யுகபுருஷர் – ஐன்ஸ்டைன் (Person of the Century)
தனக்கு மூன்று வருஷம் சீனியரான, கால் ஊனமுற்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். என்றாலும், இயற்பியல்தான் அவருடைய முதல் காதலாக இருந்தது.
2005-ஐ உலக இயற்பியல் ஆண்டாக ஐ.நா. அறிவித்ததை நாம் மறக்கக் கூடாது. ஒரு முக்கியமான நூற்றாண்டு நிறைவை உலகமே கொண்டாடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905-ல் ஐந்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு, பிரபஞ்ச சக்திகளைப் புரிய வைக்கும் புதிய பாதைகள் அனைத்தையும் அமைத்து, பழைய அஸ்திவாரங்களைக் கலைத்தார்.
1905-ம் ஆண்டை அறிவியல் சரித்திரத்தில், ‘முன்னேற்றத்தில் ஓர் அதிசய ஆண்டு’ (Annus Mirablis) என்பார்கள். (ஆஹா… ஆரம்பிச்சுட்டார்யா!) இதற்கு முன், உலக சரித்திரத் தின் மற்றொரு ‘அன்னஸ் மிராப்லிஸ்’ 1666. அந்த ஆண்டை, சர்.ஐசக் நியூட்டன் கால்குலஸ், ஒளியியல், புவி ஈர்ப்பு விசை, இயக்க விதிகள் அனைத்தையும் கண்டுபிடித்த மற்றொரு அதிசய ஆண்டு என்பார்கள்.
அலெக்ஸாண்டர் போப் என்னும் கவிஞர் Nature and nature’s laws lay hid in night/ God said let Newton be and all was light (இயற்கையும் அதன் விதிகளும் இருளில் மறைந்திருந்தன. கடவுள் நியூட்டனை அழைத்தார். எல்லாம் வெளிச்சமாயிற்று!) என்றார். கடவுள் ஐன்ஸ்டைனை அழைத்த போது, அந்த வெளிச்சத்தை அணைத்து வேறு வெளிச்சம் போட்டார்.
ஐன்ஸ்டைன் என்ன சாதித்தார் என்பதைப் பற்றிப் பலருக்குக் குழப்பம் இருக்கிறது. ஆல்பர்ட் நார்த் வைட்ஹெட் என்னும் அறிஞரிடம் ஒரு பத்திரிகை நிருபர், “உலகத்தில் ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி புரிந்தவர்கள் மூன்று பேர்தானாமே?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “இரண்டு பேர் இருக்கிறார்கள். மூன்றாவது யார் என்றுதான் யோசிக்கிறேன்” என்றாராம்.
பயப்படாதீர்கள்… ரிலேட்டிவிட்டி தியரி அத்தனை கடினமல்ல! ரிமோட்டைப் பயன்படுத்தி, தொலைக் காட்சியைச் சுட்டுவிட்டு, செல்போனைக் கொன்றுவிட்டு, கொஞ்ச நேரம் படித்தால் எளிதாகப் புரியும். ஐன்ஸ்டைன் செய்தது ஒன்றும் பெரிய செப்பிடு வித்தை அல்ல. ஆராய்ச்சிசாலைகளில், பரிசோதனைகள் எதுவும் செய்ய வில்லை. Intuitive என்பார்களே, அந்த உள்ளுணர்வைப் பயன்படுத்தி தொடர்ந்து சிந்திக்க ஆரம்பித்தார். Annalen der physik என்னும் ஜெர்மன் ஆராய்ச்சி மாத இதழில், நான்கு முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.
முதலில் ‘பிரவுனியன் மோஷன்’ என்பதை விளக்க ஒரு கட்டுரை.
பிரவுனியன் மோஷன் என்பது ஒரு திரவத்திலோ வாயுவிலோ நுட்பமான அணுக்களும் மாலிக்யூல்களும் கால்பந்தாட்டம் போல் மோதிக் கொள்ளும் தற்செயலான இயக்கத்துக்கு வைத்த பெயர். தூசு படிந்த வீட்டில் வெயில் கற்றை சாயும்போது அல்லது பி.சி.ஸ்ரீராம் படங்களில் கதவைத் திறந்தால் சின்னச் சின்ன துகள்கள் கன்னாபின்னா என்று ஒளிக் கற்றையில் அலையுமே, அது பிரவுனியன் மோஷ னுக்கு உதாரணம். இதை ‘ஸ்டோக் காஸ்டிக்’ என்றெல்லாம் விவரித்து பயமுறுத்த மாட்டேன். திரவ, வாயுப் பொருள்களில் நிகழும் தன்னிச்சையான மாலிக்யூலர் மோதல்கள். 1827-ல் ராபர்ட் பிரவுன் என்பவர்தான் இதை முதலில் கவனித்தார் (பெயர்க் காரணம்). இதற்கு மற்றவர்களைவிட, ஐன்ஸ்டைன் தந்த விளக்கம் பிரசித்தமானது.
