Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,055 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஷவ்வால் நோன்பு!

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

“ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று, பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவருக்குச் சமமாவார்”. (ஆதாரம்: முஸ்லிம்)

ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி அறியாமல், அதனையும் நோற்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுவதில் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றோம்.

இன்னும் சிலர் அறியாமையால் இது பெண்களுக்கு மட்டும் உரியது அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுகின்றனர் என்று கருதுகின்றனர். மேற்கண்ட ஹதீஸ் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் உரியது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டு இந்த ரமளான் முதல் இந்த நோன்பையும் நோற்று அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்வோமாக.

ரமளான் முழுவதும் நோன்பு இருந்து தொழுகையை நிறைவேற்றி அதிகமதிகம் குர்ஆனை ஓதி நன்மைகள் பல செய்து ரமளான் முடிந்த மறுநாள் பெருநாள் தொழுகை தொழுதவுடன் சினிமா தியேட்டர்களிலும் இன்னும் பிற கேளிக்கையான காரியங்களிலும் நம்மை மூழ்கச் செய்யும் ஷைத்தானின் வலையில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்வோமாக.

நாம் செய்யும் ஒவ்வொரு அமலுக்கும் 10 நன்மைகள் எனும் அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மை என்பதுடன் தொடர்ந்து இந்த ஆறு நோன்புகளுக்கு 6௯x10 = 60 நோன்புகள் ஆக 300 + 60 = 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு இதில் இருக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது.

மேலும் இப்படி ஒவ்வொரு ஆண்டும் நாம் இதை நோற்று வந்தால் நாம் காலம் முழுவதும் நோன்பு நோற்றதைப் போல் ஆகும் என்றும் நபி மொழிகள் உள்ளன. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல் படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம ஸஹாபா பெருமக்கள் (நபித்தோழர்கள்) சரித்திரங்கள் சான்று பகன்று வருகின்றன.

இன்று நமக்கு இந்த நன்மைகளின் மகிமை தெரியாது. ஆனால் நாளை நமது நன்மைகளும் தீமைகளும் நிறுக்கப்படும் போது நமது ஒவ்வொரு சிறிய நன்மையின் மகிமையும் அதேபோல் இன்று சர்வ சாதாரணமாக அலட்சியமாக நாம் செய்து வரும் (பட்டியல்களில் அடங்காத) ஒவ்வொரு தீமையின் பெரும் பாதிப்பும் அதன் பயங்கர இழப்பையும் காண முடியும் என்பது உறுதி.

நம்முடைய கடந்த நாட்களில் எதையும் நம்மால் மாற்ற முடியாது, ஆனால் நம்முடைய இன்றைய நாளை நம்மால் முயன்று சீராக்கிக் கொள்ள முடியும் அதே நிலையில் முயன்று உறுதியாக சீராக நம்முடைய நாளைய வாழ்க்கையையும் அதன் வழிமுறைகளையும் இறை நாட்டத்துடன் அமைத்துக் கொள்ள முடியும் என்பதையும் அதே நிலையில் இறுதி மூச்சு வரை இருக்க வாய்ப்பும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

இதற்கும் இஸ்லாமிய வரலாற்றினை தமது உன்னதமான தியாகங்களின் மூலம் சிறப்பித்துச் சென்ற சிற்பிகளான பிலால் (ரலி),கப்பாப் (ரலி), யாசிர் (ரலி), அம்மார் (ரலி), சுமைய்யா (ரலி) போன்ற எண்ணற்ற தியாகச் செம்மல்களின் கடந்தகால மற்றும் இறுதிகால வாழ்க்கையில் மிகவும் தெளிவான அழகான படிப்பினைகள் உள்ளன.

