கீரனூரி ஹழரத் விடைபெற்றார்கள்!

  • எனது மௌத் எங்கு நிகழ்ந்தாலும், அந்த இடத்தருகே உள்ள கப்ருஸ்தானில் சீக்கிரமே அடக்கிவிடவேண்டும்.
  • என் மீது பாசமுள்ள ஆலிம் தொழவைக்க வேண்டும். கப்ருக்கு எந்த அடையாளமும் வைக்க வேண்டாம்.
  • வீட்டாளர்களும் பிறரும் முடிந்தவர்கள் தானதர்மங்கள் – துஆ செய்ய வேண்டுகிறேன்.

என்று முன்பே எழுதிவைத்துவிட்டு, முஹர்ரம் ஆஷுரா நோன்புடன் அல்லாஹ்வின் அழைப்பில் மீண்ட திண்டுக்கல் யூசூபிய்யா மதரஸா முதல்வர் அல்லாமா ஜலீல் அஹ்மது கீரனூரி ஹழரத் அவர்கள் சமுதாயத்துக்கு, தம் வாழ்நாளில் ஆற்றிய அரும்பணிகளைப் பட்டியலிடமுடியாது.

நெஞ்சில் தைரியமும், குரலில் கம்பீரமும் வார்த்தைத்தெரிவில் தெளிவும் மேவ அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் உலகில் பல இடங்களில் ஆற்றிய உரைகள் மறக்க முடியாதவை.

இந்தத் தலைமுறை உலமாக்களில் அவர்களது பாணி தனித்துவமானது. அரபிக்கல்லூரிகளில் பேராசிரியாகக் கடமையாற்றிக் கொண்டே, தப்லீக் ஜமாஅத்தைத் தங்களது செயல்பாட்டுத் தளமாகத் தேர்வுசெய்துகொண்ட அன்னார் தமிழில் மட்டுமல்ல, அரபி மொழியிலும் உரையாற்றும் திறன் படைத்திருந்ததால் அவர்களது களப்பணி வீச்சு குறிப்பிடத் தக்கதாக இருந்தது.

சென்ற ஆண்டு பல மூத்த ஆலிம்களையும், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சில ஆலிம்களையும் சமுதாயம் இழந்தது. தான் நாடிய நேரத்தில் தன்னிடம் அழைத்துக் கொள்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது.

அதனைப் பொருந்திக் கொள்கிறோம். அன்னாரின் ஆசைப்படியே அவர்களது ஹக்கில் நாம் துஆ இறைஞ்சுகிறோம். இந்த வேளையில் சமுதாயத்துக்கு சில செய்திகளையும் முன்வைக்க விரும்புகிறோம்.

காலங்காலமாக ஆலிம்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். சமுதாயம் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுப்பதை மனநிறைவுடன் பெற்றுக் கொண்டு பெரும்பாலும் மௌனப்பசியாளிகளாகவே வாழ்ந்து மறைகிறார்கள்.

நம் வாழ்நாளில் வாழ்ந்த -நம்மோடு பழகிய- நமக்கு ஈமான் இஸ்லாம் சொல்லிக் கொடுத்த- ஆலிம் பெருமக்களை ஒரு விநாடி நினைவுக்குக் கொண்டு வாருங்கள்!

  • அவர்கள் செல்வச் செழிப்பில் மிதந்தார்களா?
  • தாங்கள் படும் துன்பங்களைப் பிறரிடம் சொல்லிப் புலம்பினார்களா?
  • தங்களது வாரிசுகளுக்கு கோடிகோடியாக சேமித்துவைத்துவிடவேண்டும் என்று ஆசைப்பட்டார்களா?
  • சொல்லாண்மை மட்டுமல்ல; ஆன்றாண்மையும் மிகைத்திருந்தும் – அரிய திறமைகள் பல செரிந்திருந்தும் அவர்கள் தாங்கள் கற்றதையும், தங்களது கல்பில் அல்லாஹ் உதிக்க வைத்த அரிய தெளிவுகளையும் அமைதியாக மாணவர்களின் – பொதுமக்களின் கல்பில் பதிப்பதையே கடமையாகக் கொண்டு ஊர் ஊராகச் சென்று முழங்குவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நிறைவு செய்தார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

இதில் நமக்குப் படிப்பினை இருக்கிறது.

அல்லாஹ் தம்மைப் படைத்ததன்- மார்க்கக் கல்வியை மனதில் விதைத்ததன்-  பிரதான நோக்கத்தைப் பூரணப்படுத்திய சான்றாண்மை அவர்களது இம்மை வாழ்வில் ஒளிர்கிறது, இல்லையா?

கடந்த 100 ஆண்டுகளில் நம்முடன் வாழ்ந்து மறைந்த உலமாப் பெருமக்களின் இம்மை வாழ்வைத் தொகுப்பதும், அவர்கள் விட்டுச் சென்ற பிரசுரிக்கப்படாத நூல்களைப் பதிப்பிப்பதும் அவற்றை, பரந்த மக்கள் பார்வைக்கு எடுத்துச் செல்வதும் சமுதாயத்தின் பிரதானக் கடமையாகிறது.

அல்லாமா கீரனூரி ஹழரத் அவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக்கொள்ள துஆ செய்யும் அதே வேளையில் இதுபற்றியும் சிந்திப்போமாக!

நன்றி: நர்கிஸ்  – துணைத் தலையங்கம் – பிப்ரவரி – 2011