அணு என்பது அதுவரை சந்தேகக் கேஸாக இருந்தது. ‘கைனெட்டிக் தியரி ஆஃப் ஃப்ளூயிட்ஸ்’ என்னும் சித்தாந்தத்தின் அடிப்படையில், மாலிக்யூல்கள் முட்டி மோதிக்கொள்வதை ஐன்ஸ்டைன் விவரித்தபோது, அணு இருப்பது நிரூபிக்கப்பட்டது.
ஐன்ஸ்டைனின் இரண்டாவது கட்டுரை,ஃபோட்டோ எலெக்டிரி சிட்டிக்கு அவர் தந்த விளக்கம்.
ஃபோட்டோ எலெக்ட்ரிசிட்டி என்பதை நீங்கள் சோலார் பேனல்களில் பார்த்து இருப்பீர்கள். சிலிக்கன் டையாக்ஸைடு போன்ற பொருள்கள் மேல் வெயில் விழுந்தால் கரண்ட் பாய்கிறது. இது ஃபோட்டோ எலெக்ட்ரிக் விளைவால் நிகழ்வது. ஐன்ஸ்டைனுக்கு முன், ஒளி அலை வடிவானது என்று விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஒளி துகள்களால் ஆனது என்கிற சித்தாந் தத்தைக் கொண்டுவந்து ஃபோட்டோ எலெக்ட்ரிக் விளைவை விளக்கினார் ஐன்ஸ்டைன். இந்த ஒளித் துகள்களுக்கு (எலெக்ட்ரான், ப்ரோட்டான் போல)ஃபோட்டான் என்று பின்னர் பெயர் வைத்தனர். ஐன்ஸ்டைனின் விளக்கம், க்வாண்டம் இயற்பியல் என்னும் நவீன சிந்தனைக்கு வித்திட்டது.
ஐன்ஸ்டைனின் மூன்றாவது கட்டுரை, ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி தியரி. தனிச்சார்பியல் தத்துவம். பிரபஞ்சத்தில் (invariants) மாறாதவை என மிகச் சில உள்ளன. ஒளியும் அதன் அண்ணா, தம்பிகளான எக்ஸ்-ரே, மின்காந்த அலைகளும் பரவும் வேகம் எந்த அமைப்பிலும் மாறாதது. ஸ்திர மானது. அதைவிட வேகமாகப் பயணம் செய்யவே முடியாது. அதை மிஞ்ச முடியும் என்று கொண்டால், கணக்கு உதைக்கிறது. அதனால் கால, தூர இடைவெளிகள் எல்லோருக்கும் ஒன்று அல்ல. வேகமாகப் பயணம் செய்தால் ஒரு அடி முக்கால் அடியாகும்… ஒரு செகண்ட் ரெண்டு செகண்டாகும் (ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்). இப்படிக் காலமும் தூரமும் அட்ஜஸ்ட் செய்து கொண்டால்தான் ஒளியின் வேகம் மாறாமல் இருக்க முடியும் என்றார் ஐன்ஸ்டைன். மேலும், சீராகச் செல்லும் உலகுக்கும் நிற்கும் ஸ்திர உலகுக்கும் வேறுபாடே சொல்ல முடியாது என்றார். புரட்சிகரமான கருத்துகள். நவீன இயற்பியலில், நடைமுறையில் ‘பார்ட்டிக்கிள் ஆக்ஸலரேட்டர்கள்’ என்னும் ராட்சச பரிசோதனைக் கருவிகளில், ஒளிவேகத்துக்கு அருகில் துகள்களைத் துரத்தி அளந்து, ஐன்ஸ் சொன்னது சரியே என்று கண்டுபிடித்தார்கள்.
பின்னர், “நீங்கள் ஏரோப்ளேனில் கிழக்கு நோக்கிப் பயணம் செய்யும்போது ரிலேட்டிவிட்டிபடி ஒரு மைக்ரோ செகண்டு இளமையாகிறீர்கள்… ஏரோப்ளேன் சாப்பாட்டைச் சாப்பிடாத பட்சத்தில்!” என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.
