.

கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மூளை விஞ்ஞானியான ரோஸ் அடே (Ross Adey) செல் போனில் இருந்து வெளிப்படும் நுண்ணிய அலைகள் கேன்சர் உட்பட பல நோய்களை உருவாக்க வல்லது என்று கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) 13 நாடுகளில் நடத்திய ஒரு ஆராய்ச்சி நீண்ட காலம் அதிகமாக செல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி நோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த லென்னார்ட் ஹார்டெல் (Lennart Hardell) என்ற பேராசிரியர் கதிரியக்க ஆராய்ச்சி தொண்டு நிறுவனம் லண்டன் ராயல் சொசைட்டியில் ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் 20 வயதுக்கு முன்பே செல் போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒருவித கான்சர் நோய் வர மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் டென்மார்க் நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் கருத்தரித்த பெண்கள் அதிகமாக செல் போன் உபயோகிப்பது பிறக்கும் குழந்தைகளின் மரபணுக்களில் கோளாறை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பல் வேறு நாடுகளில் இப்படி செல் போன் உபயோகப்படுத்தும் போது வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் உருவாகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறப்பட்டதை மறுத்து அமெரிக்காவைச் சேர்ந்த செல் போன் கம்பெனிகள் 28 மில்லியன் டாலர்கள் செலவில் டாக்டர் ஜார்ஜ் கார்லோ (Dr George Carlo) என்ற விஞ்ஞானியிடம் முழுமையான ஒரு ஆராய்ச்சி செய்யுமாறு பணித்தனர்.

துவக்கத்தில் அந்த விஞ்ஞானியும் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறினாலும் தொடர்ந்த ஆராய்ச்சிகளில் செல் போனில் வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் வர வாய்ப்பு இருப்பதை ஒத்துக் கொண்டு அதைக் குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். தங்களுக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துகளை அந்த கம்பெனிகள் எதிர்த்து அவர் மீது அவதூறுப் பிரசாரத்தை மேற்கொண்டாலும் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு விஞ்ஞானியே வேறுபட்ட கருத்தை வெளியிட்டது ஒரு ஆணித்தரமான உண்மையாக பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் செல் போன் இன்றைய மனிதனின் அத்தியாவசியத் தேவையாகி விட்ட சூழ்நிலையில் அதை அறவே ஒதுக்கி விட முடியாத நிலையில் அனைவரும் இருக்கிறோம். அதே நேரத்தில் இந்த நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளும் நம்மை பயமுறுத்துவதாக இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. எனவே செல் போனைப் பயன்படுத்தவும் வேண்டும், நோய்களால் பாதிக்கப்படவும் கூடாது என்று நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள் –

  1. செல் போனில் மணிக்கணக்கில் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிருங்கள். உங்கள் பேச்சு சுருக்கமாகவும், தேவையின் பொருட்டாகவுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நேரில் பார்க்கும் போது பேசுவது போல எல்லா முக்கியமல்லாத விஷயங்களையும் செல் போனில் பேசுவதைத் தவிர்க்கவும். குறைவான செலவு தான் ஆகிறது என்ற எண்ணத்தில் அதிகமாக நீண்ட காலம் பயன்படுத்தினால் பல மடங்கு செலவை மருத்துவத்திற்கு பிற்காலத்தில் செய்ய நேரிடும். அளவாகவும், சுருக்கமாகவும், தேவையுள்ள சமயத்தில் மட்டும் செல் போனைப் பயன்படுத்துவதே மிகுந்த பாதுகாப்பும் பயன்பாடும்.
  2. குழந்தைகள் மற்றும் சிறு வயதினரை செல் போனை மிகுந்த அவசியமல்லாமல் உபயோகப் படுத்த விடாதீர்கள். அவர்கள் மண்டை ஓடு லேசாக இருப்பதால் அந்தக் கதிரியக்க பாதிப்புகள் அவர்கள் மூளையை ஆழமாக பாதிக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. எனவே அவர்கள் கையில் செல் போனைத் தராதீர்கள்.
  3. செல் போனை பேண்ட் பாக்கெட்களிலோ, பெல்டுகளிலோ வைத்துக் கொள்ளும் இளைஞர்களின் விந்து எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மனித உடலில் கீழ் பகுதி மேல் பகுதியை விட அதிகமாக செல் போனின் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். எனவே அணைத்து வைக்காத செல் போனை அந்த இடங்களில் இளைஞர்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
  4. சிக்னல் குறைவாக இருக்கும் போது பேசுவது வலிமையாக கதிரியக்கம் வெளிப்படுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே அந்த சமயங்களில் பேசுவதைத் தவிருங்கள்.
  5. மூடிய வாகனங்களுக்கு உள்ளே இருந்து பேசும் போதும் இணைப்பை ஏற்படுத்த செல் போன்கள் அதிக சக்தியை செலவிட வேண்டியிருக்கும் என்பதால் கூடுமான வரை அதனைத் தவிர்ப்பது நல்லது.
  6. நம் உடல் செல் போனின் கதிரியக்க சக்தியை எந்த அளவு உள்ளிழுத்துக் கொள்கிறது என்பதை அளவிட SAR என்ற அளவீடு செல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. புதிய செல் போன்களின் இயக்கக் குறிப்பேடுகளிலும், கம்பெனி இணைய தளங்களில் அந்த வகை செல் போன் கருவி குறித்த குறிப்புகளிலும் அந்த SAR அளவீட்டை இப்போது தர ஆரம்பித்திருக்கிறார்கள். குறைவான SAR அளவீடு உள்ள செல் போன் சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
  7. காது கேட்கும் சாதனம் அணிந்திருப்பவர்கள் செல் போனை பயன்படுத்துவது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது போல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு அறையினுள்ளும் செல் போன் உபயோகிப்பது அங்குள்ள நோயாளிகளின் உடல்நிலையை அதிகம் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கர்ப்பவதிகளும் செல் போனை கூடுமான அளவு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
  8. முடிந்த சமயங்களில் எல்லாம் தரை வழி தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை தாருங்கள்.

அளவான, குறைந்த, புத்திசாலித்தனமான பயன்பாட்டால் மட்டுமே நாம் செல் போன் மூலம் நோய்களை நீக்கிய உண்மையான பயனை அடைய முடியும் என்பதை நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன் இந்த உண்மையை நாம் அக்கறை வைத்திருக்கும் நபர்களுக்கும் அறிவுறுத்துவோமாக!

http://enganeshan.blogspot.com – என்.கணேசன் – – நன்றி: ஈழநேசன்