Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,031 முறை படிக்கப்பட்டுள்ளது!

உளவியல் நோக்கில் முடிவு எடுத்தல்

இறைவனது படைப்பில் வேறுபாடு கிடையாது. எல்லோருக்கும் 1400கிராம் மூளையைத் தான் கொடுத்திருக்கிறான்.  (மூளை இயங்கும் செயலை உள்ளம் என்கிறோம். உள்ளம் பற்றிய அறிவை, எண்ணங்களை ஆய்வு செய்வதே உளவியல் என்கிறோம்.) ஆனால், ஆளுக்காள் சிந்திப்பதும் செயலாற்றுவதும் முடிவெடுப்பதும் ஒரே அளவாக இருப்பதில்லை. அவை ஆளுக்காள் வேறுபடுகின்றன. அப்படியாயின், ஒரே அளவு மூளையின் செயற்றிறனும் ஒரே அளவாகத் தானே இருக்க வேண்டும். ஒவ்வொருவரது மூளையின் செயற்றிறனும் வேறுபடுவதாலே தான், அவ்வவ் ஆட்களின் முடிவுகளும் வேறுபடுகின்றன.

மூளையின் செயற்றிறனுக்கு மூளையின் அமைப்பே (மூளையில் காணப்படும் மடிப்புகளின் எண்ணிக்கை) நூறு விளுக்காடு(வீதம்) காரணமாக அமையாது. மூளை இரண்டு அரைக்கோளங்களால் ஆனது. வலப்பக்க மூளை கூடுதாலாக இயங்கினால் நல்ல முடிவு எடுப்பர்;  இடப்பக்க மூளை கூடுதாலாக இயங்கினால் கெட்ட முடிவு எடுப்பர் என்பதெல்லாம் உறுதிப்படுத்தப்படாத கருத்துகள்.
ஒரு பக்க மூளை மட்டும் எப்படி இயங்கும்? இடப்பக்க மூளை உடலின் வலப்பக்க உறுப்புகளுடனும் வலப்பக்க மூளை உடலின் இடப்பக்க உறுப்புகளுடனும் தொடர்புபட்டிருப்பது உண்மையே! அதாவாது, இடக்கை, இடக்கால் பழக்ககாரர்களுக்கு வலப்பக்க மூளையும் வலக்கை, வலக்கால் பழக்ககாரர்களுக்கு இடப்பக்க மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். உடற்பயிற்சிகள் மூலமாக இருபக்க(கை, கால் போன்ற) உறுப்புகளுக்கும் சமனான பயிற்சி வழங்குவதாலும், பயன்படுத்தும் போது சமனாகப் பாவிப்பதாலும் மூளையின் இருபக்கத்தையும் நம்மால் பாவிக்க முடியும். அதனால், அதிகளவில் தகவலைச் சேமிக்கலாமே தவிர, மூளையின் செயற்றிறனைக் கூட்ட முடியாதே!

ஏனெனில், மூளையின் மேற்பகுதியில் சிந்திக்க, மணக்க, பார்க்க, படிக்க, எழுத்தை அடையாளப்படுத்த, குரலை அடையாளப்படுத்த, படங்களை அடையாளப்படுத்த என ஒவ்வொரு பகுதியும் உண்டு. அதுவும், எல்லோருக்கும் சமஅளவில் தான் இறைவன் கொடுத்திருக்கிறான். படைத்தவனின் படைப்பில் பிழையில்லை. அப்படியாயின், பெற்றவர்கள் பிள்ளையைப் பெற்றதும் மூளைக்குப் பயிற்சி கொடுத்து வளர்க்காமை தான் காரணமா? இல்லை.

பெற்றவர்கள் பிள்ளைக்கு கணிதப் புதிர்களைத் தீர்ப்பது போன்ற, கட்டிட அமைப்புகளை உருவாக்குவது போன்ற சிந்திக்க வைக்கின்ற விளையாட்டுகளுடன் படங்களைக் காட்டி பகுதிகளை அடையாளப்படுத்தும் செயல் போன்ற பயிற்சிகளை வழங்குவதால் குழந்தைப் பருவத்திலேயே மூளையின் செயற்றிறனை அதிகரிக்கச் செய்துவிடுகிறார்கள் என்பதும் பொய். மாறாகக் குழந்தைப் பருவத்திலேயே சிந்திக்கின்ற ஆற்றலை ஊட்டுகின்றார்கள் என்பதே மெய். எமது பெற்றோர்கள் எமக்கு அப்படிச் செய்யாமையால் தான், நாம் இன்று சரியான முடிவு எடுக்க முடியாமல் இருக்கிறோம் என்று சொல்ல முடியுமா? இல்லை.

