Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2013
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,870 முறை படிக்கப்பட்டுள்ளது!

கால்சென்டர் வேலை

callcenterஊர்க்கார பையன்கள் சிலர் சென்னைக்கு வந்து தங்கி வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே சென்ற ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தவர்கள். வெவ்வேறு கல்லூரிகளில் மெக்கானிக்கல்,ஈசிஈ,எலக்ட்ரிகல் படித்தவர்கள். நல்ல மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் வாழ்வின் மீது முழுக்க முழுக்க அவநம்பிக்கையை சுமந்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் எனக்கு மிக நெருங்கிய நண்பனின் தம்பியும் ஒருவன். அவனுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறதென்றும் அதை கொடுக்கவும் நண்பன் சொல்லியிருந்தான். பணம் கொடுப்பதற்காக தம்பியின் அறைக்கு சென்றிருந்தேன். அந்த பையன்களோடு சில மணிநேரங்கள் பேசியபோது மிகுந்த மனவருத்தத்தோடு பேசினர்.

கடந்த ஒரு வருடமாக வேலை தேடிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த பையன்கள். இன்னும் எங்கும் உருப்படியான வேலை கிடைத்தபாடில்லை. சில சாஃப்ட்வேர் கோர்ஸ்களை படித்துவிட்டு சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும், ஒருசிலர் துண்டுதுக்கடா கால்சென்டர்களில் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார்கள். மற்ற நண்பர்களும் கூட கால்சென்டர்களில்தான் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சாஃப்ட்வேர் கம்பெனிகளில் சுத்தமாக வேலைக்கு ஆளே எடுப்பதில்லை என்பதுபோல பேசினர்.

இணையம்தான் இவர்களுக்கான தேடுதலுக்கான இடமாக மாறிப்போயிருக்கிறது. இரவுபகல் பாராமல் இணையத்தில் வேலை தேடுகிறார்கள்! எப்போதும் ஃபேஸ்புக்கிலேயே பழியாய் கிடக்கின்றனர். தினமும் எங்காவது வாக் இன் இன்டர்வியூவில் கலந்துகொள்கிறார்கள்.

தினமும் ஹிந்துபேப்பர் மற்றும் வோர்ட் பவர் மேட் ஈஸி வாங்கி படித்து ஆங்கில அறிவை அவசரமாக வளர்க்க நினைக்கிறார்கள். ஆனாலும் வேலை கிடைத்தபாடில்லை.. என்னப்பா ஆச்சு என விசாரித்தேன்.
கால்சென்டர்களில் இப்போதெல்லாம் நன்றாக படித்து மதிப்பெண் பெற்றவர்களை வேலைக்கு எடுப்பதில்லை என்றனர். ஒரு பிரபல பிபிஓ நிறுவனம் 70சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களைதான் வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்களாம். அரியர்ஸ் இருந்தால் உங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறார்களாம் சில நிறுவனங்கள். பத்து அரியர்ஸ் இருந்தால் உடனே அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுத்துவிடுகிறார்களாம்!

நல்ல மதிப்பெண் பெற்ற பையன்கள் ஆறுமாதம் ஒருவருடத்தில் ஓடிவிடுவதால் இப்படி ஒரு ஏற்பாடு என்றான் ஒருதம்பி. ஒவ்வொரு கம்பெனியிலும் எபவ் செவ்ன்டி பர்சென்ட்லாம் கிளம்பலாம்னு சொல்லும்போது எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சி மார்க் வாங்கினோம் என்ன பிரயோஜனம்னு தோணும்ண்ணா சமயத்துல அழுகையே வந்துடும் என்று சோகமாக சொன்னான் ஒரு தம்பி. ப்ளஸ்டூ படித்திருந்தால் கூட சில நிறுவனங்கள் போதும் என்று என்ஜினியரிங் படித்தவர்களை விரட்டிவிடுகிறார்களாம்.

சில நிறுவனங்களில் நைட்ஷிப்ட்டுக்கென ஆண்டுக்கணக்கில் கான்ட்ராக்ட் போட்டு ஆளெடுக்கிறார்கள். எப்படித்தெரியுமா அசல் சான்றிதழ்களை வாங்கிவைத்துக்கொண்டு இரண்டாண்டு மூன்றாண்டு என கான்ட்ராக்ட் போட்டுக்கொண்டுதான் வேலை கொடுக்கப்படுகிறதாம்.
அப்படி என்னதான் இந்த கால்சென்டர்களில் சம்பளம் குடுக்கறாங்க என்று விசாரித்தால் வெறும் ஐந்தாயிரமும் ஆறாயிரமும்தான் கிடைக்கிறது.

