Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,158 முறை படிக்கப்பட்டுள்ளது!

நிலவேம்பு கொண்டு டெங்குவை விரட்டுவோம்!

சித்த மருத்துவத் தீர்வு

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சலோடு வரும் நோயாளி களைக் குணப்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கடுமையாகப் போராடி வருகின்றன. ‘இவ்வளவு சிரமம் தேவைஇல்லை. சித்த வைத்தியத்தில் எளிதில் குணப்படுத்தலாம்’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு முதுநிலை சித்த மருத்துவர் சம்பங்கி இதுபற்றி நம்மிடம் பேசினார். ”சில ஆண்டுகளுக்கு முன், சிக்குன்குன்யா காய்ச்சல் தமிழகத்தில் வேகமாகப் பரவியபோது, ஆங்கில மருத்துவத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தநேரத்தில், சிக்குன் குன்யாவை உருவாக்கும் வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தை அறிமுகம் செய்து, அதன் ஆற்றலை நிரூபித்துக் காட்டினோம். அந்த ஆய்வுக்குப் பிறகுதான் பலரும் சித்த மருத்துவத்தின் பக்கம் திரும்பினர். இப்போது பரவுகிற டெங்கு காய்ச்சலையும் சித்தமருத்துவம் மூலம் எளிதில் குணப் படுத்தலாம். நிலவேம்பு இருக்கும்போது கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து, ”விட்டுவிட்டு வரும் காய்ச்சல், கண்களைச் சுற்றிலும் வலி, தலைவலி, மூட்டுவலி, குமட் டல், வாந்தி, உடம்பில் சிறு கொப்புளங்கள், அதில் ரத்தக் கசிவு, மலத்தில் ரத்தக்கசிவு ஆகியவைதான் டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் சூரணத்தோடு சேர்த்து வசந்த குசுமாகரம் மாத்திரை, சுதர்சன சூரண மாத்திரை, இம்பூரல் மாத்திரையும் கொடுக்கிறோம். இவை ஒவ்வொன்றுக்கும் டெங் குவால் உடலில் ஏற்படும் பாதிப்புக்களைக் குணப் படுத்தும் தன்மை உண்டு.

நிலவேம்பு குடிநீர் சூரணத்தில் நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனத்தூள், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் என்று ஒன்பது வகையான இயற்கை மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன. இதில் நிலவேம்பு, விலாமிச்சு வேர், பேய்புடல், மிளகு, பற்பாடகம் ஆகிய ஐந்து பொருட்களும் உடலின் வெப்பத்தை அகற்றி காய்ச்சலைப் போக்கும் தன்மை கொண்டவை. தலைவலி, மூட்டுவலி  ஆகியவற்றையும் இவை போக்கிவிடும். நாவறட்சியைத் தடுத்து உடலில் நீர்ச்சத்து குறை யாமல் வெட்டிவேர் காப்பாற்றும். தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, குடல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைப் போக்கி புண் ஏதும் ஏற் படாமல் கோரைக்கிழங்கு தடுக்கும். உடலில் உள்ள அகட்டு வாயுவை அகற்றி வயிறு உப்புசம் ஏற் படாமல் சுக்கு தடுக்கும். சிறுநீர் எரிச்சலைப் போக்கி அதிக சிறுநீர் எளிதில் வெளியேற சந்தனத்தூள் வழிவகை செய்கிறது. இத்தனை செயல்களையும் ஒருங்கே கொண்டதுதான் இந்த நிலவேம்பு சூரணம். இது, டெங்குவுக்கு மட்டுமல்ல… பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற எல்லா விஷக் காய்ச் சலுக்கும் ஏற்ற அற்புதமான மருந்து.

