Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,618 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 19

இந்தக் காலத்தில் வாழ்க்கையின் வெற்றி என்பது சேர்த்து வைக்கும் செல்வத்தையும், சொத்துகளையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிறைய சம்பாதிப்பவன், நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பவன் வெற்றியாளன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் கருதப்படுகிறான். அதனாலேயே வாழ்க்கையின் ஓட்டம் முழுவதுமே பணம் சேர்ப்பதற்கான ஓட்டமாகி விடுகிறது.

நமக்கு வேண்டிய அளவு இருந்தாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு செல்வம் இருந்தாலும் அதை விட அதிக அளவு சம்பாதிப்பவனையும், சேர்த்து வைத்திருப்பவனையும் பார்த்தால் நம் திருப்தி காணாமல் போகிறது. நம்மை விட அதிகமாக உலகம் அவனை மதித்தால் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் பின் தங்கி விட்ட பிரமை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே நம் வேகத்தை இரட்டிப்பாக்கி நாமும் ஓடி அவனை முந்தப் பார்க்கிறோம். அப்படி முந்தி விடும் போதாவது திருப்தியுடன் நிற்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அந்த நேரத்தில் நம்மை முந்தி சென்று கொண்டிருக்கும் இன்னொருவன் நம் கண்களில் படுகிறான். வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறோம். இந்தப் பைத்தியக்கார ஓட்டம் கடைசி வரை நிற்பதேயில்லை.

பசிக்கிற அளவுக்கு சாப்பிடுவது இயற்கை. அது தேவையும் கூட. ஆனால் அதிகமாக சாப்பிடுகிறவனைத் தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்ற ஒரு நிலை இருந்து, அதற்காக அசுரப்பசியை ஏற்படுத்திக் கொண்டு, அதைத் தீர்க்க சாப்பிட்டுக் கொண்டே போனால் அஜீரணம், வாந்தி முதலான உபாதைகள் ஏற்படுவது மட்டுமல்ல, ஒரு வடிகட்டிய முட்டாளாக நடந்து கொள்கிறோம் என்பதும் நமக்கும் புரியலாம். ஆனால் இதையே நாம் வேறுபல விஷயங்களில் செய்கிறோம் என்றாலும் அந்த முட்டாள் தனம் நமக்குப் புரிவதில்லை.

செல்வம் மிக முக்கியம் தானே, நம் வாழ்விற்கு ஆதாரம் தானே, அப்படி இருக்கையில் அதிகமாக அதைத் தேடி அடைவது தானே வெற்றி, அது தானே புத்திசாலித்தனம் என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அவை எல்லாம் நியாயமானதாகவும் நமக்குத் தோன்றலாம். செல்வம் தேடுவது தவறல்ல. அதை அதிகமாகத் தேடி அடைவதும் தவறல்ல. தவறு எங்கே தெரியுமா நிகழ்கிறது அதற்கு நம் வாழ்க்கையில் நாம் தரும் விலையில் தான்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இளம் தம்பதியரை உதாரணமாகப் பார்ப்போம். அவர்கள் இருவரும் சாஃப்ட்வேர் இன்ஜீனியர்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். காலையில் இருந்து இரவு வரை வேலை பார்க்கிறார்கள். சமைக்க ஆள் இருக்கிறது. குழந்தையைக் கவனித்துக் கொள்ள ஆளிருக்கிறது. இருவரும் ஒரு ஃப்ளாட் வாங்கியாகி விட்டது. இரண்டு கார்கள் வாங்கியாகி விட்டது. விடுமுறை நாட்களில் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வெளியே எங்காவது பிக்னிக் போகிறார்கள். இரவு திரும்புகிறார்கள். விடுமுறை முடிந்து மறுநாள் பழையபடி ஓட்டம் ஆரம்பிக்கின்றது. அடுத்த விடுமுறை வரை இதே ஓட்டம் தொடர்கிறது.

இருவரும் இப்படி கடுமையாக உழைப்பதால் தான் மிக நல்ல பள்ளியில் அதிகமாக ஃபீஸ் கட்டி குழந்தையைப் படிக்க வைக்க முடிகிறது. அவ்வப்போது பெரிய ஓட்டல்களிற்கு சென்று சாப்பிட முடிகிறது. விலை உயர்ந்த ஆடைகளையும், பொருள்களையும் வாங்க முடிகிறது. வருடத்திற்கு ஒரு முறை காசைப் பற்றிக் கவலைப்படாமல் டூர் போக முடிகிறது. இதெல்லாம் அதில் அனுகூலங்கள்.

சரி இதில் எதையெல்லாம் விலையாகத் தருகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில் தரும் முதல் பலி ஆரோக்கியம். உடற்பயிற்சி செய்யவோ, நடக்கவோ நேரமில்லை. அதனால் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகிறது.

