Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,925 முறை படிக்கப்பட்டுள்ளது!

30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் ?

இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு குழந்தை பெத்துக்கக் கூடாது. முதல்ல லைஃப்ல செட்டில் ஆயிடணும். சின்னதா ஒரு அப்பார்ட்மெண்டாவது வாங்கணும். அப்புறம் தான் குழந்தையைப் பற்றி யோசிக்கணும். இது தான் பெரும்பாலான இளசுகளின் சிந்தனை. முன்பெல்லாம் கல்யாணம் முடிந்த பத்தாவது மாதம் கையில் குழந்தை இல்லையென்றால் கொஞ்சம் நக்கலாய்ப் பார்ப்பார்கள். இப்போ நிலமை தலை கீழ். “என்னடா அதுக்குள்ள அப்பாவாயிட்டே” என கிண்டல் தான் வரும்.

திருமணத்தையே முப்பது வயதுக்கு மேல் வைத்துக் கொள்ளத் தான் பலரும் விரும்புகிறார்கள். லைஃபை என்ஜாய் பண்ணணும், சம்பாதிக்கணும், ஹாயா இருக்கணும். இதை இளம் வயதினர் தங்கள் தேசிய கீதமாகவே ஆக்கிவிட்டார்கள். இப்படி திருமணத்தைத் தள்ளிப் போட்டு, அப்புறம் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவது ரொம்பவே ஆபத்து என எச்சரிக்கின்றன அடுக்கடுக்காய் வரும் ஆராய்ச்சிகள்.

இளம் வயதில் அப்பாவாகி விடுபவர்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. வயதான பின் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடுகிறது. அவர்கள் நோஞ்சான்களாகவோ, டல்லடிக்கும் பிள்ளைகளாகவோ வளர்கிறார்கள். அவர்களுடைய மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் ஒழுங்கற்ற தன்மை வந்து விடுகிறது. எனும் நிஜம் திகைப்பூட்டுகிறது.

இதைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்ய களமிறங்கியது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம். அதனுடன் கைகோர்த்துக் கொண்டது இங்கிலாந்தின் கோபன்ஹாகன் மருத்துவமனை. இதற்கு நிதியுதவி செய்தது வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பும், டானிஷ் புற்று நோய் குழுவும்.

அவர்கள் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சிகரமானது. மருத்துவ உலகில் கண்களில் விரலை விட்டு ஆட்டும் பல்வேறு நோய்களுக்கான மர்ம முடிச்சை அது அவிழ்த்திருக்கிறது. அதாவது ஆண்கள் வயதாகும் போது அவர்களுக்கு பெனிங் விரை புற்றுநோய் எனும் ஒரு நோய் வந்து விடுகிறது. இந்த நோயை ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ் என்கிறது மருத்துவம். இது ஆபத்தான புற்று நோய் என்று அலறாதீர்கள். இது இருப்பதே கூட பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.

அமைதியாக குட்டிக் குட்டியாக இருக்கும் இந்த புற்று நோய் அணுக்கள் ஜெம் செல்களில் பாதிப்பை உருவாக்கி விடுகின்றன. இந்த ஜெம் செல்கள் தான் உயிரணுக்களை உருவாக்க வேண்டும். அப்படி அவை உயிரணுக்களை உருவாக்கும் போது இந்த நோயின் தாக்கமும் உயிரணுவில் பதிவாகி விடுகிறது. அந்த பாதிப்பு பிறக்கும் குழந்தைகளின் டி.என்.ஏக்களில் சைலண்டாய் போய் அமர்ந்து கொள்கிறது. குழந்தை வளர வளர இந்த டி.என்.ஏ தனது சுய ரூபத்தைக் காட்டுகிறது. இது தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியில் விரும்பத் தகாத மாற்றங்கள் உருவாகக் காரணம். குழந்தை இறந்தே பிறப்பதற்கும் கூட இது ஒரு காரணமாகி விடுகிறது.

