Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,152 முறை படிக்கப்பட்டுள்ளது!

இராப்பட்சி வெளவால்

வெளவால் உண்மையிலேயே பல்வேறு அதிசயிக்கத்தக்க இயல்குகளைக்கொண்டுள்ள ஒரு உயிரினம். பகல் பொழுதுகளில் அதிகமாக ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பறந்து திரிவதனாலேயே அதனை இராப்பட்சி என்பார்கள். இவை மாலை நேரங்களில் கூட்டங் கூட்டமாக ஒவ்வொரு திசையிலும்  வானில் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த வெளவாலினங்கள் பாதி பறவை இனத்தைப்போன்றும் பாதி மிருக இனத்தைப் போன்றும் தோற்றம் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் இராப்பொழுதுகளிலேயே அதிகமாகப் பறந்து திரிகின்றன.

 

வெளவாலை பறவை என்று கூறுவதை விட பறக்கக் கூடிய ஒரு பிராணி என்று கூறலாம். காரணம் இப்பிராணி ஏனைய விலங்குகளைப் போன்று குட்டி போட்டு பாலூட்டும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் முகம் கூட பறவைகளிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படும். காதுகள் நீண்டதாகவும், கூர்மையான பற்களைக் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் பறவையினங்கள் பாலூட்டும் தன்மைகொண்டனவோ, பற்களைக்கொண்டனவோ அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். உயிரினங்களின் புதை படிவங்களை (fossils) ஆராய்ந்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பூமியில் 6 கோடி வருடங்களுக்கு முன்னிருந்தே வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன என்று கூறுகின்றனர்.

 

வெளவால்கள் (இரவில்) பறக்கும்போது ஒரு வகைக் கீச்சுக்குரலை எழுப்பும். இதன் மூலம் அவை தமக்கு முன்னால் ஏதும் தடைகள் இருக்கின்றனவா என்பதை உணர்ந்து தமது பாதையை இனங்கண்டு அறிந்துகொண்டு பறக்கின்றன. இந்நிகழ்வுகள் யாவும் நொடிப் பொழுதினில் நடந்து முடிவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இக்கீச்சுக் குரலின் உயர் அதிர்வெண்னான (high frequency) இவ் ஒலியலைகள் செவிப்புலன் கடந்த ஒலியலைகள் அல்லது கழி ஒலியலைகள் (ultrasonic waves)  என விஞ்ஞானத்தில் அழைக்கப்படுகின்றது.இவை கீச்சிடும்போது முன்னால் ஏதும் தடைகள் இருந்தால் ஒலி அதில் பட்டு மீண்டும் எதிரொலிக்கும். இவ்வெதிரொலிப்பின் மூலம் அவை முன்னால் தடங்கள் உள்ளதை உணர்ந்து கொள்ளும். இவ் ஒலி அலை அதிர்வுகள் ஒரு இலட்சம் Hz  வரை இருக்கும். ஒலியைப்பிரித்து அறியக்கூடிய கூருணர்வு கொண்ட காதுகளை அல்லாஹ் இவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனின் செவியால் 20 முதல் 20,000 Hz வரையிலான ஒலி அதிர்வுகளையே கேட்டுணர முடியும்.  ஆனால் அல்லாஹ்வின் இப்படைப்பினால்  20,000 Hz இற்கும் கூடிய அதிர்வெண்ணை வெளியிட்டு அதனை கேட்டுணரவும் முடியும்.  இதனால்தான் எமது செவிப்புலனால் அதனைக் கேட்க முடியாதுள்ளது. உண்மையில் அல்லாஹ்வின் இப்படைப்பு மிகவும் நுணுக்கமானது.

