சர்வதேச அளவில், தங்கம் விலை மேலும் சரியும் என, அமெரிக்காவை சேர்ந்த தரகு நிறுவனமான மெரில் லின்ச் எச்சரித்துள்ளது.
இந்நிறுவனத்தின்,உலோக திட்டப் பிரிவு ஆய்வாளர் மைக்கேல் விட்மர் கூறியதாவது:லண்டன் உலோக சந்தையில், கடந்த இரண்டு மாதங்களில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 300 டாலர் வரை சரிவடைந்து உள்ளது.
சைப்ரஸ் நாடு :
கடந்த 12 ஆண்டுகளாக உயர்ந்து வந்த தங்கம், தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சைப்ரஸ் நாடு, அதன் வசம் உள்ள தங்கத்தை, விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது.இது விற்பனைக்கு வரும் பட்சத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 150 டாலர் குறைந்து, 1,200 டாலராக சரிவடையும்.இதனால், வரும் 2014ம் ஆண்டு, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 2,000 டாலரை எட்டும் என்று அறிவித்த இலக்கை, நிறுவனம் திரும்ப பெற்றுக் கொள்கிறது. மேலும், தங்கத்தின் விலை உயரும் என்ற நிலைப்பாட்டை, ஏற்றத் தாழ்வற்ற நிலைக்கு நிறுவனம் மாற்றியுள்ளது. இவ்வாறு, விட்மர் தெரிவித்தார்.தங்கம் குறித்த மதிப்பீட்டை, மெரில் லின்ச், மாற்றிக் கொண்டு உள்ள நிலையில், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மட்டும், தங்கத்தின் போக்கை துல்லியமாக மதிப்பீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சர்வதேச விளைபொருள் ஆய்வு பிரிவின் தலைவர், ஜெப்ரி கர்ரி, கடந்த 10ம் தேதி, தங்கத்தை விற்பனை செய்யுமாறு, வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கடுத்த இரு வர்த்தக தினங்களில், அதாவது, ஏப்ரல் 15ம் தேதிக்குள், லண்டன் முன்பேர சந்தையில், தங்கத்தின் விலை, 13 சதவீதம் சரிவடைந்தது. இது, கடந்த, 33 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,200 டாலரை விட குறைய வாய்ப்புள்ளது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,250 – 1,350 டாலராக உள்ளது. இது தற்காலிக நிலைதான். தங்கம் விலை, உடனடியாக, பழைய நிலையை எட்ட முடியாது. அதனால், வரும் 2014ம் ஆண்டு, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,270 டாலர் என்ற அளவிலேயே இருக்கும் என, ஜெப்ரி தெரிவித்து உள்ளார்.
முதலீடு :
அதேசமயம், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் சர்வதேச சந்தை பொருள் ஆய்வு பிரிவின் பகுப்பாய்வாளர் ரூபாலி சர்க்கார் கூறுகையில், “நடப்பாண்டில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,400 -1,450 டாலராக இருக்கும் என்று தெரிவித்தார்.”தற்போது தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வாருங்கள்’ என, யு.பி.எஸ் வங்கி தெரிவித்துள்ளது.தங்கம் விலை குறைவால், இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு, 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்து உள்ளது. இந்திய இல்லங்களில், தற்போது, 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் நிலவரப்படி, இந்த தங்கத்தின் மதிப்பு, 66.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 52.30 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
தங்க காசுகள் : ubtitle@@ இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதையடுத்து, இந்தியாவில், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில், தங்க காசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, மும்பை தங்கம், வெள்ளி சந்தையின் கவுரவ தலைவர் சுரேஷ் ஹூண்டியா தெரிவித்தார்.ஒரு சில வர்த்தகர்கள், தங்க காசுகளை கூடுதலாக, 200 ரூபாய் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தங்க இறக்குமதிக்கு கட்டுப்பாடு மற்றும் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், தங்கத்தை உடனடியாக இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.மேலும், ஒரு சில வங்கிகளிடம், தங்க காசு கையிருப்பும் குறைந்து உள்ளது. இதுவும், தங்க காசு பற்றாக்குறைக்கு காரணம் என, கூறப்படுகிறது.
தங்கம் வாங்க இது சரியான நேரம் தானா?
