“வேளையில் அடிக்கடி ஆர்வம் குறைகிறதா? காரணமேயில்லாமல் சலிப்பாய் இருக்கிறதா? ஒரு விஷயத்தைப் பாதியிலே விட்டு விட்டு சிறிது நேரம் எங்கோ வெறித்து நோக்கிவிட்டு மீண்டும் தொடர்கிறீர்களா?” வரிசையாய் கேள்விகள் கேட்டார் அந்த மனநல நிபுணர்.

 “ஆமாம்! ஆமாம்!” பதில் சொல்லிக் கொண்டே வந்தவருக்கு எதிர்பார்ப்பு கூடியது. அறிகுறிகளையெல்லாம் சரியாய்ச் சொல்கிறார். தனக்கிருக்கும் நோயையும் சரியாக சொல்வார் என்று.

நீங்கள் நலமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்றார் மனநல நிபுணர்.

“நன்றி…. ஆனா…” தயக்கத்துடன் இழுத்தவரின் தோள்களை அழுத்தமாய் தட்டிவிட்டுச் சொன்னார், “கவலைப்படாதீங்க! எல்லோருக்கும் இது நிகழும்”

சின்னப் பின்னடைவுகள் எல்லோருக்கும் நிகழக்கூடியவையே. தனக்கு பின்னடைவு நேர்ந்து விட்டதைப் புரிந்து கொள்வதே விடுபடுதலின் முதல்படி.

விரும்பி நடந்த பாதையில் இருந்து விலகி நடப்பது, பழகிய சாலையிலேயே தவறான திருப்பத்தில் திரும்பி, சுதாரித்து மீண்டும் சரியாக பயணம் செய்வதைப் போன்றதுதான். இதில் கலங்கவோ கவலை கொள்ளவோ எதுவுமில்லை. விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டீர்கள் என்பதுதான் எல்லாவற்றை விடவும் முக்கியம்.

“அடடா! தப்பு நடந்து போச்சே” என்று சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி, கார் ஸ்டீயரிங்கில் முழங்கையை ஊன்றி கையைக் கன்னத்திற்கு முட்டுக் கொடுத்து, கவலைப்படுவதற்கல்ல கார்ப்பயணம்.

தவறு நடந்தது தெரிந்தவுடனே சரியான பாதையை மனசுக்குள் கொண்டுவந்து, சந்தேகம் வந்தால் யாரிடமாவது கேட்டு, காரைத் திருப்பி, காற்றாய் பறந்து, போக வேண்டிய பாதையில் போகிறோம்.

வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான்! தவறு நேர்ந்ததென்று தெரிந்த மாத்திரத்தில், துள்ளலுடன் தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ள எழுபவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் சோர்வை உதறி, சேரவேண்டிய திசைநோக்கித் திரும்புகிறார்கள்.

வகுத்துக்கொண்ட பாதையிலிருந்து மாறிச் செல்வது பெரும்பாலும் ஏன் நிகழ்கிறது? இலக்கைத் தவறவிடுவதால் நிகழ்கிறது. இலக்குகளில் ஆர்வம் குறைவதோ, இலக்குகளை எட்டமுடியுமா என்ற சந்தேகம் வருவதோ, இதற்குக் காரணம். இலக்குகள் என்பவை வெறும் கனவுகள் அல்ல. ஒன்றை சென்று சேர்வதன் முக்கியத்துவம் மட்டுமன்றி அதற்கான வழி வகைகளையும் சேர்த்துத் திட்டமிடுவதற்குப் பெயர்தான் இலக்குகளை வகுப்பது.

தங்கள் பாதையிலிருந்து தவறுபவர்களுக்கு இலக்கை நிர்ணயிப்பது மட்டுமே போதாது. ஏனென்றால் ஓர் இலக்கை எட்டுவதற்கு எல்லோருமே ஒரு காலவரையறையைக் கொண்டிருப்பார்கள். அதற்குள் அடைய முடியாவிட்டால் ஏன் அடைய முடியவில்லை என்பதற்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.

எனவே, ஒரு வருடம் கழித்து ஓர் இலக்கை எட்டுவது என்று வகுத்துக் கொண்டால், அந்த வருடம் முழுவதும் உங்கள் முன்னுரிமைகளை வகுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

இலக்கை எட்டுவதற்கான வேலைகளைத் தாண்டிக் கொண்டு, முக்கியமில்லாத விஷயங்கள் மூக்கை நுழைத்தால் நீங்கள் உங்கள் இலக்கை எட்டுவதற்கு உங்களுக்கு வழிவகுக்கும்.

முன்னுரிமைகளை வகுப்பதன் மூலம், தேவையில்லாத ஈர்ப்புகளிலிருந்து தள்ளிப் போக முடிகிறது. தொழில் முனைவோர் மற்றும் இளம் தொழிலதிபர்களின் கவனத்தை எது சிதறடிக்கிறது என்ற கேள்விக்கு மேலை நாடுகளில் பி.எஸ்.ஓ. சிண்ட்ரோம் என்று ஒன்றைச் சொல்கிறார்கள். (BSO Syndrome) Bright and shiny objects என்று இதற்குப் பொருள். வெளியே பளபளப்பாக இருக்கும் பல விஷயங்கள், வேண்டாத ஈர்ப்பாகத்தான் விளங்கும். இதுபோன்ற ஈர்ப்புகளை கவனமாகத் தவிர்ப்பவர்களுக்கு இலக்கு நோக்கி நடப்பதும் எளிமையான விஷயமாகவே இருக்கும்.

நம்பகமான ஒரு கண்காணிப்பாளரை நீங்களே நியமிப்பதும், உங்களைவிட உயர்ந்தவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதும் இந்த ஈர்ப்புகள், கவனச் சிதறல்களில் இருந்தெல்லாம் தப்பிக்கத் துணைபுரியும்.

வேலையிலேயே புதிதுபுதிதாக சிலவற்றை உருவாக்குவது, நீங்கள் சின்ன நிறுவனத்தின் முதலாளியாக இருந்தால், உங்கள் ஊழியர்களுடன் சேர்ந்து அலுவலகத்தை சுத்தம் செய்வது இவையெல்லாமே உங்களை இயல்பான மனிதராக வைத்திருக்கும்.

வகுத்த இலக்கிலிருந்து லேசாகத் தடுமாறுவது இயல்புதான். தடம் மாறாமல் இருப்பதே முக்கியம். உங்கள் இலக்குகளில், உங்கள் கனவுகளில் நம்பிக்கை வையுங்கள். வகுத்துக் கொண்ட பாதைக்கு வேகமாகத் திரும்புங்கள். முன்னேறிக் கொண்டே இருங்கள்!!

நன்றி: சுவாமிநாதன் – நமது நம்பிக்கை