சரி துறைசார்ந்த வேலைகளுக்கு போனால்தான் என்னவாம்? ஊர் உலகத்தில் கால்சென்டரை விட்டால் வேறு வேலையே இல்லையா?
‘’எல்லா இடத்துலயும் மினிம்ம் டூத்ரீ இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் கேகறாங்க.. அப்படியே வேலை கிடைச்சாலும் அதுலலாம் க்ரோத் ரொம்ப ஸ்லோனா… கோயம்புத்தூர்லயே மெக்கானிக்கல்க்கு சில வேலைகிடைக்கும்.. நாலாயிரம் ரூவாதான் குடுப்பாங்க.. இரண்டு வருஷம் ஆகும் பத்தாயிரம் ரீச் பண்ண.. அதே கால்சென்டர் சாஃப்ட்வேர்னா இரண்டுவருஷத்துல ட்வென்ட்டி ஃபைவ் கிராஸ் பண்ணிடலாம்’’ என்றான் ஒருபையன். அவன் சொல்வதற்கிணங்க அறையில் ஒரு பையன் எட்டாயிரம் சம்ளத்தில் வேலைக்கு சேர்ந்து குறைந்தகாலத்தில் இன்று பதினாறாயிரம் பெறுகிறான்!

எல்லோருக்கும் துறைசார்ந்த வேலைகளை தேடுவதில் ஒரு சலிப்பும் எரிச்சலும் இருக்கிறது. எங்கும் நிறைந்திருக்கிற கால்சென்டர்களில் வேலை தேடுவது சுலபமாக இருக்கிறது. இதுபோக அழகான பெண்கள், நிறைய பணம், நுனிநாக்கு ஆங்கிலம், லைஃப் ஸ்டைல் என வேறு காரணங்களும் கடந்த பத்தாண்டுகளாக தொடரும் கால்சென்டர் மோகத்துக்கு காரணமாக நீடிக்கிறது. தம்பியின் நண்பர்களில் சிலர் ஊரில் இருக்கிற பொறியியல் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக்குகளில் லெக்சரராக பணியாற்றுகிறார்கள். ஆனால் சம்பளம் சாதாரண எல்கேஜி டீச்சர்களுக்கு கொடுக்கப்படுவதைவிடவும் மிகமிகக் குறைவு!

இவர்களுடைய குடும்பங்களை பர்சனலாகவே நான் அறிவேன். எல்லோருமே லோயர் மிடில்கிளாஸ் குடும்பங்களை சேர்ந்தவர்கள். எல்லோருமே மிகுந்த கஷ்டங்களுக்கு நடுவே கடன்வாங்கியும் நகைகளை அடகுவைத்தும் கல்விக்கடன் வாங்கியும் அலுவலகத்தில் லோன்போட்டும் என்ஜினியரிங் படிக்க வைத்திருக்கிறார்கள்.

எல்லோருக்குமே பையனை எப்படியாவது மிகப்பெரிய பணக்காரனாக்கிவிடும் கனவு நிறைந்திருக்கிறது. அந்த கனவுகளையே இந்த பையன்களும் சுமந்தபடி திரிகிறார்கள்.

கஷ்டப்பட்டு படிக்க வைக்கிற பெற்றோர்கள் பையன்கள் படித்து முடித்ததும் சம்பாதிக்க தொடங்கிவிடுவான் கடன்களை அடைத்துவிடுவான் என எதிர்பார்க்கின்றனர். வீட்டில் பையன்களை தொடர்ந்து நச்சரிக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பாரு அந்த பையன் எவ்ளோ சம்பாதிக்கிறான் இவன் எவ்ளோ காசு அனுப்பறான் என தொல்லை தாங்கமுடியாமல் பையன்கள் உடனடி உபாயமாக இந்த கால்சென்டர்களில் விட்டில் பூச்சிகளைப்போல வந்து விழுவதை பார்க்க முடிகிறது. வீட்டில் வெட்டியாக இருப்பதைவிட இந்த வேலை கொஞ்சம் டீசன்டாகவும் அதேசமயம் ஜாலியாகவும் இருப்பதாகவே கருதுகின்றனர். ஒருமுறை இந்த கால்சென்டனர்களில் காலெடி எடுத்து வைத்தவன் பிறகு அவன் படித்த துறைசார்ந்த வேலைக்கு போகவேமாட்டான் என்பதே வரலாறு. இருந்தும் உடனடி நிவாரணியாக இந்த கால்சென்டர்களே கைகொடுக்கின்றன.

இந்த பையன்களிடம் என்ஜினியரிங் குறித்த வெறுப்பு மனது முழுக்க நிறைந்துகிடக்கிறது. அதில் எடுத்த மதிப்பெண்ணும் அதற்காக கொட்டிய உழைப்பும் வீண் என்று கருதுகின்றனர். அதில் உண்மை இருக்கவே செய்கிறது. தன் தங்கைக்கு கவுன்சிலிங்கில் சீட் கிடைத்தும் வீட்டில் சண்டைபோட்டு ஆர்ட்ஸ் அன் சைன்ஸ் கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறான் ஒரு தம்பி. அப்படி ஒருவெறுப்பு என்ஜினியரிங்கின் மேல்!

நன்றி : அதிஷா வினோ