பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் தேதியை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் இருந்தும், பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. பொதுத்தேர்வை, எத்தனை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர் என்ற விவரம், இன்னும் சேகரிக்காத நிலையில், மிகவும் முன்கூட்டியே, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேர்வுக்கான அனைத்து பணிகளும், மும்முரமாக நடந்து வருவதால், தேர்வு அறிவிப்பை, மாணவ, மாணவியர், ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, தேர்வு அட்டவணையை, தமிழக அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது. இரு பொது தேர்வையும், ஒன்றாக சேர்த்து நடத்த, முதலில், தேர்வுத்துறை பரிசீலனை செய்தது. ஆனால், தனித் தனியாக நடத்தும்போதே, ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கின்றன. இதில், ஒன்றாக சேர்த்து நடத்தி, பெரும் குளறுபடிகள் ஏற்பட்டால், பிரச்னை பெரிதாகிவிடும் என, கருதி, வழக்கம்போல், தனித்தனியாக நடத்த, தேர்வுத்துறை முடிவு செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கிய பாடங்களுக்கு, மாணவர், நன்றாக தயாராவதற்கு வசதியாக, தேர்வுகளுக்கு இடையே, போதிய இடைவெளி தரப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மொழிப்பாட தேர்வுகள் மட்டும், அடுத்தடுத்து நடக்கின்றன. ஆனால், கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற தேர்வுகளுக்கு, இரண்டு நாள், மூன்று நாள், இடைவெளி தரப்பட்டுள்ளன. தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி,
முதல் வாரத்தில் இருந்தே, செய்முறைத் தேர்வு துவங்கிவிடும். பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது. இதிலும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு இடையே, இடைவெளி தரப்பட்டுள்ளது. ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, ஏப்ரல், 2ம் தேதி நடக்கிறது. ஒரு நாள் இடைவெளிக்குப்பின், 4ம் தேதி கணிதம் தேர்வும், பின், இரு நாள் இடைவெளிக்குப்பின், 7ம் தேதி, அறிவியல் தேர்வும் நடக்கிறது.
ஏன் இந்த அவசரம்?
வரும் பொது தேர்வை, எத்தனை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர் என்ற விவரத்தை, தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. இந்த விவரம் எடுக்கும் பணியே, இன்னும் முடியவில்லை. வரும், 10ம் தேதிக்குள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரத்தை அளிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை கெடு விதித்துள்ளது. அதற்கு முன்பே, அவசரமாக, தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், தேர்வு நடக்கும் மையங்களின் எண்ணிக்கையும், இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை, 7.99 லட்சம் பேர் எழுதினர். இந்த எண்ணிக்கை, 8.5 லட்சமாக உயரலாம் அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வை, 10.51 லட்சம் மாணவர் எழுதினர். வரும் தேர்வை, கூடுதலாக, 40 ஆயிரம் பேர் வரை எழுதலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, மற்ற பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்வதில், தேர்வுத்துறை மும்முரமாக இறங்கி உள்ளது.
நன்றி: தினமலர்