Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,128 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்வெட்டு – கிராமப்புறங்களில் அகோரம்..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! திண்டுக்கல், வேடசந்தூர், தேனி, உத்தமபாளையம், கம்பம், திருச்சி என்று ஒரு மின்னல் வேக டூர்..! நெருங்கிய சொந்தங்களையும், சொந்தங்களாக இருப்பவர்களையும் 2 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து நான் உயிருடன் இருப்பதை நிரூபித்துவிட்டு வந்தேன்..!(எப்படியெல்லாம் பில்டப்பு கொடுக்க வேண்டியிருக்கு..?)

டூர் அனுபவங்களை சிறிய தொகுப்பாக அளிக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் எழுதியாக வேண்டும். அதில் முக்கியமானது சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் நிலவும் கடுமையான மின் வெட்டு..!

வேடசந்தூரையும் தாண்டி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொம்மலூர் கவுண்டனூரில் அக்கா வீட்டில் இருந்தேன். அங்கேயிருந்த 3 நாட்களும் மின்சாரம் திடீர் என்று வந்தது. திடீரென்று போனது. எந்த நேரத்தில் கட்டாகும்..? எப்போது வரும்..? என்று கிராம மக்களுக்கே தெரியவில்லை. நினைத்த நேரத்திலெல்லாம் மின் வெட்டை அமல்படுத்தி வருகிறார்கள்..!

இது எந்த அளவுக்கு அந்த ஊர் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது தெரியுமா..?

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாகவரையிலும் நெல் மட்டுமே பயிரிட்டு வந்த அந்தப் பகுதி விவசாயிகள் தற்போது அதனை அடியோடு மாற்றிவிட்டார்கள். சோளம், கம்பு, கடலை, வெங்காயம் போன்ற குறுகிய கால விளைபொருட்களையே இப்போது பயிரிட்டு வருகிறார்கள். ஊர் முழுவதும்  தற்போது கடலைதான் பயிரிட்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்டபோது, “நினைச்ச நேரத்துக்கு கரண்ட் வருது.. அதை நம்பி நாம நெல்லை விதைச்சா.. அப்புறம் தண்ணிக்கு எங்க போறது..? குறைந்தபட்சம் காலைல 4 மணி நேரம், சாயந்தரம் 3 மணி நேரமாவது கரண்ட் இருந்து, நாங்க தண்ணி பாய்ச்சினாத்தான் நெல்லுக்கும் நிம்மதி. எங்களுக்கும் நிம்மதி.. இப்பத்தான் வர்றதே தெரியலையே.. இதை நம்பி போன ஆட்சிக் காலத்துல நாங்க நெல்லை போட்டுட்டு பட்ட பாடு இருக்கே.. முடியலீங்க.. அதான் 2007-லேயே இந்த ஊர்ல எல்லாருமே நெல்லு விதைக்காம விட்டுட்டோம்..” என்றார்கள்.

தற்போது அந்த ஊரில் மின்சாரம் காலை 6-8, 10-12, 3-4, 6-8 என்று நிறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நான் இருந்த ஒரு நாள் மாலை 6 மணிக்கு போன மின்சாரம் மறுநாள் மதியம் 4 மணிக்கு நான் அங்கேயிருந்து கிளம்புகின்றவரையிலும் வரவில்லை. என்னத்த சொல்லறது..?

