Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2014
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,695 முறை படிக்கப்பட்டுள்ளது!

முட்டையும் கொலஸ்டரோல் பிரச்சனையும்

ஆனந்தத் தாண்டவம் ஆடாத குறையாக நுழைந்தார் ஒரு பெரியவர்.
“நல்ல செய்தி ஒண்டு பேப்பரிலை வந்திருக்கு பாத்தியளோ'” என்று கேட்டார்.

Eggs-MAIN“காலையில் வேலைக்குப் போற அவசரத்திலை தலைப்புச் செய்தியளைப் பார்த்துப் போட்டு ஓடுறதுதான். ஒழுங்காப் பாக்க முடியிறதில்லை. ஏதாவது எஸ்எம்எஸ் தகவல் வந்தால்தான் தெரியும்” என்று சொல்ல வாயெடுத்தும், என்ரை வண்டவாளங்களை அவருக்கு ஏன் சொல்லுவான் என நினைத்து அடக்கிக் கொண்டேன்.’

”ஏன் என்ன விசயம்” என மட்டும் கேட்டேன்.

“இப்பத்தைய முட்டையளிலை கொலஸ்டரோல் குறைவாம். முந்தி நாங்கள் முட்டைக் கோப்பி எண்டும், அரை அவியலெண்டும், பொரியல் குழம்பு எண்டும் எவ்வளவு திண்டிருப்பம். கொஞ்சக்காலமா முட்டை கூடாது எண்டு டொக்டர்மார் எங்களைக் குழப்பிப் போட்டினம். இனி வாசிதான், மனிசிக்கும் முட்டை நிறையச் சமை எண்டு சொல்லிப் போட்டன்” என்றார்.

அவர் சொன்னதிலை உண்மையும் உண்டு, ஆராய வேண்டிய விடயங்களும் உண்டு.

முட்டையில் கொலஸ்டரோல்

ஓவ்வொரு முட்டையிலும் சுமார் 225 மி கிராம் கொலஸ்டரோல் உண்டு. அமெரிக்க அரசின் ஆதரவிலான ஆய்வு ஒன்றின்படி தற்போதைய முட்டைகளில் முன்னை நாள் முட்டைகளை விட 13 சதவிகிதம் குறைந்தளவே கொலஸ்டரோல் உள்ளது. அதேநேரம் முட்டையில் விட்டமின் டீ (Vit D) யின் அளவு 64 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.Egg Nutrition Facts

இதற்குக் காரணம் கோழி வளர்ப்பின் போது கோழி உணவாக வழங்கப்பட்ட எலும்புத் துகள்கள் இப்பொழுது கொடுக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக சோளம் கோதுமை கலந்த புரதம் கூடிய கோழித் தீவனமே உபயோகிக்கப்படுகிறது.

முட்டைகளில் கொலஸ்டரோல் அளவு குறைந்து விட்டமின் டீ யின் அளவு அதிகரித்ததால்தான் முட்டை நல்ல உணவு என பத்திரிகைகள் பேசின. விட்டமின் டீ யானது ஒஸ்டியோபொரோசிஸ் போன்ற எலும்புச் சிதைவு நோய்களைத் தடுக்க உதவும் என்பது உண்மைதான்.

குருதியில் கொலஸ்டரோல்

முன்னைய காலங்களில் வாரத்திற்கு இரண்டு முட்டைகள் மாத்திரம் உபயோகிக்கும்படி நீரிழிவு, கொலஸ்டரோல், பிரஷர் போன்ற நோயுள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஏற்கவே மேற்கூறிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருதய நோய்கள் வர வாய்ப்புள்ளவர்களுக்கு முட்டையினால் கொலஸ்ரோல் அதிகரித்தால் ஆபத்து அதிகமாகலாம் என அஞ்சியதே அதற்குக் காரணமாகும்.Anatomy-of-an-Egg

அதாவது அந்த நேரத்தில் நாம் உணவில் உட்கொள்ளும் கொலஸ்டரோலே எமது குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கான காரணம் என நம்பப்பட்டது.