மிகச் சிறிய துணிக்கைகளாக இந்த புற்று நோய் ஆரம்பமாகிறது. வயதாக வயதாக இந்த செல்கள் பலுகிப் பெருகுகின்றன. விளைவு ? உயிரணுக்களும் அதிக அளவில் பாதிப்படைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் இந்த உயிரணுக்களால் உருவாகும் குழந்தைகள் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றன. வயதான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பொதுவான நோய்கள் வர இதுதான் காரணம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ வில்கீ. பிறவிச் சிக்கல்களுக்கும் விரை புற்று நோய்க்கும் இடையேயான தொடர்பை விளக்கும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த பாதிப்பினால் வரும் நோய்களின் பட்டியல் அதிர்ச்சியூட்டுகிறது. அக்கோண்ரோபிளாசியா எனப்படும் நோய் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதித்து குள்ளமாக்கி விடுகிறது. அபெர்ட் எனப்படும் நோய் ஒழுங்கற்ற முகம், ஒழுங்கற்ற கை, கால்களைக் குழந்தைக்குத் தந்து விடுகிறது.  நூனன் சிண்ட்ரோம் எனப்படும் நோய் குழந்தைகளை குறுகிய கழுத்து, கோணலான முகம், கூடு கட்டும் நெஞ்சு என ஊனமாக்கி விடுகிறது. கேஸ்டிலோ சிண்ட்ரோம் எனப்படும் நோய் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் உடலில் தேவையற்ற தோல், வலுவற்ற மூட்டுகள், சமநிலையற்ற ஹார்மோன் வளர்ச்சி என ஏகப்பட்ட சிக்கல்கள். லேட்டாக குழந்தை பெற்றுக் கொள்வது எனும் சிம்பிள் மேட்டர் தான் இத்தகைய அச்சுறுத்தும் நோய்களுக்கெல்லாம் காரணம் என்பது தான் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

நேச்சர் ஜெனடிக்ஸ் எனும் புத்தகம் இந்த ஆராய்ச்சியின் முழு தகவல்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது. இப்போது இந்த ஆராய்ச்சி மேலும் சில நோய்களின் மூலத்தை அறிய களமிறங்கியிருக்கிறது. அதில் முக்கியமான மூன்று நோய்கள் ஆட்டிஸ்ம், ஸ்கிட்ஸேப்ரேனியா மற்றும் மார்பகப் புற்று நோய்.

ஆட்டிஸ்ம் ( autism) என்பது  மூளையைத் தாக்கும் நோய். இந்த நோய் வரும் குழந்தைகள் சுமார் மூன்று வயது வரை வெகு சாதாரணமாய் இருப்பார்கள். அதன் பின் குழந்தையின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரியும். இத்தகைய குழந்தைகளிடம் வந்து சேரும் பிரச்சினைகள் கவனச் சிதைவு, ஒரே போன்ற செயல்களைச் செய்து கொண்டே இருப்பது, உற்சாகம் இல்லாமை, பேசுவதில் பிரச்சினை போன்றவை. இந்தக் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்தவும் செய்வார்கள்.

ஸ்கிட்ஸேப்ரேனியா (Schizophrenia) என்பது மூளையின் செயல்பாடுகளில் இயல்பற்ற நிலையை உருவாக்கும் ஒரு நோய். இந்த நோய் வந்த குழந்தைகள் எதையெதையோ பிதற்றுவார்கள், ஏதேதோ கதைகள் சொல்வார்கள். அவர்களுடைய சிந்தனை, பழக்கம் எல்லாவற்றிலும் பளிச் என வேறுபாடு தெரியும். இந்த நோய்கள் வரக் காரணம் இந்த ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ்  அல்லது இது போன்ற வேறு ஏதோ ஒன்று என்பதே ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.

முன்பெல்லாம் குழந்தைப் பிறப்புக்கு பெண்களின் வயது தான் முக்கியம் என்பார்கள். ஆண்களென்றால் எந்த வயதில் வேண்டுமானாலும் அப்பாவாகலாம் என மீசை முறுக்கினார்கள். ஆனால் சமீப காலமாக வருகின்ற ஆராய்ச்சிகள் ஆண்களின் முறுக்கு மீசையில் மண் அள்ளிப் போடுகின்றன. இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி முப்பது வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறது. நாற்பதைத் தாண்டி விட்டால் குழந்தைக்கு பெரிய பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கிறதாம்.

இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதே நல்லது. குறிப்பாக உயிரணுக்களின் இயக்கமும், வலிமையும் இளமையில் ஆரோக்கியமாக இருக்கின்றன. எனவே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது, பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. வயதான ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமாகக் குறைகின்றன. நவீன தம்பதியரில் ஐந்தில் ஒரு தம்பதியருக்கு கருத்தரிப்பதில் தாமதம் நிலவுகிறது என்பது அதிர்ச்சிகர உண்மை!.

வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் முன்னிருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டால், குடும்ப ஆனந்தம் பின் இருக்கைக்குத் தள்ளப்பட்டு விடும். இந்த கசப்பான உண்மையையே இந்த ஆராய்ச்சிகள் அதிர்ச்சியுடன் விவரிக்கின்றன.

நன்றி : ஜூனியர் விகடன்