குழந்தையை நேரடியாகப் பார்த்துக் கொள்ள நேரமில்லை. அதனுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு. அதனால் அந்தக் குழந்தை வளரும் போது அதை ரசிக்கவோ, முழுமையாகப் புரிந்து கொள்ளவோ நேரமில்லை. மாலை நான்கு மணிக்கு வீடு வந்து சேரும் குழந்தை டிவி பார்த்துக் கொண்டோ, வீடியோ பார்த்துக் கொண்டோ பொழுதைப் போக்கும். இல்லா விட்டால் டியூஷன் போகும். சாவகாசமாக அதனுடன் இருக்கவோ, நெருக்கமாகப் பழகவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. குழந்தை வளர வளர அதனுடன் இருக்கும் இடைவெளியும் அதிகரிக்கிறது.

உறவுகள், வேலை சம்பந்தப்படாத நண்பர்கள் ஆகியோருடன் நெருங்கி இருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு.

உண்மையான எத்தனையோ திறமைகள் வேறும் இருக்கக்கூடும். அந்தத் திறமைகளில் ஈடுபடவோ, வளர்த்துக் கொள்ளவோ, அதில் நிறைவு காணவோ நேரமில்லை.

ஒரு நாள் உடல் ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டு டாக்டர்களிடம் அடிக்கடி ஓட நேர்கிறது. மருந்திற்கும், மருத்துவத்திற்கும் நிறைய செலவு செய்ய வேண்டி வருகிறது. பிள்ளை நெருக்கமாக இருப்பதில்லை. நெருங்கிய உறவுகளும் தூரப்பட்டு விடுகிறார்கள். டென்ஷன், டென்ஷன் என்று அது நாள் வரை ஓடிய ஓட்டத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள எதுவுமே செய்ய நேரமிருக்காததால் மனநிலையிலும் நிறைய பாதிப்புகள் இருக்கின்றன.

மொத்தத்தில் பணமும் பொருளாதார வசதிகளும் இருக்கின்றன. ஆனால்  ஆரோக்கியமும் இல்லை, நிம்மதியும் இல்லை, நேசிக்கும் ஆட்களும் இல்லை. இப்போதும் வெளியே இருந்து பார்ப்பவர்கள் பொருளாதார நிலைமையை மட்டும் பார்த்து இவர்களை வெற்றியாளர்கள் என்றே சொல்லலாம். இது தான் வெற்றியா? உயிர்வாழ எல்லாம் இருக்கிறது. ஆனால் நல்ல உணர்வுகளுடன் வாழ எதாவது இங்கே இருக்கிறதா? என்ன விலை கொடுத்து இவர்கள் எதைப் பெற்றிருக்கிறார்கள்?

இந்த சராசரி உதாரணத்தில் பணமும், தனிமையும் இருப்பதால் கெட்டுப் போக முடிந்த குழந்தைகளைச் சொல்லவில்லை. தேவையான நேரத்தில் பெற்றோரில் ஒருவர் கூட அருகில் இருக்காததால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனரீதியான நஷ்டங்களைச் சொல்லவில்லை. அதே போல் வயதான பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுவது பற்றியும் கூட சொல்லவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால் நிலைமை இன்னும் பூதாகரமாகத் தெரியும்.

ஆரோக்கியத்தை இளமையில் அலட்சியப்படுத்தி ஓயாமல் சம்பாதித்து நாற்பது வயதைத் தாண்டிய பிறகு சம்பாதித்ததை எல்லாம் மருத்துவத்திற்கு செலவு செய்வதுடன் உடல் உபாதைகளையும் தாங்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

குழந்தைகளின் பிஞ்சுப்பருவத் தேவைகளை அலட்சியப்படுத்தி விட்டு அந்த நேரத்திலும் சம்பாதித்து அவர்களுக்குக் கடைசியில் சேர்த்து வைப்பதில் பெருமை என்ன இருக்கிறது?

கஷ்டப்பட்டு டென்ஷனுடன் சம்பாதித்து விலையுயர்ந்த பொருள்களை வீட்டில் சேர்த்து வைத்து நிம்மதியை தொலைத்து விட்டால், அந்த வீட்டில் நிறைவுடன் நம்மால் வாழ முடியா விட்டால், அந்த வாழ்க்கையில் வெற்றி என்ன இருக்கிறது?

மொத்தத்தில் கண்களை விற்று சித்திரம் வாங்கி எதை ரசிக்கப் போகிறோம்?

வாழ்க்கையில் பணம், உடல் ஆரோக்கியம், மன நலம் மூன்றுமே சம அளவில் முக்கியமானவை. அதில் ஏதாவது ஒன்றை மட்டும் சம்பாதித்து மற்ற இரண்டை அலட்சியம் செய்தால் அது குறைபாடான வாழ்க்கையாகவே இருந்து விடும்; அதில் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் நாம் காண முடியாது. ஆனால் இந்தக் காலத்தில் பணம் ஒன்று மட்டுமே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தந்து விடும் என்று நம்பி ஏமாறுகிற போக்கை நாம் அதிகம் காண முடிகிறது. இது கண்களை விற்று சித்திரம் வாங்கும் போக்குத் தான். எனவே இந்த மூன்றுக்கும் சமமான முக்கியத்துவத்தை உங்கள் இளமையில் இருந்தே தரும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நிறைவான வாழ்க்கை வாழ்வீர்கள்!

நன்றி:  -என்.கணேசன்  – வல்லமை