ஒன்றே எண்ணு(சிந்தி) – அதை
நன்றே எண்ணு(சிந்தி) – அதை
இன்றே எண்ணு(சிந்தி) – அதனால்
என்றும்
உனக்கு இழுக்கு இல்லை!
இவ்வாறு நாமே எண்ணவோ(சிந்திக்கவோ) பயிற்சி செய்யலாமே!

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்று பாவலர்(கவிஞர்) ஒளவையும் சொல்லியிருக்காரே! அப்படியாயின், இன்றே எண்ணமிட(சிந்திக்க)ப் பழகினால் நாளைக்கே நல்ல முடிவுகளை எடுத்து வாழ்வில் முன்னேறலாமே.

நமக்கு முடிவு எடுத்தலில்(Decision Making) என்ன சிக்கல்? முடிவு எடுக்கிறோம். ஆனால், சில வெற்றியை/நற்பெயரைத் தருகிறது; சில தோல்வியை/கெட்டபெயரைத் தருகிறது. இதற்கு முடிவு எடுக்குமுன் சிந்திக்கத் தவறியதே காரணமாகலாம். எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் நிகழ்வுகளைக் கவனிக்க,

தெருவிலே பத்து ஆயிரம் பணம் விழுந்து கிடந்ததைக் கண்ட ஒரு சிறுவன் பள்ளி அதிபரிடம் எடுத்துக்கொண்டே ஒப்படைக்கிறான். அதானால், அவனுக்கு நற்பெயர்.

அதே பணத்தை இன்னொரு சிறுவன் எடுத்துக் காற்றிலே பறக்கவிட்டான். “குழந்தைப் பிள்ளைதானே, பணத்தைப் பற்றித் தெரியாமல் தாளெனக் காற்றிலே பறக்கவிட்டிட்டான்.” என அவனுக்கு மன்னிப்பு எல்லோராலும் வழங்கப்படுகிறது.
இங்கே இரு வேறு சிறுவர்களின் சிந்திக்காமல் எடுத்த முடிவைப் பார்த்தீர்கள். ஒரு அகவை(வயது)க்கு வந்தவர் இந்நிகழ்வில் எப்படிச் சிந்தித்திருப்பார்.

முதலாமாள் அந்தப் பத்து ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டே செய்தித் தாள் நிறுவனத்திடம் ஒப்படைத்து; தனது பெயர், படம், முகவரி போட்டு இவ்வாறு ஒப்படைத்ததாக நாளைய செய்தித் தாளில் போடவும் என்கிறான். அவ்வாறே அடுத்தநாள் செய்தித் தாளில் வெளிவந்ததைப் பார்த்த அரசன் ஆயிரம் உரூபா பணமும் கொடுத்து “நேர்மையானவன்” என்ற பட்டமும் வழங்குகின்றான்.
இரண்டாமாள் அந்தப் பத்து ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டே தனது செலவுகளைக் கவனித்தார். பணத்தைத் தொலைத்தவர் காவற்றுறையில் முறையிட்டதால், காவற்றுறையினர் இரண்டாமாளைக் ஆயிரம் நாள் சிறையிலடைத்துக் “கெட்டவன்” என்ற பட்டமும் வழங்குகின்றனர்.

இங்கே நல்லதைச் சிந்தித்து முடிவு எடுத்தவர் நற்பெயரும் கெட்டதைச் சிந்தித்து முடிவு எடுத்தவர் கெட்டபெயரும் அவற்றுக்கேயான பரிசுகளையும் பெற்றனர்.

இதனடிப்படையில் சிந்தித்து முடிவெடுப்பவர் தான் தனது குறிக்கோளை இலகுவாக எட்டிப்பிடிக்கிறார். எப்படியோ வாழ்வெனும் மகிழ்சிக் கடலில் நீந்திக் கடக்க, அவரவர் எடுக்கின்ற முடிவே உதவியளிக்கின்றது. எனவே தான், ஒவ்வொருவரும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியுள்ளோம்.

என்ன தான், எப்படித் தான், எங்கே தான், எப்போது தான், எவ்வாறு தான், ஏன் தான் என்று சிந்தித்து முடிவு எடுக்கப் பழகத்தான் வேண்டும். முடிவு எடுக்கப் பழகாதார் முட்டாள்கள் மட்டுமல்ல, வாழ்வில் அடிக்கடி பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியவர்களாவார். நாம் ஒவ்வொருவரும் பிழையான முடிவுகளை எடுக்கக் காரணமென்ன? அதற்கான பதிலை ஆய்வு செய்தலே எமது குறிக்கோளாகும்.