நான்காவதாக, மேட்டர் என்னும் பருப்பொருளுக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பிரபலமான E=mc2 என்னும் சமன்பாடு புறப்பட்டது. அணு ஆயுதங்களுக்கெல்லாம் பின்னணியில் இருக்கும் சித்தாந்தம் இந்தச் சமன்பாடுதான். 1921-ல்தான் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு தந்தார்கள். அதுவும் ரிலேட்டிவிட்டிக்கு அல்ல…ஃபோட்டான் கண்டுபிடிப்புக்கு!
ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் தத்துவம் கொஞ்சம் தலை சுற்றும். விண்வெளியே வளைந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? 1915-ல் அவர் அதை நம்ப வைத்ததுமல்லாமல், 1919-ல் ஒரு சூரிய கிரகணத்தின் போது அது நிரூபிக்கவும்பட்டது.
கிராவிடேஷன் என்னும் ஈர்ப்பு விசையே விண்வெளியின் தன்மை. அதிகக் கனமுள்ள நட்சத்திரங்களுக்கு அருகில் அந்த விசை அதிகமிருந்தால், அது ஒளிக்கதிரை வளைத்து உள்ளே இழுத்துவிடும். கரும் பள்ளங்கள் உருவாகும். இதெல்லாம் எந்த வகையிலும் ரீல் அல்ல!
ஐன்ஸ்டைனின் ஜெனரல் தியரி சிந்தனைகளின் விளைவாக, சென்ற நூற்றாண்டில் ஐன்ஸ்டைனுக்குப் பின் வந்த விஞ்ஞானிகள் பல முறை பரிசோ தித்துப் பார்த்து நிரூபித்த உண்மைகள். இவை காஸ்மாலஜி என்னும் புதிய இயலுக்கு வித்திட்டன. பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அதுவரை சென்று, கடவுள் எங்கேயாவது ஒளிந்திருக்கிறாரா என்று தேட முடிந்தது. (இன்றுவரை அகப்பட வில்லை!).
ஐன்ஸ்டைன் ஐம்பதாண்டுகளுக்கு முன் இறந்து போகுமுன், theory of everything என்ற உலகின் நான்கு வகை ஆதார சக்திகளை, குறிப்பாக புவிஈர்ப்பு விசை யையும் க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறிய முற்பட்டார்… முடியவில்லை! இன்னும் அது விஞ்ஞானிகளுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருக்கிறது. உங்களில் யாருக்காவது புரிந்ததா? புரிந்தவர்கள் இந்த வருஷம் ரிலேட்டிவிட்டியை எளிதாக விளக்கும் பதினைந்து நிமிஷ வீடியோ எடுத்து அனுப்பினால், சிறந்ததற்கு 36000 யூரோ பரிசு உண்டு. முயற்சி பண்ணிப் பாருங்களேன்.
ஐன்ஸ்டைன் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை களை எழுதியபோது, ஸ்விஸ் நாட்டில் ஒரு பேட்டண்ட் உரிம அலுவலகத்தில் கிளார்க்காக இருந்தார். வயது 26. கல்யாணமாகி, கையில் குழந்தை. ஒழுங்காகச் சம்பளம் கிடைக்கும் என்று அரசு அலுவலில் சேர்ந்தவர், வேலைக்கு நடுவிலும் மத்தியான டிபனை விட்டுவிட்டுப் பிரபஞ்சத்தை யோசித்தார்.
சென்ற நூற்றாண்டில் எத்தனையோ பேர் அதன் சரித்திரத்தை ஒரு செயலால், ஒரு சொல்லால், ஒருமீறலால், ஒரு தயையால், ஓர் ஆணையால் திசை திருப்பி இருக்கிறார்கள். இயந்திரங்களைப் பறக்க வைத்திருக்கிறார்கள். படம் காட்ட வைத்திருக்கிறார்கள். சிந்திக்க வைத்திருக்கிறார்கள். தேசங்களைப் போரிட வைத்திருக்கிறார்கள். நம்பிக்கை துளிர்க்க வைத்திருக்கிறார்கள்.
இவர்களின் சாதனைகளை எல்லாம் மிஞ்சிய ஒரே மனிதராக… க்வாண்டம் இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ், அணுசக்தி, big bang எல்லாவற்றுக்கும் அடிகோலிய ஐன்ஸ்டைனை ‘யுகபுருஷர்’ (Person of the Century) என்று அறிவித்தது ‘டைம்‘ பத்திரிகை.
நன்றி:சக்தி .ஆர்