இவற்றையும் நிலையற்ற இந்த உலக வாழ்க்கையில் எப்போது நாம் இவ்வுலகில் அமல்கள் செய்யும் நல் வாய்ப்புகளை இழந்தவர்களாக இவ்வுலகை விட்டுப் பிரிந்து விடுவோமோ தெரியாது என்பதால், வெறும் நன்மைகள் மட்டுமே பயனளித்து நம்மைக் காக்கும் அந்த நிலையான மறு உலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அதிகப்படுத்த முனைவது மிகவும் அவசியம் மட்டுமல்லாது அறிவுடைய செயலாகவும் இருக்கும்.

ஷவ்வால் மாத நோன்பினைப் பற்றி அறிந்து அதையும் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் மிகவும் குறைவு என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. ரமளான் முழுவதும் பேணுதலுடன் இருந்த முஸ்லிம்களில் பலர் ஷவ்வால் ஒன்றில் பெருநாளைக் கொண்டாடுவதற்கு என்று பொதுவாக பெருநாளுக்கு முந்தைய மாலை முதல் நள்ளிரவு வரை கடைத்தெருக்களில் நேரத்தைக் கழித்து விட்டு பெருநாள் அன்று பஜ்ர் தொழுகையும் தவறும் நிலையில் தூங்கத் துவங்கிவிடுகின்றனர். இது பெருநாள் கழித்து வரக்கூடிய மற்ற நாட்களிலும் தொடர்கிறது. அடுத்த ரமளான் வரை பலருக்கு இந்த நிலை நீடிக்கிறது என்பது வேதனையான உண்மை.

ரமளானில் தொழுகைக்கு அழைப்பு விடுத்த பாங்கோசைகள் இன்று ஏன் காதுகளில் விழாதது போல் செயல் படுகின்றோம்? அதானுக்கு முன்னர் பள்ளியில் கூடிய நாம் இன்று ஏன் அதை மறக்கடிக்கச் செய்யும் ஷைத்தானுடன் கூடும் விதமாக செயல் படுகின்றோம்? சுவனம் தான் இலட்சியமென்றால் ஏன் இந்த அலட்சியம்? இது தான் நம் மூலதனமா? இதுதான் நமது தக்வாவின் வெளிப்பாடா?

அல்லாஹ் நம்மை இது போன்ற நிலையில் இருந்து பாதுகாப்பானாக! எங்கு இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நாம் நமது ஈமான், தொழுகை, தக்வா போன்றவற்றினை விட்டுக் கொடுக்காமல் செயல் பட வேண்டும். இவற்றினை இலகுவாக்கும் அடிப்படையே தொழுகை என்பதில் சந்தேகம் ஏதும் உண்டா? ஒவ்வொரு தொழுகையையும் தவறாமல் இயன்ற வறை ஜமாத்துடன் தொழ முயல வேண்டும், வீடுகளிலும் நாம் சுன்னத்தான நபிலான தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.

ரமளான் முழுக்க ஓதிய குர்ஆனை ஷவ்வாலிலும் (பொருளுடன்) ஓதவேண்டும். ஷவ்வாலுக்குப் பின்னரும் தினமும் ஓத வேண்டும், ஷவ்வாலில் மீண்டும் பள்ளிகள் தொழுகையாளிகள் இன்றி காணப்படும் நிலையை நாம் தான் மாற்ற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து செயல்பட்டால் நமக்கும் நம் முஸ்லிம் சமுதாயத்திற்கும் முழுமையாக பயனளிக்கும்.

ஒருவரிடம் தக்வா நிலைபெற்றிருப்பதன் வெளிப்பாடு அவருக்கும் அவருடைய சமுதாயத்திற்கும் பலனுடையதாக நலன் விளைவிப்பதாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இறைநம்பிக்கையாளருக்கும் இறைநம்பிக்கையற்றவருக்கும், என்ன வேறுபாடு? அதேபோல இறைநம்பிக்கையுள்ள சமுதாயத்திற்கும் இறைநம்பிக்கையற்ற சமுதாயத்திற்கும் ஒரு வேறுபாடும் இல்லை என்ற நிலை தான் ஏற்படும்.

