உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்களை மிகுந்த தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் இந்தப் பிரச்சனைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீர் கசிவு மற்றும் மகளிர் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.
* முதுமையில் நான்கில் ஒரு பெண்ணுக்கு சிறுநீரை அடக்க முடியாத பிரச்சனை இருக்கிறது. ஒரு காலத்தில் வயதானவர்களின் பிரச்சனையாக இருந்த இது, இன்று இளம் வயதினரையும் தாக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது 30 பிளஸ்சில் உள்ள பெண்களையும்…
* ‘‘இருமும் போது, தும்மும் போது, சிரிக்கும் போது, திரும்பி உட்கார்ந்தாலோ, திரும்பிப் படுத்தாலோ சில பெண்களுக்கு சிறுநீர் கசிவு உண்டாகும். இன்னும் சிலருக்கு உடனடியா சிறுநீர் கழித்தாக வேண்டிய உந்துதல் ஏற்படும். கழிவறைக்கு ஓடற வரைக்கும் கூடக் கட்டுப்படுத்த முடியாது.
* அடிக்கடி சிறுநீர் கழிக்கிறது, சிறுநீர் கழிக்கும் போது சிரமம், கர்ப்பப்பை இறக்கம், அரிதா சிலருக்கு மலத்தையும் அடக்க முடியாதது.. இதெல்லாம் மகளிர் சிறுநீரியல் பிரச்சனைகள்ல அடக்கம். முதலில் முதுமைல வந்திட்டிருந்த இந்தப் பிரச்சனை, இப்ப இளம் பெண்களுக்கும் வருது.
* இடுப்பெலும்பு தசைகள் பலவீனமாகிறது, சுகப்பிரசவத்துக்குப் பிறகு உண்டாகிற பலவீனம், நரம்புகள்ல உண்டாகிற பலவீனம், முதுமை, மெனோபாஸ் காரணமாக உண்டாகிற தசைகளோட தளர்ச்சி, கர்ப்பப்பை இறக்கம், கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைனு இந்தப்பிரச்னைகளுக்கான காரணங்கள் ஏராளம்.
* உளவியல் ரீதியா பெரிய சங்கடத்தைக் கொடுக்கிற பிரச்சனை இது. சிறுநீரை அடக்கவும் முடியாது. சிரமப்பட்டு அடக்கினாலும், அது இன்ஃபெக்ஷனை உண்டாக்கும். வெள்ளைப்படுதல், ரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். எந்த பொது இடத்துக்கும் போக முடியாது.
* போனதும் உடனே அவங்க தேடற இடம் கழிவறையாதான் இருக்கும். வேலைக்குப் போற பெண்களா இருந்தா, பிறந்த குழந்தைங்க உபயோகிக்கிற மாதிரியே பெரியவங்களுக்கான டயாப்பர் உபயோகிக்க வேண்டியிருக்கும். சிறுநீர் கசிஞ்சு, உடையெல்லாம் நாற்றமடிக்கும். அதனால எப்போதும் தனிமைலயே இருப்பாங்க.
* பலரும் நினைச்சிட்டிருக்கிற மாதிரி இது குணப்படுத்த முடியாததில்லை. பாதிக்கப்பட்ட பெண்களை முதல்ல எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறாங்கனு குறிக்கச் சொல்லுவோம். யூரோடைனமிக்ஸ்னு சொல்ற சோதனை செய்வோம்.
சிறுநீர் குழாய்லேர்ந்து, ஒருவித ரப்பர் குழாயைப் பொருத்தி, அதை கம்ப்யூட்டரோட இணைச்சு, பிரச்னையோட தீவிரத்தைக் கணக்கிடுவோம். சிலவித உடற்பயிற்சிகள், மிதமான மருந்துகள், தேவைப்பட்டா ‘ஸ்லிங்’னு சொல்லக் கூடிய அறுவை சிகிச்சை மூலமா இதைக் குணப்படுத்தலாம்…’’ என்கிறார்
நன்றி: தினகரன்