கடந்த, 10 ஆண்டுகளில், தங்கம் விலையில் ஏற்படாத சரிவு, கடந்த, 10 நாளில் ஏற்பட்டுள்ளது. தங்கம் எட்டாக் கனியாகி வருகிறதே என, புழுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு, தங்கம் விலை சரிவு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் வாங்குவதையும் அதிகரித்துள்ளனர். ஆனால், முதலீட்டாளர்கள், தங்கம் மீது கடன் கொடுக்கும் வங்கியாளர்கள் மத்தியில், தங்கம் விலை சரிவு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்வதையும், கடன் அளிப்பதையும் குறைத்து வருகின்றனர். பாதுகாப்பான முதலீடு என கருதப்பட்ட தங்கத்தின் விலை குறைந்ததால், ரியல் எஸ்டேட் வர்த்தகம் சூடுபிடிக்கும் என, கூறுகின்றனர். பாதுகாப்பான முதலீடு செய்யவும், செய்யும் முதலீட்டில் லாபம் ஈட்டவும், சிறந்த பொருள் தங்கம் என்ற நிலை மாறுகிறதா? இந்த நிலைக்கு என்ன காரணம். எத்தனை நாளுக்கு நீடிக்கும் என்பது பற்றி, வணிகத் துறை வல்லுனர்களின் கருத்துக்கள் இதோ:
முரளீதரன், உதவி பொது மேலாளர், பாரத ஸ்டேட் வங்கி
தங்கம் விலை சரிவால், நகைகள் மீது அளிக்கும் கடனை, மிக எச்சரிக்கையாக வழங்க வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், வங்கி மூலம் விற்கப்படும், தங்க நாணயங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. வங்கிகள், நகைகள் மீது கடன் அளிப்பது கணிசமாக நடந்து வருகிறது. வழக்கமாக, ஒரு கிராம் தங்கத்துக்கு, கடன் அளிக்கும் போது, தங்கத்தின் சந்தை விலையை விட, குறைவான தொகையே கடனாக அளிக்கப்படும். இந்த குறைப்புத் தொகை, வட்டி மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும், விலை சரிவு ஆகியவற்றை சரிக்கட்டிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
மேலும், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தான் நகைக் கடன் அளிக்கப்படுகிறது. இதனால், வரா கடன் என்பது, நகைக் கடனில் பெரும்பாலும் இருக்காது. இதனால், தங்கம் விலை சரிவினால், நகைக் கடனுக்கு அளிக்கப்பட்ட தொகைக்கு பங்கம் வராது. அதே நேரத்தில், புதிய நகைக் கடன் எச்சரிக்கையாக அளிக்கப்படும். கிராமுக்கு இதுவரை அளித்து வந்த தொகை, குறைக்கப்படும்.
வங்கிகள் விற்பனை செய்யும், தங்க நாணயங்கள் விற்பனை, கடந்த 10 நாட்களில் அதிகரித்து வருகிறது. விற்பனை அதிகரிப்பதால், புதிய தங்கம் வேண்டி அளிக்கப்படும் ஆர்டர்களுக்கு, உடனடியாக தங்கம் கிடைக்கிறது. இதன்மூலம், வங்கி வருவாய் அதிகரிக்கிறது.
தங்கம் விலை சரிவால், சாதகம் மற்றும் பாதக அம்சங்களை சந்தித்து வரும் ஒரே துறை வங்கித் துறை தான். வங்கியின் கடன் கொள்கையில், பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால், வங்கிக்கு பாதிப்பு வராமல் தடுக்கப்படுகிறது. புதிய கடன் கொள்கைகள் உடனே அமலுக்கு வருவதால், வங்கிகள் முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கின்றன.
ஜெயந்திலால் சதானி, தலைவர், சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்கம்
ஐரோப்பிய யூனியனில் உள்ள, சைப்ரஸ் என்ற சிறிய நாடு, பொருளாதார மந்த நிலையில் சிக்கி, திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், நிதியுதவி கோரி, ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கியை
அணுகியது. இருப்பில் இருக்கும் தங்கத்தை விற்று, நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். அதன்பின், நிதியுதவியை வழங்குகிறோம் என, மத்திய வங்கி, சைப்ரஸ் நாட்டை அறிவுறுத்தியது. மத்திய வங்கியின் அறிவுரைப்படி, இருப்பில் இருந்த தங்கத்தை சைப்ரஸ் நாடு விற்று விட்டது. அந்நாடு விற்ற
தங்கத்தின் அளவு மிகச் சொற்பம் தான்.
ஆனால், ஐரோப்பிய யூனியனில் உள்ள இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளும், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்நாடுகளுக்கும், இதுபோன்ற அறிவுறுத்தலை, ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கி வழங்கினால், தங்கம் பெருமளவு சந்தைக்கு வரும். இதனால், தங்கத்தில் செய்த முதலீடு வீணாகிவிடும் என்ற அச்சத்தில், தங்கத்தை பெருமளவு விற்க ஆரம்பித்தனர்.
இதனால், தங்கம் விலை, கிடு கிடுவென குறையத் துவங்கியது. ஆனால், சைப்ரஸ் நாட்டுக்கு, போதிய நிதி கிடைத்து அந்நாடு, பொருளாதார சிக்கலிலிருந்து மீண்டுவிட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், கடந்த இரு நாட்களாக தங்கம் விலை உயரத் துவங்கி விட்டது. சரிந்த தங்கம் விலை, வெள்ளிக்கிழமை மாலை வரை, 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தான், தங்கத்தின் விலை குறையத் துவங்கியது. தங்கம் விலை இனி சரிய வாய்ப்பு மிகவும் குறைவு. வரும் காலங்களில், வழக்கமான மதிப்புடன் தங்கம் இருக்கும். கடந்த இரு வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முதலீட்டாளர்கள்; மகிழ்ந்தவர்கள் நுகர்வோர்.
நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்
தங்கம் விலை சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். உலகளவில், கடந்த, 10 ஆண்டுகளில், தங்கத்தில் இவர்கள் செய்த முதலீடு கணிசமானது. இதனால், இன்று தங்க விலை சரிவால் இவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இளைஞர்கள், தங்கத்தை ஆபரணமாக அணிவதில்லை. ஆனால், முதலீடு செய்கின்றனர். இந்த முதலீடுகளை, “பேப்பர் கோல்ட்’ என, அழைக்கின்றனர். தங்கத்தை வாங்கி இருப்பு வைத்து, விற்கும் முறையல்ல இது. மியூச்சுவல் பண்டிலேயே, “கோல்ட்’ என்ற முறை உள்ளது. இதில், தங்கத்தில் செய்யும் முதலீடுகள் அனைத்தும் பேப்பரிலேயே இருக்கும்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனம், தங்கத்தை வைத்திருக்கும். தங்கம் விலை உயரும் போது, முதலீட்டு மதிப்பு உயரும்; லாபம் கிடைக்கும். தங்கம் விலை குறையும்போது, முதலீட்டு மதிப்பு குறையும். தற்போது, தங்கத்தின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் இனியும், “பேப்பர் கோல்டை’ வைத்திருக்க இளைஞர்கள் விரும்பவில்லை. அதனால், மியூச்சுவல் பண்டை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.
தங்கம் விலை குறைந்ததால், தங்கம் வாங்குவோர், 10 நாட்களாக, அலைமோதிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் முதலீடுகள், ஏறக்குறைய முடிந்துவிட்டன. இந்த நிலையில், தங்க விற்பனை மேலும் சரியும்.
அதேபோல், “பேப்பர் தங்கத்தை’ விற்க, உலக நாடுகள் தயாராகி வருகின்றன. அந்த தங்கம் சந்தைக்கு வரும்போது, தங்க விலை மேலும் சரிவடையும். எனவே, வரும் காலங்களில், தங்கம் விலை குறையவே அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, தங்கத்தில் முதலீடு செய்ய, இனி வரும் காலங்களில் விரும்ப மாட்டார்கள். ஒரு முறை தங்கம் வாங்க நினைப்பவர்கள், இன்னும் ஓரிரு
மாதங்கள், பொறுத்திருந்து வாங்கலாம்.
சிட்டி பாபு, தமிழக தலைவர், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கூட்டமைப்பு
தங்க விலை சரிவால், ரியல் எஸ்டேட் வர்த்தகம் சூடு பிடிக்கும் என, எதிர்பார்க்கிறோம். கடந்த காலங்களில், இதேபோல் ஏற்பட்ட சூழ்நிலைகளில், ரியல் எஸ்டேட் வர்த்தகம் மேம்பட்ட அனுபவம் உள்ளது.
முதலீட்டாளர்கள், தங்கம், ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் ஆகியவற்றில் தான் அதிகளவு முதலீடு செய்கின்றனர். பங்கு வர்த்தகம் எப்போதும் நிச்சயமில்லாத துறை என்பதால், பங்குகளில் முதலீடு செய்வதை, பெருமளவு தவிர்த்தும் வருகின்றனர். இந்த நிலையில், தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்யவே முன்னுரிமை அளிக்கின்றனர்.
மிகக் குறைந்த பணத்தை முதலீடு செய்ய விரும்பும் போது, தங்கம் தான் வசதியான பொருளாக உள்ளது. அதனால், தங்கத்தை தேர்வு செய்கின்றனர். இதுதவிர, தங்கம் வாங்குவதில் சிக்கல்கள் இல்லை. யாருடனும் ஒப்பந்தம் செய்யவோ, சொத்தின் வில்லங்கத்தை அறியவோ தேவையில்லை. நினைத்த நிமிடத்தில் முதலீடு செய்யவும், விற்பனை செய்யவும் முடியும். மேலும், போட்டிகள் இல்லை. தங்கத்தில், முதலீடு செய்வது பாதுகாப்பானது. சர்வதேச அளவில் செல்லுபடியாகும் என, அதில் முதலீடு செய்ய முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தற்போது, தங்கத்தில் செய்த முதலீடு, பெரும் சரிவை கண்டுவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது உள்ள ஒரே வாய்ப்பு, ரியல் எஸ்டேட் தான். எனவே, ரியல் எஸ்டேட் வர்த்தகம் சூடுபிடிக்கும். கடந்த இரு வாரங்களில் தங்கத்தில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் வர்த்தகம் உயர்வதை உணர்ந்து வருகிறோம். நகரம், கிராமம் என்றில்லாமல், அனைத்துப் பகுதியிலும், ரியல் எஸ்டேட் வர்த்தகம் மேம்படும்.
நன்றி: தினமலர்