Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,109 முறை படிக்கப்பட்டுள்ளது!

‘ஆமாம் சாமி’ சபையா?

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.

கடந்த இருபது ஆண்டுகளாக, ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குபவையாக இருந்து வருகிறதே தவிர, அப்பாவி மக்களைப் பாதுகாப்பதாகவோ, சின்னஞ்சிறு நாடுகளின் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாகவோ இல்லை. வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தலையாட்டி அங்கீகரிப்பதற்காகக் கூட்டப்பட்ட உலக நாடுகளின் அமைப்பாகத் தன்னை ஐ.நா. சபை மாற்றிக் கொண்டிருப்பதன் சமீபத்திய எடுத்துக்காட்டுத்தான் லிபியா மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்.

லிபியா அத்துமீறி தனது அயல்நாட்டின் மீது படையெடுத்திருந்தால் அதைத் தடுக்க வேண்டிய கடமை நிச்சயமாக ஐ.நா. சபைக்கு உண்டு. ஆனால், லிபிய அரசு உள்நாட்டுக் கலவரத்தை அடக்க முயற்சிப்பது தவறு என்று கூறி, புரட்சியாளர்கள் சார்பில் லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தொடுத்திருக்கும் விமானத் தாக்குதலுக்கு ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்க முற்பட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

கடந்த இரண்டு நாள்களாக விமான வெடிகுண்டு வீச்சு, ஏவுகணைத் தாக்குதல் என்று தொடர்ந்து இந்தப் படைகள் லிபியா மீது அரங்கேற்றியிருக்கும் தாக்குதல்களால் தரைமட்டமாகிப் போயிருக்கும் கட்டடங்கள் ஏராளம். செயலிழந்து காணப்படும் விமானத் தளங்கள் பல. உயிரிழந்திருக்கும் எந்தப் பாவமும் அறியாத அப்பாவிகள் நூற்றுக்கணக்கில். இவையெல்லாம் திடுக்கிட வைக்கின்றன.

குறிப்பாக, புரட்சியாளர்களின் எழுச்சி, லிபிய ராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஐ.நா.வின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் கூட்டு ராணுவம் லிபியாவுக்கு எதிராகக் களம் இறங்கியிருப்பதன் மூலம், லிபிய அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகப் புரட்சியாளர்களைத் தூண்டிவிட்டதுகூட இந்த நாடுகள்தானோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.

அமெரிக்கத் தலைமையிலான “நேட்டோ’ படைகள் தமது நாட்டில் எந்தவிதமான உதவி பெறுவதையும் துருக்கி அனுமதிக்க மறுத்துவிட்டிருக்கிறது. ஐ.நா. சபையில் அமெரிக்காவுக்கு ஆதரவான தீர்மானத்துக்கு வாக்களித்த 23 நாடுகளின் அரேபியக் கூட்டமைப்பு இப்போது தாங்கள் தவறு செய்துவிட்டதாகக் கையைப் பிசைகிறது. சாமானிய மக்களின் உயிரிழப்பும், அதிபர் மும்மார் கடாஃபியைக் குறிவைத்து அவர் குடியிருக்கும் பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்களும் “நேட்டோ’ படைகளின் மறைமுக எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று அரேபியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் அமர் மௌசா சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.

கடந்த 20 ஆண்டு காலமாகவே மேலைநாட்டு வல்லரசு நாடுகளின் விபரீத எண்ணங்களின் விளைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகள் ஏராளம். அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருக்கும்போது, கொசோவாவில் தங்களது படைகள் பின்னடைவைச் சந்தித்த வேளையில், 15,000 அடி உயரத்திலிருந்து இலக்கே இல்லாமல் சரமாரியாகக் குண்டுமழை பொழிந்து எதிரிகளைத் தாக்குகிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைப் பலி வாங்கியதில் தொடங்கிய இந்த ரத்த வெறி, இப்போது லிபியாவில் மையம் கொண்டிருக்கிறது, அவ்வளவே.

எதற்காக இப்போது லிபியா மீது தாக்குதல்? புரட்சியாளர்களுக்கு உதவுவதற்காக என்றால் திரிபோலியில் உள்ள அதிபர் மும்மார் கடாஃபியின் இருப்பிடத்தைச் சுற்றித் தாக்குதல் நடத்தி நாசம் விளைவிப்பானேன்? எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் பகுதிகளை விட்டுவிட்டுத் தாக்குதல் நடத்துவதிலிருந்தே, லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமேயொழிய, அதன் எண்ணெய் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற மறைமுக கபட நாடகம் வெளிப்படுகிறதே…

அமெரிக்கா கூறுகிறது ஆட்சி மாற்றமல்ல குறிக்கோள் என்று. ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் கேமரோன் கூறுகிறார் லிபிய அதிபர் மும்மார் கடாஃபி அகற்றப்பட வேண்டும் என்று. அப்படியானால் யார் சொல்வது உண்மை?

இவர்களது இலக்கு அதிபர் மும்மார் கடாஃபியா, இல்லை, தங்களுக்குத் தங்கு தடையின்றி லிபியாவின் பெட்ரோலிய வளத்தை அள்ளி வழங்கி உதவும் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதா?

லிபியாவின் எண்ணெய் வளம் மிகுந்த கிழக்குப் பகுதியில் எழுந்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிரான புரட்சியாளர்களின் எழுச்சிக்கு, மனித உரிமை மீறல், அடக்குமுறை என்கிற சாக்கில் உதவிக்கரம் நீட்ட முன்வந்திருக்கும் “நேட்டோ’ படைகள், இலங்கையில் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு ஆதரவாகக் களம் இறங்காதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. ஒருவேளை இந்தியா அமெரிக்காவின் விரலசைப்புக்கெல்லாம் தலையசைக்காவிட்டால், காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்காது என்பது என்ன நிச்சயம் என்கிற கேள்வியும் எழுகிறது.

லிபியாவின் மீதான இந்தத் தாக்குதலை உலகிலுள்ள அணிசாரா நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், தங்களது குரலை உரக்க எழுப்பி “நேட்டோ’ படைகளின் மறைமுக ஏகாதிபத்திய எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் லிபியாவின் கதியை அவர்களும் எதிர்கொள்ள நேரிடலாம். உள்நாட்டுப் பிரச்னைகளில் மூக்கை நுழைக்க ஐ.நா. சபையைத் துணைக்கு அழைக்கும் தவறைக் கண்டிக்காமல் விட்டால், செர்பியா, ஆப்கானிஸ்தான், இராக், லிபியா என்று தொடரும் அதிகாரப்பூர்வமான தாக்குதல்களை அங்கீகரிப்பதாக அமைந்துவிடும்.

அமெரிக்காவில் அதிபர்கள் மாறுகிறார்களே தவிர, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்போதுமே மாறுவதில்லை என்பதைத்தான் லிபியா மீதான தாக்குதல் உணர்த்துகிறது.

நன்றி: தினமணி