Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,315 முறை படிக்கப்பட்டுள்ளது!

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் – டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன்

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று துவா செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.    

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு. இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர்.  1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம். “அது 1990 ஆம் ஆண்டு .

நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.

மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன்.

இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை. குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன்.

இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்ல வித்திட்டது.
பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்….

“இறைவா நீ இருந்தால்…”

அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன். இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினேன்.

என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே…. இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள்.

நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்லியது.

பயத்தில் இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறைவேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புது புது காரணங்களை கண்டுபிடிப்பர்.

என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவ காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

நான் நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான், இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த சில வருடங்கள் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அவை யாவும் தோல்வியை தழுவின. கிருத்துவம் மற்றும் யூத மார்க்கத்தை பற்றி நிறைய படித்தேன். ஆனால் அவை எனக்கு முழு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் என்னால் ஒன்றவும் முடியவில்லை.

பிறகு ஒருநாள் குரானும், மார்டின் லின்க்ஸ் (Martin Lings) அவர்களின் புத்தகமான “Muhammed: His life based on the Earliest Sources” னும் அறிமுகமாயின.
நான் மார்க்கங்கள் குறித்து ஆராய்ந்த போது, யூத நூல்கள், வரப்போகும் மூன்று நபிமார்களை பற்றி குறிப்பிடுவதை படித்திருக்கிறேன். யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) போன்றவர்கள் அவர்களில் இருவர், யார் அந்த மூன்றாவது நபர்?      

பைபிளில் ஏசு(அலை) அவர்கள், தனக்கு பின் வரும் நபியைப் பற்றி குறிபிட்டிருக்கிறார்கள். ஆக, குரானைப் படிக்கும் போது அனைத்தும் ஒத்துவர ஆரம்பித்தன (Everything started to make sense).  நபிமார்கள், ஒரே இறைவன், இறைவேதம் என்று அனைத்தும் அறிவுக்கு ஒத்துவர ஆரம்பித்தது. இஸ்லாத்தை ஏற்று கொண்டேன்.

நான் கற்றுக்கொண்ட பாடமென்றால், என்னை விட அறிவில் சிறந்த பலர் இஸ்லாம் என்னும் உண்மையை அறியாமல் இருக்கின்றனர்.
நீங்கள் புத்திசாலியா என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல, அந்த அறிவு உங்களுக்கு சரியான முறையில் புகட்டப்படுகிறதா என்பது தான் முக்கியம்.

“தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் – முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்” — குரான் 42:13 
“…தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்” — குரான் 24:46    

அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியிருக்கிறான். அதற்காக அவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இப்போது என்னிடத்தில் ஒரு எளிமையான பார்முலா உள்ளது. அது, முதலில் படைத்தவனை அங்கீகரிப்பது, அவனை மட்டுமே வழிபடுவது மற்றும் அவனிடத்தில் மட்டுமே வழிகாட்ட கோருவது.

அவன் யாருக்கு நல்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழிகெட செய்ய முடியாது…”    
அல்ஹம்துலில்லாஹ்.

இவர் கண் மருத்துவர் என்பதால், டார்வின் கண்ணைப் பற்றி ஆராயும் போது ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாக விளக்குவார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பு தான் இவருக்கு இறைவனின் சோதனை அதிகமிருந்தது. இஸ்லாத்தை ஏற்கும் பலரும் இது போன்ற நிலையை தாண்டி தான் வருகிறார்கள் என்றாலும், ஒரு சிலருக்கு இது போன்ற சோதனைகள் அதிகமாகவே இருக்கின்றன.

“நான் முஸ்லிமானதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  என்னிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டார்.

நீதிபதி “உங்களுக்குள் என்ன பிரச்சனை” என்று கேட்ட போதும், “விவாகரத்து வேண்டுமென்று” மட்டும் தான் சொன்னார். அவர் சென்றது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து அழைத்து சென்று விட்டார். என் குழந்தைகளை நான் பார்க்க வேண்டுமென்றால் பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் தான் பார்க்க வேண்டும்.

என் குழந்தைகளுடன் என் வீடு, செல்வம் என்று அனைத்தையும் தன்னிடத்தே கொண்டு சென்று விட்டார் என் மனைவி. வாரமொருமுறை வாடகை செலுத்தும் அறைகளில் பிறகு என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்.

