Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2012
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,347 முறை படிக்கப்பட்டுள்ளது!

முயல் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்..!

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது  போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம.

முயல் குட்டியானது சுமார்  ஒரு மாசம் வரை தாயுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.. அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான முயல்குட்டிகள் நமக்கு கிடைக்கும். நன்றாக வளர்ந்த முயல்களை கிலோ ஒன்றிற்கு தரத்திற்கு தகுந்தாற்போன்று 300 முதல் 350,400,500,600 என   ரூபாய் வரைக்கும் விற்கலாம்..இதற்கு தேவையான முதலீடு சுமார் 30,000 மட்டும் போதுமென்கிறார்கள் முயல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்..

ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும்.

கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.

உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.

வகைகள்
இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும்.

ரோமம் விற்றால் காசு
சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம்.

முயல் இறைச்சியை பிரியாணி, சில்லி,  ரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம்.  சந்தை வாய்ப்பு  ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள்,  விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.

கறியில் மருத்துவ குணம்
முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.

தினமும் 2 மணி நேரம் போதும்
முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம்.

கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம்.

முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும்.

கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம்.
பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும்.

குட்டி ஈனுதல்
பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றன. அவை குட்டி ஈனும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 – 30 நிமிடத்திற்குள் குட்டி ஈனுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம்.அச்சமயத்தில் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும்.அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம்.

வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?
முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும்.

முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம்.

பல்கலையில் பயிற்சி
குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது.
முயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும்.

நோய்கள்
முயலுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும். அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

நன்றி – தங்கம்பழனி