பக்கத்து வீட்டுக்காரர்களின் புலம்பல் பரிதாபமாக உள்ளது. “கல்யாணமாகி பொண்ணும், மாப்பிள்ளையும் ஊருக்கு வந்திருக்காங்க.. இட்லிக்காக மாவு அரைக்கலாம்ன்னா பாதில கரண்ட் கட்டு.. வரும், வரும்னு எதிர்பார்த்து வேற வழியில்லாம ராத்திரி 10 மணிக்கு வீட்டு வாசல்ல இருந்த கல்லுல நானும், என் பொண்ணுமா கை வலிக்க அரைச்சோம்.. இப்படியே 3 நாளும் செய்ய முடியுமா..? உங்கக்கா வீட்ல பாதி மாவு, பக்கத்து வீட்ல பாதி மாவுன்னு 2 இடத்துல கொடுத்து அரைச்சு வைச்சுத்தான் 3 நாளும் சமாளிச்சோம்.. இதை நாங்க எங்க போய்ச் சொல்றது..? ஏதோ நீங்க சிட்டில இருக்கீங்க.. 1 மணி நேரம்தான் மின் வெட்டுன்னு சொல்றாங்க. தப்பிச்சீங்க.. எங்களை மாதிரி கிராமத்துல இருக்கிறவங்களைத்தான் ஏமாளியா நினைக்குது கவர்ன்மெண்ட்டு..” என்றார் ஒரு அக்கா..!

இன்னொரு பக்கத்து வீட்டு அக்காவோ நம்மைப் போன்றவர்களுக்கு சாபமே விட்டுவிட்டார்..! “பிள்ளைக படிக்க உக்காரும்போது கரண்ட் கட்டு..! நீயே பார்த்தீல்ல.. 6 மணிக்கு போச்சு 9 மணிக்கு வருது.. இந்த நேரத்துல பிள்ளைக தூங்குமா? இல்லாட்டி படிக்குமா..? எப்படி ஹோம்வொர்க் செய்யுங்க..! ஸ்கூல்ல இருந்து 2 பஸ் மாறி வீட்டுக்கு வருதுக.. அவ்வளவு அலுப்பா இருக்குறதுகளை 5 மணிக்கே ஹோம்வொர்க் செய்யுன்னு சொல்லி டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்கோம். எவ்வளவு வெறுப்பா இருக்கு தெரியுமா..? காலைல இந்தக் குளிர்ல பெரியவங்க நமக்கே எந்திரிக்க முடியலை. சின்னப் புள்ளைகளை எழுப்பி படிக்க வைக்க மனசுக்கு கஷ்டமா இருக்கு..! அவர் ஆட்சிலதான் இப்படின்னு சொல்லி மாத்தி ஓட்டைப் போட்டு வைச்சா.. இப்போ அதைவிட கொடூரமா இருக்கு. போன ஆட்சிலயாவது கரண்ட் போற டைம் கரெக்ட்டா தெரியும். இந்த ஆட்சில அதுவும் போயிருச்சு.. எங்களை மாதிரி பாவப்பட்டவங்க பேச்சையெல்லாம் யார் காது கொடுத்துக் கேக்குறா..? இதே மாதிரி சிட்டில செய்ய முடியுமா..? அங்க மட்டும் ஏன் நாள் முழுக்க கரெண்ட்டை கட் செய்ய மாட்டேன்றாங்க..? அவங்கள்லாம் உடனே பஸ் மறியல், போராட்டம்ன்னு உக்காந்தர்றாங்க.. பாரு.. இங்க 30 வீடுதான் இருக்கு. வீட்ல இருக்குற எல்லாரும் கூலி வேலைக்கு போனாத்தான் அன்னிக்கு கஞ்சியாத்த முடியும்.. இதுல எங்கிட்டு போய் போராடறது..” என்றார் வெறுப்பாக..!

இந்த ஊர் மட்டுமல்ல.. என்னுடைய தாயின் சொந்த ஊரான குரும்பப்பட்டியிலும் இதே நிலைமைதான்..! தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த எனது தாய் மாமாவைப் பார்த்துப் பேசிவிட்டு அவருடனேயே சாயந்தரமாக ஊருக்குள் வந்தபோது, வீட்டு வாசலில் அமர்ந்து பிள்ளைகள் மும்முரமாக ஹோம்வொர்க் செய்து கொண்டிருந்தார்கள். “கரெக்ட்டா 6 மணிக்கு கரண்ட் போயிரும். திரும்ப எப்ப வரும்னு அய்யனாருக்கு மட்டும்தான் தெரியும்.. அதான் இப்பவே.. விளையாடப் போற நேரத்துல எழுதிக்கிட்டிருக்குக..” என்றார் மாமா.

