Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,427 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜப்பான் கற்றுத் தரும் பாடம்!

மகத்தான தொழில்நுட்ப வல்லமையால் உலகின் பணக்கார நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது ஜப்பான். அந்த தேசத்துக்கு, ‘செயற்கையான தொழில்நுட்பங்களைவிட நான் வலிமைமிக்க சக்தி’ என்று உணர்த்தியிருக்கிறது இயற்கை. அடுத்தடுத்துத் தொடரும் வலிமையான நிலநடுக்கங்கள், சுழற்றியடித்த சுனாமி, இவற்றின் விளைவுகளால் சீறத் தொடங்கியிருக்கும் எரிமலை என இயற்கை தன் இருப்பை முகம் காட்டி ஞாபகப்படுத்தி இருக்கிறது. சுனாமி எச்சரிக்கைத் தொழில்நுட்பம் ஓரளவுக்கு இருப்பதாலும், நிலநடுக்கங்களைத் தாங்கக்கூடிய கட்டிட அமைப்பாலும், நிலநடுக்கங்களின்போது தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை அறிந்து வைத்திருந்ததாலும் உயிரிழப்புகளை பெருமளவு தடுத்திருக்கிறது ஜப்பான். இதேபோன்ற ஒரு இயற்கைச் சீற்றம் இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் நிகழ்ந்திருந்தால் லட்சக்கணக்கான உயிர்ப்பலி நிகழ்ந்திருக்கும்.

ஆனாலும் சேதங்களைத் தவிர்க்க முடியவில்லை. ‘இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் சந்திக்கும் மிக மோசமான பேரழிவு இது’ என்று அந்நாட்டு பிரதமரே அறிவித்திருக்கிறார். பல லட்சம் கோடி ரூபாயைக் கொட்டி கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய வேண்டியிருக்கிறது. இயற்கைச் சீற்றத்தால் எழுந்த அச்சம், ஜப்பானின் பொருளாதாரத்தையும் நொறுக்கிவிடும் அபாய அறிகுறிகளைக் காட்டியிருக்கிறது. அதையும் சரிசெய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அந்த தேசம்.

இரண்டாம் உலகப் போரில் காயலாங்கடை பொருள் போல நொறுங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்த வல்லமை ஜப்பானியர்களுக்கு உண்டு. ஹிரோஷிமா, நாகசாகி என இரண்டு நகரங்களில் அணுகுண்டு தாக்குதல் அழிவை சந்தித்த ஒரே தேசம் என்ற துயரமான பெருமையும் ஜப்பானுக்கு இருக்கிறது. அந்த சோகத்தின் வடுக்கள் இன்னும் இருக்க, கதிர்வீச்சின் பின்விளைவுகள் தொடர்கதையாகவே அந்த நகரங்களை வதைத்து வருகின்றன. இந்நிலையில் இன்னொரு அணுக் கதிர்வீச்சு அபாயத்தை இப்போது சந்திக்கிறது ஜப்பான்.

நீர்மின் நிலையம் அமைக்கும் அளவுக்கு இயற்கை வளங்களோ, அனல்மின் நிலையம் அமைக்கும் அளவுக்கு நிலக்கரி போன்ற தாதுக்களோ இல்லாததால், ஜப்பான் தனது மின்சாரத் தேவைக்கு பெருமளவு அணுமின் நிலையங்களையே நம்பியிருக்கிறது. அந்நாட்டின் 29 சதவீத மின்தேவையை நிறைவு செய்வது அணுமின் நிலையங்கள்தான்! ஜப்பானில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்குமுன் அமைக்கப்பட்ட பழைய மாடல் அணு உலைகள். இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டதும் 11 மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

ஆனால் புகுஷிமா அணுமின் நிலையத்தில் அடுத்தடுத்து அணு உலைகள் வெடித்திருப்பது, ஆசிய நாடுகள் அனைத்தையுமே அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது. பல லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டாலும், பல மைல் தூரத்துக்கு கதிர்வீச்சு பரவியிருப்பது தெரிய வந்திருக்கிறது. கடல்வழியே பரவும் கதிர்வீச்சு, இந்தியா வரைகூட பரவலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது யாருமே கணிக்க முடியாத விஷயம்!

உலகில் 30 நாடுகள் அணுமின் நிலையங்களை நிறுவி இருக்கின்றன. இன்னும் 17 நாடுகள் இதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. அணுமின் நிலையங்களை நிறுவும் நாடுகள், அதில் மின்சாரம் எடுப்பதைக் காட்டிலும் அணுகுண்டு தயாரித்து அண்டை நாடுகளை பயமுறுத்துவதையே லட்சியமாகக் கொண்டிருக்கின்றன. பிரான்ஸ் தனது மின்சக்தி தேவையில் 75 சதவீதத்தை அணுமின் நிலையங்களிலிருந்தே எடுக்கிறது. அமெரிக்கா 20 சதவீதம். இந்தியா இந்த விஷயத்தில் குறைவுதான்; வெறும் 2.2 சதவீதம்.

ஆனால் பிரச்னை இதுவல்ல! இப்போது இந்தியாவில் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. இன்னும் 18 நிலையங்களை அமைக்க தீவிர முயற்சி நடக்கிறது. இப்போது ஐந்து அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நம் தமிழகத்தில் கூடங்குளத்தில் அமைவதும் அதில் ஒன்று! இந்த ஆண்டே அது செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை அமைக்கும் ஆர்வமும் இந்தியாவுக்குத் தொற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் அணுமின் நிலையங்கள் அரசின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட, நாமோ வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். அணு விபத்து இழப்பீட்டு மசோதா விஷயத்தில் வெளிநாடுகள் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு மண்டியிட்டோம்.

இயற்கைச் சீற்றங்கள் என்பது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. கடந்தமுறை இந்தியாவைத் தாக்கிய சுனாமி, கல்பாக்கத்தையும் விட்டுவைக்கவில்லை என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ‘இந்தியாவில் இருக்கும் அணு உலைகள் ஜப்பான் அணு உலைகள் போன்றவை அல்ல; இவற்றுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. தவிரவும், ஜப்பான் போல நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்திய அணு மின் நிலையங்கள் இல்லை’ என நிபுணர்கள் சொன்னாலும், இயற்கை என்பது எல்லா சக்திகளுக்கும் மேலானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்! மரபுசாரா எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவது குறித்து மேலைநாடுகள் பலவும் சிந்தித்து வரும் வேளையில், பல தலைமுறைகளைத் தாண்டியும் கதிர்வீச்சு அபாயத்தை வெளிப்படுத்தி மனித இனத்தை வதைக்கும் அணுசக்தி நமக்குத் தேவையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜப்பான் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் இதுதான்!

நன்றி: தெனாலி