நாம் முடிவு எடுத்தலில்(Decision Making) எப்படிச் சிந்திக்கிறோம் என்று தெரியுமா? எப்போதுமே நேர் எண்ணத்திலே(Positive Thinking) முடிவு எடுக்கப் பார்க்கிறோம். அதாவது எமது படித்தறிவு, எமது பட்டறிவு, எமது ஆளுமை, எமது வளம், எமது பக்கபலம்(செல்வாக்கு) என எல்லா எமது பக்க இருப்பையே எண்ணிப் பார்க்கிறோம். இவ்வாறு முடிவு எடுத்தலே பிழையான முடிவாகும்.
இம்முடிவைப் பெறுமதியாக்குவது இதற்கான எதிர் எண்ணங்களே(Negative Thinking)! அதாவது எமது படித்தறிவுக்கான எதிர்பார்ப்பிடம், எமது பட்டறிவுக்கான எதிர்பார்ப்பிடம், எமது ஆளுமையை ஏற்குமிடம், எமது வளத்தைப் பயன்படுத்த விரும்புவோர், எமது பக்கபலம்(செல்வாக்கு) செல்லுபடியாகுமிடம் என எல்லா எமது பக்க இருப்பை வெளிக்கொணரும் போது சந்திக்கின்ற சூழ்நிலை எண்ணங்களாகும்.

அப்படியாயின், நாம் முடிவு எடுக்கும் போது நோராகவும் மறையாகவும் சிந்திக்க வேண்டும். எடுத்துக்காட்டாகக் கணினி விரிவுரையாளர் பதவிக்கு ஆள் தேடுகிறார்கள் என்போம்.

நாம் அந்த வேலைக்குத் தெரிவு செய்யப்பட வேண்டுமாயின் நாம் (Positive Thinking)சிந்திப்பது 2000 ஆம் ஆண்டில் BSc(Computer Special) முடித்தால் போதுமென்று. வேலை கொள்வோர் (எமது Negative Thinking) சிந்திப்பது 2000 ஆம் ஆண்டில் BSc(Computer Special) முடித்திருந்தாலும் 2012 MS-Office கற்பிக்கக்கூடியவராகவும் இருத்தல் வேண்டுமென்று.

இந்நிலையில் வெற்றி பெற்றவர் யாராயிருப்பவர்? நோராகவும்(2000 ஆம் ஆண்டில் BSc(Computer Special) முடித்தமை தனது தகுதி எனவும்) மறையாகவும்(இன்றைய தேவையாக 2012 MS-Office கற்பிக்கக்கூடியவராகவும் இருத்தல் வேலைகொள்வோரின் தகுதி எனவும்) சிந்தித்தவர் மட்டுமே!

சில செயலைத் தனித்தும் சில செயலைக் கூட்டுச் சேர்ந்தும் செய்ய வேண்டியிருக்கும். தனித்துச் செய்ய வேண்டிய செயலை சிலருடன் கூட்டுச் சேர்ந்து செய்தால் விரைவாக முடிக்கலாம். ஆயினும், கூட்டுச் சேர்ந்து செய்ய வேண்டிய செயலை ஒருபோதும் தனித்துச் செய்ய இயலாதே! இந்நிலைமையில் ஒருவருக்கு ஆளனி ஒத்துழையாமை என்பது அவரவர் எடுக்கின்ற முடிவுகளைப் பொறுத்தே! அப்படி என்னதான் அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

ஆளனி ஒத்துழைப்பு இருக்கென்றால், அவர்கள் நேர்மறை எண்ண(Positive Mental Attitude – PMA) முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பர். அதாவது தமது ஆட்களாக இருப்பினும் சரி, தமது எதிராட்களாக இருப்பினும் சரி தமது தேவைகளை நிறைவு செய்ய எல்லோரையும் அணைத்து இணைத்து செயற்படும் முடிவுகளை எடுப்பவராவார். இவ்வாறானவர்கள் தோல்விகளைச் சந்திக்க வாய்ப்பிருக்காது.
ஆளனி ஒத்துழைப்பு இல்லையென்றால், அவர்கள் எதிர்மறை எண்ண(Negative Mental Attitude – NMA) முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பர். அதாவது தமது ஆட்களாக இருப்பினும் சரி, தமது எதிராட்களாக இருப்பினும் சரி நம்பிக்கை வைக்காது ஐயப்பட்டு தமது தேவைகளை நிறைவு செய்ய எவரையும் அணைக்காது இணைக்காது செயற்படும் முடிவுகளை எடுப்பவராவார். இவ்வாறானவர்கள் வெற்றிகளைச் சந்திக்க வாய்ப்பிருக்காது.

