Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 18,094 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை சூப் ! – 2/2

தக்காளி கிரீம் சூப்

தேவையானவை: தக்காளி – 3, வெங்காயம் – ஒன்று, செலரி – சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் – சிறிதளவு, பூண்டு – ஒரு பல், பாஸில் இலை, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மைதா – 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, உருகியதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, செலரி, குடமிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பாஸில் இலை, மிளகுத்தூள் சேர்த்து, கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுக்கவும்.
மற்றொரு கடாயில் மீதமுள்ள வெண்ணெயை போட்டு, உருகியதும் மைதா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடிகட்டி வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, கிரீம் மற்றும் வறுத்த பிரெட் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேன்சௌ சூப்

தேவையானவை: பீன்ஸ் – 5, கேரட், வெங்காயம், குடமிளகாய் – தலா ஒன்று, கோஸ் – 100 கிராம், பேபி கார்ன் – 2, வெங்காயத்தாள் – சிறிதளவு, வினிகர், தக்காளி சாஸ், சோள மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – காரத்துகேற்ப, அஜினமோட்டோ – சிறிதளவு, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், சில்லி பேஸ்ட் – காரத்துக்கேற்ப, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் அதில் சில்லி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு, சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, உப்பு, மிளகுதூள் சேர்த்துக் கலந்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறி, நன்கு கொதித்தவுடன் இறக்கி… மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

குறிப்பு: சில்லி பேஸ்ட் தயாரிக்க… வெங்காயம் ஒன்று, பூண்டு ஒரு பல், தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த காய்ந்த மிளகாய் ஐந்து, புளி நெல்லிக் காய் அளவு எடுத்து… தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புரூக்கோலி கிரீம் சூப்

தேவையானவை: புரூக்கோலி – ஒரு கப், காய்கறி வேக வைத்த தண்ணீர் – 4 கப், வெண்ணெய், மைதா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), தைம் இலை – சிறிதளவு, கிரீம் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, துருவிய சீஸ் – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தைம் இலை சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மைதா சேர்த்து வறுக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு புரூக்கோலி சேர்த்து வேகவிடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும். வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி… கிரீம், துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பப்பாளி இஞ்சி சூப்

தேவையானவை: பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி – ஒரு சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் – சிறிதளவு. உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி… வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி… சூப் கப்பில் ஊற்றவும். அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

க்ளியர் சூப்

தேவையானவை: வெங்காயம், கேரட் – தலா ஒன்று, செலரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – சிறிதளவு, முட்டை – ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி – பூண்டு – ஒரு டீஸ்பூன், வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முட்டையை உடைத்து வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீர், நறுக்கிய வெங்காயம், கேரட், இஞ்சி – பூண்டு, முட்டை – வினிகர் கலவை, உப்பு எல்லாம் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து கரண்டியால் கிளறாமல் கொதிக்க வைத்து… பிறகு மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். காய்கறி, முட்டை வெந்து மேலே வரும்போது இறக்கி, சூப் கப்பில் ஊற்றி பரிமாறவும். விருப்பப்பட்டால் வடிகட்டியும் பரிமாறலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திடீர் சூப்

தேவையானவை: கேரட் – ஒன்று, பீன்ஸ் – 5, கோஸ் – 50 கிராம், நறுக்கிய பூண்டு – இஞ்சி – 2 டீஸ்பூன், வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), செலரி – ஒன்று, புரூக்கோலி – சிறிதளவு, சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில், கொத்தமல்லி தழை – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை காயவைத்து… நறுக்கிய பூண்டு – இஞ்சியை வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், செலரி, புரூக்கோலி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சோள மா¬வை கரைத்து ஊற்றி கெட்டியாக்கி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முளைகட்டிய நவதானிய சூப்

தேவையானவை: முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பூண்டு – 2 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு கப், புளிக்காத கெட்டி தயிர் – அரை கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பருப்பு சூப்

தேவையானவை: வேக வைத்த பருப்பு – ஒரு கப், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – 2 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, பிரெட் ஸ்லைஸ் – 2 ( ‘கட்’ செய்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்), பனீர் – 50 கிராம் (எண்ணெய் பொரித்தெடுக்கவும்), உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் பதத்துக்கு வந்தவுடன் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறும்போது நறுக்கிய கொத்த மல்லி தழை, பொரித்த பனீர், வறுத்த பிரெட் சேர்க்கவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பட்டாணி சூப்

தேவையானவை: பச்சைப் பட்டாணி – கால் கிலோ, வெங்காயம் – ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், காய்கறி வேக வைத்த தண்ணீர், கிரீம், பால் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, வெங்காயம் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து, சோள மாவை பாலில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள், கரம்மசலாத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, சூப் கப்பில் ஊற்றி, மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிம்பிள் சூப்

தேவையானவை: காய்கறிகளின் தோல், காம்பு, தண்டு (கழுவிக் கொள்ளவும்), பேரிக்காய் தோல் – தேவையான அளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பல், நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, வொயிட் சாஸ் – 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயதாள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய காய்கறி தோல், தண்டு, இலை, பேரிக்காய் தோல்களை கழுவி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வொயிட் சாஸ், உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி… கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஸ்வீட் கார்ன் சூப்

தேவையானவை: காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், நறுக்கிய கேரட் – 2 டீஸ்பூன், கோஸ் – 50 கிராம், உதிர்த்த ஸ்வீட் கார்ன் – 3 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் – தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் – அரை டீஸ்பூன், அஜினமோட்டோ – கால் டீஸ்பூன், வெங்காயத்தாள் – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும், பாதி வெந்தவுடன்… உப்பு, மிளகுத்தூள், வினிகர், அஜினமோட்டோ சேர்த்து, சோள மாவை தண்ணீரில் கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கெட்டியாக வரும்போது இறக்கி, கிண்ணத்தில் ஊற்றி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டோஃபு பாலக் சூப்

தேவையானவை: பாலக் கீரை – ஒரு கப், டோஃபு (சோயா பனீர்) – 100 கிராம், வெங்காயம் – ஒன்று, செலரி – சிறிதளவு, கோஸ் – 100 கிராம், நறுக்கிய இஞ்சி – பூண்டு – ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் (அ) வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காடாயில் எண்ணெய் (அ) வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி – பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பூண்டு சூப்

தேவையானவை: முழுப்பூண்டு – 2 (தோலுரிக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் – அரை லிட்டர், மைதா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப், கிரீம் அல்லது கெட்டித் தயிர் – சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மைதாவையும் சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, கிரீம் (அ) தயிர் சேர்த்துப் பரிமாறவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்

தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் (எல்லாம் சேர்த்து வேக வைத்தது), நூடுல்ஸ் – தலா ஒரு கப் (வேக வைக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் – 4 கப், வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – ஒரு பல், வெங்காயத்தாள் – ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, வெண்ணெய், சோள மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயை போட்டு, உருகியதும் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி… காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி… கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பீட்ரூட் சூப்

தேவையானவை: பீட்ரூட் துருவல் – ஒரு கப் , கேரட் துருவல் – அரை கப் , வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் – ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.

செய்முறை: காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டி… உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் கிரீம் சேர்த்துப் பரிமாறலாம்.

நன்றி அவள்விகடன்