(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும். (2) அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்). (3) (அவர்) கூறினார்; “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. (4) “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக! (5) “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!” (6) “ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்). (7) (அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார். (8)” (அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான். (9) (அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான். (10) ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹீ செய்யுங்கள்” என்று உணர்த்தினார். (11) (அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்) இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம். (12) அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்) இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார். (13) மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை. (14) ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும். (15) (மர்யம் : 2-15)
ஜும்ஆ குத்பா பேருரை
வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம்.
நாள் : 11-10-2013 வெள்ளிக்கிழமை
இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப்