பி.பி.சியில் வெளியான ஆவணப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. குறிப்பிட்ட ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் போலியானவைதான் என அதன் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்கவுள்ளார்.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவது தொடர்பான டாக்குமென்ட்ரியில் இடம்பெற்ற சில காட்சிகளே போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் இந்தியாவின் பங்களுரு நகரிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் படம்பிடிக்கப்பட்டதாக ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது.
இதிலுள்ள பெரிய வேடிக்கை என்னவென்றால், குறிப்பிட்ட இந்த டாக்குமென்ட்ரி, ஒரு விருதையும் பெற்றுள்ளது.
பிரபல விற்பனை செயினான பிரிமார்க்கில் விற்கப்படுவதற்காக, இந்தியாவில் ட்ரெஸ்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் 3 சிறுவர்கள் வேலை செய்வதுபோல காட்சிகள் அமைந்திருந்தன.
பிரிமார்க் நிறுவனத்துக்கு உலகெங்கும் 220 ரீடெயில் விற்பனை ஸ்டோர்கள் உள்ளன. இவற்றில் 152 ஸ்டோர்கள் பிரிட்டனில் உள்ளன.
இந்த டாக்குமென்ட்ரி பி.பி.சி.யில் ஒளிபரப்பானபின் பிரிமார்க் நிறுவனத்துக்கு பொதுநல அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. நிறுவனத்தின் ஆடை விற்பனை வீழ்ச்சியடைந்தது.
தற்போது, விசாரணையில் தெரியவந்த விபரங்கள் ஆச்சரியமானவை.
டாக்குமென்ட்ரியில் காண்பிக்கப்பட்ட டிரெஸ்கள், உண்மையில் பங்களுருவிலுள்ள தொழிற்சாலையில் தயாரானவையே அல்ல! இன்னமும் சொல்வதானால், அவை கர்நாடக மாநிலத்தில் தயாரானவைகூட அல்ல!
தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலையில் தயாரானவை.
விசாரணையின்போது, நிகழ்ச்சித் தயாரிப்பாளர் (டான் மக்டூகல்) பொள்ளாச்சியிலுள்ள வியாபாரி ஒருவரிடமிருந்து அந்த டிரெஸ்களை வாங்கி வந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தார்கள். பொள்ளாச்சியில் பிரிமார்க் டிரெஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏதுமில்லை.
இதையடுத்து, பொள்ளாச்சி வியாபாரி விசாரிக்கப்பட்டார்.
அப்போதுதான், பொள்ளாச்சி வியாபாரிக்கு இந்த டிரெஸ்கள், பொள்ளாச்சிக்கு அருகே அமைந்திருக்கும் திருப்பூரிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வாங்கப்பட்டவை என்ற விஷயம் தெரியவந்தது. (திருப்பூர் தொழிற்சாலை இப்போது சிக்கலில். காரணம், பிரிமார்க் ஒப்பந்தப்படி, இவற்றை இந்தியாவுக்குள் விற்பனை செய்ய முடியாது!)
இந்த டிரெஸ்களை எடுத்துச்சென்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பங்களுருவில் 3 சிறுவர்களிடம் அவற்றைக் கொடுத்து, அவற்றை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். இப்படித்தான், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள், கார்மென்ட் தொழிற்சாலையில் வேலை செய்வதான காட்சி படமாக்கப்பட்டது.
விசாரணையில் இந்த விபரங்கள் வெளியானதில், பி.பி.சி. மிகவும் அவமானத்துக்குரிய நிலைக்குச் சென்றிருக்கிறது.
நன்றி: விறுவிறுப்பு.காம்