இந்த ஊரிலும் நெல்லை ஓரங்கட்டிவிட்டு சோளத்தையும், கடலையையும், வெங்காயத்தையும் பயிரிட்டிருக்கிறார்கள்..! மாடு இருந்தாலும், விவசாயம் பார்க்கும் பெரிசுகளுக்கு வயதாகிவிட்டதால் தண்ணி இறைக்க முடியவில்லையாம். என் மாமாவுக்கு வயது 72. இந்த வயதிலும் தண்ணி இறைக்கத்தான் செய்கிறார். “ஒரு நாள்விட்டு ஒரு நாளுன்னா முடியும்பா.. டெய்லின்னா உடம்புக்கு முடியல. அதான் நானும் நெல்லை விட்டுட்டு வெங்காயத்தை போட்டுட்டேன். இதுக்கும் தண்ணி வேணும்தான். ஆனால் நெல்லு அளவுக்கு இல்லை.. காலைல இருந்து மதியம்வரைக்கும் தண்ணியை இறைச்சி ஊத்தினா போதும்..” என்றார்..!

திண்டுக்கல்லின் நகர்ப் பகுதிகளிலும் காலை, மாலை என இரு முறையும் சேர்த்து 4 அல்லது 6 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத் தலைநகரம் என்றாலும், இருந்த ஒரேயொரு பூட்டு தொழிலுக்கு பூட்டு போடப்பட்டுவிட்டதால், இந்த மின்வெட்டை அனைவருமே தங்களுக்குப் பழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்..!

நான் அங்கேயிருந்த அன்றைக்குத்தான் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை போட்டுத் தள்ளிவிட்டார்கள். இரவு 8 மணிக்கு. வீட்டு வாசலில் சேரில் அமர்ந்து திருச்சியில் இருந்த சுந்தரி என்ற தனது நண்பியுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தவரின் அருகில் 3 பேர் திடீரென்று சைக்கிளில் வந்து இறங்கியிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் சட்டை அணியாமல் கிராமத்தான் போல் இருந்திருக்கிறார்கள். “யாருப்பா நீங்க..” என்று போனை ஆனில் வைத்தபடியே கேட்டிருக்கிறார் பாண்டியன். நொடியும் தாமதிக்காமல் அவரை எழுந்திருக்க விடாமலேயே வெட்டித் தள்ளியிருக்கிறார்கள் கொலையாளிகள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளே இருந்து ஓடி வந்த ஆட்கள் கொலையாளிகளைத் தேடியபோது, அந்தப் பகுதி முழுவதும் கும்மிருட்டு..!

யெஸ்.. திண்டுக்கல் நந்தவனப்பட்டி பகுதியில் இரவு 8-9 கரண்டு கட்டு..! யார் என்ற அடையாளமே தெரியவில்லை.. சைக்கிளை மட்டுமே போலீஸ் கண்டெடுத்திருக்கிறது. தற்போது 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தாலும், கொலையாளிகள் அவர்கள் இல்லை என்றே போலீஸ் இப்போதுவரையிலும் நம்புகிறது. சரி.. ஆளை பிடித்து நொங்கு உரித்தால், காட்டுகிற இடத்தில் கையெழுத்து போடத்தான் போகிறார்கள். ஆனால் கோர்ட்டில் நிக்காதே.. நேரில் பார்த்த சாட்சியே இல்லை..! என்ன கலர் சட்டைன்னுகூட சொல்ல முடியாது.. எத்தனை பேரை அரெஸ்ட் காண்பித்தாலும், இந்த கேஸ் கடைசியில் என்னாகும் என்று பத்திரிகை அலுவலகங்களில் வாட்ச்மேன் வேலை பார்ப்பவர்கூட சொல்லிவிடுவார்..!  மின் வெட்டினால் ஒரு உயிர் பறி போயிருக்கிறது..!