இதர மதத்தினர்களின் சில பெருநாள்கள் போல் அன்று மட்டும் சிறப்பித்துக் கொண்டாடி,சில நேரங்களில் அதன் திளைப்பில் தனக்கும் தன் சமுதாயத்திற்கும் உடல் ரீதியாக, பொருள் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பையும் இழப்பையும் குரோதத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் விதமான ஒரு சிலர்களின் செயலுக்கும் பெருநாள் எனும் பெயரில் மதிமயங்கி செயல்படுவதிலிருந்தும் முஸ்லிம்களின் பெருநாளும் செயல்பாடும் எந்நேரமும் வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.

இதில் நாம் பார்க்க வேண்டியது நம் குடும்பத்தை, நம் உறவை, நம் கட்சி, இயக்கம், நம் மதம் அல்லது சமுதாயத்தை சார்ந்தோர் என்று அல்லாமல் யாரிடம் இது போன்ற சமூக சீர் கேடுகள் காணப்படினும் எச்சரித்துக் கண்டித்துச் சீர்திருத்த முனைய வேண்டும்.

ஒரு நாள் “பெருநாள்” எல்லாம் கூடும் என்று கண்டு கொள்ளாமல் இருத்தல் கூடாது, மனிதனுடைய 24 மணி நேர வாழ்க்கைக்கும் வழி வகுத்த இஸ்லாமிய மார்க்கம் இதற்கும் ஒரு வரம்பு விதித்துள்ளது, அதனுள் இருந்தே நாம் நமது மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் வெளிபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறந்து விடக்கூடாது.

ரமளானில் நாம் பெற்ற இந்த நோன்பும் பயிற்சியும் அதன் பலன்களும் தொடரும் விதமாக இந்த ஷவ்வால் நோன்பு அமைந்திருப்பதை காண முடிகிறது. பெருநாளை மகிழ்வுடன் இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து அனுமதிக்கப்பட்ட விதத்தில் பெருநாளைக் கொண்டாடிய உடன் பெருநாளுக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்கள் அல்லது ஷவ்வால் மாதம் முடியும் முன்னர் இந்த நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை நாம் நோற்பது மூலம் தொடர்ந்து இன்னும் மற்ற சுன்னத்தான திங்கள், வெள்ளி மற்றும் மாதம் மூன்று நோன்புகள் போன்ற நோன்புகளும் நோற்கும் ஆர்வம் ஏற்படலாம். அதேபோல் தொடர்ந்து குர்ஆன் ஓதுதல், தர்மங்கள் என்று எல்லா நல்ல அமல்களிலும் ஈடுபாடு அதிகரிக்கலாம். அல்லாஹ் நம்மை நன்மைகளின் பால் விரைந்தோடுபவர்களாகவும், தீமைகளை விட்டு வெருண்டோடுபவர்களாகவும் ஆக்கி அருள்புரிவானாக.

ரமளான் மூலம் நாம் பெற்ற “தக்வா” (இறையச்சம்) எனும் அருள் மிகுந்த விலை மதிப்பற்ற பொக்கிஷத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்வோமாக!

அதனை (இறையச்சத்தை) நமது இறுதி மூச்சுவரை பேணிப் பாதுகாத்து ஈமானுடன் நபிவழியில் வாழ்ந்து வரவேண்டும் என்பதனை நன்கு உணர்ந்தவர்களாக மன உறுதியுடன் செயல்பட முனைவோமாக!

வல்ல இறைவன் அதற்கு நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப் – சத்தியமார்க்கம்.காம்


ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய சில விளக்கங்கள்

ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர்,பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றால் அவர் அவ்வருடம் முழுவதும் நோன்பு நோற்றவர்; போன்றவர் ஆவார். (ஆறிவிப்பவர் அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) ஆதாரம்: முஸ்லிம்.)
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வாலில் ஆறு நோன்பு வைப்பது பற்றி பல கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றை இங்கே விரிவாகக் காண்போம்.