ஆயினும் பின்னர் வந்த ஆய்வுகளின் பிரகாரம் எமது cholesterol_graphஉணவில் உள்ள கொலஸ்டரோலை விட நாம் அதிகளவில் உட்கொள்ளும் எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளே குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கான பிரதான காரணம் என்பது கண்டறியப்பட்டது. அதிலும் முக்கியமாக நிரம்பிய கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளே காரணம் என்பது தெரிய வந்தது.

முட்டைகள் உண்ணலாமா?

எனவே “நான் தினமும் முட்டைகள் உண்ணலாமா?” என நீங்கள் கேள்வி கேட்டால் எனது விடை ‘ஆம்’ என்றே இருக்கும்.

ஆனால் “முட்டையை எவ்வாறு உட்கொள்ளப் போகிறீர்கள்” என்பது எனது குறுக்குக் கேள்வியாக இருக்கும்.

எண்ணெயில் பொரித்த முட்டைகளும், நிறைய வெண்ணெய் போட்டுத் தயாரித்த ஒம்லெட்டும் எனில் ஆகாது எனலாம். பொரிப்பதற்கும் வதக்குவதற்கும் நீங்கள் சேர்க்கும் எண்ணெய்களும், பட்டர், மாஜரீன் போன்றவற்றில் கொழுப்பு அதிகம் உண்டு. அவை உங்கள் கொலஸ்டரோலை அதிகரிக்கும்.

அதற்குப் பதிலாக முட்டையை அவித்துச் சாப்பிடலாம். கறி சமைத்துச் சாப்பிடலாம். எண்ணெயின்றி வறுத்தும் உண்ணலாம்.

“‘அவ்வாறு கொலஸ்டரோலை அதிகரிக்காது என்றால் வகை தொகையின்றி எவ்வளவு முட்டைகளும் சாப்பிடலாமா?”

சமபல உணவு

எவ்வளவும் சாப்பிடலாமா என்பது பகுத்தறிவு இல்லாதவன் மட்டுமே கேட்கக் கூடிய கேள்வியாகும்.

ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமாயின் போசாக்குள்ள உணவுகளை உண்ண வேண்டும். அந்த உணவானது சமபல அளவுள்ளதாக balanced diet இருக்க வேண்டும். சமபல உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, விற்றமின்கள், தாதுப்பொருட்கள் என யாவும் அடங்க வேண்டும். அதனைக் குலைக்காமல் உண்ணலாம்.

முட்டையில் சுமார் 7 கிராம் அளவில் உயர்தரப் புரதம் இருக்கிறது. இதனையொத்த சிறந்த புரதம் பாலில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.egg_protein_chart

முட்டையில் கலோரி மிகக் குறைவு 75 கலோரி மட்டுமே. 5 கிராமளவு கொழுப்பு இவற்றுடன் விற்றமின் ஏ, அயடின், கரோடினொயிட்ஸ் போன்ற போசாக்குகள் உள்ளன. இவற்றுடன் lutein, zeaxanthin போன்றவையும் உண்டு. இவை நோயதிர்புச் சக்தியும் உடையவை.

எனவே நல்ல போசாக்குள்ள உணவு. தினமும் சாப்பிடலாம்

பிரித்தானியாவில் ஒருவர் சராசரியாக வாரத்திற்கு 3 முட்டைகளே உட்கொள்கிறார்களாம். ஆயினும் அவர்களில் கொலஸ்டரோல் பிரச்சனை அதிகமாக இருப்பதற்கு காரணம் கொழுப்புள்ள ஏனைய உணவுகளேயாகும். முக்கியமாக கொழுப்புள்ள இறைச்சி வகைகள், பாலும் பாற் பொருட்களும், அவசர உணவுகளும் நொறுக்குத் தீனிகளும்தான்.