டெங்குவின் முக்கியப் பாதிப்பு… உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதன் வழியாகவும், மலத்தின் வழியாகவும் ரத்தக்கசிவு ஏற்படுவதுதான். அப்படி அதீத ரத்தம் வெளி யேறுவதால்தான் மரணம் ஏற்படுகிறது. அதைத் தடுக்கத்தான் இம்பூரல் மாத்திரை. ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரைகள் வீதம் சாப்பிட்டு வந்தால், எப்படிப்பட்ட ரத்தக்கசிவும் ரத்த வாந்தியும் மலத் தின் மூலம் வெளியேறும் ரத்தமும் நின்று விடும். உடலில் உள்ள ரத்தம் கெட்டுப் போகாமலும் இது காக்கும். வசந்தகுசுமார சூரணமும், சுதர்சன சூரண மாத்திரையும் காய்ச்சலைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த மருந்துகளைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால், டெங்குவின் சிறு பாதிப்புகூட இல்லாமல் மீண்டு விடலாம்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து சித்த மருத்துவப் பிரிவுகளிலும் இந்த மருந்துகள் கிடைக்கின்றன. அதுதவிர, நாட்டு மருந்துக் கடைகள், ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளிலும் கிடைக்கிறது. டெங்கு ஏற்பட்டவர்கள் மட்டுமின்றி வந்துவிடும் என்று அச்சப்படுபவர்களும் இதைச் சாப்பிடுவதன் மூலம் நோயின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை கட்டுப்படுத்தவும் சித்த மருத் துவத்தில் வழி இருக்கிறதாம். ”காஞ்சாங்கோரை அல்லது வேப்பிலையை வீட்டின் முன்புறம் மற்றும் கொல்லைப் புற வாசல்களில் தோரணம் போல் தொங்கவிட்டால், அதன் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது. அதேபோல, நொச்சி இலை அல்லது காஞ்சாங்கோரை இலையை நிழலில் காயவைத்து நெருப்பில் போட்டு புகை வரவழைத்தால், அந்தப் புகையும் கொசுவை உள்ளே வராமல் விரட்டிவிடும். ஆடாதொடை இலை மற்றும் வேப்பிலையை  வெயிலில் காயவைத்து சமஅளவு எடுத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியோடு சிறிதளவு சாணத் தூள் சேர்த்து அதில் பச்சரிசிக் கஞ்சியை ஊற்றி ஊதுவத்தி போல் உருட்டி வெயிலில் காயவைத்து எடுத்து கொசுவத்தி போல் பயன்படுத்தினாலும் கொசு வராது” என்கிறார் சம்பங்கி.

முயற்சித்துப் பார்க்கலாமே!

நன்றி: ஜூனியர் விகடன்

—-

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை : வேறு வழியின்றி அரசு ஒப்புதல்

“டெங்கு’ காய்ச்சலால் ஏற்பட்டு வரும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் திணறிவரும் தமிழக அரசு, வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையை துவக்கி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இந்த ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில், 39 பேரை பலிகொண்ட, டெங்கு காய்ச்சலின் தீவிரம், …

இரண்டு மாதங்களாக குறைந்தபாடில்லை.மதுரை மாவட்டத்தில் மட்டும், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை, 50க்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர். நாள்தோறும், பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால், பொதுமக்கள் டெங்கு பீதியில் உறைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் தன்மை உள்ளதாக, சித்த மருத்துவர்கள் கூறும், நிலவேம்பு குடிநீர் கஷாயத்தை, அக்., 26ம் தேதி முதல், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, அனைத்து அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவ பிரிவுகளில் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்தது.

டெங்கு காய்ச்சலை தடுப்பது மட்டுமின்றி, இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரையும், சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். இதற்கான வாய்ப்பை அரசு அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து, இம்மாதம், 2ம் தேதி, “தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால், நாள்தோறும் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தடுக்க முடியாததால், வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையையும் அளிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, டெங்கு வார்டில், சித்த மருத்துவ சிகிச்சையை, சுகாதார துறை அமைச்சர் விஜய் நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:அலோபதி மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலுக்கு தனியாக சிகிச்சை இல்லை. சித்த மருத்துவத்தில் டெங்குவை குணப்படுத்த முடியும் என, பரிசோதனை முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.இச்சிகிச்சையால் பக்கவிளைவுகள் இல்லை என்பதால், மதுரை உள்ளிட்ட இடங்களில், அரசு மருத்துவமனை, டெங்கு வார்டுகளில் சிகிச்சை பெறுவோருக்கு, அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையும் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறுஅமைச்சர் விஜய் கூறினார்.

மூன்று நாட்களில் குணம்:அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மாணவர் வீரபாபு கூறியதாவது: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, காய்ச்சலை குறைக்க, நிலவேம்பு குடிநீர் கஷாயமும், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பப்பாளி இலை சாறும் வழங்கப்படும். இவற்றுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு, மலைவேம்பு சாறும் தரப்படும்.இவற்றை, அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிக்கு, வயதிற்கேற்ப, 5 முதல் 10 மி.லி., அளவிற்கு, ஒரு நாளைக்கு, நான்கு முறை அளித்தால், மூன்று நாட்களில், “டெங்கு’ குணமாகும்.டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படும் புறநோயாளிகளுக்கும், சித்த மருந்துகளை தருவதன் மூலம், “டெங்கு’வை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வீரபாபு கூறினார்.நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுற்றறிக்கை:டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்களுக்கு, சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து, மருத்துவகல்வி இயக்குனர், பொது சுகாதார துறை இயக்குனர், ஊரக மருத்துவப் பணிகள் இயக்குனர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு, இச்சிகிச்சை குறித்து தெரிவிக்க, மாவட்ட கலெக்டர்கள், இந்திய மருத்துவ துறை கமிஷனர் ஆகியோர், அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதார துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.