1. கே: இந் நோன்பு வைப்பது பர்ளா? சுன்னத்தா, முஸ்தஹப்பா ?
: இது முஸ்தஹப் -விருப்பத்தக்கது ஆகும். சிலர் இதை சுன்னத் என்றும் கூறுகின்றனர்.

2. கே: ரமளான் முடிந்ததும் உடனே தொடர்ந்து நோற்பதா ? அல்லது சிலநாட்கள் சென்று நோற்பதா?
. உடனேயே தொடர்ந்து வைப்பது சிறப்பாகும். என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

ஆயினும் நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் நோற்க வேண்டுமெனக்கூறினார்களே தவிர ஷவ்வால் மாதத்தில் இந்த நாட்களில் தான் வைக்கவேண்டுமெனக் கூறாததால் ஷவ்வால் மாதத்தின் எந்த நாட்களிலும் தொடர்ந்தோ,விட்டுவிட்டோ வைக்கலாம்.

3. கே: மாதவிடாயின் போது பெண்களோ, அல்லது நோயாளிகளோ ரமளானில் நோன்பு நோற்க இயலாது போனால் அதை ஷவ்வாலில் களாவாக நோற்கும் போது எந்த நோன்பை முதலில் வைப்பது ?
ப: முதலில் ரமளான் மாதத்தின் கடமையான பர்ளான நோன்பைத்தான் நோற்க வேண்டும்.

4. கே: காலதாமதமாகி ஷவ்வால் நோன்பு தவறிவிடும் என அஞ்சினால் அப்போது ஷவ்வால் நோன்பை முந்தி நோற்கலாமா?
ப : இல்லை. பர்ளான நோன்புக்குத்தான் முதலிடம் வழங்கவேண்டும்.

5. கே: ரமளான் நோன்பையும் ஷவ்வால் நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்கும் என சிலர் கூறுகிறார்களே?
ப: பர்ளையும் சுன்னத்தான வணக்கங்களையும் இணைத்து வைக்க முடியாது. எவ்வாறு பர்ளான தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் சேர்த்து ஒரே தொழுகையாக தொழ முடியாதோ அதைப் போல்தான் பர்ளுடன் சேர்த்து எந்த உபரியான வணக்கங்களையும் செய்ய முடியாது.பர்ளு வேறு! உபரியான
வணக்கம் வேறு.

6. கே: ஷவ்வால் முடிந்ததும் அதற்காக ஒரு பெருநாள் கொண்டாடுகிறார்களே! இதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா?
ப: இல்லை, ‘நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களைத் தான் கொண்டாடுவதற்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.(ஆதாரம் :அபூதாவூது,நஸயீ. ஆறிவிப்பவர் அனஸ்(ரலி).

ஆகவே, இந்த இரு நாட்களைத் தவிர வேறு எந்த நர்களையும் கொண்டாடஅனுமதியில்லை.
‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாகச் செய்பவரது வணக்கம்
நிராகரிக்கப்படும்’ என்ற நபிகளாரின் எச்சரிக்கை கவனத்திற் கொள்ள
வேண்டியதாகும். ( அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) ஆதாரம் புகாரி)

7. கே: ஷவ்வால் மாதத்தில் திருமணம், வீடுகுடியேறுவது போன்ற மங்களகரமான செயல்களைச் செய்யக் கூடாது எனத்தடுக்கிறார்களே!?
ப. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் நடந்தேறியதும், அவர்கள் நபிகளுடன் இல்லற வாழ்வைத் தொடங்கியதும் இந்த ஷவ்வாலில் தான் என்று அவர்களே கூறுகிறார்கள்.

ஆகவே.எந்த செயலையும் இந்த ஷவ்வாலில் நிறைவேற்றலாம். இதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.

அல்பாக்கவி.காம்