அவர்களைப் பொறுத்தவரையில் சீஸ், பட்டர், ஆடைநீக்காத பால், சொசேஜஸ், கேக், பிஸ்கற், பேஸ்ரி, கொழுப்பு நீக்காத இறைச்சியும் காரணமாகின்றன.

நாங்களும் அவற்றையெல்லாம் இப்பொழுது அமோகமாக உண்ணத் தொடங்கிவிட்டோம். சத்துடன் எங்களுக்கே விசேடமான வடை, முறுக்கு, மிக்ஸர், பகோடா, பற்றிஸ், ரோல்ஸ், சமோசா என அடுக்கிக் கொண்டே போகலாம். நொட்டைத் தீனீ, நொறுக்குத் தீனீ, அவசர உணவு, குப்பை உணவு என எவ்வாறு பெயர் சொன்னாலும் இவை யாவுமே கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்தான். இவையேதான் இப்பொழுது இங்கு எடை அதிகரிப்பதற்கும், நீரிழிவு பெருகுவதற்கும், மாரடைப்புகள் மலிந்ததற்கும் காரணமாகிவிட்டன.

கொலஸ்டரோல் அதிகரிப்பையும் மாரடைப்பையும் பற்றிய கவலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியது முட்டையை மட்டும் அல்ல. மேற் கூறிய கொழுப்பு உணவுகளே முக்கியம் என்பதை மறந்து விடாதீர்;கள்.

முட்டையால் வேறு ஆபத்துக்கள்

கொலஸ்டரோலைத் தவிர வேறு முக்கிய ஆபத்தானது முட்டையால் உணவு நஞ்சாதல் ஆகும்.

எவ்வளவும் சாப்பிடலாம் என ஆனந்தத்தோடு வந்தவர் தனது இளமைக் காலத்தில் தனது வீட்டுக் கோழி இட்ட முட்டைகளை சாப்பிட்டிருப்பார். அவற்றில் கிருமி தொற்றுவது குறைவு. இன்று கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. எதாவது கிருமித்தொற்று ஏற்பட்டால் அது பல கோழிகளுக்கும் பரவியிருக்கும். அந்தப் பண்ணையிலிருந்து வரும் முட்டைகளில் கிருமி தொற்றியிருக்கலாம். பொதுவாக salmonella bacteria தொற்று ஏற்படுகிறது.

“முட்டைக் கோப்பி எண்டும், அரை அவியலெண்டும்” அவர் அந்தக் காலத்தில் சாப்பிட்டது இந்தக் காலதிற்கு சரிவராது. கோப்பி அரை அவியல் சூடானது முட்டையில் உள்ள கிருமிகளைக் கொல்வற்குப் போதுமானதல்ல.

எனவே முட்டைக் கோப்பி அரை அவியல் போன்றவை வேண்டாம்.

 இறுதியாக

ஒவ்வொரு முட்டையிலும் சுமார் 225 மிகிராம் உள்ளது. ஆனால் நாம் தினசரி 300 மிகிராம் அளவு கொலஸ்டரோலை மட்டுமே உணவில் இருந்து பெற வேண்டும் என அமெரிக்க இருதயச் சங்கம் பல வருடங்களுக்கு முன்னரே அறிவித்துள்ளது. அதில் எந்த மாற்றத்தையும் மீள அறிவித்ததாகத் தகவல் இல்லை. எனவே ஆரோக்கியமான ஒருவர் நாளாந்தம் ஒரு முட்டை சாப்பிடுவதில் தவறில்லை என்றே சொல்லக் கூடியதாக இருக்கிறது.

இருந்தாலும் கொலஸ்டரோல் குருதியில் அதிகமாக உள்ளவர்களும் மாரடைப்பு வந்தவர்களும் அது வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்களும் தமது கொலஸ்டரோல் அளவுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையுடன் வாரத்திற்கு எத்தனை முட்டை எனத் தீர்மானிப்பது நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்- MBBS(Cey), DFM (Col), FCGP (col) –  ஹாய் நலமா?