நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடை பயிற்சிதான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது ‘வாக்கிங் போங்க’ என்பதாக உள்ளது.
‘வாக்’ பண்ணும்போது கவனிக்க வேண்டியவை குறித்து, சேலம் பரத் பிசியோகேர் மையத்தின் நிர்வாக இயக்குநரும், பிசியோதெரபி ஸ்பெஷலிஸ்ட்டுமான எம்.செந்தில்குமாரிடம் கேட்டோம்.
”எப்படி நடக்க வேண்டும் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதனால், நடையின் பலனும் முழுமையாக கிடைக்காமல் போய்விடுகிறது. பொதுவாக நாற்பது வயதானாலே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. அந்த வயதில்தான், பலரும் நடைப்பயிற்சி செய்கிறார்கள். நடைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வாக்கிங் போவதன் மூலம் நல்ல ஆரோக்கியமாய் இருப்பதுடன் இளமையுடனும் இருக்க முடியும்” என்றவர் நடைப் பயிற்சிக்கான வழிமுறைகளையும் விளக்கினார்.
”ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்கவேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ. நடக்க ஆரம்பித்து, நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம். இது ஆண்களுக்கு 92-102 பாத அடியாகவும், பெண்களுக்கு 91-115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால்தான் ஆண்களுக்கு இணையாக கடக்க முடியும். நடைப்பயிற்சியின்போது, வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.
சாப்பிட்ட உடனே நடக்காமல் இதனால் தசை மற்றும் மூட்டுகள் நடைப்பயிற்சிக்கு தயாராகிவிடும்.
மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி, கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.
சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று, பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஷாக்ஸ், ஷூ (அ) செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க «வண்டும்.
சுமார் 350 மைல்களுக்கு மேல் நடக்கும்பட்சத்தில், ஷூவை மாற்ற வேண்டும். ஷூ ஒரு பக்கம் தேய்ந்து, தொடர்ந்து நடக்கும்போது, மொத்த உடல் எடையும் ஒரு பக்கமாக சாயும். இதனால், கால் முட்டி, பாதத்தில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறுகிய வட்டத்துக்குள் நடப்பதை தவிர்ப்பதன்மூலம் இடுப்பு, முதுகு வலி வராமல் தடுக்கலாம்.
சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், எப்போதும் கையில் சாக்லெட்டும், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாட்டிலில் தண்ணீரும் எடுத்துச் செல்வது அவசியம். பனி, குளிர் காலத்தில் ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் அணிந்து வாக்கிங் செல்ல வேண்டும். வயதில் மூத்தவர்கள் மாடிப்படி ஏறி, இறங்குவதைத் தவிர்த்து, சமதளத்தில் நடப்பது நல்லது” என்ற பிசியோதெரபிஸ்ட் செந்தில்குமார், நடையின் நன்மைகளையும் பட்டியலிட்டார்.
”ரத்த ஓட்டம் சீராகும். உடலில் இருக்கும் தேவையற்ற நீர் வெளியேறும். நுரையீரல் சீராக செயல்பட்டு சுவாச நோய்கள் வராமல் தடுக்கப்படும். கொழுப்பின் அளவு குறையும். புத்திக் கூர்மை, நோய் எதிர்ப்பு சக்தி, ஞாபக சக்தி கூடும்” என்று முடித்தார்.
நன்றி: அமீன்