Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 15,719 முறை படிக்கப்பட்டுள்ளது!

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி

இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களில் மிக முக்கியமானது புற்றுநோய்..

இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். இருப்பினும் புற்றுநோய் என்றாலே மரண தண்டனை என்று நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

மருத்துவத்தின் வளர்ச்சியால் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம்.

நம் நாட்டைப் பொருத்த வரை குறிப்பாக தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஜீரண மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய்கள் மிக அதிகம். அதற்கு நமது உணவுப் பழக்க வழக்கங்களும் ஓர் காரணம்.

இதயம், சிறுநீரகத்தைப் போல் ஜீரண மண்டலமும் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் இதயமும் சிறுநீரகமும் செயல்படுவதற்குத் தேவையான ஊட்டச்சத்தை உணவில் இருந்து எடுத்துக் கொடுக்கும் பணியை ஜீரண மண்டலம்தான் செய்கிறது.

ஜீரண மண்டலத்தில் பிரச்சினை என்றால் மற்ற உறுப்புகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். ஜீரண மண்டலத்தில் உள்ள எல்லா உறுப்புகளிலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வாயில் தொடங்கி மலக்குடல் வரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். வாய், நாக்கு, உணவுக் குழாய், இரைப்பை, கல்லீரல், கணையம், பித்தப் பை, சிறு குடல், பெருங்குடல் என எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம்.

நம் நாட்டில் சிறுகுடல் புற்றுநோய் மிக அரிதாகக் காணப்படுகிறது. அதுபோல் பெருங்குடல் புற்றுநோயைப் பொருத்தவரை, மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் இது குறைந்து காணப்படுகிறது.

உணவுக் குழாய், இரைப்பை, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. நமது தட்பவெட்ப நிலைக்கு மாறான உணவுப் பழக்க வழக்கம், மது, புகைப் பழக்கம் (புகையிலை போடுவதும்) தவிர ஹெபடைடிஸ் பி, சி வைரஸ்யால் ஏற்படும் மஞ்சள் காமாலை போன்றவை புற்றுநோய் வருவதற்கான காரணங்கள். நாள்பட்ட பெருங்குடல் வியாதியாலும் புற்றுநோய் வரலாம். சிலருக்குப் பாரம்பரியக் காரணங்களாலும் புற்று நோய் வரக்கூடும்.

புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள் என்ன?:
பசியின்மை, எடை குறைதல், சோர்வு, ரத்த சோகை போன்றவை பொதுவான அறிகுறிகள். இதுதவிர, எந்த இடத்தில் புற்றுநோய் வருகிறதோ அந்த இடத்துக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படுவதுண்டு.

உணவுக்குழாய் புற்றுநோய்:

  1.  நீர் மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம்;
  2.  தீராத முதுகு வலி;
  3.  பசியின்மை;
  4.  ரத்த சோகை.

இரைப்பை புற்று:

  1. வயிற்றுப் பொருமல்;
  2. வயிற்றின் மேல் பாகத்தில் வலி;
  3. ரத்த வாந்தி;
  4. சாப்பிட்ட பல மணி நேரம் கழித்து ஜீரணம் ஆகாமல் வாந்தி எடுத்தல்.

சிறுகுடல் புற்றுநோய்:

  1.  வயிற்று வலி;
  2.  வயிற்றில் வீக்கம்;
  3.  தீராத வாந்தி;
  4.  வயிற்றுப் பொருமல்.

பெருங்குடல் புற்றுநோய்:

  1.  ரத்த சோகை;
  2.  மலத்தில் ரத்தம்;
  3.  வயிற்று வலி;
  4.  வயிறு வீக்கம்.

கல்லீரல் புற்று:

  1.  வயிற்றின் மேல் பாகத்தில் வலி;
  2.  மஞ்சள் காமாலை;
  3.  கல்லீரல் வீக்கம்;
  4.  வயிறு வீக்கம்.

கணையப் புற்று:

  1. தீராத வயிற்று வலி;
  2. வயிற்றில் பொருமல்;
  3. முதுகு வலி,
  4. திடீரென சர்க்கரை வியாதி வருதல்.

உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்:

உணவு விழுங்குவதில் சிரமம், வயிற்றில் கட்டி, ரத்த வாந்தி, மலத்தில் ரத்தம், தீவிர எடை குறைதல், மஞ்சள் காமாலை, பசியின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று தக்க ஆலோசனை பெறவேண்டும்.

அறிகுறிகள் மற்றும் உடல் பிரச்சினைகளின் அடிப்படையில் முழு உடல் பரிசோதனை செய்வது மிக முக்கியம். அறிகுறிகள் கொண்டு எந்தப் பாகத்தில் புற்றுநோய் உள்ளது என கணித்து அதற்குரிய பரிசோதனை செய்தால் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது; எவ்வளவு தூரம் பரவி உள்ளது. எந்த சிகிச்சை முறையை கையாண்டால் பலன் கிட்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பரிசோதனைகள்:

ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எண்டாஸ்கோப்பி முறைகள், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் “நிக்யூளியர் போன் ஸ்கேன்’ (Nuclear Bone Scan)  ஆகிய பரிசோதனைகள் மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம். எல்லா நோயாளிகளுக்கும் எல்லாப் பரிசோதனைகளும் செய்ய வேண்டியதில்லை. அவர்களது பிரச்சினைக்கு ஏற்ப தகுந்த பரிசோதனைகள் மூலம் புற்றுநோயைக் கண்டறியமுடியும்.

நவீன மாற்றங்கள்:

இருபது ஆண்டுக்கு முன்பு புற்றுநோய் உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். சாதாரண எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் பேரியம் எக்ஸ்ரே பரிசோதனைகள் மூலம்தான் ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தது.

இதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பலர் இறக்கும் தருவாயில்தான் நோய் இருப்பதையே கண்டுபிடிக்க முடியும். வியாதி என்ன என்று கண்டுபிடிப்பதற்கே அறுவைச் சிகிச்சை செய்யும் நிலை இருந்தது.

இதனால் புற்றுநோய்க்கு சிகிச்சையே இல்லை என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி காரணமாக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடிகிறது. எந்த புற்றுநோய்க்கு என்ன சிகிச்சை என துல்லியமாகத் தேர்வு செய்யமுடிகிறது.
எண்டோ அல்ட்ரா சோனோகிராபி: உணவுக் குழாய், மலக்குடல், பித்தப் பை, கணையம் ஆகிய உறுப்புகளில் உள்ள புற்று நோயைத் துல்லியமாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எண்டோ அல்ட்ரா சோனோகிராபி என்ற கருவி உள்ளது. இதில் ஸ்கேனும் எண்டாஸ்கோப்பியும் இணைந்து செயல்படும்.

புற்று நோய் எந்த அளவில் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அறுவைச் சிகிச்சைக்குத் தகுந்தவர்தானா எனத் தெரிந்துகொள்ளலாம்.

விடியோ எண்ட்ராஸ்கோப்பி:

சிறுகுடல் முழுவதும் நேரடியாகப் பார்த்து புற்று இருந்தால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க விடியோ எண்ட்ராஸ்கோப்பி உதவுகிறது.
பொதுவான சிகிச்சை முறைகள்: புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து முழுவதும் அகற்றுவதே சிறப்பான சிகிச்சை. இந்த வகையில் அறுவைச் சிகிச்சை முறையே புற்றுநோய் சிகிச்சைக்குச் சிறந்தது.

உணவுக் குழாய் புற்று, வாய்ப் புற்று போன்ற சில வகை புற்றுநோய்களுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கலாம். சில வகை புற்று நோய்களுக்கு ரேடியோதெரபி, ஹீமோதெரபி என கதிரியக்க முறையோடு மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

சில புற்றுநோய்க் கட்டிகளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு தொடர்ந்து கதிரியக்க சிகிச்சை கொடுக்க வேண்டியதிருக்கும். பாலிஃபெக்டமி என்ற முறையால் எண்டாஸ்கோப்பி மூலம் பெருங்குடலில் ஏற்படும் சதை வளர்ச்சியை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய முடியும்.

