ஒருவர் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றின் ஓரத்தில் பரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருந்தார். அயலூரில் தொழில் புரியும் அவருடைய மகன் விடுமுறைக்கு வந்திருந்தான். “அப்பா! பக்கத்திலே புதுசா ஹோட்டல் வரப்போகுதாம்! நல்ல வசதியான ஆளுங்க கடை போடறாங்களாம். நீங்க கடையை மூடிட்டு என்கூட ஊருக்கே வந்திடுங்க!”
“யோசிச்சு சொல்றேன்” என்றார் அப்பா. இரவு முழுவதும் யோசித்தார். விடிவதற்குள் முடிவெடுத்திருந்தார். ‘இல்லப்பா! என்னாலே முடிஞ்ச வரை நடத்தறேன். முடியாட்டி உன்கூட வந்துடறேன்”.
சொன்னவர் போட்டியை எதிர்கொள்ளப் பல திட்டங்கள் வகுத்தார். புதுமைகள் புகுத்தினார். தரத்தை உயர்த்தினார். பரோட்டா மட்டுமின்றி மற்ற உணவுகள், மதியச்சாப்பாடு என்று விரிவு படுத்தினார்.
பக்கத்திலுள்ள அலுவலகங்களில் பணிபுரிபவர்களை மாதச் சாப்பாடு வாடிக்கையாளர்களாய் சேர்த்தார். போட்டிக்கடை இவருடைய செல்வாக்கு வட்டத்தை முறியடிக்க முடியாமல் மந்த கதியில் நடந்தது. இவர் கொடிகட்டினார். பத்தாண்டுகள் உருண்டன. முன்னர் மோட்டார் சைக்கிளில் வந்த மகன் இந்த முறை காரில் வந்திருந்தான். “அப்பா! உலகம் முழுக்க பொருளாதாரப் பின்னடைவு. பக்கத்து அலுவலகங்களிலே ஆட்குறைப்பு நடக்கும். ஜாக்கிரதை!” செய்தித்தாள்களும் பொருளாதாரப் பின்னடைவு பற்றியே பேசின. தன் உணவகக் குழம்பை விடவும் குழம்பிப் போனார்.
ஒழுங்காகப் பணம் கட்டிக் கொண்டிருந்த மாதச் சாப்பாட்டுக்காரர்களிடம் மூன்று மாத முன்பணம் கேட்டுக் கெடுபிடி செய்தார். பலரும் விலகிக் கொண்டார்கள். கூட்டம் குறைந்தது. பொருளாதாரப் பின்னடைவின் பாதிப்பு தங்கள் ஊருக்கும் வந்துவிட்டதாய் நம்பினார். சிக்கனம் என்ற பேரில் தரம் குறைந்தது. கூட்டம் படிப்படியாய்க் குறைந்தது. போட்டிக்கடையில் சூடுபிடிக்கும் வியாபாரத்தை அவர் கண்டுகொள்ளவேயில்லை. பொருளாதாரப் பின்னடைவு தாக்கும் முன்னரே கடையை மூடிவிட்டு நடையைக் கட்டினார். இப்படி, கேட்பார் பேச்சைக் கேட்டு, நல்ல வியாபாரத்தை இழந்து நல்ல வருமானத்தைக் கெடுத்துக் கொள்பவர்கள் ஏராளம். இவர்கள்தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்பவர்கள்.
எது நல்ல வருமானம்? யார் வாழ்வையும் கெடுக்காத – யாராலும் கெடுக்க முடியாத வருமானம்தான் நல்ல வியாபாரம். இந்த உலகில் பலர் வெற்றிகரமாகத் தங்கள் தொழிலை விரிவாக்கியதும் வருமானத்தைப் பெருக்கியதும் எப்போது?
ஆற அமர யோசித்து எடுத்த முடிவல்ல இது. கழுத்தை நெருக்கும் நெருக்கடிக் காலங்களில், எடுத்த அதிரடி முடிவுகள்தான் அவை. “எனக்கு வரும் நிதி நெருக்கடிகளுக்கு மாற்றாக நான் பதட்டத்தையோ வருத்தத்தையோ தருவதில்லை. கூடுதல் நிதியையே அதற்குப் பதிலாகவும் தீர்வாகவும் தருகிறேன்” என்றார் ரான் ஹப்பர்ட் என்ற நிதியியல் நிபுணர்.
கடுமையான நெருக்கடி நேரங்களில் குறுக்கு வழிகளை நாடாமல், புதுமையான பார்வையுடன் வருமானத்தைப் பெருக்குவதே நல்ல வருமானம்.
முதியோர் இல்லங்களுடன் தொடர்பிலிருந்த – தொண்டு மனம் படைத்த ஒருவரிடம், அவருடைய நண்பர் ஒரு திட்டத்தைச் சொன்னார். “முதியோர் இல்லங்களில் இருப்பவர்களிடம், அவர்களின் இறுதிச் சடங்கு காப்பீட்டுக்கென்று நாம் நிதி வசூலிப்போம். இறந்தபின் அவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று தெரியவா போகிறது? இதில் நல்ல வருமானம் கிடைக்கும்”. இவர் அமைதியாக பதில் சொன்னார். “அது நல்ல வருமானமில்லை. அவமானகரமான வருமானம்” என்று.
மாறாக முதியோர் இல்லங்களில் பெற்றோரை விட்டவர்களுடன் கலந்து பேசி அவர்களை மாதம் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான திட்டம் ஒன்றை வகுத்து. அதற்குக் கட்டணம் பெற்று சரியாக நடத்தி வந்தார். அதில் நல்ல வருமானம் வந்தது. நல்ல பெயரும் கிடைத்தது.
உலகப் பண நெருக்கடி உண்மையிலேயே ஏற்பட்டிருக்கலாம். அது உங்களைப் பாதிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் அணுகுமுறைகளை நேர்மையாகவும் புதுமையாகவும் கைக்கொள்ளும்போது சீரான வளர்ச்சி எப்போதும் சாத்தியம்.
வருமானம் பற்றி சலித்துக் கொள்வது, புகார் சொல்வது, குறுக்கு வழிகளில் முயல்வது போன்றவை, சலிப்பு, அச்சம், பாதுகாப்பற்ற உணர்ச்சி ஆகியவற்றை அதிகரிக்குமே தவிர ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வழிசெய்யாது. “கடுமையாக உழைக்கிறேன்! என்ன பிரயோஜனம்” என்கிற சலிப்புத்தான் வளர்ச்சிக்கும் வருமானத்திற்கும் மிகப்பெரிய எதிரிகள். புலம்புவதிலும் கவலைப்படுவதிலும் செலவிடும் சக்தியை புதுமையான கண்ணோட்டங்களுக்குப் பயன்படுத்துங்கள். நல்ல வளர்ச்சியும் நல்ல வருமானமும் தாமாகவே அமைவதைக் காண்பீர்கள்.
நன்றி: – நம்பிக்கை- மரபின்மைந்தன் முத்தையா