Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,874 முறை படிக்கப்பட்டுள்ளது!

குளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்!

தமிழகத்தில் குளிர் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களும் முதியவர்களும் பனியின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர். மாலை 6 மணி தொடங்கிவிட்டாலே சில்லென்று வீசும் காற்றும், இரவில் கொட்டும் பனியால் வெளியில் நடமாடுவதை பலர் தவிர்த்துவருகின்றனர்.

உடல் நடுங்கும் குளிரால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.  ஒரு பக்கம் குளிர் வாட்டினாலும், அதனுடன் சேர்ந்து குளிர்கால நோய்களான சளி, இருமல், ஜூரம், ஆஸ்துமா பிரச்னைகளும் ஏற்படுவதால் சிகிச்சைக்காக டாக்டர்களிடம் கூடும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.

எப்போதுதான் பனிக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்குமோ? என்று சிலர் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.

நோய்க்கான காரணங்கள்: குளிர் காலத்தில் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. குளிரால் எந்த நோயும் ஏற்படுவதில்லை.

குளிர் காற்றில் இருக்கும் வைரஸ் கிருமிகள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை பாதிப்பதாலே நோய்கள் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் வைரஸ் கிருமியின் ஆயுள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதவாது, சாதாரணமாக நமது கைகளில் இருக்கும் வைரஸ் கிருமிகள் சுமார் 3 மணி நேரம் உயிருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், வைரஸ் கிருமிகள் எளிதில் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக கைகளை குலுக்கும்போது, நெருங்கிப் பழகுவதாலும் வைரஸ் கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.

நோய்களை தடுக்க:

  1. அவ்வப்போது கைகழுவ வேண்டும்.
  2. பேக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் பயன்படுத்தலாம்.
  3. மற்றவர்களை தொட்டுப் பேசுவதை தவிர்க்கலாம்.
  4. வைட்டமின் சி சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
  5. தினமும் தேன் சிறிது குடித்துவந்தால் வறட்டு இருமல், சளி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
  6. பனிக்காலம் தொடங்கியதும் டாக்டர்களின் ஆலோசனைப்படி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  7. பனியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வெளியில் செல்லும்போது காதுகளில் பஞ்சு அடைத்துக் கொள்ளலாம் அல்லது குல்லா, மப்ளர் பயன்படுத்தலாம்.
  8.  காட்டன் உடைகளை தவிர்க்கலாம்.
  9. உல்லன் ஸ்வெட்டர் பயன்படுத்தலாம்.
  10. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் பயன்படுத்தலாம்.
  11. குளிர்பானங்களை தவிர்க்கலாம்.
  12. ஈரம் அதிகம் உள்ள காய்கறிகளை தவிர்க்கலாம்.
  13.  காயவைத்து ஆறவைத்த சுடுநீரை குடிக்க வேண்டும்.

குளிர் காலத்தில் ஏற்படும் பிரச்னைக்கு எளிய தீர்வு!

குளிர் காலத்தில் ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பிரச்னையைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம் என சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குளிர் காலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த காற்றே இருப்பதால் சுவாச பிரச்னைகள் இருக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை சுவாச பிரச்னைகள் எளிதில் தாக்கும். மேலும் சரியான உணவுப்பழக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையும் குளிர்கால நோய்கள் உடனடியாக தாக்கும். குளிர்காலத்தில் டான்சில் பிரச்னையை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

எனவே குளிர்ச்சியான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்க்கவும். சாப்பிடுவதற்கு சிறிது நேரம் முன்பு வெளியில் வைத்திருந்து நன்றாக சுட வைத்து சாப்பிடவும். ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் கீரை வகைகளை குறைவாக உணவில் சேர்க்கவும். குளிர் காலத்தில் ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பதால் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதுவே சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் வருவதற்கு காரணம்.

குளிர் காலத்தில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்கள் உணவு வகைகள் சூடாக எடுத்துக் கொள்வது அவசியம். மசாலா வகை உணவுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் தான் இந்த காலத்துக்கு ஏற்றது. பருப்பு வகைகள், முட்டை, மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். பாலில் குறைந்தளவு சர்க்கரை மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் குடிப்பதன் மூலம் தொண்டை சார்ந்த பிரச்னைகள் குறையும்.

இதேபோல் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி சத்து உள்ள பழங்கள், காய்கள் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்ட சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பனிக்கால மூட்டு வலி

குளிர்காலத்தில் வயதானவர்கள்,பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டு வலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு, மெனோபாஸ் என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும்.

பனிக்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியை சமாளிப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன்.

உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடு வது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும் வேலையை மூட்டுகள் செய்கின்றன. மூட்டு நாண்களை அளவுக்கு அதிகமாக உபயோகித்தல் மற்றும் கிழிந்து போவதால் மூட்டு நாண் பிடிப்புகள் ஏற்பட்டு வலியை ஏற்படுத்துகிறது.

முழங்கால் மூட்டு மற்றும் பாதத்திலும் இது போன்ற பிரச்னை ஏற்படலாம். மூட்டுப்பை அலர்ஜி ஏற்படும் போதும் மூட்டுப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

எலும்பு, தசைநாண் மற்றும் தசை ஆகியவை மூட்டுகளுடன் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. மூட்டுகளின் அசைவால் ஏற்படும் அதிர்வுகளில் இருந்து காக்கும் வேலையை மூட்டுப்பைகள் செய்கின்றன. மூட்டுப் பைகளில் அலர்ஜி ஏற்படுவதால் அசைவு மற்றும் அழுத்தத்தின் போது வலி ஏற்படும். தோள்பட்டை, முழங்கை, இடுப்பு மூட்டுகளில் இந்த அலர்ஜி அதிகளவில் ஏற்படும்.

தசை நார்களில் உண்டாகும் அலர்ஜி காரணமாகவும் மூட்டுகளில் வலி, பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வலியை துவக்கத்தில் கவனிக்காமல் விட்டால் 3 மாதங்களுக்கு பின்னர் உடல் முழுவதும் வலி ஏற்படலாம்.

கால்களில் தசைப்பிடிப்பு, தசைகள் எலும்புகளு டன் இணையும் பகுதிகளில் தொடு வலி, தலைவலி மற்றும் இடுப்பு வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகளவில் வருகிறது. ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. இவர்கள் அதிக பதற்றத்தை விட்டு வேலைகளை நிதானமாக செய்யலாம். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதை தவிர்க்கலாம். சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்ற பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம்.

வயிற்று தசைகளுக்கு அவ்வப்போது பயிற்சி கொடுக்கலாம். வலிக்காக அன்றாட வேலைகளை முற்றிலும் தவிர்ப்பதும் தவறானதே.

நன்றி: தினகரன்