 

இவ் வெளவால்களின் பார்வைத் திறன் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சியை இவ்விடத்தில் குறிப்பிடுவது சிறந்தது. விஞ்ஞானிகள் சிலர் ஓர் அறையில் ஒருசில வெளவால்களை அடைத்து அதில் பல தடங்களை ஏற்படுத்தி அவற்றின் கண்களைக் கட்டி பறக்க விட்டனர். என்ன ஆச்சரியம்! அவை ஒலி எழுப்பிக் கொண்டு அத்தடைகளையும் மீறி சுற்றிச் சுழன்று பறந்தன. அதன் பின் மீண்டும் அவற்றின் கண்களைத் திறந்து விட்டு காதுகளையும் வாயையும் மாத்திரம் கட்டிவிட்டுப் பறக்க விட்ட போது அவை சற்று சிரமத்தோடு, அமைக்கப்பட்ட தடைகளிலே மோதி மோதிப் பறந்தன. இதன் மூலம் விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வந்தனர். இவ் வெளவால் இனத்திற்கு பறப்பதற்கு கண் முக்கியமில்லை. கீச்சிடுவதற்கு வாயும் அதன் மூலம் ஏற்படும் எதிரொலியைக் கேட்பதற்குக் காதும் இருந்தால் மட்டுமே போதும் அவற்றால் இலகுவாகப் பறக்க முடியும்.

 

பெரும்பாலும் வெளவால்கள் துருவப்பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலேயே வாழ்கின்றன. சிறியதொரு வெளவாலின் அகலம் சுமார் 15cm ஆகும். இன்னும் சில வெளவால்கள் சுமார் 2m அகலமுடையனவாகவும் காணப்படுகின்றன. இவற்றின் மற்றுமொரு விஷேட அம்சம்தான் இவை உண்ணுவதும், கழிப்பதும் தமது ஒரே வாயினாலேயே ஆகும்.

 

அதிகமான வெளவால்கள் பூக்கள், பழங்கள், புழுக்கள், பூச்சிகளையே உண்டு வாழ்கின்றன. புழு, பூச்சிகளையும் ஏனைய உணவுகளையும் பார்க்கவே சொற்பமானளவு கண்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இவற்றைத்தவிர இரத்தம் குடித்து வாழும் வெளவால்களும் உண்டு. இவை vampire bats  என அழைக்கப் படுகின்றன. இவற்றின் பற்கள் ஊசி போன்று கூர்மையானவை. வெளவால்கள் பறக்கும் போது முறையாகப் பறந்தாலும் ஓய்வின்போது தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தமது சிறகுகளினால் முகத்தை மூடியபடி இருக்கும்.

 

அல்லாஹ் இப்பிராணியில் எக்கச்சக்கமான அற்புதங்களை வைத்திருக்கின்றான். அவற்றில் சிலதைத் தாம் இங்கு நாம் பார்த்தோம். எவ்வளவு அற்புதமாகப் படைத்துள்ளான்! அவனின் ஒவ்வொரு படைப்பிலும் ஒவ்வொரு அற்புதங்கள் மறைந்து கிடக்கின்றன. அதற்காக நிச்சயமாக நாம் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாயுள்ளோம்.

 

அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் அவனது படைப்பினங்களைப் பற்றி ஆராய்ந்து, சிந்தித்துப் பார்க்குமாறு எம்மை வலியுருத்துகின்றான். (88:17-20), (03:190-194), (55:01-35) இன்னும்… ஆனால் நாம் அவைபற்றி எந்த உணர்வுமற்றவர்களாக இருக்கின்றோனம். இன்று இதுபோன்ற ஆய்வாராய்ச்சிகளில் அதிகமமதிகம் ஈடுபடுபவர்களாக முஸ்லிம் அல்லாதவர்களே இருக்கின்றார்கள். எனவே நாம் விழிப்படைய வேண்டும். அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ந்து அவனது வல்லமைகளை மக்கள் முன் எடுத்துக்காட்டுவதில் நாம்தான் முன்னனி வகிப்பவர்களாக இருக்கவேண்டும். இதனை நாமனைவரும் ஆழமாக மனதில் பதித்து செயல்படுவோம்.