என் பெற்றோர்களோ என்னை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். ஒருமுறை அவர்களிடமிருந்து வந்த கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதில், அவர்கள், என்னை பார்க்கவோ, என்னிடம் பேசவோ விரும்பவில்லை என்றும், நானும், இனிமேல் அவர்களை பார்க்க வரக்கூடாதென்றும், கடிதம் கூட அனுப்ப கூடாதென்றும் எழுதப்பட்டிருந்தது.
என் மனைவி மீதோ அல்லது என் பெற்றோர்கள் மீதோ இந்த நிகழ்வுகளுக்காக வருத்தம் இருந்ததில்லை. அவர்கள் நிலையிலிருந்து எண்ணி பார்க்கவேண்டும். அவர்கள் நான் தவறான வழியில் சென்று விட்டதாகவே நினைத்தனர். அன்றைய காலகட்டத்தில் ஊடகங்களும் அப்படி ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தி இருந்தன.

என் நண்பர்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். இனி அவர்கள் எதிர்பார்க்கும் பழைய நபரில்லை நான்.தற்போது நிலைமை பெரிதும் மாறி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

என் மனைவியை விட்டு பிரிந்த எனக்கு மற்றொரு அன்பான துணையை இறைவன் ஏற்படுத்தினான். மற்றொரு குழந்தையை கொடுத்தான். அமெரிக்காவில் வசிக்க சிரமப்பட்ட எனக்கு இப்போதைய இருப்பிடம் புனித மதீனா நகரம். குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமிய குடும்பத்தில் ஒருவன். எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று.

தற்போது என் பெற்றோர் என்னிடம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளனர். என் சகோதரர் இஸ்லாத்தை தழுவி விட்டார். என் குழந்தைகளை சுலபமாக பார்க்க முடிகிறது.
இறைவன் குர்ஆனில் சொல்லுவது போன்று, கஷ்ட காலங்களுக்கு பின்னர் சூழ்நிலைகளை எளிதாக்கி வைத்துள்ளான். நான் இழந்ததை விட பெற்றவை அதிகம்.
என்னுடைய அனுபவங்கள் மூலம், இஸ்லாத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நொடி கூட, இஸ்லாத்திற்கு வந்தால் இதை இழக்க நேரிடுமோ என்று எதை எண்ணியும் அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதியையும், பலத்தையும் கொடுக்கச் சொல்லி இறைவனிடம் துவா செய்யுங்கள். அப்படியே அவன் உங்களுக்கு சோதனைகளை தந்தாலும் அது உங்களால் தாங்கக்கூடிய அளவாக இருக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள்.

என் அனுபவத்தின் மூலமும், நான் பார்த்த புதிய முஸ்லிம்களின் அனுபவத்திலிருந்தும் கூறுகிறேன், நீங்கள் இஸ்லாத்தை தழுவ நேர்ந்தால் அதனால் நீங்கள் பெரும் மன அமைதி என்பது, நீங்கள் இதுவரை பெற்ற எந்த ஒரு விசயத்தையும் விட மேலானதாக இருக்கும்…..”

சுபானல்லாஹ்….ஈமானை இறுக பற்றி பிடித்திருக்கும் இவர்களைப் போன்றவர்களை காணும் போதெல்லாம்  நம்முடைய ஈமானும் அதிகரிக்கிறது.
  
டாக்டர் லாரன்ஸ் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. இவருடைய கட்டுரையான “The Big Questions”, ஒருவர் தன் வாழ்நாளில் கேட்க நினைக்க கூடிய கேள்விகளை அடிப்படையாக கொண்டது.

பல நூல்களை எழுதியிருக்கும் இவர், கனடா, அமெரிக்கா, அரேபிய நாடுகள் என்று தன் தாவாஹ் பணியை செய்து வருகிறார். 

இறைவன் இவர் போன்றவர்களின் மன பலத்தை நமக்கும் தந்தருள்வானாக…ஆமின்…

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக…ஆமின்.
Dr. Laurence Brown’s official website:
1. http://www.leveltruth.org

Canadian Dawah Association’s official website:
1. cdadawah.com

My Sincere thanks to:
1. Br.eddie

References:
1. Dr.Brown’s Conversion story – leveltruth.org
2. Purpose of Life – Dr.Brown’s interview with Br.eddie, thedeenshow.com
3. Dr.Brown’s jihad – Dr.Brown’s interview with Br.eddie, thedeenshow.com
4. Dr.Laurence Brown – Wikipedia.

  
ஆஷிக் அஹ்மத் அ – எதிர்க்குரல்