தேனி, பாளையம், கம்பம் பகுதிகளிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் 4 மணி நேர மின் வெட்டு. இடையில் திடீரென்று ஏதாவது ஒரு நாள் மின் பராமரிப்பு என்று சொல்லி ஒரு நாள் முழுக்க நிறுத்தி விடுகிறார்களாம்..!

ஏற்கெனவே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலும் நெல் விளைச்சலை மட்டுப்படுத்தி வெற்றிலை, சோளம், கம்பு, வெங்காயம், கடலை என பயிரிட்டு தங்களைக் காப்பாற்றி வருகிறார்கள். இதில் அரசு வேளாண்மை அதிகாரிகள் ஊர், ஊராக வந்து நெல் விளைச்சலை அதிகப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து வருகிறார்கள். வருபவர்களிடம் “மொதல்ல கரெண்ட்டை கரெக்ட்டா கொடுங்க. அப்புறமா வந்து பேசுங்க..” என்று சொல்லித் திருப்பியனுப்பவதாகச் சொன்னார் ஒரு சொந்தக்கார விவசாயி..!

“இப்போதைக்கு முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தீவிரமா இருக்கிறதால மின் வெட்டு இந்தப் பக்கம் 2 வது விஷயமா போயிருச்சு. அதைப் பத்தி இங்க யாரும் பெரிசா கவலைப்படலை.. ஆனா முல்லைப் பெரியாறு மட்டும் இப்போ மேட்டரா இல்லைன்னா, மின் வெட்டு இந்தப் பகுதியில் பெரும் கலவரத்தை உண்டு பண்ணியிருக்கும்..” என்றார் எனது உறவினர் மாமா ஒருவர்.

இப்படி விவசாயத் துறையில் ஒரு தலைகீழ் மாற்றத்தையே கொண்டு வந்திருக்கும் இந்த மின் வெட்டு விவகாரத்தை, மாநில அரசு இன்னமும் சீரியஸாகக் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

மின் வெட்டை தீவிரமாக கிராமப்புறங்களில் அமல்படுத்தி மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்கு 23 மணி நேரமும் சப்ளையைக் கொடுத்து வருகிறார்கள். ஆட்சியின் மீதான விமர்சனம் என்பதே பெருநகர மக்கள் சொல்வது மட்டும்தான் என்று இந்த ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள் போலும்.

மின் உற்பத்தியைப் பெருக்க சென்ற தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டிருக்கும் திட்டங்களின் மூலம் இன்னும் 3 ஆண்டுகள் கழித்துதான் மின் சப்ளை கிடைக்கும் என்கிறார்கள். அதுவரையிலும் இந்தக் கொடுமைதான் என்றாலும், அப்போது கூடுதல் சப்ளை கிடைத்தாலும், அதையும் நகர மக்களை திருப்திபடுத்த வேண்டி நகரங்களுக்கே திருப்பியனுப்பி, கிராமத்தினரை அம்போவாக்கும் முயற்சிதான் அப்போதும் நடக்கப் போகிறது..!

தற்போதைக்கு ஆத்தா ஜெயலலிதாவின் கவலையெல்லாம் உடன் பிறவா சகோதரியும், அவர்தம் சொந்த பந்தங்களும் சுருட்டி வைத்திருக்கும் பணத்தை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பதும், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எப்படியாவது தப்பியாக வேண்டும் என்பதும்தான்..! இந்த லட்சணத்தில் மக்களின் குறைகளை காது குடுத்துக் கேட்கக்கூட இந்த ஆட்சியில் ஒருவரும் தயாராக இல்லை என்பது நமது துரதிருஷ்டம்தான்..!

நன்றி: உண்மைத்தமிழன்