கூட்டு சிகிச்சை:

பொதுவாக புற்றுநோய் உள்ளவர்களுக்கு எல்லா முறையும கலந்து செய்யக் கூடிய கூட்டு சிகிச்சைதான் சிறந்தது. எண்டாஸ்கோப்பி சிகிச்சை, அறுவைச் சிகிச்சை என எல்லா வழிகளையும் கடைப்பிடித்து புற்றுநோய் திசுக்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.

புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை அளித்து முற்றிலும் குணப்படுத்திவிடலாம். ஆனால் பலர் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர். எனவே ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

வலி இல்லாமல் வாழ:

சரி புற்று நோய் முற்றிவிட்டது. இனி குணப்படுத்த முடியாது எனத் தீர்மானத் தெரிந்துவிட்டது. சரி, அவர்களை அப்படியே விட்டுவிடலாமா. நிச்சயம் கூடாது. இருக்கும் நாள் வரை வலி இல்லாமல் மிகச் சிரமப்படாமல் கூடிய வகையில் வாழ்நாளைக் கூட்டிக் கொடுத்து நல்ல வாழ்க்கைச் சூழலை (Quality of life) ஏற்படுத்திக் கொடுப்பது டாக்டரின் கடமை. இதை ஆங்கிலத்தில் Palliative Treatment என்று கூறுகிறோம்.

எண்டோஸ்கோப்பி:

ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோய் மற்றும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதில் எண்டோஸ்கோப்பி பிரசித்து பெற்றது. வயிற்றைத் திறந்து சிகிச்சை அளிக்கத் தேவையில்லை. தீவிர மயக்க மருந்து தேவையில்லை. ஓரிரு மாதக் குழந்தை முதல் 100 வயது வரை எல்லா வயதினருக்கும் சிகிச்சை அளிக்கலாம்.

இதயம், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும் இத்தகைய சிகிச்சை முறைகளை எளிதாகக் கையாளலாம்.

உணவு, உமிழ் நீர் கூட விழுங்க முடியாத முற்றிய உணவுக் குழாய் புற்றுநோய்க்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சையே சிறந்தது. எண்டோஸ்கோப்பி கருவி கொண்டு பலூன் மூலம் உணவுக் குழாயை விரிவடையச் செய்து செயற்கைக் குழாய் பொருத்தி அடுத்த நாளே உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படுத்த முடிகிறது.

இரைப்பை, குடல் அடைப்பை நீக்கவும் எண்டோஸ்கோப்பி மூலமாக சிகிச்சை தர முடியும். பித்தக் குழாய் புற்றுநோயால் தீவிர மஞ்சள் காமாலை ஏற்பட்டவர்களுக்கு எண்டோஸ்கோப்பி மூலமாக புதிய செயற்கைக் குழாய் பொருத்தி மஞ்சள் காமாலையைக் குறைத்து சிகிச்சை அளிக்கலாம்.

பித்தக்குழாயில் புற்றுநோய் உள்ளவர்களுக்கு அரிப்பு, ரத்தக் கசிவு, சோர்வு, மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. செயற்கைக் குழாய் பொருத்தியவுடன் அரிப்பு நின்றுவிடுவதுடன் ரத்தக் கசிவு நின்றுவிடும், பசி ஏற்படும். மஞ்சள் காமாலை போய்விடும்.

கணையத்தில் புற்றுநோய் இருந்தாலும் தீராத வயிற்று வலி, மஞ்சள் காமாலை, பசியின்மை, சோர்வு ஏற்படும். கணையம் வழியாக பித்தக் குழாய் வருவதால் கணையத்தில் உள்ள புற்றுநோயால் பித்த நீர் செல்வது தடை படுகிறது. எண்டோஸ்கோப்பி மூலம் செயற்கை குழாய் பொருத்தி பித்தநீர் செல்ல வழி செய்யப்படுகிறது.

  •  சோர்வு, பசியின்மை, எடை குறைதல், ரத்த சோகை ஆகியவை புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள்.
  •  உணவுக்குழாய் முதல் கணையம் வரை உடலில் இடத்துக்குத் தகுந்தவாறு புற்றுநோய் அறிகுறிகள்மாறுபடும்.
  •  உணவு விழுங்குவதில் சிரமம், மலத்தில் ரத்தம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் செல்லுங்கள்.

நன்றி: தினமணி