அடேங்கப்பா, முடிவு எடுத்தலில்(Decision Making) நான்கு வகையாகச் சிந்திக்க வெண்டியிருக்கிறதை யாரறிவாரோ…? இல்லை! இல்லை! இன்னும் ஆறு வகை இருப்பதை நீங்கள் அறிவீரா? இதோ கீழே அவ்வாறையும் அழகாகச் சொல்கிறேன்.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல, எமது ஒவ்வொரு செயலுக்கும்/சிக்கலுக்கும்(பிரச்சனைக்கும்) இரண்டு பக்கங்கள் காணப்படும். செயலாயின் எமது பக்கமும் எமது பக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் பக்கமும் இருக்கும். சிக்கல்(பிரச்சனை) ஆயின் அதனை விளைவிப்போரும் அதன் விளைவை ஏற்போரும் என இரு பக்கங்கள் இருக்கும். எனவே, செயலாயின் வெற்றி பெறவும் சிக்கல்(பிரச்சனை) ஆயின் அமைதித் தீர்வு கிட்டவும் இரண்டு பக்கங்களையும் சிந்தித்தே முடிவு எடுக்கவேண்டும்.

எடுத்துக்காட்டு – 01
படிப்பிருக்கு, பட்டறிவிருக்கு, பணமிருக்கு, வளமிருக்கு என வணிக நிறுவனமொன்றை நடாத்தவிருக்கும் செயலைக் கவனிப்போம். இவற்றுடன் உங்கள் ஆளுமையையும் சேர்த்தால் உங்கள் பக்கம். வணிக நிறுவனத்தின் வாடிக்கையாளர் பக்கத்தையும் பொருட்படுத்த வேண்டும். மலிவு விலை, தரமான பொருள், நேர்மையான பணி, உடனடித் தேவைகளை நிறைவு செய்தல், வீட்டில் ஒப்படைக்கும் போக்குவரவுப் பணி என வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தல். இவ்வாறு இரு பக்கங்களையும் சிந்தித்தால் உங்கள் செயலில் வெற்றி உறுதி.

எடுத்துக்காட்டு – 02
தெருவழியே போகும் போது ஒருவர் உங்களுடன் மோதிவிட்டார். கையிலிருந்த உங்களது சொத்துகள் சிதறிப்பறந்தன. உங்களுக்கு வந்த கோபத்தில மோதியவரை அடித்துடைக்க எண்ணியிருக்கலாம். ஆயினும், முதலில் சிதறிய சொத்துகளைப் பொறுக்கியிருப்பீர். அவ்வேளை மோதியவரும் உமக்கு உதவி, தவறுதலாக மோதுண்டதிற்கு மன்னிப்பும் கேட்டிருக்கலாம். இந்நிலையில் மோதியவருடன் அமைதி பேணினால் இருவரும் என்றும் இணைபிரியா நண்பர்களாயிருப்பீர்களே! ஒருவர் மீது ஒருவர் குறை கூறிப் பகை வளர்த்தால் என்றும் எதிரிகளாவீரே! இங்கும் தன்நிலையையும் மோதியவரின் நிலையையும் புரிந்து கொண்டு அமைதித் தீர்வு காணமுடிந்தால் என்றும் வெற்றியே!

இரு பக்கங்களையும் சிந்திக்க முனைந்தால்; சிலவேளைகளில் நேர்விளைவாகவோ(Direct Effects) பக்கவிளைவாகவோ(Side Effects) பின்விளைவாகவோ(Future Effects) உடனடிப் பார்வையிலோ(Instance view) குறுகிய நோக்குப் பார்வையிலோ(Short-Term View) தொலை நோக்குப் பார்வையிலோ(Long-Term View) நன்மை கிடைக்கலாம் என்பதை மறக்கக் கூடாது.

நேர்விளைவு(Direct Effects) – நேரடியாகவே பயனடைதல்
பக்கவிளைவு(Side Effects) – பிறவழிகளில் பயனடைதல்
பின்விளைவு(Future Effects) – எதிர்காலத்தில் பயனடைதல்
உடனடிப் பார்வை(Instance view) – நடந்து ஓராண்டுக்குள் பயனடைதல்
குறுகிய நோக்குப் பார்வை(Short-Term View) – 1 – 5 ஆண்டுக்குள் பயனடைதல்
தொலை நோக்குப் பார்வை(Long-Term View) – ஐந்தாண்டின் பின் எப்பவும் பயனடைதல்

முடிவாகச் சுருங்கக் கூறின் முடிவு எடுத்தலில்(Decision Making) நான்கு வகை எண்ணங்களுடன் இரண்டு பக்கத்தைப் பொருட்படுத்தி முடிவு எடுக்கவேண்டும். அப்போது தான் ஆறு வகையில் ஒரு வழியில் நன்மை கிட்டும். முடிவு எடுப்பதில்(Decision Making) பயிற்சி செய்யுங்கள். வாழ்வில் வெற்றிகளைக் குவித்து மகிழ்வோடு நெடுநாள் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் யாழ்பாவாணன் -உளநல மதியுரைஞர் (Psychological Counsellor)

நன்றி: தமிழ் நண்பர்கள்